பாப்லோ தி பாஸ் 18: சிதைக்கப்பட்ட கொக்கைன் கூடு..!

பாப்லோ தி பாஸ் 18: சிதைக்கப்பட்ட கொக்கைன் கூடு..!

 ‘ஒரு பறவையைக் கொல்ல வேண்டுமென்றால், அதன் கூடு இருக்கும் மரத்தை வெட்டிவிடு’ என்பது ஒரு பழமொழி. பாப்லோ போன்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிக்க வேண்டுமென்றால் என்ன வழி..? அவர்களின் ‘கிச்சன்’களை அழிப்பதுதான். அதைச் சரியாகச் செய்தார் லாரா..!

லாரா, நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் வரை, பாப்லோவும் அவன் சார்ந்த தொழிலும் சந்தித்த சிக்கல்கள் மிகவும் சாதாரணமானவை. கப்பலில் மறைத்து எடுத்து வரப்படும் சரக்குகளை ஆழ்கடல் ‘டைவர்’கள் வந்து எடுத்துச் செல்வதற்காகக் கடலில் போடப்படும். அப்போது சில நேரம், அந்தச் சரக்கு மூட்டைகள், அதிகமாக ஈரத்தை உறிஞ்சிவிட்டால், அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதனால் ஏற்படும் நஷ்டம் மிகவும் சொற்பம். அதே போல, சரக்குகளைத் திருடிச் செல்கிற ஊழியர்களால் இழப்பு ஏற்பட்டாலும், அது பெரிய அளவில் பிசினஸை பாதிக்கவில்லை. ஆனால், லாரா வேறுவிதமான பிரச்சினைகளை அவர்களுக்குக் கொண்டு வந்தார்.

தன்னுடைய பதவிக் காலத்தில் லாரா செய்த மிகப் பெரிய சாதனை, ‘ட்ராங்கிலாண்டியா’வை அழித்ததுதான்..!

‘ட்ராங்கிலாண்டியா’… உலகின் மிகப்பெரிய கொக்கைன் தயாரிப்பு ஆய்வுக்கூடம். அதாவது, பாப்லோவின் பாஷையில் ‘கிச்சன்’. கொலம்பியா வில் மரங்கள் அடர்ந்த வனம் ஒன்றுக்குள் இருந்தது ட்ராங்கிலாண்டியா. அங்கிருந்து ஒருவர் சாலை வழியாகப் பயணிக்க வேண்டுமென்றால், அவர் சுமார் 250 மைல் தூரத்துக்கு நடக்க வேண்டும். அங்கே சுமார் 180 பேர், முழு நேரத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தார்கள்.

அந்த கிச்சனுக்கு பாப்லோவின் கூட்டாளி ‘மெக்ஸிக்கன்’ கச்சாதான் உரிமையாளர் என்றாலும், அதை முறையாக நிர்வகிப்பதில் பாப்லோ உள்ளிட்ட இதர  ‘மெதஜின் கார்ட்டெல்’ கடத்தல்காரர்களுக்கும் பங்கிருந்தது. கொலம்பியாவில் அன்று இருந்த வேறு எந்த கிச்சனுக்கும் இல்லாத ஒரு முக்கியத்துவம், சவுகரியம் இந்த கிச்சனுக்கு இருந்தது. ஆம்… இது கொலம்பியா, பொலிவியா மற்றும் பெரு நாடுகளை இணைக்கின்ற பாலமாக இருந்தது. பொலிவியாவிலிருந்தும் பெருவிலிருந்தும் கச்சா பொருட்களைக் கொண்டு வந்து, இங்கே அவற்றை முழுமை பெற்ற சரக்காக மாற்றி, இதர நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கு, இந்த கிச்சன் முக்கியமான மையமாக அமைந்தது.

இங்கிருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 20 டன் கொக்கைன் தயாரிக்கப்பட்டது. இந்த கிச்சன் தொடங்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில் சுமார் 12 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.720 லட்சம் கோடி) சம்பாதித்தது என்றால், அன்றைக்கு மொத்த கொக்கைன் கடத்தலின் மதிப்பு எவ்வளவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்..!

அந்த கிச்சன் தொடங்கப்பட்டு 1984-ம் ஆண்டு வரைக்கும் கொலம்பிய அரசு அதிகாரிகளால் இந்த இடத்தை நெருங்கவே முடியவில்லை. இப்படி ஒரு கிச்சன் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், எங்கே இருக்கிறது என்பதைத்தான் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இறுதியாக 1984-ம் ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ஹெலிகாப்டர்களில் வந்திறங்கிய 42 ராணுவ வீரர்களால் இந்த கிச்சன் முழுமையாகத் தகர்க்கப்பட்டது.

எப்படி அவர்கள் அதைக் கண்டுபிடித்தார்கள்?

‘ஈதர்..!’

‘ஈதர்..?’

ஆம்… ‘ஈதர்’. கொக்கைன் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒரு வேதிப்பொருள் ‘ஈதர்’. ஒரு கிலோ கொக்கைன் தயாரிப்பதற்குச் சுமார் 17 லிட்டர் ஈதர் தேவைப்படும். பாப்லோவின் காலத்தில், இந்த ஈதரை உலகின் சில நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து வந்தன. அமெரிக்காவில் 5 நிறுவனங்களும், உலகின் இதர பகுதிகளில் 7 நிறுவனங்களும் மட்டுமே ஈதரை தயாரித்து விநியோகித்து வந்தன.

அமெரிக்காவின் டி.இ.ஏ. அதிகாரிகளும், கொலம்பியாவின் காவல் துறையினரும் தொலை பேசி ஒட்டுக் கேட்டல்கள், கடத்தல் கூட்டத்தில் உள்ள உளவாளிகள் ஆகியோர் மூலம், இந்த இடத்தைத் தெரிந்துகொண்டனர். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பிலிப்ஸ்பர்க் நகரத்தைச் சார்ந்த நிறுவனம் ஒன்றுதான் இந்த கிச்சனுக்குத் தேவைப்படும் ஈதரை அனுப்பி வந்தது.

அப்படி ஒரு சமயம், அந்த நிறுவனம் 95 ட்ரம் ஈதரை அந்த கிச்சனுக்கு விற்றது. அவற்றில் இரண்டு ட்ரம்களில் அந்த கிச்சன் இருக்கும் இடத்தை அறிவதற்கான ‘சிப்’கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த ட்ரம்கள் ட்ராங்கிலாண்டியாவுக்குப் போய்ச் சேர்ந்த அடுத்த சில நாட்களில் சாட்டிலைட் உதவியுடன், அந்த சிப்களில் இருந்து வந்த சிக்னல்களைக் காவல்துறை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர்.

லாரா உடனடியாகக் களத்தில் இறங்கினார். சுமார் 12 ஆயிரம் ட்ரம்களில் இருந்த வேதிப் பொருட்களும், சுமார் 15 டன் கொக்கைனும் அழிக்கப்பட்டன. கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தல் சரித்திரத்தில், அவ்வளவு அதிக கொக்கைன் கைப்பற்றப்பட்டது அதுவே முதன் முறை..! அதனால் ஏற்பட்ட நஷ்டம் அளவிட முடியாதது. ‘மெதஜின் கார்ட்டெல்’காரர்கள் மயாமியில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கிய மூன்றாண்டுகளில், முதன்முறையாக கொக்கைனின் விலை பன்மடங்காக உயர்ந்தது.

பாப்லோவால் இதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் லாரா கொல்லப்பட்டார்.

(திகில் நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in