மண்.. மனம்.. மனிதர்கள்! - 5

மண்.. மனம்.. மனிதர்கள்! - 5

ஜூ லைக் காற்றும் கடல் காற்றும் கலந்தடித்தடித்துக்கொண்டிருந்த திருவல்லிக்கேணி வானத்தில்... திடுக்கென ‘காலியான’ அந்த ‘பட்டா பட்டா’ பாணா காத்தாடி திசையற்று அலைந்து கொண்டிருந்தது.

அதனை உயிரோடு பிடித்துவிட வேண்டுமே என்று ஒரு கும்பலாகச் சேர்ந்து தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தோம்.

மெல்ல மெல்லக் கீழிறங்கிய அந்தப் பொல்லாத பட்டா பட்டா... வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவுக்குப் பின்புறம் ஒடுங்கி நெளிந்து ஓடியிருக்கும் சிவராஜபுரத்தில் ஏதோவொரு மாடிமேல் சரேலென்று சரிந்து மறைந்தது.

எந்த பில்டிங்காக இருந்தால் என்ன... நமக்குக் காத்தாடிதானே முக்கியம் !

விறுவிறுவென்று ஏறிப் போனவர்கள் எல்லோரும் போன வேகத்தில் அலறி அடித்துக் கொண்டு இறங்கி வர... நான் மட்டும் ஏதோ ஒரு தைரியத்தில் தனியாக ஏறிப் போனேன்.

செவ்வகமாக நீண்டு பரந்த அந்த மொட்டை மாடியில் கரடுமுரடாக பத்துப் பதினைந்து பேர் வியர்வை சொட்டச் சொட்ட ‘பாக்ஸிங்’ ப்ராக்டீஸ் செய்துகொண்டிருந்தார்கள்.

அங்கு வைத்துதான் ராதா என்னும் அந்த மனிதனை முதன் முறையாகச் சந்தித்தேன்.

கழுத்தில் தடிமனாக நாலைந்து தங்க செயின்கள் தொங்க...

“வா ராதா வா... அட்றா நாயுடே...அட்றா பாக்கலாம்...” என்றபடி நட்ட நடுவே எகிறிக் கொண்டிருந்தான் திருவல்லிக்கேணியின் முதல் நவீன ரெளடியான ‘கோல்டு அன்பு’.

கோல்டு அன்புவுக்கு செம டஃப் கொடுத்துக் கொண்டிருந்தார் ராதா.

அந்த நாளில், கோல்டு அன்பு என்றால் திருவல்லிக்கேணியே அலறும்.

தென் மாவட்டத்தில் இருந்து நீண்டு வளைந்திருக்கும் கொம்புடைய சண்டை ஆட்டை வாங்கி போஷாக்காக வளர்த்து அதன் கால்களுக்கு தங்க கொலுசு அணிவித்து கழுத்தில் கனமான சங்கிலியோடு அதைப் பற்றியபடி மெரினா பீச்சில் நடை பழகுவது கோல்டுவுக்குப் பழக்கம். அவனுக்கு இடம் வலமாக பத்துப் பன்னிரண்டு அடிப்பொடிகள் சீன் போட்டபடி வருவார்கள்.

நம்மாழ்வார் பங்களாவுக்குப் பக்கத்தில் இருந்த போலீஸ் கோட்ரஸ்ஸில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டும். அங்கு நவராக்ஸ் கச்சேரி மேடையில் ஏறி “சின்ன மாமியே... உன் சின்ன மகளெங்கே...” பாடிக் கலக்கும் அளவுக்கு அன்று அவனுக்கு செல்வாக்கு.

அப்பேற்பட்ட கோல்டு அன்புவுக்கு சரிக்கு சரி எகிறி அடித்துக்கொண்டிருந்த கரடுமுரடான அந்த ராதா நாயுடுவின் மேல் எல்லோருக்கும் அச்சம் இருந்தது.

கோல்டு மட்டுமல்ல, அதன் பிறகு வரிசை கட்டிய அத்தனை ரவுடிகளுக்கும் ராதா என்றால் ஒரு பயம் கலந்த மரியாதை.

எனது இளம்பிராயத்தில் எனக்குள்ளும் ராதா என்னும் அந்தக் கரடு முரடான கேரக்டரின் மேல் அச்சம் இருந்தது. போகப் போகத் தணிந்தது.

ஒரு கட்டத்தில் எல்லோரும் அவரை “ராதா சாமி” என்று அழைக்க ஆரம்பித்தோம். காரணம், படிப்படியாக ஏறி நின்ற அந்த மனிதரின் குணப் பரிமாணம்.

மிக மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து கார்ப்பரேஷன் பள்ளியில் படித்து வளர்ந்தவர் ராதா. அவரது தாய் எம்ஜிஆரின் பரம ரசிகை.

தன் வளர் பிராயம் முழுதும் ஓயாமல் கேட்டுக் கேட்டு வளர்ந்த காரணம் தொட்டு எம்ஜிஆர் ரசிகராகவே ஆகிப் பின் வெறியராகிப் போனார்.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த சமயம், அவரது தொண்டர்களை நோக்கி கூலிப்படைகள் ஏவப்பட்டன. அந்த நேரத்தில், தன் தொண்டர்களுக்கு சத்யா ஸ்டுடியோவில் எம்ஜிஆர் பர்சனல் குஸ்தி பயிற்சி கொடுத்தாராம். அதில் பங்கேற்ற ஒரே திருவல்லிக்கேணிவாசி ராதாதான் என்பார்கள்.

ராதா சாராயம் குடிப்பார்.

சிவராஜபுர கோல்டு அன்புவின் குடிசைக் கடை யில் (சர்பத் கிளாஸின் மேல் கோடு வரைக்கும் ஊற்றித்தரும்) ‘கோடு ரெண்டு ரூபா’ சாராயம் அடிப்பார். ராதா கேட்கக் கேட்கக் கொடுத்து கொண்டே இருப்பார்கள்; காசு வாங்க மாட்டார்கள்.

கூட குடித்தவர்களெல்லாம் மட்டையான பின் மெல்ல எழுந்து கொள்ளும் ராதா, இன்னும் ஒரு டோஸ் உள்ளே தள்ளிக்கொண்டு மெல்ல ஆடியபடி கிருஷ்ணாம்பேட்டைக்குள் நுழைவார்.

எதிரே வருபவர்கள் மெல்ல ஒதுங்கினாலும் விட மாட்டார்.

“ஏண்டா டேய்... வணக்கம் வைக்க மாட்டியா, சரி நான் மொதல்ல உனுக்கு சல்யூட் உடுறேன். பதில் செய்டா....” என்று வம்பிழுக்க ஆரம்பிப்பார்.

ஆறு மணி ஆனால், “ஐயோ ராதா வருவாண்டா...” என்று ஓடுவார்கள் ஏரியாவாசிகள்.

ராதா அருமையாக வரைவார்.

தேர்தல் காலத்தில், இருசப்ப கிராமணி தெருவுக்கு முதுகு காட்டிக்கொண்டிருக்கும் என்கேடி பள்ளியின் சுற்றுச் சுவரில் சின்னத்தையும் எம்ஜிஆர் படத்தையும் அவரை விட்டுத்தான் வரையச் சொல்லுவார்கள்.

பலவித கலர்களும் கரிக்கட்டைகளும் கொண்டு இரவு முழுவதும் லாந்தர் லைட் வெளிச்சத்தில் வரைவார்.

கல்யாண வயது நெருங்கியபோது பிடிசி டிரைவர் ஆனார். மந்தவெளி டெப்போ என்று ஞாபகம்.

கரடுமுரடான அந்த ராதா திடீரென மாறினார்.

சாராயத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கினார். பட்டையாக விபூதி பூசிய நெற்றியோடு வலம் வரத் துவங்கினார். யாரேனும் வம்பிழுத்தால் கூட “அடியேன் ராதா...” எனப் புன்சிரிப்போடு நகர ஆரம்பித்தார்.

யார் நம்புவீர்களோ இல்லையோ இந்தக் கட்டுரை நம்பும்படிக்கு ஓர் சுபநாளில் எட்டாம்படை திருமுருகன் கோயிலின் பிரதான குருக்களாகப் பரிணாமம் கண்டார்.

எட்டாம் படை !

குன்று தோறும் ஆடும் குமரனுக்கு அறுபடை வீடு உண்டு. ஏழாம் படையாக மருதமலையைக் கொண்டாடுவார்கள்.

அதன் பின் ‘எட்டாம் படை’ யாகக் கொண்டாடப்பட்ட திருத்தலம் திருவல்லிக்கேணி திருமுருகன் கோயில்தான்.

இருசப்ப கிராமணி தெருவில் அமைந்திருந்த அந்த திருமுருகன் கோயில் என் பால்ய காலத்தோடு பின்னிப் பிணைந்தது. என் தாயாருக்குப் பிடித்த கோயில் அது. காரணம், பழனி முருகன் எப்படி மேற்கு பார்த்து நின்றிருக்கிறாரோ அப்படியே நின்றருள் செய்தவர் அல்லிக்கேணி முருகன்.

பழனி முருகனுக்கு செய்யும் அத்தனை அபிஷேகங்களும் இங்கும் நடக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட எங்கள் தாயார், அடிக்கடி எங்களை அந்த முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்.

பூஜை நடக்கும்போதெல்லாம் மூலையில் இருக்கும் காண்டா மணியை ஓங்கி ஓங்கி அடிக்கச் சொல்வார் எங்கள் அம்மா.

கனமாகத் தொங்கும் கயிறை எகிறி இழுத்துத் தொங்கியபடி ஓங்கி ஓங்கி அடித்த சுகத்தை இன்னமும் என் தோள்கள் சுகித்துக் கொண்டிருக்கின்றன.

சன்னிதிக்குப் பின்னால் சிறு கூடம் ஒன்று அமைந்திருந்தது. ஆங்கே, ஓர் மயில் இருந்தது.

“குகா...குகா...” என்று அன்று அது கத்திய ஒலித் தூவலின் சந்தம்தான் பின்னொரு நாளில் டிஎம்எஸ், ஜானகி அம்மா , எஸ்பிபி உள்ளிட்ட பலரது குரலுக்கு என்னால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான ஆன்மிகப் பாடல்களுக்கு அடிநாதம் .

பேரருள் கொஞ்சும் அந்த முருகன் கோயிலில் குருக்களாக மாறிய ராதாசாமியைப் பார்த்துப் பலர் கிண்டல் செய்தார்கள்.

அவரது அடாவடியான முன் வாழ்க்கையை அறிந்த நண்பர்கள் கேலி செய்தார்கள். “முருகா, முருகா...” எனப் பொறுத்துக்கொண்டார்.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் ராசி, நட்சத்திரம், கோத்திரம் கேட்டு அதனை மூலவரிடம் சென்று பணிந்து மடைமாற்றிக் கொடுக்கும் அளவுக்கு மந்திர உச்சாடனங்களைக் கற்றுத் தேர்ந்தார் ராதாசாமி .

கோயிலுக்கென்று ஒரு குருக்கள் இருந்தாலும், நியமத்தோடு வரும் பக்தர்கள் “எங்கே ராதாசாமி... அவர் வந்து அர்ச்சனை பண்ணட்டுமே..!” என விரும்பி நிற்பார்கள் .

எட்டாம் படை எனுமளவுக்கு அந்த முருகன் கோயில் பிரசித்திப் பெற்றது என்றால் அதற்குக் காரணம் ராதாசாமிதான்.

மொத்த திருவல்லிக்கேணியும் ஸ்தம்பிக்கும்படி 1000 பால் குடங்களோடு மங்கலப் பெண்கள் பவனிவர, பத்து நாள் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்திக்கொண்டிருந்தார் ராதாசாமி.

இரவு நடை சாத்தி கோயில் மூடப்படும்போது ‘டாண்’ என அங்கே பசு ஒன்றுவந்து நிற்கும். வெளியே வரும் சாமியார் தயாராக வைத்திருக்கும் ஒரு டஜன் வாழைப்பழங்களை “வாங்க வள்ளீம்மா...” என்றழைத்தபடி கொடுத்த கையோடு பசுவின் நான்கு கால்களையும் குந்தி நிமிர்ந்து அழுந்த வருடிவிடுவார்.

வள்ளிப் பசு வாழைப்பழ சுகத்தை மறந்து “ம்மா...” என மெல்லக் குரல் எழுப்பிக் காட்டும்.

“எங்கையா வாசலுக்கு கோமியம் தெளிச்சுப் போயேண்டியம்மா...” என்பார். திரும்பி நின்று செய்து போவாள் வள்ளி.

கோயிலுக்காக, ஆன்மிக முன்னெடுப்புக்காக ஓயாது உழன்ற ராதாசாமி குடும்பத்தை மறந்தார். குடும்பத்தை மறந்தால் எழும் சிரமத்தை விழுங்கினார்.

ஓர் நாள் ஏதோ ஓர் காரணம் பற்றி எட்டாம்படை கோயில் இடிக்கப்பட்டது. ராதாசாமியும் இடிந்து போனார்.

ஆம், இன்று அந்தக் கோயில் அங்கு இல்லை. புனரமைப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருப்பது ஆகாது என்பார்கள். மனமுடைந்த ராதாசாமி, ஊரைவிட்டே ஒதுங்கி வேறெங்கோ குடி போய்விட்டார் .

மேற்கு நோக்கி அருளிக்கொண்டிருந்த முருகப் பெருமானை முடக்கி வைப்பது ஆகுமா ?

எட்டாம் படை மீண்டும் எழுமா ?

ராதாசாமியின் வெள்ளந்தியான மந்திரக் குரல் அங்கே ஒலிக்குமா ?

வந்து வந்து ஏமாந்து திரும்பும் வள்ளிப் பசுவின் இளைத்த கால்களுக்கு ஒத்தடம் கொடுக்கப்படுமா ?

“நோக்க நோக்க நொடியினில் நோக்க...

தாக்க தாக்க தடையறத் தாக்க...”

என்கிறது கந்த சஷ்டி கவசம்.

சகலம் முருகார்ப்பணம் !

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in