இணையச் சிறையின் பணயக் கைதிகள் 9: செல்ஃபி செல்லங்களே… உஷார்!

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 9: செல்ஃபி செல்லங்களே… உஷார்!

செல்ஃபி எடுப்பதை ஒரு அடிமைக்கோளாறாக (addiction) கொள்ளலாமா? இது ஒரு உளவியல் கோளாறுதானா? அடிமைக்கோளாறுதான் என்று வைத்துக்கொண்டால் அதற்கான அளவுகோல்கள் என்னென்ன? இதுபோன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்த வண்ணம்தான் உள்ளன.

ஒரே மாதிரியான விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதற்கு ‘அப்செஷன்’ (obsession) என்று பெயர். திரும்பத் திரும்ப செல்ஃபி எடுப்பதை obsessive selfie taking என்று சொல்கிறோம். எடுத்த படம் திருப்தி இல்லாமல் ‘ச்சே இது சரியில்ல… அதுல மூக்கு நல்லா விழலை’ என்று சொல்லி திருப்தி வரும் வரை எடுத்துச் சலித்து, திருப்தியே ஏற்படாத பட்சத்தில் மனசு உடைந்துபோய் மனச்சோர்வு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படி விவகாரமாக செல்ஃபி சுழலில் சிக்கி செல்ஃபிகளைச் சுட்டுத்தள்ளுவதை ‘செல்ஃபிட்டிஸ்’ (selfitis) என்றே அழைக்கிறார்கள்.

இதில் மூன்று வகை சொல்கிறார்கள். இன்னும் பிரச்சினையாக மாறாத ஆனால் சற்றே கவனிக்க வேண்டிய ‘பார்டர்லைன்’ (borderline) நிலை, கொஞ்சமாகப் பிரச்சினைக்குரியதாக மாறிவரும்

‘அக்யூட்’ (acute) நிலை, நிறையவே பிரச்சினைக்குரியதாக மாறிவிட்ட ‘க்ரோனிக்’ (chronic) நிலை - இதுவே அந்த மூன்று நிலை.

ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்று செல்ஃபியாவது எடுப்பார்கள். ஆனால், அதில் எதையும் போஸ்ட் செய்ய மாட்டார்கள். இது ‘பார்டர்லைன்’ வகையறா. அடுத்து,ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்று செல்ஃபியாவது எடுத்து அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றியே தீருவார்கள். இது ஆரம்ப நிலை. மூன்றாவதுதான் கொஞ்சம் சீரியஸ். செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற தம் உந்துதலைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் செல்லும் இவர்கள் சரவெடி போல செல்ஃபி வெடிகளால் சமூக வலைதளங்களைக் கலங்கடித்துக்கொண்டிருப்பார்கள். இதுதான் நாள்பட்ட நிலை.

விஷயம் என்னவென்றால், செல்ஃபி சம்பந்தப்பட்ட மனநிலை பாதிப்பு என்று எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக மனநலக் கோளாறுகள் பட்டியலில் சேர்க்கப்படாவிட்டாலும் அது குறித்த அனைத்து விஷயங்களும் உலக அளவில் விவாதிக்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றன. கூடிய விரைவில் அதிகாரபூர்வ உளவியல் கோளாறாகச் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இணையத்தில் விளையாடப்படும் விளையாட்டுக்கு அடிமையாவதை ‘இணைய விளையாட்டுக் கோளாறு’ (gaming disorder) என்று சொல்லி அவற்றையெல்லாம் உளவியல் கோளாறுக்கான பட்டியலில் சேர்த்தாகிவிட்டது. அது போன்று செல்ஃபி பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்தால் அதையும் பட்டியலில் சேர்த்துவிடத்தான் வேண்டும்.

நம்ப மாட்டீர்கள்... முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வந்தவர்களிடத்தில் மருத்துவர்கள் “எதற்கு இப்போ ஆபரேஷன்?” என்று கேட்டால், பதில் “இல்லை சார்... நான் செல்ஃபியில இன்னும் நல்லாத் தெரியணும்... இப்ப இருக்குற என் முகம் அவ்வளவா நல்லா இல்லே” என்கிறார்களாம் அமெரிக்காவில். இதற்காகவே நிறைய பேர், அதுவும் 30 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள் சர்ஜனை நாடுகிறார்கள் என்று ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ தொடர்பான அமெரிக்க அறிக்கை ஒன்று 2018-ல் தெரிவித்துள்ளது.

“முன்பெல்லாம் ஏதாவது ஒரு பிரபலத்தின் புகைப்படத்தைக் காட்டி இதுபோல் நான் ஆக வேண்டும் என்பார்கள். இப்போதோ பலவிதமான செயலிகள் மூலமாக ஃபில்டர் செய்யப்பட்ட தமது முகத்தைக் காட்டி இப்படி என்னை ஆக்குங்கள் என்று கேட்கிறார்கள். என்ன செய்ய?” என்று தலையில் அடித்துக்கொள்கின்றனர் அறுவை சிகிச்சை நிபுணர்கள்.

மூக்கை நீளமாக்கி, தோலை ஒளிரச்செய்து பளபளப்பாக்கி, கன்னத்தைப் புடைப்பாக்கி அல்லது குறைத்துக்காட்டி, பற்களை வெண்மையாக்கிக் காட்டுவதற்கென்றே பல செயலிகள் வந்துவிட்டன இப்போது. வெளிநாடுகளில் ‘ஸ்னாப்சாட்’, ‘ஃபேஸ்ட்யூன்’ போன்ற செயலிகள் மிகவும் பிரசித்தம். எடுத்த செல்ஃபியை இது போன்ற செயலிகளில் கொடுத்து ஏகப்பட்ட ஃபில்டர்களைச் செய்து அற்புதமான, அழகான, தாங்கள் விரும்பிய, தமக்கு நிறைய லைக்குகளைப் பெற்றுத்தந்த ஒரு செல்ஃபியை எடுத்துக்கொண்டு அப்பாவியாக ஓடி வருகிறார்களாம் டாக்டர்களிடத்தில், “இப்படி என்னை மாற்றிக் கொடுங்கள்” என்று. இதென்ன புதுக்குழப்பம் என்று அதிர்ந்த டாக்டர்கள் ஸ்னாப்சாட் டிஸ்மார்ஃபியா’ (Snapchat dysmorphia) என்று இந்தக் கோளாறுக்குப் பெயரே சூட்டிவிட்டார்கள்.

’எவ்வளவு முயன்றாலும் அப்படி மாற முடியாது. உண்மை வேறு போலி வேறு’ என்று சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் இப்படிக் கிளம்பியிருக்கும் இளசுகளுக்குத் தம் உடல் குறித்த திருப்தியின்மை ஒரு உளவியல் கோளாறாகவே (Body dysmorphic disorder) உள்ளிருப்பது தெரியவருகிறது என்று சொல்லும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அவர்களைக் கடைசியில் மனநல மருத்துவரிடம்தான் அனுப்பி வைக்கிறார்கள். இந்தப் பாவமெல்லாம் செல்ஃபி கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்போனைக் கண்டுபிடித்த புண்ணியவானைத்தான் சாரும் என்கிறீர்களா?

பிரச்சினைக்குரிய ஒன்றுதான் செல்ஃபி என்பதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்களும் நடந்துகொண்டுதான் வருகின்றன. பிரிட்டனில் ஒரு இளைஞன் ஒரு நாளின் பெரும் பகுதியை செல்ஃபி எடுத்தே கழித்திருக்கிறான். இதனால் படிப்பை இழந்தான். நட்பு வட்டத்தை இழந்தான். சமூகத்தால் ஒரு நோயாளியாகப் பார்க்கப்பட்டு பல சேதாரங்களைச் சந்தித்த அவனுக்குக் கடைசியில் ‘பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர்’ என்ற மனநலக்கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

‘உன் மூக்கு நன்றாக இல்லை’ என்று யாரேனும் கமென்ட் செய்துவிட்டால் போதும். தாங்க மாட்டான். மூக்கும் முழியும் அந்தப் புகைப்படத்தில் நன்றாக வரும்வரை செல்ஃபி எடுத்துக்கொண்டே இருப்பான். அது ஐம்பது முறை என்றாலும் சரி, ஆயிரம் முறை என்றாலும் சரி, படமெடுப்பான், பதிவிடுவான். நல்ல கமென்ட் யாரேனும் போட்டு அவன் மனம் அமைதியுறும் வரை இப்படித்தான் செய்வான். ஒரு வகையில் இதை ‘திரும்பத் திரும்ப செல்ஃபி எடுக்கும் கோளாறு’ (obsessive selfie taking) என்றே குறிப்பிடுகின்றனர்.

ஒரே மாதிரி காரியத்தை திரும்பத் திரும்பச் செய்வது, ஒரே மாதிரியான எண்ணங்கள் மனதுக்குள் திரும்பத் திரும்ப எழுவது (அதை நாம் கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாமல் போவது) - இதையெல்லாம் ‘எண்ணச் சுழற்சி நோய்’ என்பார்கள் மனநல மருத்துவத்தில். இங்கே மேற்சொன்ன இளைஞருக்கு அந்தச் சுழற்சி திரும்பத் திரும்ப வருவதற்குக் காரணம் அவர் தன் உடம்பில் முகம், காது முதலான உறுப்புகள் அழகில்லாமலும் அகோரமாகவும் இருப்பதாக உறுதியாக நம்புகிறார். கடைசியில், மருந்துகளோடு சேர்ந்து எண்ணம் மற்றும் நடத்தையை மாற்றிக்கொள்ள உதவும் சிகிச்சையளித்து அந்த இளைஞனை குணப்படுத்தியுள்ளனர். இதுபோன்று எத்தனையோ கதைகள் இருக்கின்றன.

இன்னும் இன்னும் நன்றாகப் படம் வரவேண்டும் என்ற வெறியில் செல்ஃபி எடுத்து செத்துப்போனவர்களின் எண்ணிக்கை, நம்புங்கள்… நம் இந்தியத் திருநாட்டில்

தான் அதிகம். செல்ஃபி எடுக்கையில் நீரில் விழுந்து மூழ்கிப்போவது, விலங்குகளின் தாக்குதலில் உயிரிழப்பது, மின்சாரம் தாக்கி, இடிமின்னல் தாக்கி, விளையாட்டு சாகசங்களின்போது, சாலை விபத்தில், அவ்வளவு ஏன் நடந்துகொண்டிருக்கும்போது செல்ஃபி எடுத்து உயிரை விட்டவர்களும் உண்டு. அந்த ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மை உயிரைப் பறிக்கும் அளவுக்குப் போவதால் பல நாடுகளில் ‘செல்ஃபி எடுக்கத் தடை செய்யப்பட்ட பகுதி’ (Selfie free zone) என்ற அறிவிப்புகள் தென்படத் தொடங்கிவிட்டன. இங்கே மும்பையிலும் அப்படியான இடங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

மேற்சொன்ன தகவல்களைப் பார்த்து இனி செல்ஃபி எடுக்கலாமா இல்லை, பேசாமல் பழைய நோக்கியா போனுக்கே மாறலாமா என்று குழம்பியெல்லாம் போகாதீர்கள். அதற்கு முன் ஒரு ‘குளம்பி’யகத்துக்குப் போய் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு ஒரு முடிவெடுங்கள்.

“செல்ஃபியை நீங்க ஃபேஸ்புக்ல போடுவீங்க… இன்ஸ்டாகிராமில் போடுவீங்க… நீங்க குடிக்கற காபியிலேயே உங்க படத்தைப் போட்டுத்தர்றோம்... குடுங்க உங்க செல்ஃபியை” என்கிறார்கள் மும்பையில் ஒரு காபிக்கடையில். ‘செல்ஃபிச்சினோ (Selfieccino)’ என்ற நாமகரணத்துடன் உள்ள அந்தக் கடையில் காபி ஆர்டர் செய்யும்போது உங்கள் செல்ஃபியையும் கொடுத்துவிட்டால் போதும். மெஷினுக்குள் பால், காபித்தூளோடு உங்கள் போட்டோவையும் ‘அப்லோட்’ செய்வார்கள். வெளியே காபிக்கோப்பை வரும்போது மேலே நீங்கள் போட்டோவாக மிதப்பீர்கள். அப்படியே அதையும் செல்ஃபி எடுத்து உடனே ‘காபியில் நான், காபியும் நானும்’ என்று ஒரு தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு, விழும் லைக்குகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே காபி அருந்தும் போக்கும் இப்போது அதிகரித்து வருகிறது!

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in