கண்ணான கண்ணே.. 7

கண்ணான கண்ணே.. 7

ருஜுதா திவேகர்

குழந்தை வளர்ப்பு என்பது எப்போதுமே அவர்களை நம் உத்தரவுகளுக்கு உடன்படச் செய்வது மட்டுமல்ல. அதைச் செய்யாதே… இதைச் சாப்பிடாதே... இந்த உடை வேண்டாம்... இந்த நபருடனான சகவாசம் கூடாது... என்றெல்லாம் அவர்களிடம் கட்டளைகள் மட்டுமே பிறப்பிக்கும் இயந்திரமாக இருப்பதல்ல பெற்றோரின் வேலை. மாறாக அவர்களை சுயமாக முடிவெடுக்க அனுமதிப்பதே உண்மையான பிள்ளை வளர்ப்பு.  முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவதை சரியான உணவை அவர்கள் தெரிவு செய்யப் பழக்கப்படுத்துவதிலிருந்து தொடங்குங்கள். தான் என்ன சாப்பிட வேண்டும் என்பதைச் சரியாக முடிவு செய்ய உங்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருங்கள். உணவின் மீதான குழப்பங்களைக் கடந்த பெற்றோராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் உங்கள் குழந்தைகள் சரியான உணவைத் தேர்வு செய்ய உதவுவதில் சிக்கல் ஏதும் இருக்காது.  இந்த அத்தியாயம் அதைப் பற்றியே பேசவுள்ளது.

வணிக நுகர்வோரைப் போல் அல்ல குழந்தைகள்…

பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளை நாம் வணிக நுகர்வோர்போல் பாவிக்கிறோம். ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க விரும்புவதுபோல் நாமும் நமது குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைக்கிறோம். குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் தவறேதும் இல்லை ஆனால், அதற்காக வாடிக்கையாளரின் தேவையை ஒரு நிறுவனம் கேட்டறிந்து சேவை செய்வதுபோல் பிள்ளைகளுக்குச் சேவை செய்வது அல்ல பிள்ளை வளர்ப்பு. அதுவும் உணவு விஷயத்தில் பிள்ளைகளிடம் நுகர்வோர்-விற்பனையாளர் கலாச்சாரம் கூடவே கூடாது. அப்படி ஆரம்பித்தால் நீங்கள் காலந்தோறும் ‘சீசனல் ஆஃபர்' கொடுக்கும் பெற்றோராகவே இருக்க வேண்டியதாகும்.

ஒருமுறை டெல்லியில் மிகப் பெரிய பள்ளிக்கூடத்தின் பதின்பருவப் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இமாச்சல பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்றார்கள். அப்போது பள்ளிக் குழந்தைகளுடன் பயணிக்க நான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன்.

எல்லாக் குழந்தைகளுமே பெரும் செல்வந்தர்களின் வாரிசுகள். அந்தப் பள்ளிக்கூடத்தில் நொறுக்குத் தீனிக்கு அதிகக் கெடுபிடி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெற்றோர்களோ தங்களின் பிள்ளைகளுக்கு விதவிதமான நொறுக்குத் தீனிகளைக் கொடுத்தனுப்பியிருந்தனர். ஒவ்வொன்றும் அவர்களின் ஆடம்பரத்தின் அடையாளத்தைச் சொல்லும் அளவுக்கு இருந்தது. முதல் நாள் இரவு குழந்தைகள் மத்தியில் உணவுப் பழக்கவழக்கம் பற்றிப் பேச எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவர்களிடம் பொதுவாக சில விஷயங்களைப் பற்றி பேசினேன். “சாக்லேட் என்பது இரவு உணவுக்கு மாற்று அல்ல. சாக்லேட்டைத் தயாரிப்பதன் பின்னணியில் பிரபல நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குழந்தைகளைப் பணியமர்த்தியிருக்கிறது; குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது” என்றேன். “நீங்கள் விரும்பிச் சாப்பிடும் கெட்சப், உலகிலேயே மிகக் குறைந்த ஊட்டச்சத்து கொண்ட உணவு” எனக் கூறினேன். “உங்கள் அனைவருக்கும் 14 வயதுக்கு மேல் ஆகிவிட்டது.  என்றாவது  நீங்கள்  தூக்கி  எறியும்  பிளாஸ்டிக் என்னவாகும் என யோசித்திருக்கிறீர்களா? இந்தியாவால் இல்லை, இந்த உலகின் எந்த தேசத்தாலாவது அதனை முற்றிலுமாக மறு சுழற்சி செய்ய முடியுமா என யோசித்திருக்கிறீர்களா?”என்று கேட்டேன். “மினரல் வாட்டர் நிறுவனங்களும் கோலா கம்பெனிகளும் நிலத்தடி நீரை எப்படிச் சுரண்டுகின்றன என்பது தெரியுமா?” என்றேன். “ஒரு லிட்டர் கோலா பானம் தயாரிக்க 7 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் நிறுவனம் சுற்றுச்சூழல் திருட்டில் ஈடுபட்டிருப்பதை அறிவீர்களா?” என்றேன். இதைத் தவிர வேறு ஏதும் பேசவில்லை. அன்றிரவு நாங்கள் தங்கியிருந்த விடுதியில் அளிக்கப்பட்ட உள்ளூர் உணவை அத்தனை குழந்தைகளும் அவ்வளவு நேர்த்தியாகச் சாப்பிட்டுச் சென்றனர்.

மறுநாள் ஒரு சிறுவன் என்னிடம் வந்து, “எங்களுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை. ஆனால், எங்களால் மெதுவாகத்தான் மாற்றிக்கொள்ள இயலும்” என்று கூறிவிட்டுச் சென்றான். பதின்பருவப் பிள்ளைகளுக்கு அடுத்தவர் உணர்வைப் புரிந்துகொள்ளும் திறனே இல்லை எனக் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்றுணர்ந்தேன்.

நாம் குழந்தைகளை நுகர்வோர் கலாச்சாரத்தில் வளர்த்திருந்தால் அவர்கள் நம்மிடமிருந்து நாளொரு சலுகையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் போலவே இருப்பார்கள். மாறாக அவர்களுக்கு எது உணவு என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாள் இரவில் அரைமணி நேரப் பேச்சில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது என்றால், கூடவே இருக்கும் பெற்றோரால் எவ்வளவு பெரிய மாற்றங்களைச் செய்ய முடியும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதே பெற்றோரின் தலையாய கடமை.

நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவையெவை?

எது உணவு என்று தெரியாமலேயே அதன் பின்னால் ஓடும் கூட்டம் அதிகரித்துவரும் இந்தக் காலத்தில் எவற்றைத் தவிர்த்தால் நம் ஆரோக்கியத்தைப் பேண இயலும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

1. நீங்கள் வாங்கும் உணவு, பாக்கெட் உணவா? அது இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் கிடைக்கும் உணவுப் பதார்த்தமா?அப்படியென்றால் அதைத் தவிர்த்து விடுங்கள்.

2. அந்த பேக்கிங்கில் மூளை, புஜம், என ஏதாவது ஒரு உடல் பாகத்தின் படம் அச்சிடப்பட்டு, அவற்றை வலுப்படுத்துவதற்கான உணவு எனக் குறிப்பிட்டிருந்தால் தயவுசெய்து அதைத் தவிர்த்துவிடுங்கள். உங்களை உயரமாகவோ வலிமையாகவோ அறிவுஜீவியாகவோ ஆக்கும் திறன் நிச்சயமாக அந்த உணவுக்கு இல்லை என்பதே உண்மை.

3. இதில் இரும்புச்சத்து இருக்கிறது, புரதச்சத்து இருக்கிறது, நார்ச்சத்து இருக்கிறது, வைட்டமின் டி ஸ்பெஷல் என்றெல்லாம் ஒரு உணவை விளம்பரப்படுத்தியிருந்தால் அதனைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

4. இதை வாங்கினால் ஒரு பொம்மை இலவசம், ஐ போன் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது, ஏன் வெளிநாட்டு சுற்றுலாகூட செல்லலாம் என ஒரு உணவுத்தயாரிப்பு நிறுவனம் விளம்பரப்படுத்தினால் உஷாராக இருங்கள். சில வெளிநாடுகளில் உணவு நிறுவனங்கள் இத்தகைய விளம்பரங்களை அளிக்க மிகுந்த கெடுபிடி நிலவுகிறது என்பதே உண்மை.

5. உங்கள் அபிமான திரை நட்சத்திரமோ கிரிக்கெட் வீரரோ ஒரு பொருளின் விளம்பர மாடலாக இருப்பதால் அதை நீங்கள் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. உண்மையில் அவர்களை மாடலாக அழைப்பதற்குக் காரணமே அவர்களின் தோற்றம்தான். வலுவான தோற்றம் கொண்ட அவர்கள் அந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருட்களை ஒருபோதும் உண்ண மாட்டார்கள்.

எனவே, சந்தையில் நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் இவற்றில் ஏதேனும் மூன்று விஷயங்களுடன் பொருந்திப்போனாலே அவற்றைத் தவிர்ப்பது நலம்.

என்னைப்  பொறுத்தவரை சந்தையில் கிடைக்கும் பழரசங்கள், கோலாக்கள்,பிஸ்கெட்டுகள், சிப்ஸ், மல்டி கிரெய்ன் உணவுகள், சாக்லேட்டுகள், பர்கர், பீட்சா, சாண்ட்விச், ஐஸ்க்ரீம் இவை எல்லாமே தவிர்க்க வேண்டிய உணவுகள்தான்.

ஆனால்  இந்தத்  தொழிலில்  உள்ள  உணவு நிறுவனங்களோ, தாங்கள் உருவாக்கும் வேலை வாய்ப்புக்களையும், தாங்கள் முதலீடு செய்துள்ள நாடுகளில் ஏழைக்குழந்தைகளின் கல்விக்குஉதவுவதையுமே உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. உண்மை உறங்கிக்கொண்டிருக்கிறது. திசை திருப்பும் முயற்சி  என்றுகூட இதனைச் சொல்லலாம். நமது ஆரோக்கியம், உள்ளூர்த் தொழில்கள், சுற்றுச்சூழல், நம் அனைவருக்குமான இயற்கை வளங்களான வனங்கள், சுத்தமான நீராதாரம், வளமான மண் என எல்லாவற்றையும் சுரண்டிவிட்டு வேலை வாய்ப்பு அக்கறை காட்டித் திசை திருப்புகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

மூன்று முக்கிய சோதனைகள்...

எதைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லும்போதே எது சரியான உணவு என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அதனை அறிந்துகொள்ள மிக எளிமையான மூன்று பரிசோதனைகள் இருக்கின்றன.

1. முதல் சோதனை மிகவும் எளிமையானது. நீங்கள் சாப்பிட விரும்பும் உணவு உங்கள் பாட்டி காலத்து உணவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாட்டிக்கு நீங்கள் சொல்லும் உணவு பரிச்சயம் இல்லையென்றால், அவர் ஒருவேளை அவரது பால்ய பருவத்தில் அதை பார்த்ததோ புசித்ததோ இல்லையென்றால் அந்த உணவைப் புசிக்காதீர்கள்.

இதில் இன்னொரு நுணுக்கம் இருக்கிறது. சில வீட்டில் பாட்டிகள் ஓட்ஸ் கஞ்சி, டோ நட்ஸ், பிரவுனி போன்ற பதார்த்தங்களை அங்கீகரித்திருக்கலாம். பாட்டி ஏற்றுக்கொண்டதால் நாம் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அங்கீகரிக்கும் பாட்டி அவரது இளமைக் காலத்தில் நிச்சயமாக அதைச் சாப்பிட்டிருக்க மாட்டார். ஏன் பார்த்திருக்கவே மாட்டார். எனவே, உங்கள் பாட்டியேகூட சில உணவுகளுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் அது அவருக்குப் பரிச்சயமற்றது என்றால் புறக்கணித்துவிடுங்கள்.

2. இரண்டாவது சோதனை, உள்ளூர் அடையாளம் இருக்கிறதா என அறிவது. நீங்கள் உண்ணும் உணவு உள்ளூரில் விளைவிக்கப்பட்டதாக இருக்கிறதா, உள்ளூர் தட்பவெப்பச்  சூழலுக்கு  உகந்ததாக  இருக்கிறதா, உங்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி தரும் நுண்ணூட்டச் சத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறதா எனக் கண்டறியுங்கள். உள்ளூர் உணவு உடனே உங்கள் தட்டில் கிட்டிவிடும். ஸ்ட்ராபெர்ரி போல் விமானத்தில் வரத் தேவையில்லை. மேலும், உள்ளூர் உணவு உங்கள் ஊர் விவசாயியின் வாழ்வாதாரம். உள்ளூர்ப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது  உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது புறக்கணிக்கப்படும் உள்ளூர் உணவுகளுக்கு (NUS- neglected and underutilised species) புறக்கணிக்கப்பட்ட, அதிகம் பயன்படுத்தப்படாத வகைகள் என அடையாளம் கொடுத்துள்ளது. எந்த

உணவுக்கு இணையான ஆங்கிலப் பெயர் இல்லையோ அதுவே உங்களுக்கான உள்ளூர் உணவு. சாம்பார், இட்லி, வடை இவையெல்லாம் ஆங்கிலத்திலும் அதே பெயருடன்தான் இருக்கின்றன. உள்ளூரில் விளையும் பொருட்களைக்கொண்டு சமைத்துச் சாப்பிடுங்கள்.

3. உங்கள் உணவு பல்வேறு வகையிலும் பயன்படக்கூடியதாக இருக்கிறதா என சோதியுங்கள். ஒரு பள்ளிக்கூட மைதானத்தை விளையாடப் பயன்படுத்தலாம், விழா நடத்தப் பயன்படுத்தலாம், ஒரு பொருட்காட்சி நடத்தப் பயன்படுத்தலாம் அல்லவா? அப்படி உங்கள் கையில் கிடைக்கும் உணவை எத்தனை வழிகளில் பயன்படுத்த முடிகிறது என ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் சில உதாரணங்களைப் பட்டியலிடுகிறேன்.

வாழை: வாழைக்காய், வாழைத்தண்டை கூட்டு, பொரியலாகச் சமைக்கலாம். வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். இல்லை மில்க்ஷேக்காக மாற்றிப் பருகலாம். வாழை இலையை உணவை வைத்துச் சாப்பிடப் பயன்படுத்தலாம். வாழை மரத்தை பூஜைக்காகவும், விஷேச வீட்டின் வரவேற்புக்காகவும் பயன்படுத்தலாம்.

மா: மாங்காய் ஊறுகாயாகும், மாம்பழம் ருசி சேர்க்கும், மாங்கூழ் தாகம் தீர்க்கும், மாவிலை தோரணமாகும், மாமரப் பட்டை மருத்துவ குணம் கொண்டது. மாமரத்தில் இலகுவான மர சாமான்கள்கூட செய்யலாம்.

அரிசி: சாதமாக, புலவு, பிரியாணியாக சமைக்கலாம். இட்லி,தோசை,இடியாப்பம்,ஆப்பம் என விதவிதமான சிற்றுண்டிகளாகப் படைக்கலாம். அரிசி உமி கால்நடைகளுக்கு உணவாகும். அரிசிமாவைக் கரைத்து மாக்கோலம் இடலாம்.

பால்: பாலாக பருகலாம். தயிர், மோர், நெய், வெண்ணெய் என உருமாற்றிப் பயன்படுத்தலாம். மஞ்சள் சேர்த்து மருந்தாகப் பருகலாம். பூஜையும் அபிஷேகமும் செய்யலாம்.

இவையெல்லாம் பல்வகை பயன்பாடு கொண்ட உணவுகளுக்கான உதாரணம். ஆனால், நீங்கள் கடைகளில் பாக்கெட்டுகளில் வாங்கும் உணவுப் பொருளை ஒன்று அப்படியே புசிக்கலாம்; இல்லை தூக்கி எறியலாம்.

அடிப்படையில் மனிதர்களுக்கு உகந்த உணவு ஒரே ஒரு வகையில் மட்டுமல்லாமல் பல்வேறு ருசிகளில், வகைகளில் சமைத்து  உண்ணக்கூடியதாக இருக்க வேண்டும்.

அதில் மருத்துவ குணமும் இருக்க வேண்டும்.

அந்த உணவுப் பொருளை அலங்காரப் பொருளாகவும் ஏன் பூஜைப்பொருளாகவும்கூட பயன்படுத்த இயல வேண்டும்.

எது சரியான உணவு என்பதைத் தேர்வுசெய்ய உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள். அடுத்த முறை சூப்பர் மார்க்கெட் செல்லும்போது கூடையில் வேண்டாத பாக்கெட் உணவுகள் இடம்பெறாமல் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

 (வளர்வோம்… வளர்ப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in