இணையச் சிறையின் பணயக் கைதிகள் 4- “ஹலோ… கூகுள் டாக்டருங்களா?!”

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 4- “ஹலோ… கூகுள் டாக்டருங்களா?!”

“எத்தனையோ சிறப்பு மருத்துவப் பிரிவுகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீங்க. அவங்க எல்லோரையும் விட எல்லாம் தெரிந்த ஒரு ஸ்பெஷல் டாக்டர் இருக்கார், அவரைத் தெரியுமா உங்களுக்கு?” என்றார் என் நண்பரான நுரையீரல் மருத்துவர். ‘நீங்களே சொல்லிடுங்க’ என்பதுபோல் அவரைப் பார்த்தேன். “அவர்தான் டாக்டர் கூகுள். அவரால நாம படற இம்சை இருக்கே…” என்றவர், அதன் பின் பகிர்ந்தவை கீழே.

சென்னையின் பிரபலமான மருத்துவமனை அது. நுரையீரல் மற்றும் இருதயக் கோளாறுக்காக மும்பையிலிருந்து ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மூன்று மகள்கள். மூன்று நாளைக்கு ஒருவர் வீதம் தம் தாயைப் பார்த்துக்கொள்ள வந்தனர். சிகிச்சை விவரங்களை மருத்துவர் விளக்கியவுடன் அடுத்த நாளே ஏகப்பட்ட கேள்விகளுடன் வருவார்கள். இந்த அறிகுறிக்கு என்ன காரணம்? இதை மாற்றி நீங்கள் ஏன் இப்படிச் செய்யக் கூடாது? எதற்காக இந்தப் பரிசோதனைகளைச் செய்யச் சொல்கிறீர்கள்? இந்த சிகிச்சையின் பக்க விளைவு இப்படி என்று தெரிந்தும் ஏன் இதைச் செய்கிறோம்? இப்படியெல்லாம் பலதரப்பட்ட சந்தேகங்களை எழுப்புவார்கள். ஒரு மகளுக்கு விளக்கி முடித்து ‘உஸ் அப்பாடா’ என்று உட்கார்ந்தால் அடுத்த மகள் இன்னும் நான்கு ‘எக்ஸ்ட்ரா’ கேள்விகளோடு வருவார். இவர்களுக்கு விளக்கிச் சொல்வதிலேயே மருத்துவர்ஆயாசமடைந்திருக்கிறார்.

நோயாளியின் உறவினர்களைச் சந்தித்த வகையில் பல மருத்துவர்களுக்கு இத்தகைய அனுபவம் இருக்கும். தவிர இப்படியான முறையான விளக்கங்களை அவ்வப்போது நோயாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் கொடுத்து வருவது மருத்துவர்களின் கடமையும் கூட. மட்டுமின்றி இதனால் ஏகப்பட்ட குழப்பங்கள் இருபுறமும் தவிர்க்கப்படும் என்பதைப் பல மருத்துவர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்தே இருக்கின்றனர்.

ஆனால், எல்லாவற்றுக்கும் ‘கூகுள்’ செய்து பார்ப்பது என்பது சரியா? அதிலும் மருத்துவம் சம்பந்தமான தேடல்கள் நமக்கான சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் என்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. இருக்கிற குழப்பத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி உங்கள் மனப்பதற்றத்தை (Health anxiety) மேலும்அதிகரிக்கவே செய்யும். காரணம் என்னவென்றால் தலைவலி என்ற ஒரு பிரச்சினைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. உப்புச்சப்பில்லாத காரணம் தொடங்கி உயிருக்கு ஆபத்தான காரணங்கள் வரை பலதும் இருக்கிறது. அதைப் பகுத்தறிந்து பொதுவான காரணங்களை ஆலோசித்து அத்தியாவசியமான பரிசோதனைகளை மேற்கொண்டு தெளிவான, சரியான ஒரு முடிவுக்கு வர மருத்துவரால் மட்டுமே முடியும்.

“மூளையில் புற்றுநோய்க் கட்டி இருந்தால் தலைவலி இருக்குமாமே. ‘டம்டம்’ என்று கடுமையான தலைவலியோடு வாந்தியும் வருகிறது எனக்கு. ஆக, ப்ரெயின் டியூமர் இருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?” என்று கேட்டால் மருத்துவர் என்ன சொல்வார்? “நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குது. நடு நெஞ்சில எரிச்சலா இருக்கு. இப்படி இருந்தா ‘ஹார்ட் அட்டாக்’னு நெட்ல படிச்சேன். நான் செத்துடுவேனா டாக்டர்?” என்பார்கள். டாக்டர்தான் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்துவிடுவார். இது மாதிரியான கேள்விகளுக்குக் காரணம் டாக்டர் கூகுள்தான். இது மாதிரி எடுத்தவற்றுக்கெல்லாம் இணையத்தில் தேடி எனக்கு இந்த நோய்தான் வந்திருக்கிறது; இந்த சைட்டில் போட்டிருக்கும் எல்லா அறிகுறியும் எனக்கிருக்கிறது என்றெல்லாம் புலம்பித் தள்ளும் இந்தக் கோளாறின் பெயர்தான் ‘சைபர்காண்ட்ரியா’ (Cyberchondria).

தனக்கு இன்ன வியாதி இருக்கலாம், இந்த அறிகுறிகளெல்லாம் அதைத்தான் காட்டுகிறது என்று பயந்துகொண்டு, இல்லாத பிரச்சினைகளை இருப்பது போல் உருவகப்படுத்திக்கொண்டு மனக்குழப்பத்தில் சிக்கும் ஒரு மனக்கோளாறுக்கு ‘ஹைப்போகாண்டிரியாஸிஸ்’ (Hypochondriasis) என்று பெயர். இதனுடைய டிஜிட்டல் வெர்ஷனாக சைபர்காண்ட்ரியாவைப் பார்க்கலாம்.

இணையத்தில் மேய்ந்து பல தேவையற்ற தகவல்களின் அடிப்படையில் ஒரு முன் முடிவுடன் மனப்பதற்ற நோய்க்கு ஆளாவதனாலும், இணையம் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாலும் இதை சைபர்காண்ட்ரியா என்று சொல்கிறோம்.

யார் இப்படிச் செய்யக்கூடும்?

ஏற்கெனவே மனச்சோர்விலோ மனப்பதற்ற நோயிலோ பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்குப் புதிதாக ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அதை ஆராய்கிறேன் என்று இணையத்தை நாடலாம். நெருங்கிய உறவினரை ஏதேனும் நோயால் இழந்திருப்பின் இப்படிச் செய்யலாம். அடுத்து நமக்கும் மற்றவர்க்கும் எந்த நோயாலும் தீங்கு வரக் கூடாது என்ற அதீத எச்சரிக்கையில் ‘கூகுள் டாக்டரை’ ரொம்பவே நம்பிவிடுவார்கள். அடுத்து, முதல் குழந்தை பெறப்போகும் இளம் தாய்மார்கள். குழந்தை நல்லபடி பிறக்குமா, சிசேரியனா,நார்மலா என்றெல்லாம் ஆராய்வதில் தொடங்கி, மகப்பேறு கோளாறுகள் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றிக்கொண்டு படபடப்புடன் உலாவருவார்கள்.

இயந்திரத்திடம் சிகிச்சை?!

ஏறத்தாழ எட்டாண்டுகள் மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுடன் இருந்து பல நூல்களைப் படித்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன், பிணியாளர்களின்உ உடலையும் உள்ளத்தையும் அலசி ஆராய்ந்து சிகிச்சையளித்த அனுபவத்துடன் மருத்துவம் செய்யும் மருத்துவருக்கு மாற்று ஆகிவிட முடியுமா இணையம்? அரைகுறை அறிவு ஆபத்தானது என்பார்களே அது இதுதானா? இணையத்தில் புத்தகம் வாங்கலாம், வாஷிங் மெஷின் வாங்கலாம், அன்பை வாங்க முடியுமா? அம்மாவை வாங்க முடியுமா? ஏன், எல்லா அறிகுறிகளையும் உள்ளே ஃபீட் செய்தால் என்ன நோய் என்று அதுவே ‘டயக்னோஸ்’ செய்து மருந்துச் சீட்டு மட்டும் வெளியே வந்து விழுகின்ற மாதிரியான இயந்திரத்தைக் கொண்டுவந்தால் நாமெல்லாம் அதனிடத்தில் போய் வைத்தியம் செய்துகொள்வோமா?

அப்படிச் செய்தால் அது நன்றாகத்தான் இருக்குமா? மனிதன் மனிதன்தான். இயந்திரம் இயந்திரம்தான். எந்த விஷயத்துக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ, உயிர் காக்கும் மருத்துவத் துறைக்கு இது மிகவும் பொருந்தும். ஆயினும் கூகுளில் தேடி சிகிச்சை செய்துகொள்பவர்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே மனப்பதற்றத்துடன் இருக்கும் அவர்கள் இணையத்தில் கிடைக்கும் எண்ணற்ற தகவல்களைத் தவறாக கிரகித்துக்கொண்டு இன்னும் பல மடங்கு பதற்றம் அதிகரித்து ஒரு மன நோயாளியாகவே மாறிவிடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் இணையத்தைச் சார்ந்திருக்கும் ஒரு சாராருக்கு இது பெரும் பிரச்சினையில்தான் முடியும். ஒன்று, எல்லாம்தான் நமக்கே புரிகிறதே என்று சுய சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். அல்லது, நோயை முற்றவைத்துவிட்டு முடியாத நிலையில்மருத்துவரை நாடி வருவார்கள். கடைசியில் நஷ்டப்படுவது யார் என யோசித்துப் பார்க்க வேண்டும். முழு நேரமும் எல்லாவற்றுக்கும் இணையத்தையும் ஸ்மார்ட்போனையுமே சார்ந்து வாழ்ந்துபழகிவிட்டவர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளில் ஒன்றுதான் இந்த சைபர்காண்ட்ரியா.

தேவையான தகவல்களைப் பெற இணையத்தை நாடலாம், தவறில்லை. “இந்த அறிகுறி இருந்தால் இந்த நோய்தான்” என்று முன் முடிவுடன்  பதற்ற நிலையுடன் குழப்பிக்கொள்ளும் போக்குதான் இந்த சைபர்காண்ட்ரியா.

இன்னும் சொல்லப் போனால்ஒரு மாணவன் மருத்துவம் படிக்கும் காலகட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.தொடர்ந்தஇருமல், காய்ச்சல், இரத்தம் தோய்ந்த சளி, எடை குறைதல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் காசநோயாக (Tuberculosis) இருக்கலாம் என்று படிக்கிறார். அவருக்குமே கடந்த இரண்டு வாரமாக இதே அறிகுறிகள் இருக்கலாம். உடனே தனக்கும் காசநோய் இருப்பதாக ஒருவித பிரமைக்கு ஆளாகிப் பதற்றம் அடையலாம். பிறகு அதெல்லாம் சாதாரண சளி, இருமல்தான் என்று புரிந்ததும் அமைதியடையலாம்.

மன நல மருத்துவராகப் பல கூட்டங்களில் பேசும்போதும் சரி, பிணியாளரின்குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நோய்கள் பற்றிப் பேசும்போதும் சரி, நான் இதை நிறைய சந்தித்திருக்கிறேன். “நீங்க சொல்றதெல்லாம் பார்த்தால் எனக்குமே அந்த நோய் இருக்குமோன்னு(!?) சந்தேகமா இருக்கு டாக்டர்” என்று சீரியஸாகக் கேட்பார்கள். பொறுமையாக விளக்கிச் சொன்னால் பிறகு புரிந்துகொண்டு சமாதானம் அடைவார்கள்.

இணையப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க ஏகப்பட்ட தகவல்கள் ஒரு பெருங்கடலாய் நம்மை மூழ்கடித்துக்கொண்டிருக்கும் ஒரு காலத்தில் இதுபோன்ற சைபர் பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவைதான். ஆயினும் கட்டுப்படுத்தியாகத்தான் வேண்டும்.

சொல்லப்போனால் ஆண்டாண்டுகளாக நமக்கு இருந்துவரும் நடத்தைக் கோளாறுகளுக்கு டிஜிட்டல் சாயம் பூசினால் எப்படி இருக்குமோ அதைத்தான் இன்று சைபர் பிரச்சினைகளாகப் பார்க்கிறோம். ஆக, சிகிச்சையும் கிட்டத்தட்ட பழைய ‘கான்செப்ட்’தான். போலிகளைக் கண்டு ஏமாறாதே என்று அப்போது சொன்னோம். இப்போது இணையவழி போலித் தகவல்களைக் கடந்து வரப் பழகச் சொல்கிறோம்.

முழுக்க இணையவழித் தகவல்களையே நம்பியிருத்தல் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட, அதிகார பூர்வமான வலைதளங்களை மட்டுமே பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் மருத்துவம் என்று வரும்போது அதற்கான நிபுணரின் கருத்தைக் கேட்டபின்பே முடிவு செய்தல் நலம் என்று மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எல்லாம் இருக்கிறது; எல்லையில்லாமல் கிடைக்கிறது. வேண்டியதும் வேண்டாததும் கொட்டிக்கிடக்கிறது. முறையாகப் பயன்படுத்தினால் இணையம்  ஓர் அற்புதக் களஞ்சியம். தவறாகப் பயன்படுத்தினால் கலைத்துப் போட்ட தேன்கூடுதான்.

இணையம் என்பது இரு புறமும் கூர்மையான ஆயுதம் என்பதை எப்போதும் மறக்கக் கூடாது நண்பர்களே…

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in