கண்ணான கண்ணே..! - 10: எது மகிழ்ச்சியான குடும்பம்?

கண்ணான கண்ணே..! - 10: எது மகிழ்ச்சியான குடும்பம்?

சில நேரங்களில், பெற்றோருக்கான கடமையை நிறைவேற்றுவதில் நாம் காட்டும் கடுமையும், விதிக்கும் கெடுபிடிகளும்தான் குழந்தைகள் அவர்களுடைய குழந்தைப் பருவத்தை அனுபவிக்கவிடாமல் தடுக்கின்றன. நம்மை அவர்கள் முன் வில்லனாக உருவகப்படுத்தவும் செய்கின்றன. நாம் அக்கறை என நினைத்து திணிக்க முயலும் விஷயமே நமக்கும் குழந்தைக்கும் இடையேயான அரணாக உருவாகிவிடலாம். அது உணவாகவும் இருக்கலாம்; உணர்வாகவும் இருக்கலாம்.

எனது அனுபவத்தில், பிள்ளை வளர்ப்பில் பெற்றோருக்கு இருக்கும் அறிவு வறட்சிதான் உண்மையில் குழந்தைகள் இன்று எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் என்பேன். ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பில் உள்ள சில நுணுக்கங்களின் தொடர்ச்சியை இந்த வாரம் அறிவோம்.

உடற்பயிற்சியை வாழ்க்கை முறையில் இணைத்துக்கொள்வது, வாரம் ஒரு முறையாவது பள்ளி அல்லது சந்தைக்குக் குழந்தையுடன் நடந்துசென்று வருவது குழந்தைகளிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் அதே வேளையில், அவர்களைப் பந்தயக் குதிரை ஆக்காமல் இருப்பது போன்ற சில ஆலோசனைகளைக் கடந்த வாரம் விரிவாகப் பார்த்தோம்.

பெற்றோருக்கான இந்த அறிவுரைப் பட்டியலில் இன்னும் இரண்டு மிச்சமுள்ளது. பட்டியலில் 4-வது இடத்தைப் பிடிப்பது குடும்பச் சுற்றுலா. கடைசி இடமென்றாலும் முக்கியமானதாக 5-வது இடத்தில் இருப்பது வெயில், மழை, குளிர் என்றாலும் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது.

விடுமுறையில் சுற்றுலா செல்லுங்களேன்...

ஆண்டில் ஒருமுறையேனும் விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா செல்லுங்களேன். சுற்றுலாதானே என்று பக்கத்திலிருக்கும் ஷாப்பிங் மாலுக்கும், சற்று தொலைவில் இருக்கும் கடற்கரைக்கும் சென்று வராதீர்கள். நான் சொல்லும் சுற்றுலா வழக்கமாக நீங்கள் பழக்கப்பட்ட தட்பவெப்ப சூழலில் இருந்து, கலாச்சார சூழலில் இருந்து மாறுபட்டதாக இருக்கட்டும். முடிந்தால் மலைப் பிரதேசங்கள். நீங்கள் மலைவாசிதான் என்றால் ஏதாவது சமவெளி. இப்படியான சுற்றுலாக்கள் உங்களுக்குப் புதிய கலாச்சாரங்களை புதிய அனுபவங்களைத் தரும். பதின்பருவ குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இப்படியான சுற்றுலாக்களை அமைத்துக் கொள்வது மிக மிக முக்கியமானது.

பதின்ம வயதில் குழந்தைகள் புதிய அனுபவங்களை நிறைய பெறுவார்கள். அவற்றைப் பற்றி பேசித் தெரிந்துகொள்ள வழக்கமான வீடு அவர்களுக்கு தடையாக இருக்கலாம். இப்படி ஓர் இன்பச் சுற்றுலாவை அமைத்துக்கொள்ளும்போது குடும்பத்தில் அனைவரிடமுமே இறுக்கம் தளர்ந்திருக்கும். அப்போது குழந்தைகளும் மனம் திறந்து நிறைய பேச வாய்ப்பு ஏற்படும். தனிப்பட்ட முறையில் நான் எனது சுற்றுலாக்களை இமாலய மலைகளிலும் ஷாய்த்ரி மலைகளிலும் திட்டமிடுவது வழக்கம். நீங்கள் தேர்வு செய்யும் இடத்தில் மொபைல் நெட்வொர்க் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்றால், அதுவே மிகச் சிறந்த தெரிவு என்று நான் சொல்வேன்.

வெயிலோடு விளையாடு...

வெயிலோடும் விளையாடலாம், மழையோடும் விளையாடலாம். உங்கள் கெடுபிடிகளால்தான் உங்கள் பிள்ளைகளுக்கு அசவுகரியம் ஏற்படுமே தவிர, இயற்கையால் எப்போதும் ஆபத்து விளைவதில்லை. வெயில் அடிப்பதால் வெளியே செல்ல வேண்டாம்; மழை பெய்கிறது உள்ளே வந்துவிடு என்று சொல்லித்தான் நாம் நமது குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். வெயிலும், மழையும் இயற்கை.

ஒவ்வோர் ஆண்டும் இப்பருவ காலங்கள் வந்து செல்லவே போகின்றன. குழந்தைகளிடம் பருவநிலையைச் சுட்டிக்காட்டாமல் விளையாட அனுமதித்தீர்கள் என்றால், அவர்களே அதற்கேற்ப விளையாட்டை கச்சிதமாகப் பழகிக்கொள்வார்கள். கோடையில் கிரிக்கெட், மழையில் கால்பந்து என அவர்களே வகுத்துக் கொள்வார்கள். அதை விடுத்து நீங்கள் கெடுபிடிகளை விதித்தால், எப்போதும் வீட்டுக்குள் டிவி, வீடியோ கேம், ஐபேட் என்றே முடங்குவார்கள்.

வீட்டினுள் இத்தகைய மின்னணு சாதனங்களுடன் முடங்கும் குழந்தைகள் நொறுக்குத்தீனி அதிகம் உட்கொள்ளும் பழக்கத்துக்கு ஆளாவார்கள். அதுமட்டுமல்லாமல் கோலா, காபி போன்ற பானங்களை அருந்தும் உந்துதலும் அவர்களுக்கு அதிகமாக ஏற்படும்.

அப்புறம் பெண் குழந்தைகளிடம் நாம் சொல்லும் அபத்தமான வார்த்தைகள் சில இருக்கின்றன. வெயிலில் விளையாடினால் கறுத்துப்போய் விடுவாய் என்று கூறுவதுபோல் அபத்தம் வேறில்லை என்பேன். உங்கள் பெண் பிள்ளைகளை இச்சமூகம் அவர்கள் நிறத்தின் அடிப்படையில் சீர்தூக்கப் போவதில்லை. அவர்களின் வலிமையும், தற்சார்பும்தான் அவர்களை அடையாளப்படுத்தும். நீங்கள் மட்டும் மழை, வெயிலில் விளையாடுவதில் இருந்து உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளைத் தடுக்காமல் இருந்தீர்கள் என்றால் நம் தேசத்துக்கு நிறைய விளையாட்டு வீராங்கனைகள் கிடைப்பார்கள். ஆகவே, குழந்தைகள் ஓடி விளையாட அனுமதியுங்கள்.

நான் பட்டியலிட்ட 5 ஆலோசனைகளையும் பெற்றோர்கள் பின்பற்றினாலே போதும்; குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வைக் கட்டமைப்பது கலையாகிவிடும்.

குழந்தைகளும் உடற்பயிற்சி அறிவியலும்...

உடற்பயிற்சி செய்யும்போது நம் தசைகள் இருவகை சக்தியை வெளிப்படுத்துகின்றன. இவை, டைப்- 1, டைப்- 2 என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளன. டைப் 1, மெதுவான அசைவுகளால் நீடித்த சக்தியை வெளிக்கொணரக் கூடியது. டைப் 2, வேகமான அசைவுகளால் அதி தீவிர சக்தியை வெளிக்கொணரக் கூடியது. குழந்தைகளின் தசைகள் இரண்டாம் வகை அசைவுகளுக்குப் பொருத்தமானது.

அவர்கள் துள்ளிக் குதித்து விளையாடுவதிலும், தவளை ரேஸிலும் காட்டும் ஆர்வத்தை நீண்ட ஓட்டப்பந்தயங்களில் காட்ட மாட்டார்கள். மாரத்தான் போட்டிகள் அவர்களுக்கு எரிச்சலையே தரும். வளர்ந்த நபர்களுக்கு நீண்ட தூர சைக்கிளிங் மகிழ்ச்சியான பயிற்சியாக இருக்கலாம். ஆனால், குழந்தைகள் நிச்சயம் அதை வெறுப்பார்கள். அவர்கள் உடல் கட்டமைப்புக்கு ஏதுவான டைப் 2 பயிற்சிகளிலேயே அவர்களை ஈடுபடுத்துங்கள்.

உங்களுக்கு மாரத்தான் ஓடுவது பிடிக்கும் என்பதாலோ அல்லது இது ஒரு நல்லெண்ண காரணத்துக்கான ஓட்டம் என்று கூறியோ குழந்தைகளை மாரத்தான் ஓடச் சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக மாரத்தானில் ஓடும் வீரர்களுக்கு தண்ணீர் தரும் ஸ்ப்ரின்டர்களைப் போல் அவர்களைப் பயன்படுத்தப் பாருங்கள். அதனை அவர்கள் சாகசம் போல் சிறப்பாகச் செய்வார்கள்.

அதேபோல், நீங்கள் மிகப்பெரிய கோச்சாக இருக்கலாம், அதற்காக அவர்களை தினமும் மைதானத்தை 5 ரவுண்டு சுற்றி வரச்சொல்லி எரிச்சலூட்டாதீர்கள். அவர்கள் தேவைக்கேற்ற வார்ம் - அப் பயிற்சிகளைக் கொடுங்கள். இதுதான் குழந்தைகளை உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதன் பின்னணியில் இருக்கும் அறிவியல்.

எது மகிழ்ச்சியான குடும்பம்?

மகிழ்ச்சியான குடும்பம் என்றால் ஆரோக்கியமான குடும்பம் என்றே அர்த்தம். ஒரு வீட்டில் வசதியும் பணமும் நிறைந்து இருந்தாலும்கூட ஆரோக்கியம் இல்லாவிட்டால் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்காது. பெரும் பணக்காரராக இருந்தாலும்கூட நோய் ஏற்பட்டுவிட்டால், அதற்கு தீர்வு தரும் மருந்து மட்டும்தான் ஆறுதலாக இருக்குமே தவிர வேறு எதுவுமே மகிழ்ச்சியளிக்காது.

நம்மிடம் இருப்பதை வைத்துக்கொண்டுகூட மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதற்கு ஆரோக்கியம் அடித்தளம். ஆரோக்கியம்தான் உண்மையான சொத்து. உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி, உறக்கத்தில் ஒழுக்கம் என நாம் அதற்காக நிறைய மெனக்கிடல்களை முன்னெடுக்க வேண்டும். செல்வத்தைப் போலத்தான் பார்த்து பார்த்து கவனமாகச் சேர்க்க வேண்டியது ஆரோக்கியம். வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் இயங்க வேண்டும். இயக்கம் உள்ள இல்லம்தான் இனிமையான இல்லம்.

வீட்டுத் தலைவர் என்பது ஓய்வெடுப்பதற்கான அங்கீகாரம் என நினைக்காதீர்கள். வீட்டு வேலைகளில் அனைவரும் ஈடுபட்டு இயங்குங்கள். உங்கள் வீட்டை நீங்களே சுத்தம் செய்யுங்கள், வாரம் ஒரு நாளாவது உங்கள் துணிகளை நீங்களே துவைத்துப் பழகுங்கள், மின் விசிறிகளை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யுங்கள். இப்படி அவரவர் வயதுக்கு ஏற்ப ஏதாவது ஒரு வீட்டு வேலையை வேண்டி விரும்பிச் செயுங்கள். அசையாமல் இருந்தீர்கள் என்றால் உங்களுடனேயே லைஃப் ஸ்டைல் நோய்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன. அவை எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது ஏறி சவாரி செய்யலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பொது இடங்களில் பாகுபாடு வேண்டாமே...

பிள்ளைகளை அருகிலிருக்கும் பூங்காக்களிலோ பொது இடங்களிலோ விளையாட அனுமதி மறுக்கும் பெற்றோர்கள் பலருக்கும் அது ‘பொதுவான' இடமாக இருப்பதுதான் பிரச்சினையாக இருப்பதாக நான் உணர்கிறேன்.

வார இதழ் அட்டைகளில் நான் ஒரு சமூக ஆர்வலர் என போஸ் கொடுக்கும் அதே நபர்கள்தான் தன் பிள்ளைகள் பொது பூங்காக்களில் எல்லாக் குழந்தைகளுடனும் சேர்ந்து விளையாடப் பொறுக்காதவர்களாக இருக்கிறார்கள். இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானதுதானே. நீங்கள் புத்தக அட்டைப் படங்களில் கருணை பற்றியும் சமூக சேவை பற்றியும் பேசியது எல்லாம் போதும். பொது இடங்களை, பூங்காக்களை, கடற்கரைகளை இது பணக்காரர்களுக்கானது இது சேரிக் குழந்தைகளுக்கானது எனப் பிரிக்க முயலாதீர்கள். உங்கள் குழந்தைகள் எல்லாருடனும் சேர்ந்தே விளையாடட்டும். ஊஞ்சல் விளையாட அதன் வாய்ப்பு வரும்வரை காத்திருக்கட்டும். இதுதான் இயல்பானது.

இன்னொரு விதமான ஒடுக்குமுறையையும் நான் பொது இடங்களில் பார்த்திருக்கிறேன். ஒட்டுமொத்த பூங்காவும் ஆண் பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கிரிக்கெட் விளையாடுவார்கள். பெண் பிள்ளைகள் தங்களுக்கென இடமில்லாமல் தவிப்பார்கள்.

வாரத்தில் ஒரு நாளாவது பூங்காக்களை பெண் பிள்ளைகளுக்கு என ஒதுக்கிக் கொடுக்கலாமே. நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு எல்லாம் நீண்ட கால கோரிக்கையாக இருந்துவிட்டுப் போகட்டும். மாற்றத்தை நாம், நம் பூங்காவில் இருந்து தொடங்குவோம். வாரத்தில் ஒருநாள் பெண் பிள்ளைகளுக்கானதாக மாற்றியமைப்போம். வீராங்கனைகளை உருவாக்குவோம்.

 (வளர்வோம்... வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in