இணையச் சிறையின் பணயக் கைதிகள்! - 8

இணையச் சிறையின் பணயக் கைதிகள்! - 8

 தன்னை நேசிக்காதவர்கள் மிகவும் குறைவே. நம் மீதான நம் நேசத்தை வெளி உலகுக்குக் காட்டும் அடையாளமே செல்ஃபி எனப்படும் தற்படம்.
இணையமும் அது சார்ந்த சமூக வலைதளங்களும், கூடவே நவீனமிகு ஸ்மார்ட்போன்களும் வளர வளர நம்மை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஒரு முக்கியமான விஷயம் செல்ஃபி.

தன்னைத்தானே ஒரு கைபேசியில் படம் எடுத்துக்கொண்டு அதை சமூக  வலைதளங்களில் பதிவேற்றுவதே செல்ஃபி (Selfie) என்று அந்த வார்த்தையைச் சமீபத்தில் தனது ஆன்லைன் அகராதியில் சேர்த்துள்ளது ஆக்ஸ்போர்டு நிறுவனம். ஆக்ஸ்போர்டு அகராதியின் 2013-ம் ஆண்டுக்கான வார்த்தை (Oxford word of the year) என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது செல்ஃபி.



எத்தனை வகை?

தனியாக, தனது இணையுடன், அல்லது ஒரு குழுவுடன் என்று செல்ஃபியில் மூன்று வகை உண்டு.

எப்படித்தான் செல்ஃபி எடுத்தாலும் அதிலுள்ள சில அம்சங்களைப் பொறுத்து உங்கள் ஆளுமையை ஓரளவுக்கு நன்றாகவே கண்டறிய முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சைபர் சைக்காலஜி தெரிந்தவர்கள்.

லேசாக வாய் திறந்திருத்தலோ அல்லது மூடியிருத் தலோ, கேமராவைக் கையில் பிடிக்கும் கோணம் மற்றும் நீளம், முகம் தவிர உடலின் மற்ற பாகங்கள் தெரிகிறதா, தாம் இருக்கும் இடம் படத்தில் வருகிறதா அல்லது மறைக்கப்படுகிறதா என்று பல விஷயங்களை ஒரு செல்ஃபியில் நாம் ஆராய முடியும். அவர்களின் தன்னம்பிக்கை, வாழ்வின் ஏக்கங்கள், நிறைவேறா ஆசைகள், திறமைகள், தற்போதைய வாழ்நிலை எனப் பலவற்றைத் தமக்கே அறியாமல் செல்ஃபியில் காட்டிக்கொடுத்துவிடுவார்கள்.

நம்மை நேரில் பார்த்துப் பழகும்போது இருக்கும் முக பாவனைகள், உணர்வு வெளிப்பாடுகள் செல்ஃபியில் அப்படியே இருக்காது. சிறுசிறு குறைகளைக்கூட நிவர்த்தி செய்து தத்ரூபமாக போட்டோஷாப், எடிட்டிங் எல்லாம் செய்து தயார்படுத்திய ஒரு சீரிய செல்ஃபியைப் பதிவிடவே மக்கள் விரும்புகின்றனர். குறைகளை சரிசெய்து போடுகிறேன் என்பதன் மூலம் தன் சுய பிம்பத்தை இன்னும் மெருகேற்றி, தன்னம் பிக்கையையும் சுய கவுரவத்தையும் இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டுவதற்கான முயற்சி யாகவும் செல்ஃபியைப் பதிவேற்றலாம்.

சமூகத்தோடு தன்னை எப்போதும் இணைத்து வைத்திருக்கும் ஒரு கருவியாக செல்ஃபியைப் பார்க்கின்றனர் சிலர். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தங்கள் வெற்றியையும் தேஜஸையும் பறைசாற்றிக்கொள்ளவும் செல்ஃபியை நாடுகிறார்கள். கூச்ச சுபாவம் மிகுந்து தன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் சுருக்கிக்கொண்டவர் தன் இருப்பை இணைய வெளியில் பதிவு செய்யும் கருவியாகப் பயன்படுவதும் செல்ஃபிதான். சோகத்துக்கும் அதுதான்; சுகத்துக்கும் அதுதான்; கழிவிரக்கத்துக்கும் செல்ஃபிதான்; கலைநயத்துக்கும் செல்ஃபிதான்!

ரகசியமான சில உணர்வுகளைக்கூட, புரிந்தோ புரியாமலோ வெளி உலகத்துக்குக் காண்பிக்கும் ஒரு கருவியாகவும் செல்ஃபி இருக்கிறது. ஏதோ கொஞ்சம் மனசு சரியில்லை என்றவுடன் கவலைப்படும் தன் முகத்தை ‘என்ன செய்யறதுன்னே புரியலை…’ என்ற சோக கமென்ட்டுடன் பகிர்கிறார் ஒருபெண். கொஞ்ச நேரத்திலேயே துக்க விசாரிப்புகள், ஆறுதல்கள், அட்வைஸ்கள். ‘கவலைப்படாதே… இப்படிச் செய்... அவரோடு பேசு... இங்கே போ... அதைச் சாப்பிடு’ என அன்பு விசாரணைகள் அந்தத் தோழி எதிர்பார்த்தது போலவே  அவரது  ஃபேஸ்புக்கில் நிரம்பி வழிகின்றன. அப்பிரச்சினை என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால், தனக்கு என்ன ரெஸ்பான்ஸ் என்று அறிந்துகொண்டதன் மூலம் அப்பெண்ணின் ‘டோப்பமைன் ரஷ்’ (Dopamine rush) அவருக்குப் போதுமான நிம்மதி போதையைத் தந்திருக்கும். ஆக நம் கஷ்டம் வெளியே தெரிவதைக்கூட மறைமுகமாக விரும்புகிறோம். அதற்கு ஆறுதலும் அரவணைப்பும் அனைவரும் தர வேண்டும் என்பதையும் ரகசியமாக விரும்புகிறோம். அடுத்தவருக்கு அறிவுரை சொல்வது நம் அனைவருக்குமே எளிதுதான். ஆனால், நேரில் வந்து சொல்வார்களா என்று நமக்கே தெரியாத நண்பர்கள் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்-அப்பிலும் அன்புகாட்டும்போது ஏற்படும் ‘கிக்’ என்பதே தனிதான்.



வண்டியை ஓட்டிக் கீழே விழுந்து கை ஒடிந்துவிட்டது என்று கையில் கட்டுடன் ஒரு ஜென் துறவியைப் போல ஒரு பதிவு போட்டால் போதும்... வரிசையாகப் பதிவிடுவார்கள் நம் மெய்நிகர் மற்றும் பொய்நிகர் நண்பர்கள் அனைவரும். ‘டேக் கேர்… டேக் கேர்” என்று சலிப்பில்லாமல் கமென்ட்டிக்கொண்டே இருப் பார்கள். உடல் வலியுடன் பதிவேற்றப்படும் செல்ஃபி  உள்ளத்தை மகிழச்செய்யும் மாயத்தை என்னென்பது!
தான் கவனிக்கப்பட வேண்டும்; தன்னை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்; தன் பெயரைச் சொல்லி நாலு பேர் பாராட்ட வேண்டும் அல்லது தன்னைத் தேற்ற வேண்டும் என்பன போன்ற சில அங்கீகாரங்களுக்கு இயல்பாகவே நம் மனம் ஆசைப்படுகிறது. வெளியே பட்டவர்த்தனமாகத் தெரியாவிட்டாலும் ஆழ்மன ரீதியாக இது போன்ற ஏக்கங்கள் நம்முள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த ஏக்கங்கள் பலவிதங்களில் நாம் அறிந்தோ அறியாமலோ வெளிப்படுகிறது. அதில் ஒரு விதம்தான் செல்ஃபி என்னும் சிங்காரப் படம்!

என்ன மாதிரியான உளவியல்?

சற்றே அதிக சுயகாதலுடன், எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு, சுய தம்பட்டம் அடித்துக்கொண்டு, தன் உடலழகு முதல் உள்ளத்தின் உயரம் வரை ஏகத்துக்கும் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு மனோபாவத்துக்குப் பெயர் ‘நார்ஸிசம்’ (Narcissism) எனப்படும். தம்மை எல்லோரும் புகழ வேண்டும்; நான்தான் பெரிய ஆள் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இப்படியான குணாதிசயங் களை உடையவர்கள் சற்று செல்ஃபி மோகம் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.

தான் யார் என்பதையும் தன் மதிப்பு இவ்வளவு என்பதையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கத் தன் உடற்கவர்ச்சியை அளவீடாகக் கொள்வார்கள் சிலர். அதாவது தன் உடலழகே பிரதானம் என்று அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த மனோபாவத்துக்கு Self-objectification என்று பெயர். இவர்களும் செல்ஃபியைச் சுட்டுத்தள்ளிக்கொண்டே இருப்பார்கள். அதிகமாகப் பதிவிட வேண்டும் என்பதை விட ‘ஒண்ணு போட்டாலும் சும்மா கும்முனு இருக்கணும்டா’ என்று தன்னை மிகு அழகுசெய்துகொண்டு எடுப்பார்கள் செல்ஃபியை.

மேற்சொன்ன இரு காரணங்கள் ஒரு அலசல்தான். ஆனால் இன்னமும் செல்ஃபி எடுப்பதையும் அதைப் பதிவிடுவதையும் பற்றி முழுமையான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றே சொல்கின்றனர் உளவியலா ளர்கள். செல்ஃபி மோகம் பரவும் வேகத்தைப் பார்த்தால் வருங்காலங்களில் அதுபோன்ற ஆய்வுகள் சீக்கிரமே நடத்தப்படும் என்பது சொல்ல வேண்டியதில்லை.

ஆண்களை விடப் பெண்களே அதிகமாக செல்ஃபிகளைப் பதிவிடுகின்றனர். கைபேசியைத் தலைக்கு மேல் உயர்த்திப் பெண்கள் எடுக்கும் படங்கள் சற்றே தன்னம்பிக்கை அதிகம் உடையவர் என்பதாகவும் கீழிருந்து தன்னை எடுத்துக்கொள்ளும் ஆண்கள் ‘தான் எல்லாவற்றிலும் உயர்ந்தவன்’ என்று நினைத்துக்கொள்வதாகவும்கூட அனுமானங்கள் இருக்கின்றன.

“செல்ஃபி எடுப்பதும் போடுவதும் தப்புன்னா எப்படி? டிஜிட்டல் காலம் பல சுவையான, வித்தியாச மான அனுபவங்களை நமக்குத் தருது. அதுல ஒண்ணுதான் செல்ஃபி எடுக்கறது. ஒரு வகையில் நம் தன்னம்பிக்கையின் அடையாளமாகத் திகழும் இதைத் தேவையில்லாமல் விமர்சிக்கிறார்கள் சிலர். பல வசனங்கள்  சொல்வதை  ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பது தெரியாதா?”- இப்படிக் கேட்பவர்களும் உண்டு.
ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் தோராயமாக 9 கோடி செல்ஃபி படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘Millennials’ என்று சொல்லக்கூடிய  1980-ம் ஆண்டுக்குப் பின் பிறந்த  இளைய தலைமுறையினர் கிட்டத்தட்ட  இணையத் துடனே பிறந்து வளர்கிறார்கள். ஆக இயற்கையிலேயே அவர்கள் சமூக வலைதளப் பயன்பாடு (செல்ஃபி உட்பட)அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

செல்ஃபி எடுப்பதைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்கள்கூட இந்தியா பக்கம்தான் வருகின்றனர். உலக நாடுகளில்அதிகம் ஃபேஸ்புக் பக்கம் புழங்குபவர்களில் முக்கியமானவர்கள் இந்தியர்கள் தானாம். அதைவிட செல்ஃபி எடுக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிகம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு நாளைக்கு எத்தனை படம் எடுக்கிறார்கள்? பின்னணிக்கு முக்கியத்துவம் தருகிறார்களா? தங்களைப் பற்றி மட்டுமே படம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்களா? நிறைய எடிட் செய்கிறார்களா? அல்லது அப்படியே பதிவேற்றுகிறார்களா? ஆணாக இருந்தால் எந்தக் கோணத்தில், பெண்ணாக இருந்தால் எந்தக் கோணத்தில் படமெடுத்துக்கொள்கிறார்கள்? எடுக்கின்ற படத்தில் எத்தனை படங்களைப் பதிவேற்றுகிறார்கள்? எத்தனை படங்களைப் பயன்படுத்தாமல் ஃபோல்டரில் வைத்துள்ளனர்? இப்படிப் பல கேள்விகளைக்கேட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இன்னமும் நடத்தப்படும். காரணம், ஒவ்வொரு விஷயத்திலும் நாம் நம் குணாதிசயங்களை வெளிப்படுத்திக் கொண்டேதான் வருகிறோம். எந்த இடத்தில் எல்லை மீறிப் பிரச்சினைக்குரியதாக நம் நடத்தை ஆகிவிடுகிறதோ, அங்குதான் உளவியல் உள்ளே வருகிறது. அது பற்றி அடுத்த வாரம்….

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in