மண்.. மனம்.. மனிதர்கள்! - 4

மண்.. மனம்.. மனிதர்கள்! - 4

ஷா ன் படத்தில் அமிதாப்பச்சன் ஆடிப் பாடிய “யம்மா... யம்மா...” பாடல் ஊரெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம்...

திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை முக்கில் கண்ணாடிக் கதவுகளோடு திறக்கப்பட்டிருந்த காஸ்ட்லியான ஹாப்பி கார்னர் டெய்லர் ஷாப்பில் அமிதாப்பச்சன் போட்டிருந்த அதே வெள்ளைக் கலர் பெல்ஸ் பேன்ட்டுக்கு ஆர்டர் குவிந்துகொண்டிருந்தது.

முந்திக்கொண்டு முதல் ஆளாக வந்து தைக்கக் கொடுத்தவன்  'டொக் டொக்' குமார்.

பெல்ஸ் பேன்ட், கூலிங்கிளாஸ், கோல்டு வாட்ச் சகிதமாக சென்று தேவி பாரடைஸில் பகல் காட்சி பார்த்தபின் அங்கிருந்து ராயப்பேட்டை வழியாக லாயிட்ஸ் ரோட்டைச் சுற்றிக்கொண்டு நைஸாக வீட்டுக்குத் திரும்பிக்கொள்ளும் டொக் டொக், சாயந்தர வேளைகளில் சாயம் போன காவி வேட்டியும் கட் பனியனுமாகக் கழுத்தைச் சுற்றி சிவப்பு கலர் காசித் துண்டோடு பார்த்தசாரதி கோயில் வாசலில் அமைதியாக நின்று கொண்டிருப்பான்.

தன் ஆர்ப்பாட்டங்களை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பான்.

திருவல்லிக்கேணியில் யாரிடம் சென்று டொக் டொக்கை விசாரித்தாலும், “அட, நம்மாளுப்பா...” என்பார்கள்.

 ‘டொக் டொக்?’

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலின் குதிரைப் பாகன். நல்ல உசரம். முறுக்கேறிய உடல். சிரித்த முகம். சிவந்த கண்கள். அகன்ற நெற்றியில் தீற்றலான குங்குமம். கோயிலின் குதிரை லாயம் அவனது கோட்டை.

கோயிலுக்கு வந்து போகும் அத்தனை ஆயிரம் பக்தர்களும் அவனுக்குப் பரிச்சயம். போலவே, எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும்.

டொக் டொக்குக்கு ஏரியா பாசம் அதிகம். யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டான். ஒருமுறை, ராயப்பேட்டை பக்கமிருந்து  ‘ஹீரோ புக்’கில் வரும் காலேஜ் பையன் ஒருவன் நம்மாழ்வார் தெரு மிதிலாவை ரூட் விடுகிறான்... பஸ் ஸ்டாப்பில் வந்து வந்து நிற்கிறான் என்று கேள்விப்பட்டு கடுப்பானான் டொக் டொக்.

“அவன் சாதாரண ஆளில்லப்பா...ஆயிரம் விளக்கு ரவுடியோட தம்பியாம்...” என்று யாரோ சொல்லிவிட இன்னும் உஷ்ணமானான்.

அடுத்த நாள் ஏரியாவுக்குள் நுழைந்த  ‘ஹீரோ புக்’கில் லிஃப்ட் கேட்பது போல் பின்னால் ஏறிக்கொண்டவன் நேராக குதிரை லாயத்துக்கு ஓட்டி வந்துவிட்டான்.

ரவுடியின் தம்பியை குதிரை சாணத்தில் போட்டு புரட்டி எடுத்தான். விஷயம் கேள்விப்பட்டு ஓடிவந்த சாரதி பட்டர் கடுமையாகக் கடிந்துகொண்டபின்தான் நிறுத்தினான்.

“மவன, அடுத்த முறை உன்ன இங்க பாத்தேன். உங்க அண்ணனோட சேத்து ஆனக் கொட்டாரத்துக்கு தூக்கிடுவேன்... ஓட்றா...” என்று துரத்தி விட்டான்.

தனக்கென்று சில விசித்திர நியாயங்களை வைத்திருந்தான் குமார்.

ஒருமுறை காலேஜ் முடித்து நண்பர்களோடு மவுன்ட்ரோடு பிலால் ஹோட்டலில் கேக் சாப்பிடப் போயிருந்தோம்.

மூலையில் அமர்ந்து தலையில் முக்காடு போட்டபடி மட்டன் பிரியாணி வெட்டிக்கொண்டிருந்த ஆளை அந்தக் காசித்துண்டு காட்டிக் கொடுத்துவிட்டது. அட, நம்ம  ‘டொக், டொக்’.

“ஏண்டா குமாரு, நம்ம ஏரியா ஃபிர்தவுஸ்லயே பிரியாணி சூப்பரா இருக்குமேடா...எதுக்குடா இவ்ளோ தூரம் வந்த..?”

“அதில்லப்பா...பெருமாளுக்கு முன்ன குதிரைல வரக் கூடியவன் நானு... கறியும் மீனும் தின்னுட்டு பிர்தவுஸ்லருந்து வெளிய வரச் சொல்ல யார்னா பாத்துட்டாங்கன்னா மூஞ்சு சுளிக்க மாட்டாங்க..?

ஆச்சாரமா பெருமாள சேவிக்க வர்றவங்களுக்கு என்னை குதிரை மேல பாக்கும்போதெல்லாம் அந்த நினைப்புதான வரும் ? நாக்கைத்தான் அடக்க முடியல. குறைஞ்சது, கண் மறைவாவாவது வெச்சுக்கலாம்ல... அதான்ப்பா...”

ஆம், நாள் கிழமைகளில் தெருவடைத்துக் கோலமிட்டிருக்க, மாட வீதிகளில் பெருமாள் கோலாகலமாக வலம் வருவார். ப்ரபந்த கோஷ்டிகளுக்கு வெகு முன்பே கம்பீரமாக அந்த வெள்ளைக் குதிரை வரும்.

அதன்மேல் ஆரோகணித்தபடி இரு புறமும் தொங்கிக் கொண்டிருக்கும் மத்தளத்தை  ‘டம்...டம்....’ என்று அடித்தபடியே வருவான்  ‘டொக்...டொக்’குமார்.

அவன் சொன்னபடியெல்லாம் கேட்கும் அந்தக் குதிரை.

‘க்ரூக்’,  ‘ப்யூச்’,  ‘ஃபிர்ர்ர்க்’,  ‘ஷூக்’ என்று ஏதேதோ சப்தம் எழுப்புவான். மொத்தத்தையும் புரிந்துகொள்ளும் அந்தக் குதிரை நிற்கும், நடக்கும், ஓடும், கனைக்கும்.

டொக் டொக் தொட்டுக் கொடுத்தால் போதும் என்று அவனிடம் குழையும். அவன் எட்டியே உதைத்தாலும் வாங்கிக் கொள்ளும். குமாருக்கும் அந்தக் குதிரை என்றால் உயிர்.

டொக் டொக்குக்கு நாலு தம்பிகள், மூன்று தங்கைகள். எல்லோரும் படித்துக்கொண்டிருந் தார்கள். வயதான அப்பா, அம்மா. பெரிய குடும்பம். இவனது ஒற்றை வருமானமோ அழுது வடிந்துகொண்டிருந்தது.

வைகுண்ட ஏகாதசி காலத்தில் திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில் பெருங்கூட்டம் கூடும். பேயாழ்வார் தெரு முக்கில் பரமபதம், தாயப்பாஸ், பல்லாங்குழி கடை போடுவான் குமார்.

டி.பி.கோயில் தெரு இறக்கத்தில் பொம்மைக் கடை போடுவான். பெசன்ட்ரோடு துவக்கத்தில் இளநீர் கடையும் போடுவான். எங்கள் கிரிக்கெட் டீம்தான் அவனுக்கு பினாமி. மூன்றாகப் பிரித்து இன்சார்ஜ் கொடுப்பான்.

அது போக, கையில் பெரிய லட்டியோடு... கோயில் வாசலில் துவங்கி பெசன்ட் ரோடு வரை நீண்டு முண்டியடிக்கும் வரிசையை சரி செய்தபடியே வருவான்.

அங்கங்கே முகம் பார்த்து சிரிப்பான். பக்தர்கள் அன்பாகக் கொடுக்கும் பணம் அவனது காக்கி ட்ராயரில் வீங்கிப் பிதுங்கிக்கொண்டிருக்கும். அவ்வப்போது எங்கள் கடைகளுக்கு விசிட் அடித்து பணத்தை சேஃப்டி செய்தபடி மீண்டும் வரிசையை அளப்பான்.

அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமையில் பிலால் ஹோட்டலில் தலையில் காசித் துண்டோடு எங்களுக்கு ட்ரீட் கொடுப்பான். நாங்கள் கவலையே படாமல் விட்டு விளாசிக் கொண்டிருப்போம்.

பார்ட் டைமாக ரெண்டு குதிரைகளை வாங்கி மெரினா சவாரியாக விட்டால் நல்ல காசு பார்க்கலாம் என்று ப்ளான் போட்டான் டொக் டொக்.

ராஜஸ்தானில் இருந்து இரண்டு குதிரைக் குட்டிகளை வரவழைத்து தன் வீட்டுப் புழக்கடையில் வைத்து போஷாக்காக வளர்த்தான்.

முன்னிரவு வேளையில் நன்றாகக் குடித்துவிட்டு வருபவனுக்காக குதிரைக் குட்டிகள் ஆசையோடு காத்துக்கொண்டிருக்கும். அதுகளுக்கு எக்ஸ்ட்ரா தீனி போட்டபடி கொஞ்சோ கொஞ்சென்று புரண்டு கொஞ்சுவான். அப்படியே தூங்கியும் போவான்.

குதிரைகள் நன்றாக வளர்ந்துவிட்டிருந்தன. நல்லநாள் பார்த்து நரசிம்மர் சன்னிதி வாயிலுக்கு எதிரே பாரதியார் வீட்டுப் பக்கத்தில் குதிரைகளை நிறுத்தி நன்றாக வேண்டிக்கொண்டு தொழிலைத் துவங்கினான். எதிர்பார்த்ததை விட மெரினா சவாரி களைகட்ட, பணம் கொட்டியது.

சவாரி முடித்து குதிரைகளைக் கொண்டு போய் மனித சந்தடி ஓய்ந்து கிடக்கும் லாயிட்ஸ் ரோட்டின் ஒதுக்குப்புறமாகக் கட்டி, குதிரைகளுக்கு வயிறார தீனி போட்டு முகம் தடவி, கொண்டாடியபின்தான் வீட்டுக்குத் திரும்புவான்.

அதிகாலையில், சீயக்காய் போட்டு ஒரு முறைக்கு நான்கு முறை கைகளை நன்றாகக் கழுவிக் கொண்டுதான் கோயில் லாயம் போவான்.

ஒரு கட்டத்தில் திருவல்லிக்கேணியில் வட நாட்டு சேட்டு கல்யாணங்களுக்கு கிராக்கி அதிகமாகி விட, அதையும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று ராஜஸ்தானுக்கு ரயிலேறினான் குமார்.

கல்யாண சவாரிக்கு பழக்கப்பட்ட பெண் குதிரை ஒன்றை வாங்கி வந்தான். நான்கு நாள் கோயில் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு அந்தக் குதிரையோடு நன்றாகக் கொஞ்சிக் குலாவி பழக்கித் தன் வழிக்குக் கொண்டு வந்தபின் வாடகைக்கு அனுப்பினான்.

கோயில் குதிரை அவன் நினைவிலாடிக்கொண்டே இருந்தது.

குற்றவுணர்வு மேலிட, சட்டென்று எழுந்து கோயில் லாயத்துக்கு ஓடினான் டொக் டொக். அவனைப் பார்த்ததும்  ‘என்னை விட்டுட்டுப் போயிட்டியே...’ என்பது போல பிடறி சிலிர்த்துக் கனைத்தது கோயில் குதிரை.

நெகிழ்ந்துபோன டொக் டொக், ஆசை ஆசையாய் அருகில் சென்று கோயில் குதிரையின் முகத்தில் அன்பாகத் தடவிக் கொடுத்த நேரம், சடாரென்று திரும்பிய அந்தக் குதிரை அவன் கையைக் கவ்வி வெறிகொண்டு கடித்துக் குதறியது.

அலறித் துடித்தான் குமார். ரத்தம் பீறிட ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போனார்கள். விஷயம் தெரிந்து பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்.

வலியைக் காட்டிக்கொள்ளாமல் படுத்துக் கொண்டிருந்தான் டொக் டொக். வலது கையின் நடு விரல் பாதியாகத் துண்டிக்கப்பட்டுக் கட்டுப் போடப்பட்டிருந்தது.

“ச்சே...என்னடா குதிரை அது..? எவ்வளவு செல்லம் கொஞ்சுவ அதை... உன்னைப் போய் இப்படிப் பண்ணிடுச்சேடா... ச்சீச்சீ, நன்றி கெட்ட ஜென்மம்..!”

டொக் டொக் அலறினான்.

“ஐயையோ, பெருமாள் குதிரையைத் திட்டாதீங்க... தயவுசெஞ்சு பெருமாள் குதிரையைத் திட்டாதீங்க... அது நல்ல மாறிதான். தப்பு என் மேலதான்...’’

“நீ என்னடா தப்பு பண்ண அதுக்கு ..?”

“சொல்றன்ப்பா... அது ஆண் குதிரை. கல்யாண சவாரிக்காக நான் வாங்கி வந்ததோ பெண் குதிரை. அவசரமா கிளம்பி வந்ததால சீக்கா போட்டு கை அலம்பாம வந்திட்டேன்.

பெண் குதிரை வாசனைய கொண்டு போய் ஆண் குதிரைக்குக் காட்டுனதும் அதுக்கு வெறி வந்து கவ்விடுச்சு. வாசனைய மறைக்காம போனது என் தப்புதான். அதுக்குப் போயி பெருமாள் குதிரையைத் திட்டாதீங்க... திட்டாதீங்க...” என்றபடி இடது கையால் தலையிலடித்துக்கொண்டான் டொக் டொக்.

அது நல்லதோ கெட்டதோ நம் தரப்பு விருப்பு வெறுப்பை அடுத்தவர் மேல் திணிக்கலாகாது என்னும் உயர்ந்த நியாயத்தை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது அவனது பாதி நடுவிரல் .

மனிதர்களிடம் மறைக்கத் தெரிந்த குமார் விலங்கிடம் ஏமாந்தான்.

இரண்டுமாகி அமர்ந்திருந்த துளசிங்கர் நித்சலன சாட்சியாக புன்னகைத்திருந்தார்.

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in