பாப்லோ தி பாஸ் 17: பாப்லோ எழுதிய கவிதை..!

பாப்லோ தி பாஸ் 17: பாப்லோ எழுதிய கவிதை..!

“டா டா… டாடா… ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளு..”

கையிலிருந்த நாளிதழ்களைத் தூக்கி எறிந்துவிட்டு, ஹாலில் இருந்து அழுதுகொண்டே தன் படுக்கையறையை நோக்கி ஓடினாள் மரியா. பாப்லோவின் செல்ல ‘டாடா’.

அந்த நாளிதழ்களில் பாப்லோவும் விர்ஜீனியாவும் சிரித்துக்கொண்டு தோளுடன் தோள் சேர்ந்து நிற்கிற, கைகளைக் கோத்துக்கொள்கிற படங்கள் வெளியாகியிருந்தன. அதைப் பார்த்துத்தான் டாடா அழுதாள்.

முதல் மகனைப் பெற்றெடுத்து ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அப்போதுதான் அவள் மீண்டும் கருத்தரித்திருந்தாள். அதற்கு முன்பு அவ்வப்போது கருத்தரித்தாலும் அவை கலைந்துகொண்டே இருந்தன. இந்தச் சூழலில்தான் எப்படியாவது இந்தச் சிசுவையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று வைராக்கியத்துடன் இருந்தாள்.

ஆனால், எந்தப் பெண்தான் தன் கணவனை இன்னொரு பெண் பங்கு போடப் பொறுத்துக்கொள்வாள்.? அந்தப் படங்களைப் பார்த்த அதிர்ச்சியில் டாடாவுக்கு எங்கே மீண்டும் கரு கலைந்துவிடுமோ என்று பயந்தான் பாப்லோ.

கட்டிலின் கால் பகுதியில் தலை குனிந்து அழுது கொண்டிருந்தவளின் கூந்தலை மெல்ல வருடினான். முதுகை மென்மையாகத் தடவிவிட்டான். ஏறிட்டுப் பார்த்தவளின் கண்ணீரைத் துடைத்தான்.

“என்ன நடக்குது பாப்லோ..?”

“மை ஸ்வீட்டி… நீயுமா இதையெல்லாம் நம்புற..?”

“அப்ப இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் பாப்லோ..?”

“இந்தப் பத்திரிகைகாரங்க எல்லாம் பொறாமை புடிச்சவங்க மா… நம் சந்தோஷத்தைக் கெடுக்குறதுக்குன்னே இருக்காங்க. இப்படி எல்லாம் நியூஸ் போடுறது மூலமா நம் குடும்பத்தை அவங்க ‘டார்கெட்’ பண்றாங்க. நான் எப்பவும் உன்கூட, உன்கூட மட்டும்தான் இருக்க விரும்புறேன் டாடா. யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை விட்டுத்தர மாட்டேன். எனக்கு நீயும், நம்ம குழந்தைகளும்தான் முக்கியம். உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம். நான் உண்மையா நேசிக்கிற ஒரே பெண் நீ மட்டும்தான் டாடா…” – பாப்லோவின் கண்களிலும் ஒன்றிரண்டு கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

டாடாவை அன்பால் சமாதானப்படுத்திய பாப்லோ, விர்ஜீனியாவை அறிவால் சரிகட்டினான். அறிவு..? ஆம்… இலக்கிய அறிவு.. கவிதை அறிவு..!

அவளுக்குக் கவிதைகள் பிடிக்கும். அதுவும் பாப்லோ நெரூதா எழுதிய கவிதைகள் என்றால் உயிர். பாப்லோவுடனான படங்கள் வெளியானதைத் தொடர்ந்து விர்ஜீனியாவுக்கு வேலை பறிபோனது. அதனால் பாப்லோவிடமிருந்து கொஞ்ச நாட்களுக்கு விலகி இருந்தாள். அரசியல் களேபரங்கள் சற்று ஓய்ந்த பிறகு அவளைப் பார்க்க பாப்லோ அவள் வீட்டுக்குச் சென்றான். அப்போது, பாப்லோ நெரூதாவின் ‘இருபது காதல் கவிதைகள்’ தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தாள்.

சோர்ந்து போய் வந்திருந்தவனை ஓடிச் சென்று அவன் கழுத்துக்குப் பின்னால் தன் கைகளை வீசி, தன் மார்புடன் அணைத்துக்கொண்டாள் விர்ஜீனியா.

“இட்ஸ் ஓ.கே. பாப்லோ… காம் டவுன். கமான் பாய்..!” – சொல்லியவாறே அவன் கன்னங்களில் முத்தமாரி பொழிந்தாள்.

அந்த அணைப்பிலும் முத்தங்களிலும் அவனின் ஆண்மை நெருப்பு பற்றிக்கொண்டது. அவளைத் தன் உடலோடு சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டான். முத்தம் பதித்தான். அவள் வாசம் நுகர்ந்தான். கலந்தார்கள். களிப்புற்றார்கள்.

“விர்ஜீனியா…”

“ம்ம்…” களைப்பில் முனகிக்கொண்டே பதிலளித்தாள்.

“இதுல இருந்து எனக்கு ஒரு கவிதை டெடிகேட் பண்ணுடா…” – மேஜையிலிருந்த நெரூதா தொகுப்பை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கிக் குறும்புப் பார்வை பார்த்தவள்,  “இதுல இருந்து வேண்டாம் பாப்லோ” என்று சொல்லியவாறே காற்று புக இடைவெளி இல்லாத அளவுக்கு இன்னும் அவனை இறுகக் கட்டிக்கொண்டு சொன்னாள்:

“உன்னுடைய இருபத்தி நான்கு சிறகுகள் வேணும் பாப்லோ…”

பாப்லோ கண்கள் சுருக்கினான்.

“ஆமா… அந்தப் பதினோரு ஏரோபிளேன் அப்புறம் அந்த ஜம்போ ஜெட்..!”

“அடிக் கள்ளி… உனக்கு அதுதான் தேவையா… ராஸ்கல்..” என்று செல்லமாக அவளைக் கடிந்தபடியே மேஜையிலிருந்த காகிதக் கற்றையில் தன் கையெழுத்தைப் போட்டான்.

“இனிமேல் உனக்கு இதுதான் உண்மையான நெரூதா கவிதை..!”

“பாப்லோ...” செல்லமாகக் கோபப்பட்டாள் விர்ஜீனியா.

“சரி.. உனக்கே உனக்குன்னு நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். அதை உனக்கு டெடிகேட் பண்ண விரும்புறேன்” என்று சொன்னவன், இந்தக் கவிதையைச் சொல்லத் தொடங்கினான்.

விர்ஜீனியா:

நான் உன்னை அழைக்கவில்லையென்றால்

நான் உன்னை நினைக்கவில்லை என்று

அர்த்தம் கொள்ளாதே;

நான் உன்னைப் பார்க்கவில்லையென்றால்

நான் உன் இல்லாமையை உணரவில்லை என்று

புரிந்து கொள்ளாதே..!

* பாப்லோ எஸ்கோபார் கவீரியா.

கவிதையின் முடிவில் அவனது இதழில் இதழ் பதித்தாள் விர்ஜீனியா.

“உனக்கென்ன பாப்லோ குறை..? முப்பத்தி நாலு வயசுல இரண்டு பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரன். உன்னோட விருப்பங்களைக் கட்டளையா நினைச்சு வேலை செய்யுற வேலைக்காரங்க. அழகான மனைவி, அன்பான குழந்தைங்க. உனக்கு எதுக்கு பாப்லோ அரசியல் எல்லாம்..? அந்த பிரெஸிடென்ட் பென்டாக்கியூர் சட்ட அமைச்சரா லாராவை நியமிப்பான்னு நான் கனவுலகூட நினைக்கலை பாப்லோ... உன்னை இப்படி அவமானப்படுத்திட்டானே அந்த லாரா…ச்சே..!”

அவளின் கைகளை மென்மையாக ஏந்தி தன் இதழுக்கு அருகே கொண்டு சென்று முத்தமிட்டான்.  “லாரா அதுக்கு பதில் சொல்ற நேரம் வரும்” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையின் மர்மம் விர்ஜீனியாவுக்குப் புரியவில்லை என்று சொல்வதற்கில்லை..!

மேனுவலா… மேனுவலிட்டா..!

பாப்லோ எத்தனையோ பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவன் இறுதி வரை உண்மையாக நேசித்தது மரியாவை மட்டும்தான். அந்த அன்பின் சாட்சியாக அவர்களுக்குப் பிறந்தவள்தான் மேனுவலா. தன் மகளின் அந்தப் பெயரை, பாப்லோ தன் காதலிக்கும் சூட்டினான் என்றால் நம்ப முடிகிறதா..?

ஒரு நாள் பாப்லோவும் விர்ஜீனியாவும் இப்படியாகப் பேசிக்கொண்டார்கள்:

“நீ அதிகம் விரும்புற தென் அமெரிக்க ஆளுமை யார் விர்ஜீனியா..?”

யோசிக்காமல் சட்டென்று சொன்னாள். “எல் லிபர்டேட்டர்..!”

“குட்… நீ ரொம்ப தைரியமானவள். என் வாழ்க்கையில வேறு விதமான விதியை எழுதியவள் நீ… அதனால நான் இனிமேல் உன்னை மேனுவலிட்டான்னு செல்லமா கூப்பிடப் போறேன்…” – சொல்லிவிட்டு அவள் காதுக்குள் அந்தப் பெயரை மெதுவாக மூன்று முறை உச்சரித்தான்.

சரி ஏன் மேனுவலிட்டா..? அதைத் தெரிந்துகொள்ளும் முன்பு… யார் அந்த ‘எல் லிபர்டேட்டர்..?’

அவர், சிமோன் பொலிவார். ஒன்றுபட்ட லத்தீன் அமெரிக்காவை உருவாக்க நினைத்த வெனிசுவேலா நாட்டுப் போராளி. ஸ்பெயின் தேசத்திடமிருந்த நாடுகளின் விடுதலைக்காகப் போராடிய தலைவன். அவருடைய காதலிதான் மேனுவலா சைன்ஸ். பொலிவாரைவிட 15 வயது குறைந்தவர். ஆனாலும் இருவருக்கும் இடையே காதல் பூத்தது. பொலிவாருடன் இணைந்து பல போராட்டங்களைச் சந்தித்தவர். பிற்பாடு, பொலிவாரைக் கொல்ல நடந்த முயற்சியில், தன் உயிரைப் பணயம் வைத்து பொலிவாரைக் காப்பாற்றியவர். அந்த அன்பால், மேனுவலாவுக்கு ‘லிபர்டேடொரா தெல் லிபர்டேட்டர்’ என்று பட்டம் சூட்டினார். அப்படி என்றால், ‘விடுதலையாளனை விடுதலை செய்தவர்’ என்று பொருள்.

‘மேனுவலா’ என்ற சரித்திரப் பெயரின் ‘மாடர்ன் டச்’ தான் ’மேனுவலிட்டா’. காதலியின் பெயரைத் தன் மகளுக்குச் சூட்டி மகிழ்கிற தந்தைகளுக்கு மத்தியில், மகளின் பெயரைத் தன் காதலிக்குச் சூட்டிய பாப்லோ ஒரு விதத்தில் ‘போஸ்ட் மார்டனிஸ்ட் பொயட்’தான் போல..!

(திகில் நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in