காதல் ஸ்கொயர் - 05

காதல் ஸ்கொயர் - 05

அன்றிரவு அறையில் கௌதமின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்த அருண், கௌதமின் கால்களைப்  பிடித்துக்கொண்டு, “என்ன விட்டுடுரா…” என்று கதறினான். வேறு ஒன்றுமில்லை. கௌதம், நந்தினியின் கதைகளைப் படிக்கக் கொடுத்திருந்தான்.

கௌதம், “டேய்… என்னடா… இன்னும் ஒரே ஒரு கதை மட்டும் படிச்சிடு”என்றான்.

“அய்யோ…. வேண்டாம்டா” என்ற அருண் அழுவதுபோல், “குறை மாசத்துல பொறந்தவன்டா நானு. அதுலயே பாடி வீக்கு. அதில்லாம சின்னவயசுல நாலு தடவ டைபாய்டு வந்து நோய்எதிர்ப்பு சக்தியே கம்மின்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. இந்தக் கதையயெல்லாம் என் பாடிதாங்காதுடா. என்னை விட்டுடுரா. நான் சென்னைபோயி, ஸிவிக்கி டெலிவரி பாய் வேலை பாத்தாச்சும் பொழச்சுக்கிறன்” என்று கதற, கௌதம் வேறு வழியின்றி, “சரி எழுந்திரி” என்றான்.

எழுந்த அருண் கட்டிலில் கிடந்த நந்தினியின்கதைநோட்டுப் புத்தகங்களைப் பார்த்தவுடன்,“ஆத்தாடியோவ்…” என்று வேகமாகத் தன்னுடைய கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான்.

கௌதம் அந்த நோட்டுப் புத்தகங்களைப் பார்த்தான். ஒவ்வொரு நோட்டிலும், ‘திக்திக் திகில் கதைகள்’, ‘ஜில் ஜில் காதல் கதைகள்’, ‘உள்ளத்தை உருக்கும் குடும்பக்கதைகள்’ என்று தலைப்பிட்டு நந்தினி புகுந்து விளையாடியிருந்தாள்.  கௌதம் சாம்பிளுக்கு ஒரு ‘திக் திக் திகில் கதை’யும், ஒரு ‘ஜில் ஜில் காதல் கதை’யும் படித்துவிட்டு வெறுத்துப்போய்விட்டான். அத்தனையும் ஒரு கத்துக்குட்டி எழுத்தாளன் எழுதியது போன்ற மோசமான நடையில், அபத்தக் களஞ்சியமாக இருந்தது. எனவே ‘உள்ளத்தை உருக்கும் குடும்பக் கதை’களை நைஸாக அருணுக்குத் தள்ளிவிட்டான். அதைப் படித்துவிட்டுதான் அருண் காலில் விழுந்துவிட்டான்.

கௌதம், அருணைப் பார்த்து, “மச்சி… உனக்குக் குடும்பக்கதை பிடிக்கல போல.வேணும்ன்னா ‘திக் திக் திகில் கதை’ய படிச்சுப் பாரேன்…” என்று  கூற, அருண் போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டான். கௌதம் தனது கட்டிலில் படுத்துக்கொண்டு நந்தினியின், ‘மகளிர் விடுதலைக் கதை

கள்’ நோட்டுப் புத்தகத்தை எடுத்தான். முதல் கதையில் எடுத்தவுடனேயே, “ஏய்…

தாழ்ந்த பெண்ணினமே… பாரதி கண்ட…”

என்று ஆரம்பிக்க, பயந்துபோய் நோட்டை மூடிவிட்டான்.

கட்டிலில் படுத்திருந்த அருணை நோக்கிச் சென்ற கௌதம், “டேய்…ப்ளீஸ்டா. எனக்காக இதை மட்டும் படிச்சிட்டுக் கதைய சொல்லுடா. நாளைக்கி நந்தினிகிட்ட சொல்லணும்” என்றான் கெஞ்சுவது போல். கௌதமை சில வினாடிகள் முறைத்த அருண், “சரி… இது ஒண்ணுதான்” என்று அந்த நோட்டுப்புத்தகத்தை வாங்கிக்கொண்டான்.

கௌதம் வேறு என்ன படிக்கலாம் என்று நோட்டுப் புத்தகங்களைப் பார்த்தான். ‘அச்சத்தில் உறைய வைக்கும்

பேய்க் கதைகள்’ என்ற நோட்டைஎடுத்தான். முதல் கதையில் கதாநாயகி எடுத்தவுடனேயே தனது புறங்கையால் வாயை மூடியபடி, “வீல்…” என்று அலற, கௌதம் நோட்டை மூடிவிட்டான். திரும்பிஅருணைப் பார்த்தான். அருண் சேற்றை மிதித்ததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தான்.காலையில் கௌதம் எழுந்தபோது,அருண் கம்பளிப் போர்வைக்குள் அனத்தியபடி படுத்திருந்தான். வேகமாகக் கட்டிலிலிருந்து இறங்கிய கௌதம், அருணின் போர்வையை விலக்கினான். முகம் சோர்வாக இருந்த அருணின்கழுத்தில் கையை வைத்துப் பார்த்தான். நன்கு கொதித்தது. அருண் மெதுவாகக் கண்களைத் திறந்துபார்க்க, “என்ன மச்சி… உடம்பு இப்படிக் கொதிக்குது?” என்றான் கௌதம்.

“நான் வேண்டாம், வேண்டாம்னேன்… கேட்டியா?” என்ற அருண் நந்தினியின் கதை நோட்டுப் புத்தகத்தைக் காண்பிக்க, கௌதமுக்குத் தூக்கிவாரிப்போ போட்டது.தொடர்ந்து அருண், “முதல் கதை படிச்சப்பவே உடம்பு லேசா கணகணன்னு இருந்துச்சு. பரவால்லன்னு இன்னொரு கதை படிச்சேன். அவ்வளவுதான். உடம்பு ஒரு மாதிரி வெடவெடன்று ஆகி, தலை கிர்ருன்னு சுத்த ஆரம்பிச்சிடுச்சு. அடுத்த அஞ்சே நிமிஷத்துல காய்ச்சல் வந்துருச்சு”

என்றான். கௌதம், அருணைப் பரிதாபத்துடன் பார்த்தபடி, “அதனால இருக்காதுடா… திடீர்னு க்ளைமேட் மாறுனது உன் உடம்புக்கு ஒத்துக்கல” என்றபோது கௌதமின் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். நந்தினி. போனை ஆன் செய்து, “சொல்லுங்க நந்தினி” என்றான்.

“நேர்ல பேசலாமா? உங்க ப்ளாக்குக்கு எதிர்ல இருக்கிற பார்க்லதான் இருக்கேன்”என்று நந்தினி கூறிய இரண்டாம் நிமிடத்தில் கௌதம் பார்க்கில் இருந்தான்.

நந்தினி அவ்வளவு காலையில் குளித்துவிட்டு, நீல நிற ஸ்வெட்டர் அணிந்துகொண்டு, பனியில் நனைந்த வயலட் நிறப் பூக்கள் தரையில் சிதறியிருந்த ஜகரன்டா மரத்துக்குக் கீழே அழகாக நின்றுகொண்டிருந்தாள்.அப்போது மெல்லிய பனிப்புகை அவளைக் கடந்து செல்ல, அவள் கீழே கிடந்த வயலட் நிறப் பூக்களை எடுத்துத் தனது வலது கையில் சேகரித்துக்கொண்டிருந்தாள்.

கௌதமைப் பார்த்தவுடன் வேகமாக முன்னால் வந்த நந்தினி, அவன் அவளை ரசிக்கக்கூட அவகாசம் தராமல், “என் கதைல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று கேட்க, கௌதமுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வளவு அழகிய பெண்ணின் மனதை, அவ்வளவு காலையில் புண்படுத்துவது நியாயமில்லை என்பதால் கௌதம், “முழுசாப் படிச்சுட்டுச் சொல்றேன்”என்றான்.

அப்போது திடீரென்று மழை பெய்ய, இருவரும் அருகில் இருந்த நாவல்மரத்தை நோக்கி ஓடினார்கள். மரத்தடியில் நின்றவுடன், கீழே சிதறிக்கிடந்த நாவல் பழங்களைப் பார்த்த நந்தினி வேகமாக நாவல் பழங்களை இடது கையால் எடுத்துத் தின்றபடி, “உங்களுக்கு நாவல்பழம் பிடிக்குமா?” என்றபோது அவள் நாக்கு லேசான ஊதா நிறத்துக்கு மாறியிருந்தது. கௌதம், “நாவல்பழத்தை விட, நாவல்பழம் சாப்பிடுற பொண்ணுங்கள ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்ல நினைத்த மனதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கினான்.

மழைத்துளிகள் மரத்தை ஊடுருவி அவள் முகத்தில் ஆங்காங்கே சிதறி, அவள் அழகை இன்னும் அதிகமாக்கியது. அப்போது நந்தினி தனது வலது கையை விரித்துக் காண்பிக்க, அதில் வயலட் நிற ஜகரன்டா பூவிதழ்கள் இருந்தன. பின்னர் அந்தக் கையை மரத்துக்கு வெளியே  நீட்டி உள்ளங்கையைக் குவித்து மழைத்தூறலில் நீட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாக மழைநீர் உள்ளங்கையில் சேர, பூவிதழ்கள் நீரில் நனைந்தன. அப்போது கௌதம் கீழேயிருந்த நாவல் பழங்களை எடுத்து அவளிடம் நீட்ட, அவள் இடதுகையால் வாங்கி ஒவ்வொன்றாகத் தின்றபடி, வலது கையை மழைநீரில் நீட்டிக்கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவள் உதடுகளும் ஊதா நிறத்துக்கு மாறின.

உள்ளங்கையில் மழைநீர் நிரம்பியவுடன் கையைத் தனது  முகத்தருகே கொண்டு வந்த நந்தினி,  தனது ஊதா நிற உதடுகளால் உள்ளங்கை நீரை  ஊத,நீர்த்திவலைகளுடன் பூவிதழ்கள் அந்தரத்தில் ஒரு வினாடி பறந்தன. அப்போது திடீரென்று அடித்த எதிர்க்காற்றில் அந்த நீரும் பூவிதழ்களும் திரும்பி அவள் கன்னத்திலேயே விழுந்து, பூவிதழ்கள் நீரில் வழுக்கி அப்படியே அவள் கழுத்தில் வந்து நின்றன. கௌதம் அந்த அழகைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சத்தமாக, “கடவுளே…” என்றபடி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“என்னாச்சு?” என்றாள் நந்தினி.

சில வினாடிகள் தடுமாறிய கௌதம், “மழை… அழகான பொண்ணுங்கள இன்னும் அழகாக்கிடுது…” என்று கூற, சட்டென்று வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க நந்தினி தலையைக் குனிந்துகொண்டாள். கழுத்தில் வயலட் நிறப் பூவிதழ்கள் ஒட்டியிருக்க, ஊதா நிற உதடுகளுடன், மேல் கண்களால் வெட்கத்துடன் நந்தினி, கௌதமைப் பார்த்த கோலத்தை ஒருவன் ஓவியமாக வரைந்தால், அதுதான் உலகிலேயே மிக அழகிய ஓவியமாக இருக்க முடியும். சந்தோஷத்தை மறைக்க முடியாமல் சில வினாடிகள் பொய்க்கோபத்துடன் கௌதமைப் பார்த்த நந்தினி சட்டென்று மழையில் இறங்கி ஓட ஆரம்பிக்க, கௌதம், “ஏய்… நந்தினி…” என்று கத்தினான். அவள் திரும்பி அவனைப் பார்த்துச் சிறு குழந்தைபோல் வலது கை ஆள்காட்டி விரலை மடக்கிக் காண்பித்துவிட்டு ஓடினாள்.

அப்போது அவனுடைய மொபைல் போன் அடிக்க, கௌதம் சிரிப்புடன்  போனை எடுத்துப்  பார்த்தான். அப்பா. வேகமாக போனை ஆன் செய்து, “ஹாய் அப்பா’’ என்றான்.

“எந்திரிச்சுட்டியா? ஒரு குட் நியூஸ். உன்னோட ட்ரெய்னிங் சென்ட்டர பாக்கணும்ன்னு எனக்கும் அம்மாவுக்கும் ஆசை. அதனால இந்த வீக் எண்ட் நாங்க  கோத்தகிரி வர்றோம்.”

“நிஜமாவா?”

“யா. ஃபேர்வியூ ரிசார்ட்ஸ்ல ஸ்டே பண்றோம். எங்களோட ஒரு பொண்ணும் வர்றா.”

“யாரு?”

“டாக்டர் சந்திரகுமார் சொல்வன்ல்ல?”

“ஆமாம்...”

“அவரோட டாட்டர் பூஜாவும் எங்களோட வர்றா…” என்று கூற, ‘பூஜாவைப் பார்த்திருக்கிறோமா?’என்று யோசித்தான் கௌதம்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in