பாப்லோ தி பாஸ் 22: ஒரு ‘எதிரி’ அழிந்தான்…!

பாப்லோ தி பாஸ் 22: ஒரு ‘எதிரி’ அழிந்தான்…!

கொலம்பிய நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மீது பாப்லோ நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அந்த நாட்டு அரசுக்கும் நார்கோக்களுக்கும் இடையிலான மோதல் கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமடைந்து வந்தது. பாப்லோவும் ஒரே இடத்தில் தங்கி இருந்து தன் தொழிலைக் கவனிக்க முடியாமல், பெரும்பாலான நேரம் அங்கே இங்கே என்று பதுங்கி வாழ்ந்து வந்தான். ஆனால் அவ்வப்போது, ஆளுநர் போன்ற அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை அவன் நிறுத்தவில்லை.

இந்நிலையில்தான் பழைய கணக்கு ஒன்றைத் தீர்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அது 1989-ம் ஆண்டு. அதற்கு அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறும். அதில் லூயி கார்லோஸ் கலான், நிச்சயம் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார் என்று நாட்டின் பெரும்பாண்மையான மக்கள் நம்பினார்கள். ஆனால், பாப்லோ மட்டும் அவர் அதிபராக மாட்டார் என்று திடமாக நம்பினான். அதுசரி… அதிபராவதற்கு அவர் உயிரோடு இருக்க வேண்டும் அல்லவா?

சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘புது லிபரல் கட்சி’யிலிருந்து லாராவால் பாப்லோ நீக்கப்பட்டானே… அந்தக் கட்சியின் தேசிய தலைவர்தான் இந்த கார்லோஸ் கலான். ‘எல் டியெம்போ’ செய்தித்தாளில் பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கலான், 70-களில் மிசேல் பஸ்த்ரானா அதிபராக இருக்கும்போது கல்வி அமைச்சராக இருந்தவர். கொலம்பியாவுக்கான இத்தாலி நாட்டுத் தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட கலான் 1979-ல் ‘புது லிபரல் கட்சி’யைத் தொடங்கினார். 1989-ல் தனது கட்சியை மூலக் கட்சியான ‘லிபரல் கட்சி’யுடன் இணைக்க முடிவு செய்தார் கலான்.

பத்திரிகையாளராக இருந்தபோதும் சரி, அரசியல்வாதியாக இருந்தபோதும் சரி... நார்கோக்களை எதிர்ப்பதுதான் இவருடைய தலையாய கடமையாக இருந்தது. தேர்தல் பிரசாரங்களின்போது,  “போதைப் பொருள் கடத்தல்காரர்களை நாடு கடத்துவதுதான் நான் அதிபரானவுடன் செய்யும் முதல் வேலை” என்று சபதம் எடுப்பார். அதனால் பாப்லோ உள்ளிட்ட நார்கோக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.

இந்தத் தருணத்தில் பாப்லோவுக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் கலான் உடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களில் விர்ஜீனியா மட்டும்தான், எதிர்காலத்தில் நடக்கப் போவதைத் தெளிவாக உணர்ந்து, அவனிடம் வலியுறுத்தினாள்.

“பாப்லோ… அடுத்த வருஷம் கலான்தான் நம் நாட்டுக்கு அதிபராகப் போறார். அவர் அதிபரான அடுத்த நாள் உன்னை ‘எக்ஸ்ட்ராடிட்’ பண்ணிடுவாரு. அதனால அவர் கூட அமைதியா போயிடு…”

“இல்ல டியர்… அவன் நிச்சயம் அதிபராக மாட்டான்..”

“பாப்லோ… உன்னை நீயே முட்டாளாக்கிக்கிறதை முதல்ல நிறுத்து.”

“இருக்கலாம் விர்ஜீனியா… அவன் அதிபராகத் தேர்வு செய்யப்படலாம். ஆனா அவன் பதவிப் பிரமாணம் எடுக்கமாட்டான்.”

“அவரை நீ கொன்னுட்டா, நிச்சயம் அவர் கொலம்பியாவின் அடுத்த ‘கைட்டான்’ ஆகிடுவாரு. அவரை ‘ஹீரோ’வா புகழ்வாங்க. நீ வில்லனாகிடுவ. அப்புறம் அரசாங்கம் உன்னைக் கொல்றதை யாரும் தடுக்க முடியாது. நீ சாகறதைப் பார்க்க நான் விரும்பலை பாப்லோ. நீ ஆயிரக்கணக்கான பேருக்குத் தலைவன். உன்னை நம்பி இருக்கிறவங்களுக்கு நீ இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கு பாப்லோ…”

“நீ நினைக்கிற மாதிரியான சூழல் இங்க, இப்ப இல்லை விர்ஜீனியா… போலீஸ், டி.ஏ.எஸ், கலி கார்ட்டெல்னு நான் திரும்புற பக்கமெல்லாம் என்னைக் குறி வைக்க நிறைய பேர் இருக்காங்க. நான் சான்டொஃபிமியோகிட்ட உதவி கேட்கப் போறேன். அவனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகத்துல நிறைய தொடர்புகள் இருக்கு. அதைப் பயன்படுத்தி கலானைத் தீர்த்துக்கட்டப் போறேன்…” – பாப்லோ பொருமினான்.

இந்த சான்டொஃபிமியோ யார் தெரியுமா..? பாப்லோ இரண்டாவது முறையாக அரசியலுக்கு வரும்போது, அவனை ‘புது லிபரல் கட்சி’யில்சேரச் சொல்லி அறிவுறுத்தினானே… அதே நண்பன்தான்!

ஆனால், கலான் சாக வேண்டுமென்று பாப்லோ மட்டுமே விரும்பவில்லை. தான் ஆட்சிக்கு வந்தால் இடதுசாரி பயங்கரவாதிகளை ஒரு கை பார்த்துவிடுவேன் என்று கலான் அழுத்தமாகப் பேசி வந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இடதுசாரி கெரில்லா அமைப்புகளும் முழு மூச்சாக இறங்கின.

கலான் கொல்லப்படுவதற்கான நாள் நெருங்கியது. 1989 ஆகஸ்ட் 18. கொலம்பியத் தலைநகர் பகோட்டாவிலிருந்து இருபது மைல் தொலைவிலிருந்த சொவாச்சா எனும் இடத்தில் கலான் தன் தேர்தல் பிரசாரத்தை நிகழ்த்துவதாக இருந்தது. அப்போது, பாப்லோவின் கூட்டாளியான ‘மெக்ஸிகன்’, தன் அடியாட்களை கலானின் பாதுகாப்புப் பணியாளர்களின் உடையில் அனுப்பி, கலானைத் தீர்த்துக்கட்டினான். ஒரே குண்டு. நெஞ்சில் பாய்ந்தது. கலான் சரிந்தார்.

“ஒரு ‘எதிரி’ அழிந்தான்..!” என்று பாப்லோ அப்போது நினைத்திருக்கலாம். ஆனால், கலான் சிந்திய ரத்தத்திலிருந்து இன்னொருவர் முளைப்பார் என்று பாப்லோ எதிர்பார்க்கவில்லை. வந்தார் சீசர் கவீரியா. ஆட்டம் சூடு பிடித்தது..!

நீதி கிடைக்க 18 ஆண்டுகள்!

லூயி கார்லோஸ் கலான் கொல்லப்படுவதற்கு பாப்லோதான் காரணமாக இருந்தாலும் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதனால் காவல்துறையின் விசாரணை சான்டொஃபிமியோவின் மீது திரும்பியது. அதற்கான முகாந்திரமும் இருந்தது. காரணம், உட்கட்சிப் பூசல்தான். கலான் கொல்லப்பட்டால் அந்த இடத்துக்குத் தான் வரலாம் என்று திட்டமிட்டான் சான்டோ. எனவே, அதற்கு பாப்லோவைப் பயன்படுத்திக்கொண்டான் என்று குற்றச்சாட்டு.

இந்த வழக்கில் 2007-ல் சான்டோவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவனது நன்னடத்தையைக் காரணம் காட்டி, உயர் நீதிமன்றம் அவனுக்கு விடுதலை அளித்தது. ஆனால் 2011-ல்,

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, முதலில் விதிக்கப்பட்ட 24 ஆண்டு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது கொலம்பியாவின் உச்ச நீதிமன்றம்.

(திகில் நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in