காதல் ஸ்கொயர் - 09

காதல் ஸ்கொயர் - 09

இரவு. அறையில் அருண் சுவரோரம் கௌதமை நிற்கவைத்து, அன்று காலை உல்லாடா மரத்தடியில், நந்தினி செய்ததுபோல் தனது இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து கௌதமின் கண்களுக்கு நேரே வைத்துக்கொண்டு, “இவ்வளவுநெருக்கத்துல நின்னீங்களா?” என்றான். “ஆமாம்” என்றான் கௌதம்.

“அப்ப நந்தினி உன்னை ஒரு மாதிரி ஹஸ்காவா பார்த்தாளா?”

“செம ஹஸ்கா.”

“புஸ்புஸ்ன்னு மூச்சுக்காத்து உன் மேல பட்டுச்சா?”

“கன்னாபின்னான்னு பட்டுச்சு.”

“எனி பாடி டச்சிங்?”

“லைட் டச்சிங்” என்றவுடன் அவனிடமிருந்து விலகிய அருண், “அறிவுகெட்ட நாயே… அப்படியே இழுத்துக் கட்டிப்பிடிச்சு ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வேண்டியதுதானே.”

“மச்சி… இதையெல்லாம் நம்பி இந்தக் காலத்துல லவ்வ சொல்லிடக் கூடாதுடா. இவ்ளோவும் பண்ணிட்டுக் கடைசில வெறும் ஃப்ரெண்ட்ஷிப்னு சொல்லிடுவாங்க. நம்ம காலேஜ்ல, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கதிர் தெரியும்ல?” என்றான் கௌதம். “எந்த கதிர்…” என்று இழுத்தான் அருண்.

“அதான்டா... எப்பவும் காவ்யா கூடவே சுத்திகிட்டிருப்பானே…”

“ஓ… அந்த கதிரா? இப்படி பொண்ணோட பேர சொன்னாதானே டக்குன்னு தெரியும்” என்ற அருணை முறைத்த கௌதம், “காவ்யா அவன்கூட வெளியெல்லாம் சுத்துவா. எப்ப

பாத்தாலும் காதுல உதடு உரசுற

மாதிரி அவன்கிட்ட ரகசியம் பேசிக்கிட்டேயிருப்பா. அவன் தலைமுடிய எல்லாம் கோதிவிடுவா. இதையெல்லாம் நம்பி அவன் ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்கான். ஆனா அவ ‘நமக்குள்ள இருக்கிறது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான்’னு சொல்லிட்டா.”

“அப்ப அந்தக் காதில் உதடுரசல், தலை கோதல்?”

“எல்லாம் ஃப்ரெண்ட்ஷிப்

தானாம். இதெல்லாம் பரவால்ல. சிவில் விஷாலுக்கு என்னாச்

சுன்னு… ஸாரி… உனக்கு ஆம்பள பேரச் சொன்னா தெரியாது. ஸ்வேதா கூட சுத்திட்டிருப்பானே…”

“நான் அவ்வளவு மோசமானவன் இல்ல கௌதம். விஷாலைத் தெரியும். ஏன்னா அவனுக்கு ஒரு அழகான தங்கச்சி இருக்கு. காலேஜ்க்கு ஒரு தடவை வந்திருக்கு” என்ற அருணை முறைத்த கௌதம், “விஷால் ஒரு தடவை ஸ்வேதாவோட ஐநாக்ஸ்ல இங்கிலீஷ் படம் பாக்கப் போனப்ப லிப் டு லிப் கிஸ்லாம் கொடுத்திருக்கா” என்றான். “லிப்பா?” என்று அருண் வாயைப் பிளந்தான். அவன் வாயை மூடிய கௌதம், “ஆமாம். அதை நம்பி இன்டர்வெல்லயே ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்கான். அவ லவ்லாம் இல்லன்னு சொல்லிட்டா”

“அப்ப அந்த கிஸ்?”

“அதான் அவனும் கேட்டுருக்கான். ஸ்வேதா, ‘கிஸ் வேற, காதல் வேற’ன்னு சொல்லிட்டா” என்றவுடன் அதிர்ந்துபோன அருண், “தத்துவம்டா” என்றான். தொடர்ந்து கௌதம், “அதான் கேர்ஃபுல்லா இருக்கேன். பொண்ணுங்க காதல் சிக்னல் கொடுத்துட்டு, எப்ப வேணும்ன்னாலும் அதை நட்பு கியருக்கு மாத்திடுவாங்க. கொஞ்ச நாள் போகட்டும். நந்தினி மனசுல கொஞ்சம் கொஞ்சமா காதல ஏத்தி, பயங்கர ஃபீலாயி அவளே தன் வாயால ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வைக்கணும்” என்றான் கௌதம்.

அன்று நள்ளிரவு இரண்டு மணிபோல் இருக்கும். கௌதமின் மொபைல் போன் அடிக்க, தூக்கக் கலக்கத்துடன் எடுத்துப் பார்த்தான். நந்தினி. வேகமாக எழுந்து கட்டிலிலிருந்து இறங்கினான். தரையில் கால் பட்டவுடனேயே ஜில்லென்றாகி, குளிர் அதிகரித்தது. அருணைத் தட்டி எழுப்பிய கௌதம், “டேய்…. நந்தினி கால் பண்றாடா...” என்றவுடன் விசுக்கென்று எழுந்து அமர்ந்தான் அருண்.

“என்னடா… ஃபீலாயிட்டாளா?” என்றான் அருண்.

“அப்படித்தான் போலருக்கு.”

“ஸ்பீக்கர்ல போடு… ஸ்பீக்கர்ல போடு….” என்றான் அருண் பரபரப்பான குரலில். மொபைலை ஆன் செய்து, ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அருணுக்கு அருகில் படுத்த கௌதம், “சொல்லு நந்தினி” என்றான். நந்தினி, “தூங்கிட்டிருந்தியா? ஸாரி” என்றாள்.

“அது கெடக்கு கழுத. தினம்தான் தூங்குறோம். நீ சொல்லு” என்ற கௌதமின் உடல் குளிரில் நடுங்கியது. கௌதம், அருணிடம் தனது கட்டிலில் இருந்த கம்பளிப் போர்வையைக் காட்டினான். தலை வரை கம்பளிப் போர்வையைப் போர்த்தியிருந்த அருண் அப்படியே எழுந்து சென்று கௌதமின் போர்வையை எடுத்து வந்து கௌதமுக்குப் போர்த்திவிட்டான். நந்தினி, “இன்னைக்கி நான் தூங்கவே இல்ல…” என்றவுடன் அருண் சந்தோஷத்துடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். கௌதமும் சிரிப்புடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். தொடர்ந்து நந்தினி, “நானும் எவ்ளவோ ட்ரை பண்ணேன். புரண்டு பாக்குறேன். 1, 2, 3 சொல்லிப் பாக்குறேன். சாமி மந்திரம் சொல்லிப் பாக்குறேன்… ம்ஹ்ம்…” என்றவளின் குரலில் ஒரு தனி பிரியம் தெரிந்தது. அருண் மெதுவாக, “சக்ஸஸ்” என்றான்.

“அதான் உன்கிட்ட சொல்லிடலாம்ன்னு போன் பண்ணிட்டேன்…” என்றாள். “அய்யோ…” என்று கிசுகிசுப்பாகக் கூறிய அருண் உற்சாகத்துடன் கெளதமைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். நந்தினி, “சொல்றேன்… தப்பா எடுத்துக்கக் கூடாது” என்றவுடன் கௌதம் உற்சாகத்துடன் “சேச்சே” என்றான்.

“எனக்கு ஏன் தெரியுமா தூக்கமே வரல?”

“சொல்லு!”

“நம்ம உல்லாடா போய்ட்டு… அந்த மரத்தடில நின்னோம்ல… அப்ப என் மனசுல…” என்று கூறிவிட்டு நந்தினி நிறுத்தினாள். “மனசுல?” என்று பரபரத்தான் கௌதம். சில வினாடிகள் அமைதிக்குப் பிறகு நந்தினி, “திடீர்னு ஒரு கதை தோணுச்சு” என்றவுடன், “கதையா?” என்று அலறினான் அருண். கௌதம் வெறுத்துப்போய்த் தலையில் அடித்துக்கொண்டான். போனில் நந்தினி, “யாரு கத்துறது? அருணா?” என்றாள்.

“சேச்சே… நான்தான்.”

“இப்பதான் கதை ஃபுல் ஷேப்புக்கு வந்துச்சு. அதான் சொல்லலாம்ன்னு கூப்பிட்டேன்” என்றவுடன் அருண் கிசுகிசுப்பாக, “ஸ்பீக்கர ஆஃப் பண்ணுடா…” என்றான். கௌதம், “அதெல்லாம் முடியாது…” என்றபோது அருண் நைஸாகக் கட்டிலில் இருந்து இறங்க பார்க்க, அவனை இழுத்துத் தனது தோளோடு அணைத்துப் பிடித்துக்கொண்டான் கௌதம். அருண், “டேய் ப்ளீஸ்டா, என்னால முடியாதுடா…” என்று கூறியவனைப் பார்க்க பாவமாக இருந்தது. கௌதம், “நந்தினி… இப்பவே சொல்லணுமா? காலைல சொல்லலாமே…” என்றான்.

“அப்படியா?” என்றவளின் குரலில் ஏமாற்றம். “சரி… காலைல பாக்கலாம்” என்ற நந்தினி போனை வைத்துவிட்டாள். “அப்பாடா…” என்று நெஞ்சில் கைவைத்த அருண், “டேய்… அவகிட்ட ‘உன் கதைல்லாம் மொக்கை’ன்னு இதுவரைக்கும் சொல்லவே இல்லையா?” என்றான்.

“டேய்... எப்படிரா… அழகான பொண்ணுங்க மனச புண்படுத்துறதெல்லாம் மகா பாவம்டா.”

“அப்புறம் எப்படித்தான் அவ எழுத்த திருத்திக்குவா?” என்றபடி அருண் படுக்க, “அதுவும் சரிதான்” என்று யோசிக்க ஆரம்பித்தான் கௌதம்.

மறுநாள் காலை ஃபுட் கோர்ட்டில் நந்தினி, கௌதமிடம் கதையைச் சொல்ல ஆரம்பிக்க, கௌதம் தயங்கித் தயங்கி, “அதுக்கு முன்னாடி… ஒரு விஷயம் சொல்லணும்” என்றான். “என்ன?” என்று கேட்டுவிட்டு அவளுடைய களங்கமற்ற விழிகளால் நந்தினி அவனைப் பார்க்க… கௌதமுக்கு என்னமோ செய்தது. இருந்தாலும் வேறு வழியில்லை. கௌதம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நந்தினி… இப்ப நான் இதைச் சொல்லலன்னா நீ திருத்திக்கவே மாட்ட. நீ தப்பா எடுத்துக்கக் கூடாது” என்று நிறுத்தினான்.

“நான் என்ன தப்பா எடுத்துக்கப்போறேன்?”

“உன் கதை ஐடியால்லாம் நல்லாதான் இருக்கு. நிறைய வெரைட்டியான தீம்ஸ். ஆனா… சொல்ற விதம்தான்…” என்று இழுக்க, நந்தினியின் முகம் மாறியது. தொடர்ந்து கௌதம், “ரொம்பக் கத்துக்குட்டித்தனமா, பயங்கர போரிங்கா இருக்கு…” என்று தொடங்கியதுதான் தாமதம், சட்டென்று அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. நினைத்த நொடியில் கண்ணீரைச் சுரக்கச் செய்யும் அபூர்வ சக்தியுடன் பெண்களைக் கடவுள் படைத்திருக்கிறான்.

தொடர்ந்து கண்ணீர் விட்ட நந்தினி, சில வினாடிகள் அவனை முறைத்துப் பார்த்தாள். பிறகு கண்ணீரைத் துடைத்தபடி வேகமாக எழுந்து விறுவிறுவென்று நடந்தாள். “நந்தினி… நந்தினி…” என்று கௌதம் அழைக்க, நந்தினி திரும்பிப் பார்க்கவே இல்லை. “சை…” என்று தலையில் கையை வைத்துக்கொண்டான் கௌதம்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in