மகா பெரியவா
மகா பெரியவாமகா பெரியவா - ஓவியம்: A.P.ஸ்ரீதர்

மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 04

பி. சுவாமிநாதன்

‘‘அவன் பண்ணின காரியத்தைச் சொல்றேன், கேளு...’’ என்று தன் எதிரில் பவ்யமாக நின்றுகொண்டிருந்த சிப்பந்தியைப் பார்த்து மகா பெரியவா பேச ஆரம்பித்தார். பேசத் துவங்குவதற்கு முன் ஒரு சின்னக் கனைப்பு.

பெரியவாளின் பேச்சு சற்றே உஷ்ணத்துடன் ஆரம்பமானது. வெளியே காத்துக்கொண்டிருக்கிற ஜமீன்தாருக்காக (பெரியவா ‘அவன்’ என்று குறிப்பிட்டது ஜமீன்தாரைத்தான்) அதுவரை பரிந்து பேசி காஞ்சி மகானிடம் சிபாரிசு செய்வதற்காக உள்ளே வந்த சிப்பந்தி கொஞ்சம் கூசித்தான் போனார்.

ஜமீன்தாரை நல்லவர் என்று நம்பி, அவரது உள்ளக் குமுறலைப்போய் மகா பெரியவாளிடம் சொல்ல வந்து விட்டோமே என்று நினைத்துதான் சிப்பந்தி கூசினார். மகானின் கோபம் கண்டு அவருக்குள் தவிப்பும், வெட்கமும் போட்டி போட்டன.

‘சிப்பந்தி என்ன பண்ணுவான்? அவனிடம் யாரேனும் முறையிட்டால் அதை உள்ளே கொண்டுவந்து தன்னிடம் கொட்டத்தான் செய்வான்’ என்பதை பெரியவா நன்றாக அறிவார். இருந்தாலும், ‘யார் சிபாரிசு செய்தாலும் அப்படியே உள்ளே கொண்டு வந்து கொட்டிவிடாதே... நீ கொண்டு வரும் விவகாரங்களில் இது போன்ற சங்கடங்களும் இருக்கும். ஜாக்கிரதையாக இருக்கணும்’ என்று சிப்பந்தி உணர்ந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் வகையில் மகா பெரியவா, அந்த ஜமீன்தாரைப் பற்றி விரிவாகப் பேசினார்.

‘‘அவன் பண்ணின காரியத்தைக் கேளு... வீடு தேடி வந்த மருமகளை மகளாக நினைக்கணும். அதாவது, ஒருவன் தன்னோட பொண்ணையும் மாட்டுப்பொண்ணையும் (மருமகள்) சமமா பாவிக்கணும். இவா ரெண்டு பேர்ல‘ஒண்ணு ஒஸ்தி... இன்னொண்ணு மட்டம்’னு பேதம் பார்க்கக் கூடாது. இவா ரெண்டு பேரையுமே ரெண்டு கண்களா பாவிக்கணும்.

அதுவும் இவன் என்ன பண்ணி இருக்கான்..? வீடு தேடி வந்த மருமகளை,அவளோட துணிமணிகளை எல்லாம் மூட்டை கட்டிக் கொடுத்து, வீட்டை விட்டுத் துரத்தி விட்டுருக் கான். வீட்டுக்கு வந்த மருமகளை ‘விளக்கேத்த வந்த மகாலட்சுமி’ன்னு சொல்லுவா. அப்பேர்ப்பட்ட மகாலட்சுமியை வீட்டை விட்டு விரட்டிட்டான்.

இவனோட சம்பந்தி ... பாவம், ஏழை பிராமணன். தன்னோட பொண்ணுக்கு ஒரு நல்ல சம்பந்தம் கிடைச்சிருக்கேங்கிற ஆசையில எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டான். ஆனா லும், பொண்ணோட அப்பா கல்யாணத்துக்கு முன்னாடி ஒப்புத்துண்டபடி தங்க நகை போட முடியலை... விஷயத்தை அப்படியே கல்யாணப் பையனோட அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் சொன்னா கல்யாணம் நின்னு போயிடுமேனு பயந்தான்.

சத்தம் போடாம கன ஜோரா ஒரே ஒரு பொய்யை மட்டும் அவிழ்த்துவிட்டான். அவன் ஏன் பொய் சொன்னான்..? இந்த ஜமீன்தார் குடும்பம் எங்களுக்கு இத்தனை பவுன் போடணும்னு கண்டிஷனா சொல்லிட்டா.

பொண்ணைப் பெத்தவன் பாத்தான்... பணத்தைப் புரட்டி நகைகளை உடனே போட வும் முடியலை... அதே சமயம் தன்னோட பொண்ணு கழுத்துல தாலியும் ஏறிடணும்.

என்ன பண்ணான் தெரியுமா, பொண்ணைப் பெத்தவன்... புத்தம் புதுசா பாலிஷ் போட்ட ‘கவரிங்’ நகைகளைப் பொண்ணோட கழுத்துலயும் கையிலயும் போட்டு விட்டுட்டான். நாம எதிர்பார்க்கிற பணம் கைக்கு வந்ததும், அசலை வாங்கி ரெண்டாம் மனுஷாளுக்குத் தெரியாம கொடுத்துட்டு, ‘கவரிங்’ நகைகளைப் பொண்ணுகிட்டே யிருந்து திரும்பி வாங்கிடலாம்னு நினைச்சிருக்கான்.

ஆனா, அதுக்குள்ள இவனுக்கு (ஜமீன்தாருக்கு) ஏதோ அவசரம்... மாட்டுப்பொண் போட்டிருந்த நகைகளை அவகிட்ட கேட்டு வாங்கி இருக்கான். கொண்டு போய் உள்ளூர் அடகுக் கடைல கொடுத்திருக்கான். அங்கே இதை உரசிப் பார்த்துட்டு அத்தனையும் டூப்ளிகேட்னு கடைக்காரன் மூஞ்சில அடிச்ச மாதிரி போட்டு உடைச்சிட்டான்.  ஜமீன்தார் ஆச்சே... மானமும் ரோஷமும் பொத்துண்டு வந்துடுத்து.

வீட்டுக்கு வாழவந்த மருமகளோட நகைகளைக் கேட்டு வாங்கறதுக்கு இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு? இவன்தான் ஜமீன்தார் ஆச்சே... கல்யாணத்தின்போது அந்த மகாலட்சுமிக்கு இவன் அல்லவா நகைகள் பண்ணிப் போட்டுருக்கணும்... அதை விட்டுட்டு, அவ கழுத்துலயும் கையிலயும் போட்டுண்டு இருக்கறதை வாங்கி அடகுக் கடைல கொண்டு போய் வைக்க இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு?’’ என்று மிக நீளமாக மகா பெரியவா உஷ்ணத்தோடு பேசியதைக் கேட்ட சிப்பந்தி வெலவெலத்துப் போய் நின்றார்.

‘‘இப்படிப்பட்டவனுக்கு என்னை ஆசிர்வாதம் பண்ணச் சொல்றியா... அவன் செஞ்ச காரியம் தவறுன்னு உணர வேண்டாமா?’’ என்று உஷ்ணத்தில் இருந்து கொஞ்சமும் குறையாதவராகப் பேசினார் பெரியவா.

மகானைப் பார்த்துக் கன்னங்களில் மாறி மாறி அறைந்துகொண்ட சிப்பந்தி,முக்காலமும் உணர்ந்த எல்லாம் வல்ல அந்த சர்வேஸ்வரனுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். அப்படியே திரும்பி வெளியே வந்தார்.

தவறே செய்யாததுபோல் சாதுவாக அமர்ந்திருக்கும் ஜமீன்தாரைப் பார்த்தார். அவர் மேல் இப்போது பரிதாபம் வரவில்லை சிப்பந்திக்கு. அருகே போனார். பெரியவா புட்டுப் புட்டு வைத்த அத்தனை விஷயங்களையும் மூச்சு விடாமல் கோபமான வார்த்தைகளில் சொல்லி முடித்தார்.

அவ்வளவுதான்... நெருப்பை  மிதித்தவர் போல் ஆனார் ஜமீன்தார். ஊரில் தான் செய்த விஷயம்

மகா பெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறதே என்று அதிர்ந்தவர், சிப்பந்தியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.

கண் கலங்க ஆரம்பித்தார். துக்கம் பீறிட கேவிக் கேவி அழவும் செய்தார். ‘‘நான் தப்பு செஞ்சிட்டேன்... ஆத்திர அவசரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை விரட்டி விட்டுருக்கேன். இப்ப எல்லாத்தையும் உணர்ந்துட்டேன். பெரியவா என்னைப் பார்த்து ‘மன்னிச்சேன்’னு ஒரு வார்த்தை சொன்னா போதும்...’’ என்று கண்ணீருடன் கலங்கி நிற்கின்றபோது, அந்த நடமாடும் தெய்வம் தண்டம் சுமந்து வெளியே வந்தது, கலங்கி நிற்பவனைக் காப்பதற்காக!

தவறு செய்த குழந்தை, தாயின் கால்களைக் கட்டிக்கொண்டு மன்னிப்புக் கேட்பதுபோல், மகா பெரியவா வெளியே வருவதைப் பார்த்ததும், ஜமீன்தார் அவரை நோக்கி ஓடினார். மகானின் திருப்பாதங்களில் விழுந்து தேம்பித் தேம்பி அழுதார். எழுந்து நின்றார்.

இரண்டு கைகளையும் கூப்பியபடி, ‘‘என்னை மன்னிச்சிடுங்கோ பெரியவா... பண்ணக்கூடாத தப்பை நான் பண்ணி இருக்கேன். மொத வேலையா என் மருமகளை அவா கிரஹத்துக்கே போய் கையில கால்ல விழுந்து என் வீட்டுக்குக் கூட்டிண்டு வந்துடறேன் பெரியவா...’’ என்று உருகினார்.

அதுவரை கனன்று தீயைக் கக்கிய எரிமலையின் சீற்றம் தணிந்து பனி மலை ஆனது!.. ஆம்! காஞ்சி சுவாமிகள் அந்த ஜமீன்தாரை இப்போது கனிவுடன் பார்த்தார்.

‘‘பொண்களை பிரியமா, அன்பா நடத்தணும். அதுவும் வீட்டுக்கு வந்த பொண்ணை இன்னும் மரியாதையோட நடத்தணும். ஒனக்கு என்னென்னிக்கும் உட்கார்த்தி வெச்சு சாப்பாடு போடப் போடறது மருமகள்தான். கண்களைத் துடைச்சுக்கோ... ஷேமமா இரு’’ என்று சொல்லி, பிரசாதம் கொடுத்து ஜமீன்தாரை ஆசிர்வதித்து அனுப்பியது அந்தப் பரப்பிரம்மம்.

‘காபி’ தெரியுமா?

ராகம் அல்ல.

குடித்தாலே மனிதனை ராகம் போட வைக்கும் உற்சாக பானம்.

தஞ்சை மாவட்டத்தில் இது ஃபேமஸ்.

அதுவும் கும்பகோணம் டிகிரி காபி.. ஆஹா!

கும்பகோணம் காபியின் இந்த டேஸ்ட்டுக்

கும் வெற்றிக்கும் பாலும் டிகாஷன்னும் என்னென்ன விகிதத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற ‘ஃபார்முலா’தான் காரணம். அதற்குள் நாம் போக வேண்டாம்.

இந்த காபி விஷயத்துக்கு மகா பெரியவா நேர் எதிர்!

‘காபியே குடிக்கக் கூடாது... என்னுடைய

கேம்ப்பில் காபி இருக்கவே கூடாது’ என்

றெல்லாம் அவ்வப்போது மகான் உத்தரவிடுவார்.

ஆனால், பெரியவாளுக்கும் தெரியாமல் காபி எப்படியோ உள்ளே நுழைந்து விடும்.

அந்தக் கருணை தெய்வத்துக்கு காபியின் மேல் என்ன விரோதம்?

(ஆனந்தம் தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in