பாப்லோ தி பாஸ் 19: பாப்லோவுக்கு வைக்கப்பட்ட முதல் செக்!

பாப்லோ தி பாஸ் 19: பாப்லோவுக்கு வைக்கப்பட்ட முதல் செக்!

ந.வினோத் குமார்

லாரா கொல்லப்பட்டதற்குப் பிறகு, கொலம்பிய அரசு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மீது அறிவிக்கப்படாத தனது முதல் போரை ஏவியது. நூற்றுக் கணக்கில் கைதுகள், ரெய்டுகள், தனிப்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கைப்பற்றப்படுதல், வங்கிக் கணக்குகள் முடக்கப்படுதல் என எங்கு திரும்பினாலும் எங்கிருந்தோ ஒரு கல் வந்து தாக்கியது. இதில் கடத்தல்காரர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டார்கள் என்றில்லை. நியாயமான முறையில் உழைத்துச் சம்பாதித்த செல்வந்தர்களும் அரசின் கெடுபிடிகளுக்கு ஆளானார்கள்.

மெர்ஸிடஸ் அல்லது ஃபெராரி காரில் சாலையில் சென்றால்கூடப் போதும். அரசின் சந்தேகக் கண்கள் அவர்கள் மீது விழப் போதுமானதாக இருந்தது. அப்படிச் சென்றவர்களை காரிலிருந்து இறங்கச் சொல்லி, அவர்களைத் தூற்றுவதில் போலீஸாருக்கு அப்படி ஒரு ஆனந்தம் இருந்தது. லஞ்சம் கொடுத்துச் சரிகட்டுகிற வேலை எல்லாம் அந்த நாட்களில் வேலைக்கு ஆகவில்லை.

எனினும் நியாயவான்கள் சந்தோஷப்பட்டார்கள். இறுதியாக, கொலம்பியாவில் ஒரு மாற்றம் நிகழ்கிறது, ஊழலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள் ளப்படுகிறது என்று பெருமைப்பட்டார்கள். ஆனால், போதைப் பொருள் கடத்தல் நீங்கலாக இதர குறுக்குவழியில் சம்பாதித்த செல்வந்தர்கள் பனாமாவை நோக்கிப் படை யெடுத்தார்கள். ஆம்… அவர்களுக்கு அன்று சுவிஸ் வங்கி யின் மீதுகூட  நம்பிக்கை இருக்கவில்லை போல. அதனால் பனாமா நாட்டுக்குச் சென்று, அங்கு தங்களின் பணத்தைப் பாதுகாத்தார்கள். அதில் பாப்லோவும் ஒருவன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in