காதல் ஸ்கொயர் - 03

காதல் ஸ்கொயர் - 03

அவள் கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்துவிட்டு கௌதம், “டேய்...அழறாடா...” என்றான் அருணிடம்.

“அதுக்கு?”

“நம்ம தஞ்சாவூர் தமிழ்ப் பொண்ணு. வா போய் ஆறுதல் சொல்வோம்” என்று கௌதம் அவளை நெருங்கினான். “எக்ஸ்கியூஸ் மீ” என்று கௌதம் அழைக்க... அவள் திரும்பினாள். சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டு, “என்ன?”என்றாள்.

“என்னங்க நீங்க? இவ்ளோ பெரிய ஸாஃப்ட்வேர் கம்பெனில, கேம்பஸ்ல செலக்ட் ஆகியிருக்கீங்க. சின்னப் பிள்ளை மாதிரி அழுதுகிட்டு”

“ஏன்... ஸாஃப்ட்வேர் இன்ஜினீயர்லாம் அழ மாட்டாங்களா?” என்றாள்.

“அதானே? சரி… விடுங்க. இங்க நம்ம எவ்வளவோ பிரச்சினைங்கள சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வளவு சின்னப் பிரச்சினைங்களுக்கெல்லாம் மனசு உடைஞ்சுடக் கூடாது.”

“எனக்குப் புரியுது. என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் யாரும் இங்க செலக்ட் ஆவல. ரூம் மேட்டும் மலையாளி. பக்கத்து ரூம்ல எல்லாம் இந்திக்காரங்க. ஏற்கெனவே ரொம்ப லோன்லியா இருந்துச்சு. அப்ப ஊதுபத்திய பத்தவைக்கத் தீக்குச்சியைக் கொளுத்தினேன். அவ்வளவுதான். சைரன் கத்தி, ரூம் வாசல்ல கும்பல் கூடி...பயந்தே போயிட்டேன். அதான் அந்தாளு முறைச்சவுடனே அழுகை வந்துடுச்சு.நான் ஏற்கெனவே கொஞ்சம் நிறையா அழுவேன்” என்றவளின் ‘கொஞ்சம் நிறையாஅழுவேன்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை கௌதம் ரசித்தான்.

“உங்கள எதுக்கு சத்தம் போட்டாரு? நீங்களும் ஊதுபத்தி கொளுத்தினீங்களா?” என்று அவள் வெகுளியாகக் கேட்க... கௌதம் மேலும் அவளை ரசித்தான்.

“ஆமாம். கோல்டு ஃபிளேக் கிங் சைஸ்  ஊதுபத்தி” என்றான் அருண்.

“அப்படி ஒரு ஊதுபத்தியா? நான் கேள்விப்பட்டதே இல்ல” என்றபோது அவள் கண்கள் அழகாக விரிய... சற்று முன் அந்தக் கண்கள் அழுதன என்று சொன்னால்,யாரும் நம்ப மாட்டார்கள்.

“அவன் சும்மா சொல்றான்ங்க. நாங்க சிகரெட் பிடிச்சு மாட்டிகிட்டோம்.”

திடீரென்று வேகமாக மழை தூற ஆரம்பித்தது. மூவரும் வேகமாகக் குடைகள் வைத்திருக்கும் கூடையை நோக்கி ஓடினார்கள். அதில் ஒரு குடைதான் இருந்தது. கௌதம் வேகமாக அந்தக் குடையை எடுத்தான். அவள், “ஒரு குடைதான் இருக்கு. நீங்க என்ன பண்ணுவீங்க?” என்றபடி குடைக்காகக் கையை நீட்ட... அருண் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான்.

“இது உங்களுக்குன்னு யாரு சொன்னாங்க? நீங்க எந்த ப்ளாக்?” என்றான் கௌதம்.

“ஜாஸ்மின்.”

“வாங்க... உங்கள விட்டுட்டு நான் அப்படியே போயிடுறேன்” என்றபடி கௌதம் குடையை விரித்தான்.

“அப்ப நானு?” என்று அருண் கேட்க... கௌதம் காதில் விழாதது போல், “நீங்க வாங்க...” என்றான் அவளிடம். அவள் தயக்கத்துடன் கௌதமைப் பார்த்தாள்.இப்போது மழை வலுக்க... வேறு வழியின்றிக் குடைக்குள் நுழைந்தாள். அருண், கெளதமை முறைத்தபடி தூரத்தில் தெரிந்த இன்னொரு கூடையை நோக்கி ஓடினான். கௌதம் அவளுக்குக் குடையை நன்கு பிடித்தபடி விலகி நடந்தான். சிலுசிலுவென மழைத்துளிகள் அவர்கள் மீது பட்டன.

“மழை பெய்ய ஆரம்பிச்சவுடனே குளிர் குறைஞ்சுடுச்சுல்ல?” என்றாள் அவள்.

“ஆமாம். மழை பேஞ்சா குளிர் குறைஞ்சுடும். பை தி பை மை நேம் இஸ் கௌதம். ஐயம் ஃப்ரம் சென்னை” என்றபடி கையை நீட்டினான். சில வினாடிகள் யோசித்த அவள் தன் கையை நீட்டி கௌதமின் நுனிவிரல்களைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, டபக்கென்று கையை இழுத்து ஸ்வெட்டரில் துடைத்துக்கொண்டாள். அப்போது குடையை மீறி சில சாரல் துளிகள் அவள் முகத்தில் விழ... ரோஜாப்பூ மீது பனித்துளிகள் படர்ந்ததுபோல் இருந்தது.

“உங்க பேரு...” என்று இழுத்த கௌதம், “இருங்க.... நானே கெஸ் பண்ணிச்சொல்றேன்” என்றான்.

“சொல்லுங்க...” என்றாள் புன்னகையுடன்.

“ரொம்ப ஆர்த்தடாக்ஸா இருக்கீங்க. பக்தியா இருக்கீங்க. பொசுக்குன்னு கண்ணுல தண்ணி விடுறீங்க. உங்க பேரு.... காயத்ரி... இல்ல சந்தியான்னு இருக்கணும்.”

“இல்ல...”

“அப்பன்னா ஜனனி... வேற சான்ஸே இல்ல?”

“அதுவும் இல்ல...” என்று அவள் கூறியபோது மழைத்துளிகள் வேகமாகி, இடுப்புக்கு கீழ் தொப்பலாக நனைத்தது.

“அப்ப... மீரா... மீனா...” என்று வரிசையாக கௌதம் சொல்ல... அவள் விதவிதமான பாவங்களில் தலையை அசைத்து, “இல்லை...” என்றாள். கடைசியில் வெறுத்துப்போய், “வடிவாம்பாள்” என்றான். அவள், “அய்யோ... இல்ல” என்று அழகாகச் சிணுங்கினாள்.

“அப்ப நீங்களே உங்க பேர சொல்லிடுங்க.”

“நந்தினி.”

“நல்ல பேரு. நீங்க எந்த பேட்ச் ட்ரெய்னிங்?”

“எல்ஸி 3” என்று நந்தினி கூறியவுடன் உள்ளுக்குள் சில்லென்றது. அவன் பேட்ச்தான். அப்போது பின்னாலிருந்து ‘எக்ஸ்கியூஸ் மீ” என்று குரல் கேட்டது. திரும்பினார்கள். தலைக்கு மேல் குடையைப் பிடித்திருந்த அருண், நந்தினியை நோக்கி கையில் வைத்திருந்த இன்னொரு குடையை நீட்டி, “இந்தாங்க...” என்று நீட்ட கௌதம் அவனை முறைத்தான்.

“இது எங்க கிடைச்சது?” என்றாள் நந்தினி.

“இன்னொரு பாஸ்கெட்ல” என்ற அருணிடமிருந்து நந்தினி குடையை வாங்கிக்கொண்டு, “தேங்க் யூ... பை...” என்று கூறிவிட்டுச் சென்றாள்.

கௌதம் அறையில் அருணிடம், “நந்தினி... சூப்பர் பேருல்ல?” என்றான்.

“அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்?”

“இல்ல... சொன்னேன்.”

“கண்டவுடனே காதலா?”

“சேச்சே... இப்போதைக்கு நந்தினி மேல இருக்கிறது ஒரு ஈர்ப்புதான். அவளோட அழகும் இன்னொஸென்ஸும் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான். நீ காதல பத்தி என்ன நினைக்கிற?”

“காதல்ங்கிறது, காதலர்களுக்குத் திருமணமானவுடன் குணமாகி விடுற ஒரு தற்காலிக மனநோய்ன்னு ஒருத்தர் சொல்லியிருக்காரு” என்ற அருணின் மீதுகௌதம் தலையணையை விட்டெறிந்தான்.

மறுநாள் முதல் ஐந்து நாட்களுக்கு இன்டக்ஷன் ப்ரோக்ராம். அதாவது ஹைக்ரோ நிறுவனத்தின் அருமை, பெருமைகள் மற்றும் பயிற்சி விவரங்கள் போன்றவற்றைத் தெரிவிக்கும் அறிமுக வகுப்புகள்.

முதல் நாள் காலையே சற்றுத் தாமதமாக கௌதமும் அருணும் சென்றபோது அந்த ஸெஷனை நடத்தும் ஹெச்ஆர் பேட்ச் ஓனர் ஹாலிற்குள் நுழைந்துகொண்டிருந்தார். அவர்களும் அவர் பின்னாலேயே சென்று, கிடைத்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள். அந்த பேட்சில் வந்திருந்த 500 பேரையும்100, 100 பேராகப் பிரித்து ஐந்து அல்ட்ரா மாடர்ன் கான்ஃபரன்ஸ் ஹாலில் போட்டிருந்தார்கள். பேட்ச் ஓனர், பயிற்சியாளர்களை அறிமுகம் செய்துகொள்ளுமாறு கூறாமல், தன்னை மட்டும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“வணக்கம்! என் பெயர் முகுல் ஸ்ரீனிவாஸ். எல்சி 3 பேட்சின் ஹெச்ஆர் பேட்ச் ஓனர். இன்றிலிருந்து நீங்களும் பெருமைக்குரிய ஹைக்ரோகாரர்கள்தான். ஹைக்ரோ பணிக்கலாச்சாரத்தைப் பொறுத்தவரை ‘சார்’ என்று அழைக்கும் வழக்கமே கிடையாது. இந்த நிறுவனத்தின் தலைவரைக்கூட நீங்கள் அவருடைய பெயரைச் சொல்லியே அழைக்கலாம். ஆகவே, என்னை நீங்கள் முகுல் என்றே அழைக்கலாம்…” என்று ஆங்கிலத்தில் பேசிய முகுல் தன் பேச்சை நிறுத்திவிட்டு, நிறுவனம் குறித்த அறிமுகத்தை அளிக்கும் குறும்படத்தைத் திரையில் ஓடவிட்டார். ஏற்கெனவே யூடியூபில் பலமுறை பார்த்ததுதான். கௌதம் சலிப்புடன் சுற்றிலும் பார்த்தான். நந்தினியும் கௌதமின் பேட்ச்தான். அவனுக்கு அதிர்ஷ்டமிருந்தால், இதே ஹாலில்தான் இருப்பாள் என்று நினைத்தபடி சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு அதிர்ஷ்டமிருந்தது. நந்தினி கடைசி வரிசையிலிருந்து நான்காவது வரிசையில் உட்கார்ந்திருந்தாள்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in