கண்ணான கண்ணே!- ருஜுதா திவேகர்

கண்ணான கண்ணே!- ருஜுதா திவேகர்

உங்கள் குழந்தையை மகிழ்ச்சியான குழந்தையாக வளர்க்க வேண்டும் என்றால் அவர்களுக்கு உணவின் மதிப்பை உணர்த்துங்கள். உணவின் மீதான மதிப்பு அவர்களின் உண்ணும் பழக்கத்தை செம்மைப்படுத்தும். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் ஆரோக்கியமான உடலையும் உள்ளத்தையும் கட்டமைக்கும். ஆரோக்கியமான குழந்தை தனக்கும் சமுதாயத்துக்கும் நண்பராக வளரும். மனித வாழ்வில் ஆதார சுருதியாக உணவு இருப்பதற்கான காரணமும் இதுதான்.

நுண்ணூட்டச் சத்துகளான வைட்டமின் டி, பி-12 போன்றவற்றின் குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்க எந்தப் பெற்றோருக்குத்தான் விருப்பம் இல்

லாமல் போகும். உங்கள் குழந்தைகளும் அப்படி உருவாக வேண்டுமென்றால் உள்ளூர் உணவையும், பருவகாலப் பயிர்கள், பாரம்பரிய உணவு போன்றவற்றையும் அவர்கள் மதித்து உண்ணுவதற்குப் பழக்குங்கள்.

நீங்கள் பின்பற்ற வேண்டிய மூன்று ‘S'உணவுக் குழப்பத்தைத் தீர்க்க, உண்பதில் இருக்கும் உண்மைகளை உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கடந்த அத்தியாயங்களில் முதல் இரண்டு உண்மைகளைப் பார்த்துவிட்டோம். அந்த வரிசையில், மூன்றாவது உண்மை சாப்பிடும்போது நீங்கள் பின்பற்ற வேண்டிய மூன்று  ‘S' என்னவென்பதை விளக்குகிறது. சம்மணமிட்டுச் சாப்பிடுங்கள் (Sit), டிவி, செல்ஃபோன், ஸ்விட்ச்ஆஃப் செய்யுங்கள் (Switch off), உணர்ந்து உண்ணுங்கள் (Sense). இந்த மூன்று  ‘S'-ஐயும் பின்பற்றும்போது ஊட்டச்சத்து உடலில் சேருமென்று உத்தரவாதம் அளிக்கலாம்.

முதலாவதாக, சாப்பிடும்போது நீங்கள் எந்தத் தோரணையில் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் அமரும் முறை உங்கள் வயிற்றுப் பகுதிக்கு ரத்தம் பாய்வதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் செரிமானமும் சீராக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆயுர்வேதத்தில், செரிமான கோளாறு பல்வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பருவகால நோய்கள் தாக்கவும், மலச்சிக்கல், எரிச்சல் ஆகியன ஏற்படவும் செரிமானக் கோளாறே காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது தவிர குடல்வாழ் நல்ல பாக்டீரியாக்கள் அழிதல், வலிநிறைந்த மாதவிடாய், சோர்வு ஆகியனவற்றுக்கும் செரிமான கோளாறே காரணம் என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

எனவே, செரிமானம் சீராக இருப்பதற்கு, சாப்பிடும்போது எப்படி அமர்வது என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. சாப்பிடும்போது சம்மணம் இட்டு அமர்வதே சரியாக இருக்கும். அப்படி அமரும்போது வயிற்றுப் பகுதிக்குப் போதிய அளவு ரத்தம் பாய்கிறது. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் தரையில் அமர்ந்து சாப்பிடுவதே வழக்கமாக உள்ளது. ஆனால், மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் நாம் வீட்டில் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிடக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொரிய உணவகத்தின் தனிச் சிறப்பம்சமே அந்த ஹோட்டலில் மேஜை, நாற்காலிகள் இல்லை. அனைவரும் தரையில் அமர்ந்தே சாப்பிட வேண்டும். நாம் புறக்கணித்த பழக்கவழக்கங்களின் நன்மைகளைஐரோப்பிய மக்கள் புரிந்துகொண்டு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இனி, குழந்தையைத் தரையில் அமரவைத்து உணவு பரிமாறுங்கள். அதன் பின்னால் இருக்கும் உண்மையை அவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

இரண்டாவதாக, சாப்பிடும்போது டிவி, செல்ஃபோன், ஐபேட், கணினி எதுவும் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இத்தகைய எலக்ட்ரானிக் உபகரணங்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு குழந்தைகளைச் சாப்பிடப் பழக்குங்கள். உங்கள் குழந்தைகளின் படுக்கையறையிலும் இத்தகைய உபகரணங்களை வைப்பது ஆபத்தே. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி படுக்கையறையில் கேட்ஜெட்ஸுடன் உறங்கும் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடும்போது டிவி பார்க்கும் குழந்தைகளுக்குக் குளிர் பானங்கள், காப்பி போன்ற பானங்களைக் குடிக்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகரிக்கும். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் கொண்ட பெண் பிள்ளைகளுக்குத் தங்கள் உடலைக் குறைத்து மதிப்பிடும் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பழக்கம் குடும்ப உறவில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு நாளைக்குச் சராசரியாக 30 நிமிடங்களுக்கு மேலாக டிவிபார்க்கக் கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

உணவு வேளை என்பது உணவை உண்பதற்கு மட்டுமே. அது பொழுதுபோக்கு நேரமல்ல. உணவு உண்ணும்போது ஏற்படும் கவனச் சிதறல் செரிமானத்தை பாதிக்கும். இந்த அடிப்படை உண்மையைப் பற்றி பிள்ளைகளிடம் நிதானமாகப் பேசுங்கள். அவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

மூன்றாவதாக, உணவை உணர்ந்து உண்ணுங்கள். அது எப்படி எனக்கேட்கிறீர்களா? உங்கள் தட்டில் இருக்கும் உணவு மீதுதான் உங்கள் கண்கள் இருக்க வேண்டும். கைகளால் உண்ணுங்கள். உணவின் மனத்தை முகர்ந்து உணருங்கள். அதனை மென்று சாப்பிடுங்கள். அதில் அவசரம் கூடாது. நீங்கள் மென்று தின்னும் சத்தம் உங்கள் செவிகளில் விழும் அளவுக்குச் சாப்பிடுங்கள். உங்கள் நாக்கு உணவின் சுவையை உணரட்டும். இதுதான் உணவு உண்ணுதல். மாறாக, அங்குமிங்கும் நடந்துகொண்டு ரிமோட்டில் துழாவிக்கொண்டு, லபக்லபக் என நீங்கள் விழுங்குவது உணவல்ல. இப்படிச் சாப்பிட்டால் அரைமணி நேரம் கழித்து, ‘நாம் சாப்பிட்டோமா?’ என்ற சந்தேகம் உங்களுக்கே வரும். பசியறிந்து உண்ணும் உணவே உடலுக்கு ஊட்டச்சத்து தரும். அதேபோல் குழந்தைகள் வயிறு நிறைந்ததை உணர்ந்து, உண்ணுதலை நிறுத்தும் பழக்கமும் இயல்பாக உருவாக வேண்டும். நம் உடலில் லெப்டின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அந்த ஹார்மோன் சீராக வேலை செய்யும்போது வயிறு நிறைந்துவிட்டதை நம்மால் உணர இயலும். இன்சுலின் எதிர்ப்பு போல் லெப்டின் ஹார்மோன் எதிர்ப்பும் உடலில் உருவாகும்போது தேவைக்கு அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் வரும். அது உடற்பருமனுக்கு வித்திடும். லெப்டின் ஹார்மோன் சரியாக வேலை செய்ய வேண்டுமானால், மேற்கூறிய 3 எஸ்-களையும் தவறாது பின்பற்றக் குழந்தைகளைப் பயிற்றுவிக்கவும்.

என்ன மாதிரியான சேதி சொல்கிறோம்!

நம் குழந்தைகளிடம் சாப்பாடு குறித்து நாம் என்ன மாதிரியான சேதியைச் சொல்கிறோம் என்பதை அலசிப் பார்த்திருக்கோமா? இல்லவே இல்லை. நீ சாப்பாடு சாப்பிடாவிட்டால் உடலில் வலிமை இருக்காது, உயரமாக வளர இயலாது, சுறுசுறுப்பாக இருக்க முடியாது என்று மட்டுமே சொல்லிக் கொடுத்திருக்கிறோம். மாறாக உணவை நேசித்து, உணவு உற்பத்தியாவதன் பின்னணியில் இருக்கும் கடினமான பணிகளை உணர்ந்து, உணவை ருசித்து, ரசித்து, இல்லாதாரோடு அதனைப் பகிர்ந்து சாப்பிடுவதுதான் உண்பதின் உன்னதமான அர்த்தம் என்று சொல்லியிருக்கிறோமா? இதைப் புகட்டினால் உண்பது என்ற விஷயம் வேலையாக இல்லாமல் ஆன்மிகம் போல் சிலாகிக்கும் நிலையாக இருக்கும்.

8 மணிக்குள் இரவு உணவு

உங்கள் குழந்தைகளின் இரவு உணவு 8 மணியைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுதான் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் 4-வது உண்மை. அதேபோல் இரவு உணவின்போது பல்சுவை விருந்து படைக்கப்பட வேண்டும் என்ற மாயை இருக்கிறது. நிஜம் அதுவல்ல. இரவு உணவு எளிதில் செரிமானமாகக் கூடியதாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தை இரவு உணவுக்கு நூடுல்ஸ் கேட்டால் அன்பாக அதை நிராகரியுங்கள்.

ஒருவேளை, இரவு உணவுக்கு உங்கள் வீட்டில் சாதமும் பருப்பும் காய்கறிக் கூட்டும் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு மாறாக உங்கள் குழந்தையோ காரசாரமான உணவைக் கேட்டால், அவர்களின் கோரிக்கை ஆரோக்கியக் கேட்டை உருவாக்கக்கூடியது, காரணமற்றது என உணரச்செய்யுங்கள்.

பருப்பும் சோறும் பிடிக்கவில்லை என்றால் குழந்தை நெய்யும் சோறும் சாப்பிடட்டும் அல்லது பாலும் சோறும் சாப்பிடட்டும். இருக்கும் உணவில் தனது ஆக்கத் திறனைக் காட்டட்டும். அப்போது குழந்தைக்கு மகிழ்ச்சி ஏற்படும். விட்டுக்கொடுக்கும் பண்பு வளரும். உணவில் மகிழும் குழந்தை வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் தனக்கான மகிழ்ச்சியைக் கண்டுபிடித்துக்கொள்ளும்.மகிழ்ச்சி, தட்டில் தொடங்கட்டும்.

அதற்காக எல்லா நாளுமே குழந்தைகளின் இரவு உணவு இப்படித் திட்டமிட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்றைக்காவது ஒரு விஷேச நாளில் அவர்களின் இரவு உணவு விதவிதமாக இருக்கட்டும். அதுஅவர்களின் உரிமையும்கூட.

‘சிட்டி கிட்ஸ்’ பரிதாபங்கள்...

எங்கள் பிள்ளைகளெல்லாம் ‘சிட்டி கிட்ஸ்’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் பெற்றோரே, தினமும் வீட்டில் டிவி பெட்டியின் முன் டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு 9, 9.30  மணிக்கு நூடுல்ஸும் பாஸ்தாவும், தினம் ஒரு வகை உணவும் சாப்பிடும் ‘சிட்டி கிட்ஸ்’ பரிதாபத்துக்குரியவர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

இரவில் எளிமையான உணவை, 8 மணிக்குள் உண்ணும் குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கும். அவர்கள் வலிமையானவர்களாகவும் இருப்பார்கள். காரணம், ஆரோக்கியம் சார்ந்த போலிக் கற்பிதங்களை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆனால், ‘சிட்டி கிட்ஸ்’ காலம் கடந்து சாப்பிட்டுத் தூக்கத்தில் சமரசம் செய்துகொள்வார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், தூக்கம் மட்டும் தேவையில்லாத ஒன்றாக இருந்திருந்தால் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு வால் போனது போல் தூக்கமும் தொலைந்து போயிருக்க வேண்டாமா?

ஆனால், பசியும் உறக்கமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இயற்கை அன்னையின் மதிநுட்பம் அது. உணவில் அக்கறை செலுத்தும்போது உறக்கத்திலும் அக்கறை காட்டுங்கள். உறக்கத்தில் சமரசம் செய்தால் செரிமான கோளாறு, அடிக்கடி உடல்நலனில்  பாதிப்பு, ஒவ்வாமை, மலச்சிக்கல், கோபம், பள்ளியில் திறமையின்மை, எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிற்கும் போக்கு ஆகியன குழந்தைகளிடம் தென்படத் தொடங்கும். உங்கள் குழந்தைகளைப் பரிதாபத்துக்கு உள்ளாக்காதீர்கள்.

குழப்பம் தீர்ந்ததா?

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் எது என்பதில் நிலவிய, கட்டமைக்கப்பட்ட குழப்பங்களிலிருந்து தெளிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். உணவுக் குழப்பத்தை நீக்கும் 4 உண்மைகளையும் அறிந்தால் மட்டும் போதுமா? இன்றே அதனைப் பின்பற்றத் தொடங்குங்கள். மற்றவர்களுடன் பேசிப் பகிருங்கள்.

(வளர்வோம்… வளர்ப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in