கண்ணான கண்ணே..! - 09: குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

கண்ணான கண்ணே..! - 09: குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

பசிக்கு சாப்பிடுவது மட்டுமல்ல உணவு. அது நமது உடலைக் கட்டமைக்கும், உயிரை வளர்க்கும் சக்தி. ஆரோக்கியமான உள்ளத்துக்கான ஆதாரம். அதனால்தான் பிள்ளைகளுக்கு எப்படி ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் புகட்டுவது என்பதில் இருந்த குழப்பங்கள், எது சரியான உணவு என்பதைத் தேர்வு செய்வதில் இருக்கும் தயக்கங்கள், எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதில் நிலவிய ஐயங்களைக் களையும் வகையில் கடந்த சில அத்தியாயங்களில் ஆலோசனைகள் பகிரப்பட்டிருந்தன.உணவில் கவனம் செலுத்திவிட்டால் மட்டுமே ஆரோக்கியத்தைக் கைவசப்படுத்திவிட  முடியாது. உணவுப் பழக்கவழக்கங்களுடன் தகுந்த உடற்பயிற்சியும் தேவை என்பதையும் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும்.
ஆதலால் இந்த அத்தியாயத்தில் குழந்தைகளுக்கு விளையாட்டையும் உடற்பயிற்சியையும் எப்படி இயல்பாகக் கடத்த வேண்டும் என்பதற்கான குறிப்புகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

உங்கள் குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு என்பதில்தான் எனது முதல் அத்தியாயத்தைத் தொடங்கினேன். அந்த வாய்ப்புகளில் ஒன்று குழந்தைகளை விளையாட அனுமதிப்பது. அவர்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப் பழக்குவது. உங்கள் குழந்தைகள் ஒவ்வொருநாளும் குறைந்தது 60 நிமிடமாவது வீட்டிற்கு வெளியே சென்று விளையாட அனுமதியுங்கள். அதற்கான காரணங்களை இங்கே பட்டியலிடுகிறேன்:

1.    குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் அவர்களின் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். குழந்தைகளின் பெருங்குடல் சுகாதாரத்தைப் பேணுவதற்கு அவசியமான பாக்டீரியாக்கள் சீராக உற்பத்தியாகும். பியூட்டிரேட் (butyrate) என்ற நொதி குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. பியூட்டிரேட்டை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள், குழந்தைகள் வெளியில் விளையாடும்போதே கிடைக்கின்றன.

2.    விளையாட்டு, மூளையில் உள்ள கற்றல் மையங்களை முடுக்கிவிடுகிறது. குழந்தைகளின் மொழி ஆளுமையும் கணிதத் திறனும் வளர உதவுகிறது.

3.    விளையாடுவதால் மட்டுமே உடல் புரதச் சத்தையும், கால்சியம் சத்தையும் சரியாக கிரகித்துக்கொள்ள முடிகிறது. இதனால் செரிமானம் சீராகிறது.

4.    குழந்தைகளின் நரம்புத்திசு வளர்ச்சி (neurogenesis) சிறப்பாக அமைய அவர்கள் விளையாடுவது அவசியம்.

5.    குழந்தைகளின் எலும்புகள், தசை நாண்கள், எலும்பிணைப்புத் தசைகள் போன்றவை விளையாடுவதன் மூலமாக வலுவாகும். அதிகம் ஓடி ஆடி விளையாடாத குழந்தைகளுக்குத் தடுக்கி விழுந்தாலும்கூட எலும்பு நொறுங்கும் அபாயம் உள்ளது. பிள்ளைகளை வீட்டினுள்ளேயே பொத்திப்பொத்தி வளர்க்காதீர்கள்.

6.    மனச்சோர்வு, உடல்நலக் குறைவு என எதுவாக இருந்தாலும் விளையாட்டுப் பிள்ளைகள் சீக்கிரம் தேறிவிடுவார்கள்.

7.    பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய சீற்றமும், மன அழுத்தமும் விளையாடும் பழக்கமிருந்தால் கட்டுக்குள் இருக்கும்.

8.    சிகரெட், மது, போதை வஸ்துக்களிடமிருந்து விளையாட்டானது பிள்ளைகளைத் தற்காக்கும்.

9.    ஒரு குழுவாகச் சேர்ந்து இயங்குவது எப்படி, சட்டதிட்டங்களை மதிப்பதின் அவசியம் ஆகியவற்றை விளையாட்டுதான் இயல்பாகப் பிள்ளைகளுக்கு உணர்த்தும்.

10. வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்கப் பழக்கப்படுத்தும். மொத்தத்தில் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க உதவும்.

11. சுய ஒழுக்கத்தைக் கற்றுத்தரும்.

12. சுயமரியாதையைச் சொல்லித்தரும்.

இன்னும் பட்டியலை நீட்டலாம் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

நகர வாழ்க்கையில் இந்த நன்மைகளைக் குழந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஆயிரம் முட்டுக்கட்டைகள் வருகின்றன. ஆனால், என் பால்ய பருவத்தில் எனது சோனாவே பழங்குடி கிராமத்தில் உலகமே விளையாட்டரங்கம் போல் இருந்தது. அங்கே உள்ள குழந்தைகள் காலில் செருப்பு இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவர்களுக்கு ஏறிப்பழக மலைகள் இருந்தன, ஓடித்திரிய வயல்கள் இருந்தன, நீந்தி விளையாடக் குளம் குட்டைகள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான சமூகம் இருந்தது. ஒவ்வொருவரும் மற்றவர் மீது அக்கறை கொண்டிருந்தனர்.

இன்று நகரக் குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு ஒரு பணியாளைத் துணைக்கு நியமிக்க வேண்டியிருக்கிறது. அடுக்குமாடிகளிலிருந்து இறங்கிவரும் ஒவ்வொரு குழந்தையும் தன் வீட்டுப் பணியாள் மேற்பார்வையில் தனியாக விளையாடிச் செல்கிறது. யார் மீதும் யாருக்கும் நம்பிக்கை இல்லாத சூழல் இருக்கிறது. 8 அல்லது 10 வயதுக்கு மேல் பிள்ளைகள் விளையாடுவதே இல்லை. ஒருவேளை உங்கள் வீட்டு 12 வயது பெண்குழந்தையோ ஆண்குழந்தையோ மைதானத்தில் விளையாடுகிறது என்றால் உங்கள் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் (Feeling Blessed) என மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

பொருள் தேடலில் நகர வாழ்க்கையில் சிக்கிக்கொண்டாலும் பெற்றோருக்குச் சில கடமைகள் இருக்கின்றன. பாதுகாப்பு, சுகாதாரம் என்று காரணம் காட்டி நாம் நம் குழந்தைகளை இணையச் சிறைக்குள் தள்ளிவிடக் கூடாதல்லவா? அதனால், குழந்தைகள் விளையாடுவதை உடற்பயிற்சி செய்வதை உறுதிசெய்ய என்னிடம் உள்ள 5 ஆலோசனைகளை இங்கே பகிர்கிறேன்.

1.    உடற்பயிற்சியில் சமரசம் செய்யாதீர்கள்...

குழந்தைகளுக்கு நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதில் நாட்டமிருக்காது. ஆனால், நீங்கள் செய்வதை அப்படியே உள்வாங்கிக்கொள்வார்கள். உங்கள் குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் நீங்கள் முதலில் உங்கள் உடலைப் பயிற்சிக்குப் பழக்கப்படுத்தியவராக இருக்க வேண்டும். ஒரு வாரத்துக்குக் குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது  நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்க வேண்டும். அதில் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவராகவும் இருக்க வேண்டும். அதற்காக உடற்பயிற்சிக்கூடம் சென்றேன்,  இத்தனை மணி நேரம் வொர்க் அவுட் செய்தேன் என்றேல்லாம் ஸ்டேட்டஸ் போடாதீர்கள். அதைவிட முக்கியம், அதைப்பற்றி உங்கள் குழந்தைகளிடம் விவரிக்காதீர்கள். அவர்கள் நிச்சயமாக அதைக்கேட்க விரும்ப மாட்டார்கள். ஆனால், உடற்பயிற்சியால் உங்கள் உடல் மிளிரும்போது அவர்களுக்கே புரிந்துவிடும், கட்டுக்கோப்பான உடலைப் பெற பயிற்சி அவசியமென்று.

ஏற்கெனவே உணவுப் பழக்கத்திலும் இதே ஆலோசனையைத்தான் நான் உங்களிடம் வலியுறுத்தினேன். நீங்கள் இரவு உணவைக் குறித்த நேரத்தில் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தால் உங்கள் குழந்தைகளும் அதைப் பின்பற்றுவார்கள். உங்களுக்கு அதிகாலை எழுந்துகொள்ளும் பழக்கம் இருந்தால், உங்கள் குழந்தைகளும் அதனைப் பின்பற்றுவார்கள். இதில் பெற்றோர் இருவருக்குமே பொறுப்பு இருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் தாயின் பழக்கவழக்கங்களையே பின்பற்றுகின்றனர். என்னிடம் வரும் பெண் க்ளையன்ட்ஸுக்கு நான் டயட் பயிற்சி வழங்கினால், அவர்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் அப்படியொரு பயிற்சி தேவையில்லாமல் போவதை நான் நிறைய முறை கவனித்திருக்கிறேன்.

2.    வாரம் ஒருநாளாவது பள்ளிக்கு நடந்து செல்லுங்கள்

ஃபிட்னஸ் என்பது எப்போதுமே உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று பெறுவதாக இருத்தல் கூடாது. அது நமது வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். அந்த வகையில் நடைப்பயிற்சியை எளிதாக வாழ்க்கை முறையில் இணைக்க முடியும். அதையும் மெனக்கிடலாகச் செய்வதைக் காட்டிலும் இயல்பாகக் கடைப்பிடிக்கலாம். உங்கள் குழந்தையுடன் வாரத்தில் ஒருமுறையேனும் பள்ளிக்கு நடந்து செல்லுங்களேன். காலையில் முடியாவிட்டாலும் மாலை பள்ளியிலிருந்து திரும்பும்போதாவது நடந்துவரப் பழகுங்கள். ஒருவேளை, பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையேயான தூரம் அதிகமென்றால், உங்கள் வாகனத்தை 1 கி.மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு நடக்கவும். அது வெறும் நடைப்பயிற்சி மட்டுமல்ல. அப்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உரையாடல், நீங்கள் வழியில் காணும் காட்சிகள் பின்னாளில்  அசை போடக்கூடிய பொக்கிஷ நினைவாகக்கூட இருக்கும். முடிந்தால் இதைப் பள்ளியில் தெரியப்படுத்தி வாரத்தில் ஏதாவது ஒருநாள் எல்லாப் பெற்றோருமே அப்படிச் செய்வதைப் பழக்கமாக்கலாம். இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. ஒரு பள்ளி முழுவதும் இப்படிப் பழகும்போது பள்ளிக்குச் செல்லும் சாலைகள் பாதுகாப்பானதாக மாறுவதோடு இதனால் பாதசாரிகளுக்கு ஏதுவான நடைமேடைகள் அமைக்கப்படுவதற்கும் அரசியல் அழுத்தம் ஏற்படும். பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டாலும்கூட பரவாயில்லை; வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் சந்தைக்காவது குழந்தையுடன் நடந்து சென்று திரும்புங்கள்.

ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள்...

நான் ஏற்கெனவே சொன்னதுபோல் சுகாதாரம், பாதுகாப்புக் காரணங்களுக்காகக் குழந்தைகளின் விளையாட்டு உரிமையைப் பறிப்பது நியாயமற்றது. எப்போதும் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள்.

நகர வாழ்க்கையில் சாலை வசதி, குடிநீர் வசதி, சமூகப் பாதுகாப்பு என எல்லாவற்றுக்கும் போராட வேண்டிய சூழல் இருக்கிறது. நகர வாழ்க்கைக்கு எளிதாகப் பழகும் நாம், நம்மை சர்வதேசக் குடிமக்களாக உணர்கிறோம். ஆனால், அது ஒரு அமெரிக்கரைப் போல மார்ட்டினி மதுவை ஒரு கோப்பையில் நிரப்பிக் கொஞ்சம்  கொஞ்சமாகப் பருகுவது அல்ல, மாறாக ஒரு அமெரிக்கரைப் போல் உரிமைகளைக் கேட்டுப் பெறுதல் என்பதை நாம் உணரவேண்டும்.

இந்தியாவாக இருக்கட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும் அரசியலும் அதிகாரப் போராட்டங்களும் எல்லா இடத்திலும் ஒன்றுதான். ஆனால்,ஜனநாயகத்தில் நாம் மாற்றத்துக்கான முகவராக இருக்க இயலும். அந்த வகையில் அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் தங்களுக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறுவதில் கில்லியாக இருக்கிறார்கள்.

சாலைவசதி, பொதுப் போக்குவரத்து, காற்று மாசைக் கட்டுப்படுத்துவது எல்லாம் தங்களின் ஜனநாயக உரிமை என்பதில் அவர்களுக்கு எவ்விதக் குழப்பமும் இல்லை. அவர்கள் இருக்கும் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைய வேண்டுமா,  பார் இருக்க வேண்டுமா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இதற்கு நாம் ஒரே சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும். நான் சோனாவே கிராமம் பற்றிச் சொன்னேனே, அதுபோன்று நாம் வாழும் அபார்ட்மென்ட்கூட நம் சமூகமாக இருக்கலாம்.

அதற்கான வசதிகளை, தேவைகளைக் கேட்டுப் பெறுவது நமது ஜனநாயக உரிமை.  நாட்டைக் கட்டமைப்பது நமக்கு நெருக்கமான சமூகத்தைக் கட்டமைப்பதிலிருந்தே தொடங்கும். இந்தியாவில் போலியோ ஒழிப்பில் ரோட்டரி சங்கங்களின் பங்களிப்பைக்கூட ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ஒரு ஜனநாயகத்தில் நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதோடு அவர்கள் நமக்காக வேலை செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

3.    விளையாட்டை விளையாட்டாகவே பாருங்கள்...

இதுதான் மூன்றாம் விதி. நீங்கள் குழந்தைகளை விளையாட அனுமதிக்கச் சொன்னீர்கள். இதோ என் குழந்தை விரும்பும் கிரிக்கெட் கிளப், ஃபுட்பால் கிளப், பாட்மின்டன் கிளப்பில் சேர்த்துவிட்டேன். அவளோ அவனோ எதிர்காலத்தில் சச்சினாக, சாய்னாவாக, சானியாவாக வருவார் என மார்தட்டாதீர்கள்.

உங்கள் குழந்தைகள் ஓடியாடி விளையாடட்டும் என்று சொன்னேனே தவிர, அவர்கள் உங்கள் ஆசைகளை நீங்கள் திணிப்பதற்கான பந்தயக் குதிரைகள் என்று சொல்லவில்லை.

அவர்கள் விளையாட்டு கிளப்களில் சென்றுதான் விளையாட வேண்டும் என்று அவசியமில்லை. ஒருவேளை உங்கள் குழந்தைக்குத் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டைத்  தாண்டியும்  முறையாகக் கற்றுக்கொள்ள  ஆர்வமிருந்தால்  கிரிக்கெட்  அகாடமியில் சேத்துவிடுங்கள். அங்கே அந்தக் குழந்தை தனக்குத் தேவையானதைக் கற்றுக்கொள்ளும். அப்போதும்கூட குழந்தை அடுத்த போட்டியில் சாம்பியனாகுமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். எல்லாக் கட்டங்களிலும் உங்கள் குழந்தைகளின் விளையாட்டு விளையாட்டாக மட்டுமே இருக்கட்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டையும் உடற்பயிற்சியையும் பழக்கப்படுத்துவது தொடர்பாக இன்னும் சில நல் ஆலோசனைகள் இருக்கின்றன. அவற்றை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

(வளர்வோம்... வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in