இணையச் சிறையின் பணயக் கைதிகள் 6: ‘ஃபோமோ’ எனும் டிஜிட்டல் பதற்றம்

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 6: ‘ஃபோமோ’ எனும் டிஜிட்டல் பதற்றம்

டாக்டர் மோகன வெங்கடாசலபதி

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுதான் இருக்கிறோம். வண்டி ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். அந்தத் தொடர்புகள் மாத்திரமல்ல... மற்றவர்கள் தன்னை எங்கு வைத்திருக்கிறார்கள், சமூகத்தில் நமக்கான இடமும் மரியாதையும் எந்த அளவில் இருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. அப்படியான மனநிலை இயல்பிலேயே வரப்பெற்ற நம்மிடம்தான் சமூக வலைதளங்கள் மாட்டிக்கொண்டு… மன்னிக்கவும், நாம்தான் அவற்றிடம் மாட்டிக்கொண்டு படாதபாடுபடுகிறோம்.

ஃபோமோ என்பதும் அப்படித்தான் (FOMO - Fear Of Missing Out).  நம்மை விட்டுவிடுவார்களோ, நாமும் மிஸ் பண்ணிவிடுவோமோ என்ற அதீத மனப்பதற்றமே இது. அதிலும் இது சமூகம் சார்ந்து அதாவது நம் மீதான சமூக மதிப்பீடுகள் குறித்த பதற்றமே முக்கிய அம்சமாக இருப்பதால், இதை ஒருவகையில் சமூகப் பதற்றம் (social anxiety) என்றே சொல்லலாம்.

பல்லாண்டுகளாக இருக்கும் ஒன்றுதான் இந்த ஃபோமோ. ஒரு பொருளையோ நிகழ்வையோ இழந்துவிடக் கூடாது என்று இயல்பாகவே நமக்குள் எழும் உஷார்தனத்தின் (loss aversion) வெளிப்பாடே இந்த ஃபோமோ. மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள்; நாம் அப்படி இல்லையே என்ற சமூக ஒப்பீட்டின் விளைவே இந்த ஃபோமோ.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in