பாப்லோ தி பாஸ் 20: லோஸ் எக்ஸ்திராடிடபிள்ஸ்

பாப்லோ தி பாஸ் 20: லோஸ் எக்ஸ்திராடிடபிள்ஸ்

“டாடா… சீக்கிரமா குழந்தைளுக்கான துணிகளை எடுத்து வை.”

“என்னாச்சு பாப்லோ… ஏன் குழந்தைங்களோட துணிகள் மட்டும்..?”

“அவங்களை மெதஜினுக்கு அனுப்பிடலாம். உங்க அம்மாகிட்ட இருக்கட்டும்.. அங்க அவங்களை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.”

“அப்ப நான்..?”

“உன்னை இங்கயே விட்டுட்டுப் போகவோ இல்ல கொலம்பியாவுக்குக் குழந்தைகளோட அனுப்பவோ எனக்கு மனசில்லை டாடா. போற இடத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம்.”

“சரி எங்க போறோம்..?”

“நிகராகுவா.”

“அங்க யாரு இருக்கா நமக்கு..? பணத்தைப் பாதுகாக்க பனாமா வந்தீங்க சரி… நிகராகுவாவுக்கு எதுக்கு?”

”உயிரைக் காப்பாத்திக்க.”

பத்திரிகையில் பாப்லோ – கொலம்பிய அரசு இடையேயான சந்திப்பு குறித்த தகவல்கள் கசிந்தவுடன், அமெரிக்கா சினந்தது. போதாக்குறைக்கு எதிர்க்கட்சிகளுக்காகப் பயந்து, கொலம்பிய அரசும் பனாமாவும் தங்களுக்கு ஏற்பட்ட இந்தக் களங்கத்தைத் துடைக்க நினைத்தன. அமெரிக்காவும் கொலம்பியாவும் பனாமாவும் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று நினைத்த பாப்லோ, அங்கிருந்து தப்பிக்க முடிவெடுத்தான்.

உண்மையில் நிகராகுவாதான் பாப்லோவின் வரவை எதிர்பார்த்திருந்தது. அங்கேயும் கெரில்லாக்களின் நடமாட்டம் இருந்தது. அதனால் அமெரிக்காவின் கோரிக்கைகள் பலவற்றுக்கு நிகராகுவா ஒத்துப் போகவில்லை. எனவே, நிகராகுவாவின் மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தது அமெரிக்கா. அந்தத் தடையால் பண வரவு வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில், பாப்லோ இங்கே வந்து, இங்கிருந்து அவன் தனது தொழிலைத் தொடர்ந்தால், அது பரஸ்பரம் இருவருக்கும் லாபமாக இருக்கும் என்று எண்ணியது சாண்டினிஸ்ட்டா அரசு. எண்பதுகளின் தொடக்கத்தில் ‘சாண்டினிஸ்ட்டா நேஷனல் லிபரேஷன் ஃப்ரன்ட்’ எனும் கட்சிதான் ஆட்சி நடத்தி வந்தது.

சொல்லப்போனால், பாப்லோவுக்கே நிகராகுவாவில் கடையைப் போடலாமா என்ற திட்டம் முன்பே இருந்தது. திட்டமிட்டபடியே சில காலத்துக்கு அங்கிருந்து தனது தொழிலை நடத்தினான். ஒரு கட்டத்தில் அவன் இருக்கும் இடம் அமெரிக்காவுக்கும் கொலம்பிய அரசுக்கும் தெரிய வந்தது. ஆனால், இந்த முறை அவன் ஓடவில்லை. வாழ்வோ சாவோ… அது தன் சொந்த நாட்டிலேயே நடக்கட்டும் என்று முடிவெடுத்தான். தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட மாட்டோம்,  நம்மை அவ்வளவு சீக்கிரம் நம் நாடு கைவிடாது என்று நம்பினான் அவன். ஆனால், விதி வேறுவிதமாக விளையாடியது.

பாப்லோவின் அனுகிரகத்தோடு மெதஜின் நகரத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பணத்தை ஹவாலா போன்ற சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ‘டிரான்ஸ்ஃபர்’ செய்து வந்தான் ஹெர்னான் பொட்டீரோ மொரீனோ. இன்றைக்குத்தான் அது சட்டத்துக்குப் புறம்பான வழி. ஆனால் அன்று, அது ஒரு நியாயமான தொழில். அப்படிப் பணத்தை நாடுகளுக்கு இடையே மாற்றி வருவது தொடர்பாக எந்த ஒரு சட்டமும் கொலம்பியாவில் அன்று இல்லை.

நேரடியாகக் கடத்தலில் ஈடுபடாத அவன், பணம் கையாடல் செய்தான் என்ற குற்றத்துக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டான். ‘நேஸியோனெல்’ எனும் மெதஜினின் புகழ்பெற்ற கால்பந்து அணியின் உரிமையாளராக இருந்த அவனுக்கு அமெரிக்காவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பொட்டீரோவின் நாடு கடத்தலுக்கு அமைதியான வழியில் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டான் பாப்லோ. உடனே எல்லா நார்கோக்களையும் அழைத்தான்.

“ஃபோக்ஸ்… இந்த எக்ஸ்டிராடிஷன் சட்டம் என் மேல மட்டும் பாயப் போறதில்லை. உங்க மேலயும் பாயும். அதை நாம எல்லோரும் சேர்ந்து தடுக்கணும் அப்படிங்கிறதுக்காகத்தான் இந்தக் கூட்டம்.”

“நாங்க என்ன செய்யணும் பாப்லோ..?” – ஒருவன் கேட்டான்.

“எல்லோரும் ஒற்றுமையா இயங்கணும். மெதஜினை அஞ்சு அல்லது ஆறு பகுதிகளாகப் பிரிச்சு, ஒவ்வொரு பகுதியிலயும் நம் சிகாரியோக்களைக் கண்காணிப்புக்குப் போடணும். நாம் ஒவ்வொருவரும் தனித்தனியா பிரிஞ்சிருந்து வேலை செஞ்சா, நம்ம பொருட்களை இழக்கிறது மட்டுமில்லாம நாமும் கைது செய்யப்படுவோம். குழுவா இருந்தா, பொருட்களையும் பாதுகாக்கலாம். நம்மைக் கைது செய்யவும் அரசு யோசிக்கும்.”

“ஓ.கே. பாப்லோ… நாங்க ரெடி” என்று சிலர் முன்வந்தார்கள்.

“இப்போ இருந்து இந்தக் குழுவுக்குப் பேர் ‘லோஸ் எக்ஸ்திராடிடபிள்ஸ்’ (தி எக்ஸ்டிராடிடபிள்ஸ்)… எக்ஸ்டிராடிஷன் சட்டத்துக்கு எதிரானவங்க அப்படிங்கிறது இதனோட அர்த்தம்.”

“டன்… ஹுர்ரே… கிரேட்” – என்று  பலவாறாகக் குரல் எழுப்பப்பட்டது.

“அமைதி… முதல்ல நாம் செய்ய வேண்டியது… நாட்டுல இருக்கிற எல்லா கால்பந்து அணிகளையும் எக்ஸ்டிராடிஷன் சட்டத்துக்கு எதிராகப் பேச வைக்கணும். அந்தச் சட்டத்தை நீக்கலைன்னா, சாம்பியன்ஷிப் போட்டிகள்ல விளையாட மாட்டோம்னு அவங்களைச் சொல்ல வைக்கணும்.”

“பண்ணிடுவோம் பாப்லோ…” – குரல்கள் ஒருமித்தன.

அதைத் தொடர்ந்து அடுத்த நாளே இப்படி ஒரு அமைப்பைத் தாங்கள் தொடங்கியிருப்பதாகச் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. அவர்களின் குறிக்கோள் இப்படியாக இருந்தது: ‘அமெரிக்கச் சிறையை விட கொலம்பியக் கல்லறையே மேல்!’

அதைப் பார்த்து அதிர்ந்தது அரசு. இதுநாள் வரை தலைமறைவாக இருந்தவர்கள், தற்போது தலையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற செய்தி அரசுக்குப் பேரிடியாக அமைந்தது. ‘விடக் கூடாது… அவர்கள் எந்த ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன்பும் நாம் முந்திக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்த அரசு, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் பகுதிகளில் ‘ரெய்ட்’ மேற்கொண்டது. அப்படியான ரெய்டு ஒன்றில்தான் பாப்லோவின் நண்பன் கார்லோஸ் லெஹ்டர் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனை விடுதலை செய்ய அந்த நாட்டுக் காவல்துறையிலிருந்த சிலர் பாப்லோவிடம் பேரம் பேசினர். பாப்லோவும் தயாராகவே இருந்தான். ஆனால் கார்லோஸ் மறுத்துவிட்டான்.

சற்றும் எதிர்பாராத தருணமொன்றில் கொலம்பியக் காவல்துறையும் ராணுவமும் பாப்லோ தலைமறைவாக இருக்கும் இடத்தைத் தேடி வந்தன. அதை முன்பே எதிர்பார்த்திருந்த அவனது அண்ணன் ராபர்ட்டோ, தப்பிக்கச் சில வழிகளைச் செய்து வைத்திருந்தார். அதனால் அவர்கள் தப்பிக்க முடிந்தது. இப்படி அடுத்தடுத்து தன்னுடைய சகாக்கள் நாடு கடத்தப்படுவதும், இப்போது தன் மீதே குறி வைக்கப்பட்டதாலும் கோபத்தின் உச்சிக்கே சென்றான் பாப்லோ.

பாப்லோ திருப்பி அடிக்கத் தொடங்கினான். அது அரசால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது..!

(திகில் விலகும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in