கண்ணான கண்ணே..! - 04: உணவின் மீது மரியாதை

கண்ணான கண்ணே..! - 04: உணவின் மீது மரியாதை

குழந்தைக்கு உணவு கொடுக்கும் ஒவ்வொரு வேளையும் உங்கள் வீட்டில் ஒரு குட்டிக் கலவரம் நடக்கிறதா? சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தவும் உங்கள் வீட்டு வாண்டு தெருவில் தெறித்து ஓடுகிறாளா? சாப்பிடுவதற்கு லஞ்சம் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? சாப்பாட்டுக்குப் பதிலாக பளபள பாக்கெட் உணவுகளைக் கொடுத்தாவது போஷாக்கு கொடுத்துவிடலாம் எனக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இதை நீங்கள்தான் முதலில் படிக்க வேண்டும்.

இரண்டாவது உண்மை

குழந்தைகளின் உணவுப் பழக்க வழக்கத்தை இயல்பானதாக மாற்ற உணவு சார்ந்த 4 உண்மைகளைப் பற்றி அறிய முற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

முதலாவது உண்மை, உள்ளூரில் உற்பத்தி  செய்யப்பட்ட உணவும், பருவத்துக்குஏற்றவாறு  விளைவிக்கப் படுகிற  காய்களும்கனிகளும் தானியங்களும், பாரம்பரியமாக நாம் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட உணவும்தான் தலை சிறந்தது என்பதைக் கடந்த அத்தியாயத்தில் விவரமாக உணர்ந்தோம்.

இந்த அத்தியாயத்தில் உணவின்  இரண்டாவது உண்மையைச் சொல்கிறேன். உணவு உண்ணுதல் என்பது  இயற்கையான செயல். பசி என்பது வாழ்நாள் முழுவதும் நம்மை உந்திக்கொண்டிருக்கும் உணர்வு. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைகள் உணவு உண்ண வேண்டுமானால் அவர்களின் ஆசையைத் தூண்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஏதேதோ வித்தை காட்டிக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் குழந்தை, உணவை சாப்பிடும்போது  மட்டுமே  பார்க்கிறது  என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குழந்தை வெண்டைக்காய் பிடிக்காது; உருளைதான் வேண்டும் என்று தகராறு செய்வதும், கூடுதலாக ஒருமணி நேரத்துக்கு ஐபேட் தருகிறேன் என்று நீங்கள் குழந்தைக்கு லஞ்சம் கொடுக்கப் பழக்குவதும் நடந்துகொண்டேதான்  இருக்கும். மாறாக  உங்கள்குழந்தைகளுக்கு உணவின் மீது மதிப்பும்மரியாதையும் உண்டாகச் செய்யுங்கள். உணவின் மீதான மதிப்பைக் கற்றுக் கொடுக்க ட்யூஷன் ஏதும் அனுப்பத் தேவையில்லை. அதை உங்கள் வீட்டில் கற்றுக்கொடுங்கள்.

அடுப்பங்கரை பிரவேசம் 

நீங்கள் பணக்காரராக இருக்கலாம், பணவசதி இல்லாதவராகக்கூட இருக்கலாம். ஆணாக இருக்கலாம், பெண்ணாகஇருக்கலாம். உங்கள் வீட்டுச் சமையலறையில் வேலை செய்ய பணியாட்கள் இருக்கலாம், இல்லாமல் போகலாம். சூழல் எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தைகள் வீட்டுச் சமையலறைக்குள் நுழைந்து  குறைந்தபட்சம் சமைத்த உணவுகளை உணவு மேஜையில் கொண்டுவந்து வைக்கும் வேலையையாவது செய்யப் பழக்குங்கள். எல்லா நாட்களும் செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, வாரத்தில் ஒருநாளாவது  செய்யப் பழக்குங்கள்.

உணவு எப்படித்  தட்டுக்கு வருகிறது  என்பது தெரியாவிட்டால் அதன் மீது  குழந்தைகளுக்கு ஈடுபாடு வராது. அதன் மதிப்பும் தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தை குக்கர் உருவாக்கவில்லை; விவசாயி உருவாக்குகிறார் என்பதை எப்போது உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லப்போகிறீர்கள்? காயும் கனிகளும் ட்ரக்குகள் உருவாக்கவில்லை; அதை விளைவிக்க ஒரு விவசாயி  கடுமையாகப் பணிசெய்ய  வேண்டியிருக்கிறது என்பதைஎடுத்துச் சொல்லுங்கள். இந்தப் புரிதலை ஏற்படுத்த சமையலறைக்குள் அவர்களை உலாவச்  செய்வதுதான் எளிமையான துவக்கம்.

சாப்பிடுவதற்கான தட்டு, தண்ணீர், பாத்திரங்களை மேஜையில் வைப்பதாக இருக்கட்டும், சாப்பிட்ட பின் தட்டுகளைக் கழுவி வைப்பதாக இருக்கட்டும், ஆண்பிள்ளை, பெண் பிள்ளை என்று பாலின பேதம் பார்க்காமல் ஈடுபடுத்துங்கள். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளிலும் இந்தப் பழக்கம் குழந்தைகளுக்கு இயல்பாகப் புகுத்தப்படுகிறது. இந்தியா மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக உள்ளது.

குழந்தைகளுக்குப் பேதம் தெரியாது

நம் இந்தியக் குழந்தைகள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது தரையைக் கூட்டுவதையும், துடைத்து சுத்தம் செய்வதையும் விளையாட்டாகச் செய்கின்றனர். ஆனால், வளர வளர தான் ஒரு நிலப்பிரபுத்துவச் சூழலில் இருப்பதை உணரும்போது எல்லா வேலைக்கும் ஏவலாளியை நாடுகின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு பணம் இருக்கிறதோ அதைப் பொறுத்து உடலை அசைத்துக் கொடுக்காமல் தம் வேலைகளுக்குப் பணம் கொடுத்து மற்றவர்களை நியமிக்கப் பழகுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியின்மையும் நோயும் பரிசாகக் கொடுக்கப்படுகிறது.

பெருமிதத்தோடு உண்பார்களேயானால்...

உங்கள் பிள்ளைகள் அடுப்பங்கரையில் உணவு சமைக்க எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது, அது சார்ந்து எவ்வளவு பணிகள் செய்யப்படுகின்றன என்பதை நேரிடையாகப் பார்த்தார்கள் என்றால் அடுத்த முறை தட்டில் வைக்கப்படும் உணவைப் பெருமிதத்தோடு உண்பார்கள். இந்தியத் தாய்கள் உலகிலேயே தனது மகன்தான் தலைசிறந்தவன் என்ற எண்ணம் கொண்டிருப்பார்களே அதேபோல் என் தட்டில் இருப்பதுதான்  சிறந்த உணவு என்று பெருமைப்படுவார்கள். உணவின் மீது தார்மீக உரிமை வரும்.

பிள்ளைகளை விவசாய நிலங்கள், காய்கறித் தோட்டங்களுக்கு அழைத்துச்சென்று உணவு உற்பத்தியின் பின்னால் இருக்கும் உழைப்பை உணரச் செய்யவேண்டும். ஒருவேளை விவசாயப் பகுதிக்கு அழைத்துச் செல்வது உடனே சாத்தியப்படவில்லை என்றால் விரல் பற்றி வீட்டின் சமையலறைக்குள் அழைத்துச் செல்லுங்கள். இந்த முயற்சிகளுக்குப் பின்னரும்கூட உங்கள் குழந்தை ஒரு வேளை சாப்பிட அடம் பிடிக்கிறது என்றால், குழந்தைக்குப் பசியின்மையாக இருக்கலாம். அது மாதிரியான நேரங்களில் வாழைப்பழம் சாப்பிட வையுங்கள். பசிக்கு இயற்கை கொடுத்த அருமருந்து அது.

பசியின்மையும் இயல்பே

என்னதான் உங்கள் குழந்தைக்கு உணவின் மதிப்பு தெரிந்திருந்தாலும் கூட எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான பசி உணர்வு ஏற்பட வாய்ப்பில்லை. பருவநிலை, விடுமுறை, பள்ளியில் இருக்கும் பாடத்தின் பளு எனப் பல்வேறு விஷயங்கள் அவர்களின் உணவுப் பழக்கவழக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அவர்கள் பசியறிந்து உணவு பரிமாறுங்கள். உணவை மென்று சாப்பிடப்பழக்குங்கள். அவர்கள் கைகளில் போனும் கண் எதிரே டிவி, கணினியும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். அவர்கள்  சாப்பிட்டு முடிக்கும்வரை அவர்களோடு இருங்கள். முடிந்தால் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுங்கள்.

பேரன்பும் பெரும் அதிகாரமும்

குழந்தைகள் அதிகாரமற்றவர்கள். சாப்பிடாமல் இருப்பதற்கான காரணங்களை வார்த்தை ஜாலங்களால் அவர்களால் விவரிக்க முடியாது.

உதாரணத்துக்கு, நம்மைப் போன்ற வளர்ந்த நபர்கள் விவரிப்பதுபோல், வெயில் காலத்தில் பசியிருக்காது, கொஞ்சம் குமட்டல் எடுப்பதால் இப்போதைக்கு சாப்பாடு வேண்டாம், இது குளிர்காலம்… இந்தக் காலத்தில் எனக்குப் பசி அதிகமாகவே இருக்கும், என்னுடைய அபிமான உறவு இப்போது என்னுடன் இருப்பதால் சிரிப்பும் சந்தோஷமும் என்னை அதிகமாகச்  சாப்பிட வைக்கும், இது எனக்குப் பிடித்தமான உணவு முடிவில்லாமல் சாப்பிடுவேன், நீர்ச்சத்து குறைந்தது போல் இருப்பதால் சாப்பாடு வேண்டாம்; நீராகாரம் போதும் என்றெல்லாம் குழந்தைகளுக்குச் சாக்கு சொல்லத் தெரியாது.

ஆனால், பெற்றோராகிய உங்களுக்குக்குழந்தைகள் மீதிருக்கும் பேரன்பைப்போலவே அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் இருக்கிறது. நீங்கள் அவர்களின் கருத்துகளுக்குள்  ஊடுருவலாம்.

வார்த்தை ஜாலங்கள் தெரியாவிட்டாலும் கூட பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய சில உத்திகள் அவர்களிடம் இருக்கத்தான் செய்கின்றன.

1. சாப்பிட வேண்டுமா? கெட்ச் அப் கொடு.

2. இன்னும் ஒரு மணி நேரம் ஐபேட் தருவியா?

3. சாப்பிடுகிறேன்... ஆனால் முடிவில் சாக்லேட் வேண்டும். அல்லது ஐஸ்க்ரீம் வேண்டும்.

4. தட்டைத் தூக்கி வீசி அடம் பிடித்தல்.

5. அழுகை.

இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் பிள்ளை சொல்லலாம் / செய்யலாம். கவலை வேண்டாம். முதலில் நீங்கள் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். அப்புறம் அவர்களிடம் மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிக உறுதியாகப் பேசுங்கள்.

மகளே உன் உணவை நீ இப்போது சாப்பிடவில்லை என்றால் பிரச்சினையில்லை. ஆனால், எப்போது உனக்குப் பசியெடுத்தாலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த உணவு காத்திருக்கும். இதைத் தவிர வேறு உணவு கொடுக்கப்பட மாட்டாது. இதை உண்ண வேண்டியது உனது பொறுப்பு. வேண்டுமென்றால் நானும் உன்னுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள்.

இதை நம் பாட்டி நமக்குச் சொல்லியிருப்பார். ஆனால், நாம்தான் அதை தோதாக மறந்துவிட்டோமே!

குடும்பத்தோடு உண்ணும் பழக்கம் எல்லாம் காலாவதியாகிவிட்டதால் உணவுப் பழக்கவழக்கத்தை இயல்பாகக்கடத்த முடியாமல் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றத்தை வீட்டிலிருந்து துவக்குங்கள். இன்னும் இரண்டு உண்மைகளுடன் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

(வளர்வோம்... வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in