
டாக்டர் மோகன வெங்கடாசலபதி
நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் மேய்வதால் என்ன தவறு? பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். அனைவருடனும் தொடர்பில் இருக்கிறோம். என்றோ தொலைத்த நண்பர்கள், நேற்று அறிமுகமான ஃபேஸ்புக் நட்புகள் என அனைவருடனும் தொடர்பில்தான் இருக்கிறோம். ஆனாலும், ‘மனசு நல்லா இல்லையே சார்!’ என்பதுபோல் உணர்கிறீர்களா? உண்மைதான்.
ஒரு காலம் இருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் நண்பர்களைச் சந்திக்கப்போகிறோம் என்பதே அவ்வளவு மகிழ்ச்சியான சங்கதியாக இருக்கும். ஒருவரை ஒருவர் கண்டதும் கட்டித்தழுவி “வாடா மச்சான்... சொல்லுடா மாப்ளே…” என அன்பொழுகப் பாசத்தைப் பகிர்ந்து, எச்சில் காப்பியைக் குடித்து, நண்பன் புகைத்த எச்சில் சிகரெட்டையும் பிடிக்கும்போது இருந்த அன்னியோன்யம் இந்த நவநாகரிக காலத்தில் இல்லையே என்று உணர்ந்திருக்கிறீர்களா?
தொடுதல், பேசுதல், முகர்தல் என அனைத்து உணர்வு நரம்புகளும் வேலை செய்ய நாம் நட்பு பாராட்டிய காலத்தில் செல்போன் இல்லை, ஃபேஸ்புக் இல்லை, ட்விட்டர் இல்லை, இன்ஸ்டாகிராம் இல்லை. ஆனால், நட்பில் ஆத்மார்த்தம் இருந்தது. அன்பில் உண்மைத்தன்மை இருந்தது. கையில் காசில்லை என்று சினிமா போக பயந்தோமா, ஹோட்டல் போகத் தயங்கினோமா… எல்லாவற்றுக்கும் நட்பானது பாலமாக இருந்தது. பணக்குறைகள் மட்டுமல்ல, மனக்குறைகளுக்கும் நண்பர்கள் தீர்வாக இருந்தார்கள்.