இணையச் சிறையின் பணயக் கைதிகள் 5- டிஜிட்டல் போதை!

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 5- டிஜிட்டல் போதை!

“நான் போட்ட பதிவுக்கு யாருமே பதில் போடவில்லை. எனக்குப் போதுமான அங்கீகாரம் இல்லாத இந்தக் குழுவில் இருப்பதை அர்த்தமற்றதாக(!?) உணர்கிறேன். ஸோ நான் வெளியே போகிறேன்” இப்படி ஒரு நண்பர் என் குழுவில்.

“நீ தற்கொலையே செய்துகொள்வதாகச் சொன்னாலும் பத்துப் பேர்தான் ஏன் எதுக்குன்னு கேட்பான். மத்தவன் கண்டுங்காணாமப் போயிடுவான். இன்னும் சிலர் எப்போ பண்ணிக்கப்போறே சொல்லு உன்கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கணும்னு சொல்வான். இப்படி இருக்கற ஒரு நிலைமைல உன் போஸ்ட்டுக்கு பதில் எல்லாம் எதிர்பார்க்கிறது முட்டாள்தனம்” இப்படி அதற்கு பதில் போட்டார் இன்னொரு நண்பர்.

ஏதோ தன்னை லேசாகக் கிண்டல் பண்ணிவிட்டார் ஒருவர், அதுவும் இரண்டு நாளைக்கு முன் என்ற நிலையில் இப்படி எழுதினார் இன்னொருவர். “ரெண்டு நாளாகவே அந்த விஷயத்தை மறக்க நினைக்கிறேன். என்னால் முடியவில்லை. மனம் மிகவும் அலைபாய்கிறது. நானாகத் திரும்ப வரும் வரை என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். நான் டிஜிட்டல் டீட்டாக்ஸ் (digital detox)செய்துகொள்ளப்போகிறேன்” என்று கிளம்பிவிட்டார் நண்பர்.

இத்தனைக்கும் அவர் இருப்பது வெளிநாட்டில். என்ன கொஞ்சம் அரசியல் ஆர்வலர். குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து அவர் பதிவு போட, காத்திருந்தது போல அவருக்கு எதிர்வினை ஆற்றுவார்கள் எதிர்க்கட்சி அனுதாபிகளான இரண்டு நண்பர்கள். பொதுவெளியில் அரசியல் பேசினால் அது ஒரு முடிவுக்குத்தான் வருமா? வர முடியுமா? வரத்தான் விட்டுவிடுவார்களா? ஆக, தீர்வுக்கே வரமுடியாத பிரச்சினைகளை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகக் கொள்வது அவ்வளவு நல்லதுமில்லை. குழுவுக்கு ஆரோக்கியமானதும் இல்லை.

எல்லாம் சரி… அதென்ன டிஜிட்டல் டீட்டாக்ஸ்? மது முதலான போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டவர்களை சிகிச்சை செய்யும்போது முதல் கட்ட சிகிச்சைதான் இந்த டீட்டாக்ஸிஃபிகேஷன் (detoxification) எனப்படுவது. நச்சுத் தன்மையை உடம்பிலிருந்து நீக்குதல் எனப் பொருள்கொள்ளலாம். அதுவரை தினமும் மது அருந்தி உடலின் ஒவ்வொரு செல்லிலும் அந்த நச்சுத்தன்மை நிறைந்திருக்கும் நிலையில் முற்றிலும் மதுவை நிறுத்தி உடம்பைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியின் முதற்கட்டமே இது. இந்த வார்த்தையை எதற்கு டிஜிட்டல் சமாச்சாரங்களுக்குப் பயன்படுத்துகிறோம்? ஆம், டிஜிட்டலும் ஒரு போதைதான். அதற்கு அடிமையாவதும் ஒரு மூளைநோய்தான். அதற்கும் ‘பயன்படுத்தாதபோது ஏற்படும் சில அறிகுறிகள்’ (withdrawal symptoms) வரும். ஆகையால் அதற்கும் போதை மீட்பு சிகிச்சை முறையாகச் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த டிஜிட்டல் உலகில் என்னென்ன அடிமைத்தனம் உள்ளது? திரைகள் கொண்டஎந்த ஒரு சாதனத்தையும் விட்டுவைக்கவில்லை நாம். மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டாப்லெட்கள், வீடியோ கேமுக்குப் பயன்படும் சாதனங்கள் என எல்லாமே நம்மைப் பாதிக்கின்றன.

எல்லாம் சரி… இந்த டிஜிட்டல் போதைக்கும் மது முதலான போதைப்பொருள் பயன்பாட்டுக்கும் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா என்ற கேள்வி எழலாம். சந்தேகமே வேண்டாம். இரண்டுமே அடிமைத்தனம்தான். இரண்டுக்கும் காரணம் மூளைதான். நம் மூளையில் நிறைய வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. ஒரு மூளை செல்லிலிருந்து இன்னொரு மூளை செல்லுக்குத் தகவல் கடத்தியாக (neurotransmitters) செயல்படும் இந்த வேதிப்பொருட்கள் பல வகைப்படும். இதில் முக்கியமான ஒன்றுதான் ‘டோபமைன்’ (Dopamine). இது மகிழ்ச்சிக்கான வேதிப்பொருள் எனலாம். காதல் வசப்படும்போது எழும் உணர்வெழுச்சி முதல், ஒவ்வொரு போட்டியிலும் வென்று பரிசு வாங்கும்போது எழும் மகிழ்ச்சி போதைவரை எல்லாவற்றுக்கும் காரணம் இந்த ‘டோபமைன்’தான்.

இதோடு ரிவார்டு சென்ட்டர் என்பதைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மூளையில் உள்ள இப்பகுதிதான் நாம் எந்தப் பொருளுக்கும் சரி, எந்த விஷயத்துக்கும் சரி அடிமையாவதற்கான காரணம். ஒரு கோப்பையைக் கையிலேந்தி நம் அபிமான கதாநாயகன் பாடுவதுபோல ஒரு காட்சியைப் பார்த்துவிட்டால் போதும். இரண்டு மாதங்களாக மதுவைத் தொடாமல் இருந்த விரதம் எல்லாம் தூள்தூளாகிப் போய்க் கோப்பையில் கவிழ்ந்துவிடுவது முதல், எத்தனை லட்சங்களை சூறை விட்டாலும் பித்தம் தலைக்கேறிய சூழலில் மீண்டும் மீண்டும் பணத்தை வைத்துச் சூதாடுவதற்குக் காரணம் வரை இந்த ரிவார்டு சென்ட்டரும் டோபமைனும்தான். ஆக எல்லாம் அடிமைத்தனம்தான். எல்லாவற்றுக்கும் காரணம் மூளையின் சுரப்பிகள்தான். ஆக, போதை மீட்பு சிகிச்சை போலவேதான் இது போன்ற டிஜிட்டல் போதைக்கும் படிப்படியான சிகிச்சைகள் தேவைப்படும்.

என்னென்ன அடிமைத்தனம் இருக்கிறது?

இணையத்திலேயே எப்போது பார்த்தாலும் மேய்ந்துகொண்டிருப்பது, ‘வீடியோ கேம்’களிலேயே மூழ்கிக் கிடப்பது, ரம்மி முதலான ஆன்லைன் சூதாட்டங்களில் ஏகப்பட்ட தொகையை ரகசியமாய் இழந்து ஓட்டாண்டியாகிக் கொண்டிருப்பது, எப்போது பார்த்தாலும் நீலப்படங்களையே பார்த்து அளவுக்கதிகமான காமவெறி மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருப்பது, இணையச் செயலிகள் மூலம் இணையைத் தேடுவதிலும் அது தொடர்பான சிக்கல்களிலுமே கணிசமான நேரத்தைத் தொலைப்பது எனப் பல வகைகளிலும் இணையம் தொடர்பான அடிமைத்தனங்கள் பெருகிக்கொண்டிருக்கும் ஒரு யுகத்தில்தான் வாழ்ந்து வருகிறோம் நாம்.

ஏன் அடிமையாகிறோம்?

மதுவுக்கு அடிமையானவர்களைத் தீர விசாரிக்கும்போது, “கொஞ்ச நேரமாவது இந்த லௌகீகப் பிரச்சினைகளிலிருந்து என்னை மறந்து இருக்கத்தான் குடிக்கிறேன்” என்பார்கள். பெருமூளைக்கும் சிறு மூளைக்குமான கட்டுப்பாடு கொஞ்சம் தளரும்போது மனம் லேசாகிறது. எல்லாம் ஈஸியாகவும் பயம் குறைந்தது போலவும் இருக்கிறது போதையில் இருக்கும்போது.

மனப்பதற்றம் நீங்க, மனபயம் நீங்க, மனக்கவலை தீர, காதலியை மறக்க, கவிதைபிறக்க, குடி எல்லாம் முடிந்து முழு அடிமை ஆனபின் ‘இப்போ கை நடுக்கம் நிக்கணும், தூக்கம் கொஞ்சமாவது வரணும், அதுக்காகக் குடிக்கணும்’ என்ற நிலையில் வந்து நிற்பார் குடி நோயாளி. இதுபோல டிஜிட்டல் போதையும் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கிளர்ச்சியைத் தந்து அடிமைப்படுத்திவிடுகிறது.

“ஃபேஸ்புக் போட்டோவுக்கு விழும் ஒவ்வொரு லைக்கும் ஒரு ‘லார்ஜ்’ விஸ்கி கொடுக்கும் போதை மாதிரி இருக்கு” என்றார் ஒரு கல்லூரி மாணவர். ஒவ்வொரு லைக்குக்கும் டோபமைன் என்ற சந்தோஷ ஹார்மோன் எட்டிப் பார்க்கிறது. யாரேனும் நமக்கு லைக் போடவில்லையென்றால் பதறித் தவிக்கிறது மனம். ஒருவித ஊக்கமளிப்பு போன்றதுதான் இதுவும். “பரீட்சையில் முதல் மார்க் வாங்கு, பைக் வாங்கித் தருகிறேன்” என்று அப்பா சொன்னால் என்ன செய்கிறோம்? படாத பாடுபட்டுப் படித்து பாஸ் பண்ணி பைக்கை வாங்கியே தீர்கிறோம். அது ஒரு உளவியல் நிகழ்வே. அது போலத்தான் சமூக வலைதள போதையும். அங்கே பைக்… இங்கே லைக். அவ்வளவே.

நூறு லைக்குகளில் பத்துக் குறைந்தாலும்கூட பெரிய அகழ்வாராய்ச்சியே நடத்துகிறோம். இம்முறை யார் லைக் செய்யவில்லை, ஏன் செய்யவில்லை என்றெல்லாம் ஆராய்ந்து, வெற்றி பெறாத திரைப்படம் இரண்டாம் நாளில் திரையரங்கை விட்டுத் தூக்கப்படுவதைப் போல, பதிவிட்ட இரண்டு மணி நேரத்திலேயே அந்த போஸ்ட்டைத் தூக்கி விடுகிறோம்.

நமக்கான சமூக அங்கீகாரமாக இந்தச் சமூக ஊடகங்கள் நம் மனமென்னும் வீட்டை அழையா விருந்தாளியாக ஆக்கிரமிக்கத் தொடங்கி சில  ஆண்டுகள் ஆகின்றன. நம் நேரத்தைக் குறைத்து வேலையை எளிதாக்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் நம் முழு நேரத்தையும் விழுங்குவதோடு வேலையே இணையத்தில் மேய்வதுதான் என்ற அளவில் இன்று திசைமாறிப் பயணிக்கிறோம்.

கணவன் வேலைக்குப் போய்விட, குழந்தை பள்ளிக்குப் போய்விட, தனித்திருக்கும் குடும்பத் தலைவி வாட்ஸ்-அப் இயந்திரத்துக்கும் ‘டிக்டாக்’ செயலிக்கும் பலியாகிறாள் “கண்ட கண்டவனோடு பேசி, போட்டோவெல்லாம் அனுப்பிப் பிரச்சினையாயிடிச்சி சார்” என்று அழைத்து வருகிறார் ஒரு கிராமத்துக்கணவர். ஃபேஸ்புக்கும் வாட்ஸ்-அப்பும் அந்த அப்பாவிப் பெண்ணின் முழுநேர வேலையாகிவிட ‘விளையாண்டு’ பார்த்திருக்கிறார்கள் ‘இணையத் தீவிரவாதிகள்’. தனிமையைப் போக்கிக்கொள்ள சாதாரணமாகப் பயன்படுத்தத் தொடங்கிய ஸ்மார்ட்போன் அவரது குடும்ப வாழ்க்கையையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. மெத்தப் படித்தவராயினும் சரி, குக்கிராமத்தில் குடும்பத் தலைவியாக இருப்பவராயினும் சரி. அடிமைத்தனம் என்று வந்துவிட்டால் எந்த வித்தியாசமும் அவர்களுக்குள் இருப்பதில்லை.

மது முதலான பழக்கங்களின் மீட்பு சிகிச்சையின் போது இப்படிச் சொல்வோம்: “படித்தவர், படிக்காதவர், சமூகத்தில் முக்கியப் பதவியில் இருப்பவர், வேலையே இல்லாதவர், கல்யாணமானவர், ஆகாதவர், மேல்தட்டு வர்க்கம்… இப்படி எந்த வித்தியாசமும் சாராயத்துக்குத் தெரியாது. அதற்குண்டான மூளை சமாசாரங்கள் இயங்க ஆரம்பித்தால் நானும் அடிமைதான், நீயும் அடிமைதான்” என்று சொல்வோம். அதற்குச் சற்றும் குறைவில்லாததுதான் இந்த டிஜிட்டல் போதையும்.

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in