மண்.. மனம்.. மனிதர்கள்! - 6

பேராசான்
மண்.. மனம்.. மனிதர்கள்! - 6

தமிழ் இலக்கியம் படிக்கச் சென்ற அவனுக்குக் கல்லூரி கசந்தது.

எதிரே இருந்த பெரியார் பில்டிங்கில் காலாட்டிக்கொண்டு கம்பனைச் சொல்வதும், கவிதைப் போட்டிக்குப் போவதும், நாடகம் நடத்த ஆள் சேர்ப்பதுமாக காலம் கடத்திக்கொண்டிருந்தான்.

திருவல்லிக்கேணியில் கசகசவென்று இருக்கும் ஜாம்பஜார் பக்கம் வகுப்புத் தோழன் பாண்டியன் மூலமாக அவனுக்கோர் அற்புதமான நட்பு வட்டாரம் அமைந்தது.

அவர்களின் வெள்ளந்தியான அன்பும் பாசமும் கட்டி இழுக்க அன்றாடம் அங்கே கூடி அரட்டை அடிப்பதும் கலைவதுமாக இருந்தான்.

அன்று, தமிழகத்தில் தெரிந்துகொண்டிருந்த ஒரே டிவி சேனல் தூர்தர்ஷன்தான். அதில், அவ்வப்போது ‘முஷைரா’ எனப்படும் உருது கவியரங்கத்தை ஒளிபரப்புவார்கள்.

வெள்ளை வெளேரென மெத்தை பரப்பப்பட்டு அதன் மேல் பட்டுத்திண்டுகள் ஆங்காங்கிருக்க அதனருகில் அமர்ந்து உருதுக் கவிகள் கவி பாடுவார்கள். கூடியிருக்கும் கூட்டம் “வா...வா....க்யா பாத்ஹே...” என்றபடி ஆரவாரமெழுப்பும்.

அதுகண்டு உணர்வெழுச்சி கொண்டவன் அதுபோல் நம் தமிழ்க் கவியரங்கத்தையும் ஆடம்பரமாக நிகழ்த்திக் காட்டிவிட வேண்டும் என்னும் பேராசை கொண்டான்.

நண்பர்களிடம் சென்று ஆவலாக விவரித்தான். 18 பேர் கொண்ட அந்த நட்பு வட்டாரத்துக்கு இலக்கிய உலகம் பரிட்சயமில்லை என்றாலும், படிப்பு வாசனை இருந்தது. நல்வழிப்பட்டாக வேண்டும் என்னும் நோக்கம் இருந்தது.

அவனது இலக்கிய ஆவலைக் கேட்ட நொடியில் “அதற்கென்ன செய்து விடுவோம்...” என்று ஆரவாரமாக வழி மொழிந்தார்கள்.

அவனது இலக்கியத் தோழர்களான திருப்பதிசாமி, குணசீலன், பண்டரிநாதன், ஜான்தன்ராஜ், பர்வீன் சுல்தானா, சௌம்ய நாராயணன், ரோஸ்மேரி பூங்கோதை, பத்ரி நாராயணன், சந்திரசேகர், பாப்பா ரமேஷ், முத்தழகன், சைலேஷ், மேகலை, சாய் அமுதா தேவி உட்பட பலரும் அவனது முயற்சியை ஆதரிக்க...

ஒரு பௌர்ணமி நன்நாளில் ‘வெண்ணிலா இலக்கிய வீதி’ பிறந்தது.

தானப்ப தெருவில் வாழைத்தார் மொத்த வியாபாரம் நடக்கும் என்பதால், பகல் முழுதும் மனித நெரிசலாக இருக்கும்.

மாலையில்... சந்தடி ஓய்ந்து கிடக்கும் அந்தத் தெருவில் சுவர் பூசி அடைக்கப்பட்டதோர் வீட்டின் பின்புறம் அமைந்திருந்த சிதிலமான மூன்று படிக்கட்டுகளை மட்டுமே அலுவலகமாகக் கொண்டு வெண்ணிலா இலக்கிய வீதி உயிர் பெறும்.

தெருவை அடைத்துக்கொண்டு சகலவித இலக்கிய விசாரங்களும் அவனது தலைமையில் அங்கே நடந்தேறும்.

வழக்கமாக அங்கே கூடி அலப்பறை செய்யும் கூலிக் குடிகாரர்களும் வாழை மிச்சத்துக்காக வந்தாடி நாச மாக்கும் பெருச்சாளிகளும் அந்த இலக்கியவாதிகளைக் கண்டு “ச்சீச்சீ....” என்று வேறிடம் தேடிக்கொள்ள...

கத்தி கபடாவோடு வந்து ரவுண்டு காட்டும் அன்றைய லோக்கல் ரவுடியான தோட்டம் சேகரும் தன் அடிப் பொடிகளிடம் “பசங்க, நல்லுது பண்ணுதுங்கப்பா...வுடு...” என்றபடி நகர...

ஒட்டு மொத்த ஏரியாவும் வெண்ணிலா இலக்கிய வீதி வாசிகளை அரவணைத்துக்கொண்டது. என்ன உதவி வேண்டும் கேளுங்கள் என்றது !

எல்லாம் சரி, வெண்ணிலாவை எங்கே நிகழ்த்துவது ?

திருவல்லிக்கேணி தீர்த்தாரப்பன் தெருவில் இருந்த அந்த பளபளப்பான கட்டிடம் அவனது கண்ணில் பட்டது.

‘ஆரிய சமாஜம்!’

அணுகிக் கேட்டதும் ஆர அரவணைத்துக் கொண்டார் ஆரிய சமாஜத்தின் அன்றைய செயலாளர் திருநாவுக்கரசு.

“தம்பி, இது வடவர்களால் கட்டப்பட்ட பகட்டான கட்டிடம்தான் என்றாலும், இது தமிழர்கள் நமக்கானது. அருகே இருக்கும் சாமானிய மக்களோ இதனுள் வரத் தயங்கியபடியே இருக்கிறார்கள்.

தமிழிலக்கியம் வளர்க்கும் உங்களது முயற்சியால் அந்த மக்கள் இந்தக் கட்டிடத்தைக் கொண்டாடுவார்கள் என்றால் ஆரிய சமாஜம் மகிழும். எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாகச் செய்யுங்கள்...” என்றார்.

தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் பெரு. முருகன். பொருளாளர் இளங்கோ, துணைச் செயலர் ஆனந்தன் என அனைவரும் பக்கபலமாக இருக்க, பெயின்ட்டும் சாக்பீஸுமாக இரவு வேளைகளில் வெண்ணிலா உறுப்பினர்கள் பீச் ரோடு, மவுன்ட் ரோடு என அவனோடு அலைந்தார்கள்.

அவன் தார் ரோட்டில் அமர்ந்து சாக்பீஸில் ‘வெண்ணிலா இலக்கிய வீதி’ எனப் பெரிதாக எழுதுவான். அதனை வெள்ளை பெயின்ட் கொண்டு அடித்து முடிப்பார்கள் வெண்ணிலாவாசிகள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வெள்ளந்தியான இளைஞர்களால் இலக்கியம் முன்னெடுக்கப்பட்ட அழகான காலம் அது.

தமிழறிஞர் நாரா நாச்சியப்பனின் புதல்வர் எஸ்.எஸ்.பிரின்டர்ஸ் செல்வராஜ் மாதம்தோறும் அழைப்பிதழ் அடித்துக் கொடுக்கச் சம்மதித்தார்.

எல்லாம் கூடிவர ஓர் பௌர்ணமி நன்ளாளில் ‘நிலாவுக்கு ஒரு வார்த்தை’ என்னும் தலைப்பில் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தலைமை தாங்க ஆரவாரமாக அந்த வெண்ணிற மெத்தை விரிக்கப்பட்டேவிட்டது.

வெண்பட்டுத் திண்டுகள் போடப்பட்டு அதனருகே பன்னிரண்டு இளங்கவிஞர்கள் அமர்ந்து கவிபாடிக் கலக்க, ஆளரவமற்று இருந்த அந்த ஆரிய சமாஜக் கட்டிடம் ஏறத்தாழ 200 தமிழிலக்கிய ஆர்வலர்கள் சூழ களை கட்டி நின்றது. அவன் கனவு நிறைவேறியது.

விதி அதோடு விட்டதா ?

“இது அடுத்த கம்பன் கழகம்...” என்று ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவி உள்ளத்தோடு போற்றிச் சொல்லிவிட, உணர்ச்சிவசப்பட்ட அவன் “இனி ஒவ் வொரு பௌர்ணமியிலும் இந்த வெண்ணிலா கூட்டம் தொடரும்...” என்று அறிவித்து விட்டான்.

அறிவித்த கடமைக்கு இலக்கியவாதிகளை நாடித் தேடி அவன் அலைய, அப்புராணியான அவனது நண்பர்களும் கூடவே அலைந்தார்கள்.

நா. காமராசன், பெரியார்தாசன், திருக்குறள் முனுசாமி, இலக்கியச் சுடர் ராமலிங்கம் என அந்த வரிசை தட்டுத் தடுமாறி உருண்டுகொண்டிருக்க... விதி பொல்லாதது எனும்படியாக பேராசை ஒன்று அவனுக்குள் எழுந்தது.

“இலக்கியப் பேராசான் யார் இங்கே... ஜெயகாந்தன் தானே? அவரை வெண்ணிலா இலக்கிய வீதிக்கு அழைக்கப் போகிறேன்” என்றான்.

இலக்கிய உலகின் நண்பர்கள் அதிர்ந்தார்கள்.

“அடேய்...அது ஆகுற காரியமில்லை. அது சிம்மம்டா. ஆகப் பெரிய ஆகிருதிகளே அழைத்தாலும் மறுத்து ஒதுக்கும் அந்த ஜாம்பவான், சிறுவன் நீ அழைத்து வருவாராடா..?”

“ஏன்..? மோதிப் பார்க்கிறேன்...”

“முடியாது...போ என்றால்..?”

“மீண்டும் மோதுவேன்...”

“எக்கேடும் கெட்டுப் போ...”

ஒரு சனிக்கிழமை மாலையில், இலக்கிய உலகத்தாரால் ‘மடம்’ என்று அழைக்கப்படும் ஜெயகாந்தனின் அலுவல கம் நோக்கி தனது நண்பர்களோடு விரைந்தான் அவன்.

அடிவாரத்திலேயே மடக்கி விசாரிக்கப்பட்டு ஒரு வழியாக மேலே அனுமதிக்கப்பட்டார்கள்.

அவனுடன் வந்தவர்கள் அதைப் பெரும் அவமானமாகக்கொண்டு முரண்டு பிடிக்க “கொஞ்சம் இருங்கப்பா...” என்று கெஞ்சியபடியே மேலேறினான்.

மேலிடம் மிக அமைதியாக இருந்தது.

வலப்புற ஹாலில் நீண்ட மேஜை போடப்பட்டிருக்க நடுவே இருந்த ஒற்றை நாற்காலியில் சம்மணமிட்டபடி தலைப்பாகை கட்டிக்கொண்டு ‘ஆஹெம்’ மென அமர்ந்திருந்தார் ஜெயகாந்தன் !

மேஜையில் அவருக்கெதிரே அடி மேனி கருத்த பாட்டில் ஒன்று. அதன் பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் தட்டு. அதில், பேருக்கு கொஞ்சம் பருப்பு வகைகள்.

இடது கையில் தடிமனானதோர் புஸ்தகத்தைப் பிடித்துப் படித்துக்கொண்டிருந்தார் அந்த ஆசான். சரிந்து தொங்கிய முகப்பு அட்டையில் தங்க நிறத்தில் ‘மத் பாகவதம்’ என்று காணத் தெரிந்தது.

வாயிலோரம் சிலர் தனக்காகக் காத்திருப்பதைக் குறித்துக் கொஞ்சமும் சலனப்படாமல் சற்றே முன்ன கர்ந்து அடுத்த ரவுண்டை முடித்துக்கொண்டவர், மேலும் படிப்பில் ஆழ்ந்தார்.

அவன், ஆவல் மேலிட அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென ‘புகை’ வாடை வீசத் துவங்கியது. அவரது முதுகுப்புறம் இருந்த அறையில் இருந்து அடித்தட்டு சென்னைவாசிகள் போலிருந்த சிலர் பைய வெளியேறி வந்தார்கள்.

அவர்களின் கையில் அரை சாண் அளவுக்கு சிமிழ் ஒன்று புகைந்து கொண்டிருந்தது. தடிமனான புத்தகத்தை மேஜை மேல் அலுங்காமல் படியவைத்த ஜெயகாந்தன் மெல்ல நிமிர்ந்து தன் வலக்கைச் சட்டை மடிப்பை உருட்டி நீக்கினார்.

அங்கிருந்து வெளியெடுத்த ஒரு மெல்லிய சல்லாத் துணியை அந்தச் சிமிழ் மீது லாவகமாகப் போர்த்தியபடி வாங்கிக் கொண்டார்.

அதன்பின் இழுத்தார் ஒரு இழுப்பு... அடுத்து ஓர் இழுப்பு... மேலும் ஓர் இழுப்பு...இன்னுமோர் இழுப்பு !

திரும்ப ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிமிழை, பணிந்து வாங்கிக்கொண்டு கடவுளை தரிசித்த பக்தர்கள் போல பின் வாங்கி நடந்து உள் அடைந்துகொண்டார்கள் அவர்கள்.

மீண்டும் பாகவதம் ஏந்திப் படிக்கத் துவங்கிவிட்டார் ஜெயகாந்தன்.

இன்னமும் இவர்கள் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

“இதெல்லாம் ஆவற வேலையாப்பா...” என்றபடி காதோரம் கிசுகிசுத்த வெண்ணிலாக்காரனை “ஐயோ, கொஞ்சம் கம்முன்னு இருப்பா...” என்றபடி பதற்றப் பட்டான் அவன்.

நேரம் கழிந்தது.

கவனம் திசை மாறி வாயில் பக்கம் திரும்பிய ஜெயகாந்தன்,  அவனை நோக்கினார்.

‘வரலாம்...’ என்பது போல் தலையசைக்க அவனோடு எல்லோரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள்.

அவருக்கு எதிரே இருந்ததோர் அறையில் ப்ளாக் அண்ட் ஒயிட்டில் கம்பீரமாக பைப் பிடிக்கும் ஜெயகாந் தனின்  பெரிய சைஸ் புகைப்படம் குண்டு பல்பின் ஒளியில் தெரிந்தது.

மீசையைத் தன் இரண்டு உள்ளங்கைகளினாலும் அழுந்த நீவி எடுத்தபடி எதிர்பாராத புன்னகையைப் பரிசளித்தார் ஜெயகாந்தன்.

“வணக்கம் சார்...”

“சொல்லுங்கள்...”

“நீண்ட நேரம் உங்களுக்காகக் காத்திருந்தோம்...”

“ஏன்..?”

“உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்...”

“மேலே சொல்லலாம்...”

“சார், வெண்ணிலா இலக்கிய வீதி என்னும் எங்கள் அமைப்பில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து நீங்கள் வந்து உரையாற்ற வேண்டும்...”

“இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும் நீ...”

“.....................”

“பொய் வேண்டாம். என்ன வேண்டும். சொல்லலாம்..!”

“சார், உங்களிடம் பொய் சொல்லி ஆக வேண்டியது ஏதும் எங்களுக்கு இல்லை. உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது உண்மை. நீங்கள் வந்தால் எங்களுக்குப் பெருமை. அவ்வளவுதான். அப்புறம் உங்கள் இஷ்டம்...”

தலைப்பாகையைக் கழற்றி முகம் துடைத்துக் கொண்டார்.

அவர் கிளம்பப் போகிறார் என்னும் குறிப்பறிந்து அத்தனை பேரும் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.

மெல்லக் கீழிறங்கிய அவரைப் பக்கத்துக்கு ஒருவராக அடைத்துக்கொண்டு கீழிறக்கினார்கள்.

கடைசியாகக் கீழிறங்கிய அவனுக்காகக் காத்திருந்த ஜெயகாந்தன் மெல்லத் திரும்பிச் சொன்னார்.

“இன்னொருவன் வருகையை உங்களது பெருமையாகக் கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்களே பெருமையாக்கிக் கொள்ளப் பாருங்கள்...”

“சார்...இதை அங்கே வந்து சொல்லுங்கள்...”

“எங்கே..?”

“வெண்ணிலா இலக்கிய வீதியில்...”

“இங்கேயே சொல்லிட்டேனே, போதாதா?”

“கண்ணனே ஆனாலும் கீதையைக் களத்தில் வந்துதான் சொல்லியாக வேண்டும்...”

“அதுசரி, கேட்கும் அருகதை உங்களுக்கு உண்டா..?”

“...............”

“இந்த மௌனம்தான் நான் தேடிக்கொண்டிருக்கும் அந்த ரஹஸ்யம். தேதியைக் கொடுத்துட்டுப் போ...வருகிறேன்...”

வாகனத்தில் ஏறிக்கொண்டார் அந்தப் பேராசான்.

நடுச்சாலையில் கண்ணீர் மல்க இருகரம் கூப்பிக் கொண்டிருந்தான் அவன்.

ஆம், “ரஹஸ்யங்களில் நான் மௌனம்...” என்றான் பார்த்தனுக்கு கீதை சொன்ன கண்ணன்.

மோட்டார் வைத்த அந்த சைக்கிள் ரிக்‌ஷா பேராசானைச் சுமந்து செல்லும் குஷியில்  ‘ர்ர்ர்ரூம்...’ என்று கிளம்பி மடத்தை விட்டு அகன்று தூர தூர சென்று மறைந்தது.

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in