காதல் ஸ்கொயர் - 04

காதல் ஸ்கொயர் - 04

அந்தக் குறும்படம் ஓடி முடிந்தவுடன், ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஹைக்ரோ நிறுவனத்தின் பணிக் கலாச்சாரம், கடந்த நிதியாண்டு வர்த்தகம் என்றெல்லாம் முகுல் பேசுபேசு என்று பேசிக்கொண்டிருந்தார். கௌதம் சில வினாடிகள் கண் அசந்து நிமிர்ந்தபோது முகுல், “குரூப் ஆக்டிவிட்டியில் யாராவது கலந்துகொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.

‘குரூப் ஆக்டிவிட்டி’ என்பது, பெரிய கல்லூரிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் புதிதாகச் சேர்பவர்கள், ஒருவரையொருவர் அறிந்துகொண்டு பழகுவதற்காக, அவர்களுக்கான சிறு விளையாட்டுகள், ஸ்கிட்கள் போன்றவற்றை நிகழ்த்தி அதில் அனைவரையும் பங்கேற்கச் சொல்லும் நிகழ்வு ஆகும். கல்லூரியில் கௌதம் நிறைய செய்திருக்கிறான். எனவே, கையை உயர்த்தினான்.

“குட்... உங்க பேரு?”

“கௌதம்குமார்.”

“என்ன பண்ணப்போறீங்க? ‘ஆட்ஸ் அப்’ பண்றீங்களா?” என்றார் ஆங்கிலத்தில். ‘ஆட்ஸ் அப்’ என்பது டிவியில் வரும் விளம்பரங்கள் போல், ஏதேனும் ஒரு பொருள் குறித்த விளம்பரத்தை ஒரு புதிய கான்செப்ட்டில் மேடையில் நடித்துக்காட்டுவது.

“ஓகே முகுல்.”

“ம்...” என்று சில வினாடிகள் யோசித்தவர், “சர்ஃப் விளம்பரம் பாத்துருக்கீங்கள்ல. கறை நல்லதுன்னு. அதை புது கான்செப்ட்ல பண்ணிக் காமிங்க. இதுக்கு எத்தனை பேரு உங்களுக்குத் தேவைப்படும்?” என்று கேட்க... சில வினாடிகள் யோசித்த கௌதம், “ஒரு பொண்ணு மட்டும் போதும்” என்றான். “யாரு வர்றா?” என்று அவர் பெண்களை நோக்கிக் கையை நீட்ட... யாரும் கையை உயர்த்தவில்லை. இதில் அதிருப்தியான முகுல், “அப்பன்னா கௌதம்… நீயே ஒரு பொண்ண செலக்ட் பண்ணு” என்றார். கௌதம் நந்தினியை நோக்கிக் கை காட்டினான். உடனே முகம் வெளுத்துப்போன நந்தினி, “ஸாரி… எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல”என்றாள்.

“இங்க பழக்கப்படுத்திக்க. கம் ஆன்…” என்று முகுல் கண்டிப்பான குரலில் கூற, நந்தினி வேறு வழியின்றி தயக்கத்துடன் கௌதமின் அருகில் வந்தாள். முகுல், “உங்களுக்குப் பத்து நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள  டிஸ்கஸ் பண்ணி என்ன கான்செப்ட்னு முடிவு பண்ணுங்க” என்றார்.

நந்தினி எங்கு அமர்வது என்று கௌதமின் அருகில் இடம் தேடினாள். கௌதம் பக்கத்தில் அமர்ந்திருந்த அருணைப் பார்த்தான். அவன் முறைத்துக்கொண்டே எழுந்தான். கௌதமின் அருகில் நந்தினி அமர்ந்தபோது பெர்ஃப்யூம் வாசனை. அவள் தன் நெற்றிக் கூந்தலை ஒதுக்கிவிட்டுக் கொண்டபோது ஷாம்பு வாசனை.வாய் திறந்தபோது சாக்லேட் வாசனை.

கௌதம் சில வினாடிகள் தீவிரமாக யோசித்து விட்டு, “ஒரு அபார்ட்மென்ட். ஒரு பொண்ணு பால்கனில நின்னு பர்கர்ல சாஸ் ஊத்தி சாப்பிட்டுக்கிட்டிருக்கா. அப்ப பால்கனிக்குக் கீழ ரோட்டுல போற ஒரு பையன் மேல சாஸ் பாக்கெட் விழுந்து அவன் சர்ட்  கறையாயிடுது. அவன் சத்தம் போடுறான். அவ ‘ஸாரி’ சொல்லி அவன் சர்ட்ட வாங்கி  உடனே ஸர்ஃப் போட்டுத் துவைச்சு தர்றா. இன்னொருநாள் அவன் பால்கனில நின்னு டீ குடிச்சுட்டிருக்கான். அப்ப டீ சிந்தி பால்கனிக்குக் கீழ வர்ற அந்தப் பொண்ணு மேல விழுது. அவ துப்பட்டா கறையாயிடுது. அவ சத்தம் போடுறா. அவன், அவள் துப்பட்டாவை ஸர்ஃப் போட்டுத் துவைச்சுத் தர்றான். அப்ப ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ரசிக்கிறாங்க. அவன், அவள இழுத்து அணைச்சுக்கிறான். கறை நல்லதுன்னு முடிக்கிறோம். இஸ் இட் ஓகே?” என்ற கௌதமை நந்தினி மரியாதையுடன் பார்த்தாள்.

“நல்லாருக்கு… ஆனா இந்த… கட்டிப்பிடிக்

கிறது மட்டும் வேண்டாமே. எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல” என்றாள்.

“நான் மட்டும் தினம் ஆயிரம் பொண்ணுங்கள கட்டிப்பிடிக்கிறனா?”

“அதுக்கில்ல… எனக்குக் கூச்சமா இருக்கு. வேணும்ன்னா கடைசில லைட்டா விரலும் விரலும் மட்டும் கோத்துக்கலாம்.”

“விரல்?”

“ஆமாம்… சுண்டுவிரல்.”

“சுண்டுவிரல்?” என்று பெருமூச்சுவிட்ட கௌதம், தன் ஸ்வெட்டரைக் கழட்டப்போக… நந்தினி பதற்றத்துடன், “இப்ப எதுக்கு இதைக் கழட்டுறீங்க?”என்றாள்.

“துவைக்கிறதுக்குத் துணி வேணாமா?” என்ற கௌதம் மேடையை நோக்கி நடந்தான். அவர்கள் மேடையில் நடித்துக் காண்பித்து, இறுதியில் கௌதம் அவள் சுண்டுவிரலைக் கோத்துக்கொண்டபோது பதற்றத்துடன் மேலுதடு வியர்த்த நந்தினியை கௌதம் ரசித்தான். ‘கறை நல்லது...” என்று கௌதம் முடிக்க… அனைவரும் கைதட்டினார்கள்.

செஷன் முடிந்தவுடன் வெளியே வந்த நந்தினி, “பரவால்ல… அஞ்சு நிமிஷத்துக்குள்ளேயே ஒரு கான்செப்ட்ட ரெடி பண்ணிட்டீங்க. உங்களால எனக்கும் கொஞ்சம் கான்ஃபிடென்ஸ் வந்துடுச்சு.”

“குட்… கீப் இட் அப்” என்ற கௌதமை நந்தினி மீண்டும் மரியாதையுடன் பார்த்தாள்.

மறுநாள் கௌதம் பார்க்கில் படுத்துக்கொண்டு சேத்தன் பகத்தின், ‘The Girl in Room 105’ நாவலைப் படித்துக்கொண்

டிருந்தான். அப்போது “ஹலோ...” என்று  குரல் கேட்க... நிமிர்ந்

தான். நந்தினி. அந்தப் பனிப்புகைக்கு நடுவே நந்தினி ஃப்ரிட்ஜி

லிருந்து சற்று முன் எடுத்த பூபோல் பளிச்சென்று நின்று

கொண்டிருந்தாள். தலைக்குக் குளித்துவிட்டுத் தேங்காய் எண்ணெய் தடவாமல் உலர்ந்த தலைமுடியுடன் ஸ்வெட்டர் போட்டிருந்தாள்.

“உங்களுக்குக் குளிரல?” என்றாள்.

“லேசா...”

“கோயிலுக்குப் போயிருந்தேன்” என்று கையை நீட்டினாள். அவள் உள்ளங்கையைக் குவித்துக் காட்டிய அழகுக்கே உடம்பு  முழுக்கக் குங்குமம் பூசிக்கொள்ளலாம். குங்குமத்தை எடுப்பதற்காக விரல் வைத்தபோது அவள் கையின் குளிர்ச்சியை உணர்ந்தான் கௌதம்.

“நிறைய புக் படிப்பீங்களா?” என்றாள்.

“ம்... தமிழ்ல நிறைய படிச்சிருக்கேன். இங்கிலீஷ் காலேஜ் வந்ததுலருந்து படிச்சுகிட்டிருக்கேன். நீங்க புக்கு படிப்பீங்களா?” என்றான்.

“ம்ஹ்ம்... எழுதுவேன்” என்று கண்ணைச் சிமிட்டினாள்  குழந்தை போல்.

“எழுதுவீங்கன்னா... டைரியா?”

“இல்ல. ஷார்ட் ஸ்டோரிஸ்… தமிழ்ல.”

“இட்ஸ் இன்ட்ரெஸ்ட்டிங். எதுல உங்க கதை வந்திருக்கு?” என்று கௌதம் கேட்டவுடன் அவள் முகம் வாடியது.

“என்னன்னே தெரியல. நானும் எல்லாப் பத்திரிகைக்கும் எழுதி அனுப்புறேன்.ஒண்ணுத்துலயும் வர மாட்டேங்குது”

“உங்களுக்கு எப்படி எழுதுறதுல இன்ட்ரஸ்ட் வந்துச்சு?”

“நான் ரெகுலரா டைரி எழுதுவேன். ஒரு நாள் என் ஃப்ரெண்டுகிட்ட டைரிய காமிச்சேன்.”

“டைரிய ஃப்ரெண்டுகிட்ட காமிச்சீங்களா?”

“நோ ப்ராப்ளம். அவளுக்கு என் லைஃபுல நடந்தது எல்லாம் தெரியும்.”

“உங்க லைஃபுல என்ன நடந்தது?”

“ஒண்ணும் நடக்கல. காலேஜ் கட்டடிச்சுட்டு சினிமா போனது, லவ் லெட்டர் கொடுத்த பையன அவங்க வீட்டுல மாட்டிவிட்டது... இதுதான். அதெல்லாம் படிச்சுட்டு நீ தமிழ் நல்லா எழுதுற. நீ ஏன் கதை எழுதக் கூடாதுன்னு கேட்டா.அதுலயிருந்து எழுத ஆரம்பிச்சுட்டேன்.”

“குட். மாத நாவல்கள்ல பெண் எழுத்தாளர் களுக்கு நல்ல வரவேற்பிருக்கு. மாமியார்ங்கள பயங்கர வில்லிகளா காமிச்சு கதை எழுதினா லேடீஸ் நடுவுல சீக்கிரமா பாப்புலராயிடுவீங்க.”

“ஆனா, என் கதையை யாரும் போட மாட்டேங்கிறாங்களே...”

“நீங்க உங்க கதைகளைக் கொடுங்க. நான் படிச்சுப் பாக்குறேன்” என்றவுடன் அவள் முகம் உற்சாகத்தில் மலர்ந்தது. “இதோ... அஞ்சே நிமிஷத்துல எடுத்துட்டு வந்துடுறேன்” என்று நந்தினி குடுகுடுவென்று சிறு குழந்தை போல் ஓடினாள். இந்த எழுத்தாளர்களே இப்படித்தான். அவர்களிடம் ‘தங்கள் எழுத்தைப் படித்தேன்’என்று இல்லை. படிக்கப்போவதாகச் சொன்னால்கூட சந்தோஷமாகிவிடுவார்கள்.சில நிமிடங்களில் கையில் ஒரு பேகோடு அவள் வர, “ஏன், பேக்லருந்து தனியா எடுத்துட்டு வர வேண்டியதுதானே? இவ்ளோ பெரிய பேக தூக்கிகிட்டு...” என்றான் கெளதம்.

“இந்த பேக் ஃபுல்லா நான் எழுதிய கதைங்க தான்” என்று நந்தினி கூறியவுடன் அதிர்ச்சியில் கௌதமின் கையிலிருந்து சேத்தன் பகத் கீழே விழுந்தார்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in