பாப்லோ தி பாஸ் 23: ஜனநாயகத்தின் வழக்கறிஞன்..!

பாப்லோ தி பாஸ் 23: ஜனநாயகத்தின் வழக்கறிஞன்..!

இந்த அத்தியாயத்தின் தலைப்பு, சீஸர் கவீரியாவுக்கான செல்லப் பெயர். கொலம்பிய மக்கள் கொடுத்தது. அந்தப் பெயரை அவர் சம்பாதித்ததற்கான காரணம்… ஜனநாயகத்தின் மீது அவர் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கை..!

ஆம்… யார் இந்த சீஸர் கவீரியா..?

1990-ல் இவர்தான் அடுத்த அதிபர் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘புதிய லிபரல் கட்சி’ தலைவர் லூயி கார்லோஸ் கலான் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அவர் இடத்துக்கு வந்தவர் இந்த கவீரியா. இவர், கலானுக்கு தேர்தல் பிரச்சார மேற்பார்வையாளராக இருந்து செயல்பட்டவர். கொலம்பியத் தலைநகர் பகோட்டாவில் இருந்த ‘யுனிவர்சிடாட் த லாஸ் ஆந்தெஸ்’ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற கையோடு அரசியலுக்குள் நுழைந்தார் கவீரியா. அப்போது அவருக்கு வயது 23.

தன் சொந்த ஊரான பெரைராவின் கவுன்சிலராகத் தொடங்கிய அவரது அரசியல் பயணம்... 1974-ல், கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர், 1983-ல், அவைத் தலைவர், 1986-ல், கொலம்பிய ‘லிபரல் பார்ட்டி’ துணைத் தலைவர், அந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் விர்கிலியோ பார்க்கோவின் அமைச்சரவையில் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் என வளர்ந்தது. எனவே, கலான் கொல்லப்பட்ட பிறகு, சீஸர் கவீரியா அந்த இடத்துக்கு வந்தது பொருத்தமாகவே இருந்தது.

1990-ல் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட இவரது காலத்தில்தான் (1990-1994) கொலம்பியாவுக்குப் புதிய ஜனநாயகக் கூறுகள் அதிகம் நிறைந்த அரசியலமைப்பு கொண்டு  வரப்பட்டது. மட்டுமல்ல… பாப்லோவுக்குச் சாவு மணியும் அடிக்கப்பட்டது..!

கவீரியாவுக்கும் பாப்லோவுக்குமான அறிமுகம் என்பது பாப்லோ முதன் முதலில் கொலம்பிய நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்ததிலிருந்து தொடங்குகிறது. பொது இடங்களுக்கு பாப்லோவின் வருகை என்பது, பாப்லோவின் வருகை மட்டும் அல்ல… அவனது அடியாட்களின் வருகையும் கூட. நாடாளுமன்றத்திலும் அப்படித்தான். தன் பரிவாரங்களுடன் நுழைந்தான்.

கொக்கைன் போதையிலும் கூர்மையாக நிலை குத்தி நிற்கும் கண்கள், பத்தடி ஓடினால் இரண்டே அடியில் பின் தொடர்ந்து வந்து பிடித்துவிடும் அளவுக்கான வேகம், ஒரே குத்தில் ஆளைச் சாய்த்துவிடுகிற உடற்கட்டு, கையில் நவீன ரக துப்பாக்கிகள் என பாப்லோவின் அடியாட்களைப் பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் காலுக்குக் கீழ் ஏதோ பாம்பு ஊர்கிறதோ என்பது போல, பதறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினார்கள். அப்போது அவைத் தலைவராக இருந்த கவீரியா, தன் இருக்கையிலிருந்து உடனடியாக எழுந்து வந்து, ‘அடியாட்கள் உள்ளே நுழையக் கூடாது’ என்று கத்தினார். அதற்கெல்லாம் மசிகிற ஆட்களா அவர்கள்..? ஆனாலும் பாப்லோ கண்ணியத்தைக் கடைப்பிடிக்க நினைத்தான். லேசாகத் தன் தலையை மேலும் கீழும் ஆட்ட, அடியாட்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

அப்போதிலிருந்து பாப்லோவின் மீது கவீரியாவுக்கு ஒரு கண் இருந்தது. ஜனநாயக வழியில் அவனை எப்படியாவது கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தத் திட்டமிட்டிருந்தார் கவீரியா. அந்த ஒரு காரணமே, கவீரியாவைத் தன் எதிரியாகப் பாவிக்க போதுமானதாக இருந்தது பாப்லோவுக்கு..!

கலி கார்ட்டெல் உடன் கைகோத்து அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தனக்கு எதிராகச் செயல்படுவதாக பாப்லோ நம்பினான். அப்படிச் செய்வதன் மூலம் மெதஜின் கார்ட்டெலின் பிசினஸை அவர்கள் கைப்பற்றுவார்களோ என்று யோசித்தான். அவன் நினைத்தது சரியாகவே இருந்தது. அவன் காலத்துக்குப் பின்னால், 1996-ல் கலி கார்ட்டெல் அரசாங்கத்தைச் சேர்ந்த பலருக்கும் லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது. அதிபர் தேர்தலில் கூட, கலி கார்ட்டெல் பணத்தின் பங்கு இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இப்படி, கலி கார்ட்டெல் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்குகள் மட்டும் சுமார்8 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தன என்றால், லஞ்சத்தின் வீரியம் எப்படி இருந்தது என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

கவீரியாவும் லஞ்சத்துக்கு விலை போகக்கூடிய ஒரு ஆளாக இருப்பார் என்று கருதிய பாப்லோ, அவருக்குக் குறி வைத்தான். தன் கூட்டாளிகள் ‘மெக்ஸிக்கன்’, கிக்கோ மோன்கடா மற்றும் ஃபெர்னாண்டோ கலியானோ ஆகியோருடன் திட்டம் வகுத்தான் பாப்லோ. அவன் கையில், கவீரியா அடுத்த சில நாட்களில் எங்கு பயணப்படுகிறார் என்பதைப் பற்றிய பட்டியல் கிடைத்தது. அது 1989-ம் ஆண்டு,  நவம்பர் 27-ல், ஏவியன்கா ஏர்லைன்ஸ் ஹெச்.கே. 1803 எனும் விமானத்தில் காலை 7.15 மணி அளவில் பகோட்டாவிலிருந்து கலி நகரத்துக்கு கவீரியா செல்வதாக இருந்தது.

அந்தப் பயணத்திலேயே கவீரியாவைக் கொல்ல முடிவெடுத்தான் பாப்லோ. திட்டம் தயாரானது. ஆட்கள் தயாரானார்கள். ஆயுதமும் தயாரானது. திட்டம் இதுதான்: கவீரியா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு எதிர்புறம் பாப்லோவின் அடியாள் ஒருவன் அமர்ந்திருப்பான். அவன் கையில் வெடிகுண்டு பொருத்திய சூட்கேஸ் இருக்கும். விமானம் ‘டேக்-ஆஃப்’ ஆகிய அடுத்த அரை மணி நேரத்தில், அந்த அடியாள் தனது சூட்கேஸைத் திறக்க வேண்டும். அப்போது… குண்டு வெடிக்கும். விமானம் வெடித்துச் சிதறும். அனைவரும் கொல்லப்படுவார்கள். கவீரியா உட்பட…!

அப்படியே நடந்தது. ஆனால் கவீரியா காப்பாற்றப்பட்டார். எப்படி..? அவர் அந்த விமானத்தில் செல்லவில்லை. கடைசி நேரத்தில் பாதுகாப்புக் காரணங்கள் கருதி வேறொரு தனி விமானத்தில் சென்றார்.

கவீரியாவைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய அந்த ஆபத்பாந்தவன், விமானத்தில் சென்ற 107 பயணிகளையும், விமானம் ‘டேக் ஆஃப்’ ஆகும் இடத்தில் பணிபுரிந்த மூன்று பணியாளர்களையும் காப்பாற்றவில்லை.

அது வரையில், போதைப்பொருள் கடத்தல்காரனாக மட்டுமே இருந்து வந்த பாப்லோ, இந்தத் தாக்குதலில் இருந்துதான் ஒரு பயங்கரவாதியாக மாறத் தொடங்கினான்..!

முன்னாள் நண்பன்… பின்னாள் பகைவன்..!

இந்த விமானத் தாக்குதலைச் சாத்தியமாக்கும் திட்டத்துக்குத் தலைவனாக இருந்தது கார்லோஸ் உர்கியூவோ. பாப்லோவின் கூட்டத்தில் அவனுக்கான பட்டப் பெயர் ‘எல் அரெத்’. அதாவது, கம்மல் (ஆம்.. காதில்அணியும் அதே கம்மல்தான்!). அந்த வெடிகுண்டை ’செட்’ செய்தது கூகோ சபாலா எனும் மெதஜின் கார்ட்டெலின் வெடிகுண்டு எக்ஸ்பர்ட். பகோட்டாவிலிருந்த எல் டொராடோ   விமான  நிலையம்  மட்டுமல்லாது,கொலம்பியாவின் அனைத்து விமான நிலையங்களின் ‘ரன்வே’க்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்த நாட்டின் உள்துறை பாதுகாப்புத் துறையான டி.ஏ.எஸ். அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், பாப்லோவின் ஆட்கள் அந்த அமைப்பைச் சார்ந்த முக்கியமான சிலருக்கு லஞ்சம் கொடுத்து, வெடிகுண்டு அடங்கிய சூட்கேஸை விமானத்துக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த விமானத் தாக்குதல் குறித்து பல கதைகள் உலாவுகின்றன. மெதஜின் கார்ட்டெலுக்கு எதிராக சாட்சி சொல்ல கலி கார்ட்டெலைச் சேர்ந்த இருவர் அந்த விமானத்தில் பயணித்தனர். எனவே அவர்களைக் கொல்லவே இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, அந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மெதஜின் கார்ட்டெலின் 30 ஆயிரம் கிலோ கொக்கைனை அமெரிக்கா கைப்பற்றியது. இந்தத் தகவலை அமெரிக்காவுக்குக் கொடுத்தது கலி கார்ட்டெலைச் சேர்ந்த சிலர்தான் என்றும், அதற்குப் பழிவாங்கும் விதமாக, இந்த விமானத்தில் பயணித்த கலி கார்ட்டெலின் தலைவன் மிகேல் ரோட்ரிகே ஒரேயுவேலாவின் காதலி மார்த்தா லூசியா எச்சாவர்ரியாவைக் கொல்லவே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்கின்றனர்.

எல்லாம் சரி… அந்த வெடிகுண்டு சூட்கேஸை விமானத்தில் கொண்டு செல்லும் நபரைத் தேர்வு செய்யும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது தெரியுமா..? கார்லோஸ் காஸ்டியானோ கில். இவனே பிற்காலத்தில் தனியாக ஒரு பாராமிலிட்டரி குழுவைத் தொடங்கி, கலி கார்ட்டெலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, பாப்லோவின் ஆட்களைக் கணிசமாகக் குறைத்தான். 

(திகில் நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in