காதல் ஸ்கொயர்-6

காதல் ஸ்கொயர்-6

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

கோத்தகிரியிலிருந்து கோடநாடு செல்லும் சாலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே அமைந்திருந்தது ஃபேர்வியூ மவுன்ட்டன் ரிசார்ட்ஸ். கௌதம் ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, அந்த சூட்டில் நுழைந்தபோது அப்பா ஹிண்டுவைப் படித்தபடி அமர்ந்திருந்தார். ஐம்பது வயதுக்கு டை அடித்து (-5வயது), ஷார்ட்ஸ் (-3 வயது), டீசர்ட் (-2 வயது) அணிந்து நாற்பது வயது தோற்றத்தில் இருந்தார்.

“அப்பா… இங்க வந்தும் ஹிண்டுவா?” என்று கௌதம் சத்தமாகக் கேட்டவுடன் நிமிர்ந்த அப்பாவின் முகம் கௌதமைப் பார்த்தவுடன் மலர்ந்தது. சிரித்தபடி, “பேப்பர் படிக்கலன்னா, காலைல எந்திரிச்சு காபி குடிக்காத மாதிரி டிஸ்டர்ப்டாவே இருக்கும்” என்று எழுந்து வந்த அப்பா கௌதமை உற்று பார்த்தபடி, “எப்படிரா இருக்க?” என்றார். “ம்... குட்” என்ற கௌதம் அப்பாவின் சிறு தொப்பையைத் தடவியபடி, “உங்க தொப்பையைப் பாத்தாலே நல்லா இருக்கீங்கன்னு தெரியுது. அம்மா எங்க?” என்றான்.

“அம்மா குளிச்சுட்டு வயச குறைச்சுட்டிருக்கா” என்றவுடன் கௌதம் அப்பாவைக் கேள்வியுடன் பார்த்தான். அப்பா சிரித்தபடி, “மேக்கப் பண்ணிட்டிருக்கா. கண்ணாடி முன்னாடி உக்காந்து அரை மணி நேரம் ஆவுது” என்றபடி படுக்கை அறைக் கதவைத் திறக்க, அம்மா கண்ணாடி முன் அமர்ந்து கூந்தலை முன்னால் போட்டு சீவிக்கொண்டிருந்தார். “அம்மா…” என்று கௌதம் அழைக்க, திரும்பி கௌதமைப் பார்த்தவுடன் அம்மாவின் முகம் சந்தோஷமாக மாறியது. வாயெல்லாம் சிரிப்புடன், “கௌதம்…” என்று எழுந்து வந்த அம்மா கௌதமின் தலையைக் கோதி, கன்னத்தைத் தடவி, “என்னடா… இளைச்சுட்ட?” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in