இணையச் சிறையின் பணயக் கைதிகள் 7- தளர்ந்தன கட்டுப்பாடுகள்... தகர்ந்தன நாகரிகங்கள்...

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 7- தளர்ந்தன கட்டுப்பாடுகள்... தகர்ந்தன நாகரிகங்கள்...

செல்பேசி இல்லாத காலத்தை நினைத்துப்பாருங்கள். கேம்லின் பேனாவில் மை ஊற்றிக்கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து பொறுமையாக யோசித்து முத்து முத்தான கையெழுத்தில் அத்தைக்கு ஒரு கடிதம் போடுவோம். உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவோம்.

வார இறுதிக்காக ஏங்கியிருக்கிறோம் அப்போது. தொலைத்தொடர்பெல்லாம் தேவையில்லை. எங்கள் ஊர் மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் ஞாயிறுமாலை ஆறு மணிக்கெல்லாம் கூடிவிடுவார்கள் ஒரே பள்ளியில் படித்த முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள். ஆளுக்கொரு ஸ்மார்ட்போன் வாங்கும் வரையில் எல்லாம் நன்றாகவே நடந்தது. ஒருவருக்குப் பணி மாற்றம். இன்னொருவருக்கு வேறு ஊரில் திருமணம், அங்கேயே செட்டில்டு, இன்னொருவருக்கு நேரமில்லை. ஆனால், எல்லோரும் போனில்பேசிக்கொள்கிறார்கள். எல்லா விஷயத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். என்ன, அப்போதெல்லாம் மனிதர்களுடன் நிறைய நேரம் செலவழித்தோம். உணர்வுகள் நேரடியாக முகத்துக்கு முகம் பரிமாறிக்கொள்ளப்பட்டன. வரைமுறை அறிந்து பேசினோம். பழகினோம். நட்பைத் தக்கவைத்துக்கொள்ளப் பாடுபட்டோம்.

உங்கள் முகத்துக்கு நேராக நான் பேசும்போது ஏதேனும் மாற்றுக் கருத்தைத் தெரிவிப்பதாக இருந்தாலும் ஒரு இங்கிதம் இருக்கும். லேசாக நீங்கள் எரிச்சலடைவதையோ, நான் சொல்வதைச் சுத்தமாக நீங்கள் ரசிக்கவில்லைஎன்பதையோ நான் உணர்ந்துகொண்டால் போதும். பேச்சின் வேகத்தையும் ஆழத்தையும் மட்டுமல்ல, உள்ளடக்கத்தையே மாற்றி “என்னங்க ஜப்பான்ல நிலநடுக்கமாமே… ஜலகண்டபுரத்துல மழையாமே” என்று லாவகமாக மடைமாற்றிவிடலாம். நம் இருவருக்குமான நட்பு அதற்கப்புறம் வேறு பிரச்சினை எதுவுமில்லாமல் பார்த்துக்கொள்ளும். ஆனால், ஆன்லைனில் அது சாத்தியமில்லை. முகத்தைப் பார்க்கத்

தேவையில்லை என்பதால் எந்தக் கட்டுப்பாடுமின்றி ஆபத்தான, தேவையில்லாத, பொய்யான, குழுவின் ஒற்றுமைத் தன்மையைக் குலைக்கக்கூடிய தகவல்களை ஒரு உந்துதலில் பகிர்ந்துவிடுகிறோம்.

சூழலையே கொதிப்படையச் செய்யக்கூடிய அரசியல், சமூகம் மற்றும் பிரச்சினைக்குரிய சமூக விஷயங்களைக் குறித்த செய்திகளை ‘ஃபார்வேர்டு’ செய்யும்போது கொஞ்சம் நிதானியுங்கள். அதைச் செய்வதால் ஏதேனும் சமூக லாபம் உள்ளதா என யோசியுங்கள். மேலும், அதன் நம்பகத்தன்மையில் சற்றேனும் சந்தேகம் ஏற்பட்டாலும் ‘ஃபார்வேர்டு’ செய்யாதீர்கள். இப்படிச் செய்வதன் மூலம் நம் முதிர்ச்சித் தன்மையும் முட்டாள்தனமும் எந்த அளவுக்கு மற்றவர்களால் புரிந்துகொள்ளப்படும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்

நேருக்கு நேர் சொல்ல முடியாதவற்றை இது போன்று முகத்துக்குப் பின்னே இருந்துகொண்டு சமூக வலைதளங்களில் பதிவிடுவதை ‘Online disinhibition effect’ என்கிறார்கள். மதுபோதையில் உளறுவதைப் போலத்தான் இது. உட்காரும்போது ‘சார்… மாப்ளே… நண்பா…’ என அன்போடு அழைத்து விருந்தோம்பலுடன் ஆரம்பிக்கும் மது விருந்தானது நேரம் ஆக ஆக… போதை ஏற ஏற… ஏக வசனங்களில் தொடர்ந்து, கடைசியில் கைகலப்பில் வந்து முடிவதைப் பார்க்கிறோம். கட்டுப்பாடு தளர்ந்து போகும்போது தவறுகள் ஆரம்பித்துவிடுகின்றன. பெண்களிடத்தில் அல்லது நமக்கு வேண்டிய நபரிடத்தில் இது போன்ற அத்துமீறல்கள் நடப்பதற்கு இணையம் எளிதாக வழிவகை செய்துவிடுகிறது.

ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வதிலிருந்து அவருடனான ’டேட்டிங்’ஐ முடிவு செய்வது வரை எந்தத் தயக்கமும் இன்றி சாட்டிங் மூலம் தீர்மானிக்கப்படும் ரகசியம் இதுதான்.நேரில் சொல்ல முடியாததை எல்லாம் தனியறையில் இழுத்துப் போர்த்திக்கொண்ட போர்வைக்குளிருந்து ஒரு சின்ன தொடுதிரையின் மூலம் சாதித்துக்கொள்ள முடிகிறது.

‘இடியட்’ என்ற வசவு வேண்டாம். ‘யூ ராஸ்கல்’ என்று செருப்பு வீச வேண்டாம். ‘ஹெல்ப் ஹெல்ப்’ என்று கத்தி ஊரைக் கூட்ட வேண்டாம். அந்தப் பக்கம் இருப்பவருக்கு ஆர்வம் இருக்கிறது என்றால் பல வழிகளில் அறிந்துகொள்ளலாம். சாட்டிங் தொடரும். இதே அவருக்கு சுத்தமாக விருப்பமில்லை என்றால் அடுத்த நொடி நீங்கள் ‘ப்ளாக்’ செய்யப்படுகிறீர்கள். வேலை முடிந்தது. அடுத்த பட்சி ஏதேனும் வலையில் சிக்குமா எனத் தேடிப் போய்விட வேண்டியதுதான். ஃபேஸ்புக்கில் மெஸஞ்சர் ஆகட்டும், வாட்ஸ்-அப் சாட்டிங் ஆகட்டும். இதுதான் நடக்கிறது இப்போது.

கட்டுப்பாடுகளற்ற இந்நிலையைக்கூட இரண்டாகப் பிரிக்கிறார்கள். ரொம்பவும் பிரச்சினை பண்ணாத, ‘சும்மாங்காட்டியும்’ லொள்ளு பண்ணுவதை ‘Benign online disinhibition’ என்றும், ஏகப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் ஆபத்தான உரையாடல்களை உள்ளடக்கிய சீண்டல்களுக்கு ‘Toxic online disinhibition’ என்றும் சொல்கிறது உளவியல்.

யார் இப்படிச் செய்கிறார்கள்?

மற்றவர்களிடம் இயல்பாகவும் கலகலப்பாகவும் பேச முடியாத அளவு கூச்ச சுபாவம் கொண்டவர்கள் இது போன்ற ஆன்லைன் வேலைகளில் அதீத ஆர்வம் காட்டுகிறார்களாம். மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டு, தன் ஆசைகளையே பகிர்ந்துகொள்ள முடியாமல் உணர்வுக் கொந்தளிப்பில் இருப்பவர்கள் தங்கள் வடிகாலாக இணைய உரையாடல்களைப் பயன்படுத்தலாம். ஆளுமைக் கோளாறு உள்ளவர்கள், மது முதலான அடிமைத்தனத்தின் கோரப்

பிடியில் சிக்கியவர்கள், மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இது போன்ற இணைய அத்துமீறல்களில் ஈடுபடுவார்களாம். ஆனால், இவற்றைத் தாண்டியும் எல்லா வகையிலும் ‘நார்மல்’ என்று கருதப்படுகின்ற பலரும் இணையம் என்று வரும்போது வேறு மாதிரி தவறாக நடந்துகொள்வதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

முகம் காட்டத் தேவையில்லை, நம் அடையாளம் யாருக்கும் தெரியப்போவதில்லை (Anonymity), அவர்களிடம் வேகமாக ஒரு விஷக் கருத்தைச் சொல்லிவிட்டு உடனே ஓடி வந்துவிடலாம். அதன்பின் இரண்டு நாட்களுக்குப் பிறகு சாவகாசமாக ஆன்லைனுக்குப் போய் அவர்களின் எதிர்வினையைக் கண்டு குரூரமாக ரசிக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களே இது போன்ற இணைய அத்துமீறல்களின் பின்னணியில் இருக்கின்றன.

நம்மை அவர்கள் பார்க்க முடியாது என்பதும் அவர்களின் உடனடி எதிர்வினை நம்மை பாதிக்காது என்பதும்தான் எத்தனையோ ‘இணைய வம்படி’ சம்பவங்கள் (cyberbullying) நடக்கக் காரணமாக இருக்கின்றன.

சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்றம் ‘டிக்டாக்’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டது. சீனாவின் கண்டுபிடிப்பான அந்தச் செயலி முன்பு musical.ly என்ற பெயரில் வழங்கப்பட்டுவந்தது. அதன் புதிய பெயர்தான் ‘டிக் டாக்’. அப்பப்பா… எத்தனை எத்தனை அட்டகாசங்கள் அதில். குறிப்பாக பதின்ம வயதினர் அதில் சிக்கிக்கொண்டு படாதபாடுபடுவதைப் பார்க்க முடிகிறது.

திறமையைக் காட்டலாம். திமிரைக் காட்டலாமா? அழகைக் காட்டலாம். ஆபாசமாகத் தோன்றலாமா? பொழுதுபோக்குக்காகப் பார்க்கலாம். பொழுதெல்லாம் இதைப் பார்ப்பதிலும் செய்வதிலும் கழிந்தால் உருப்பட முடியுமா? எவ்வளவோ குடும்பத் தலைவிகள், பள்ளி மாணவர்கள் இதில் தீவிரமாகப் பதிவிடுகின்றனர். பணியிடங்களில், பேருந்தில் போய்க்கொண்டு, படுக்கை

யறையில், குளத்தங்கரையில் என்று சகல இடங்களிலிருந்தும் ‘ஒளிபரப்பு’ செய்கிறார்கள். அந்தச் சில கணங்கள் தரும் கிளுகிளுப்புக்காக என்ன விலை கொடுக்கவும் சிலர் தயார் ஆவதும் பெண்கள், குறிப்பாக சிறார்களுக்கு, வேறு வித இம்சைகள் இருப்பதும்தான் அச்சப்பட வைக்கும் விஷயம்.

எவ்வளவோ திறமைகள் இருந்தும் அதற்கான அங்கீகாரம் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு. தன்னைப் புலப்படுத்திக்கொள்ள தகுந்த மேடை கிடைக்கவில்லையே என்று ஏங்குகிற வளரும் கலைஞர்கள் பலர் உண்டு. அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக விளங்க வேண்டிய சமூக வலைதளங்களெல்லாம் நாம் அதை உபயோகிக்கும் லட்சணத்தில் ஏகத்துக்கும் விமர்சனங்களுக்கு உள்ளாகி, கடைசியில் தடைசெய்யப்படும் அளவுக்குப் போவதை துரதிர்ஷ்டம் என்பதா, சரிதான் என்று வரவேற்பதா? ஒவ்வொன்றாக இப்படி நாம் தவறாகப் பயன்படுத்திக்கொண்டே வந்து, அதன் விளைவாக எல்லாச் செயலிகளும் விமர்சனத்துக்கு ஆளாகிச் சிக்கலில் மாட்டினால் யாருக்கு நஷ்டம்?

ஃபேஸ்புக்கை எத்தனையோ வளரும் எழுத்தாளர்கள் தம் திறமையை வெளிக்காட்டும் களமாக நினைக்கின்றனர். அப்படித்தான் அதைப் பயன்படுத்திப் பலனடையவும் செய்கின்றனர். ‘டிக் டாக்’ செயலி போல நாளைக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என்று எல்லாவற்றுக்கும் தடைகள் வந்தால் என்ன செய்யப்போகிறோம்? அரசியல் கட்சிகள் சார்பாக ஏகப்பட்ட பேர் போலிக் கணக்குகளை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியினரைப் பற்றிப் பொய்யான, தவறான தகவல்களை விஷமத்தனமாகப் பரப்புகிறார்கள் என்று சொல்லி 600-க்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகளை அந்நிறுவனமே சமீபத்தில் முடக்கியுள்ளது.

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இணையம் இன்று அத்தியாவசியமான ஒன்று. அது சார்ந்து இயங்கும் சமூக வலைதளங்களும் நம் வாழ்வை இன்னும் மகிழ்வாக்கி, அனைவருடனும் உணர்வுரீதியிலான இணைப்புக்கு வழிகோலி நம்மை இன்னும் நவீனப்படுத்தவே உண்டாக்கப்பட்டன. ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால் எப்போதுமே ஒரு பொருளின் மூலப் பயன்பாட்டை விட்டுவிடுவோம். வேறு எதற்கெல்லாம் அதைப் பயன்படுத்தலாம் என்றுதான் பார்ப்போம். அது கடைசியில் விபரீதத்தில் கொண்டுவந்து விட்டுவிடும். சிந்திப்போம் நண்பர்களே…

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in