பாப்லோ தி பாஸ் 16: மணி… மணி… ஹாட் மணி...!

பாப்லோ தி பாஸ் 16: மணி… மணி… ஹாட் மணி...!

 பா ப்லோ பாரம்பரியமான லிபரல் கட்சியைச் சேர்ந்தவன். அந்தக் கட்சிதான் 1983-ல் ஆட்சியில் இருந்தது. ஆனால் கொலம்பிய நாட்டுச் சட்டத்தின்படி, அந்த நாட்டின் அதிபர், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர் களுக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும். அப்படித்தான், அந்த ஆண்டில், ‘புதிய லிபரல் கட்சி’யைச் சார்ந்த செனட்டர் ரோட்ரிகோ லாரா பொனில்லாவுக்கு சட்ட அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பாப்லோ கலவரமானான். காரணம், லாரா, நாட்டிலிருந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மிகவும் காட்டமாகப் பேசி வந்தவர் என்பது மட்டுமல்ல... அவர் மிகவும் நேர்மையானவரும்கூட..!

1982-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ‘ஹாட் மணி’ என்ற விஷயம் மிகவும் பரவலான சர்ச்சையைக் கிளப்பியது. அரசியல் கட்சிகளுக்கு, ‘நார்கோ’க்கள் வழங்கும் நிதிதான் ‘ஹாட் மணி’. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று வந்திருக்கும் ஆளும் கட்சியினர், அந்த ‘ஹாட் மணி’ உதவியுடன்தான் வந்திருக்கிறார்கள் என்று நம்பினார் லாரா. அதைப் பொதுவெளியிலும், நாடாளுமன்ற அவைக்குள்ளும் விமர்சித்தவர் அவர். குறிப்பாக, பாப்லோ போன்றவர்களைப் பெயர் சொல்லாமல் தன் விமர்சனங்களால் துளைத்தெடுத்தார்.

கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தல்காரர்களை அமெரிக்காவிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இயங்கி வந்தவர் லாரா. அவரே இப்போது சட்ட அமைச்சர் என்றால்…! – பாப்லோ அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறான்..?

அந்தக் கேள்வி அவனுக்குள் அலையடித்துக்கொண்டிருந்த நாட்களில், திடீரென்று ‘ஹாட் மணி’ பற்றிய விவாதம் வந்தது. அப்போதுதான் பாப்லோவுக்குள் ஒரு பொறி தட்டியது. தேர்தல் நேரத்தில் தன்னைத் தன் கட்சியில் சேர்த்துக்கொள்ளாமல் விரட்டியடித்த லாராவை எப்போதேனும் அவமானப்படுத்திவிட வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தான். அதற்கான வேளை ‘ஹாட் மணி’ மூலம் வந்தது.

லாராவின் கட்சிக்குள் சேர ஏதேனும் ஒரு வழி பாப்லோவுக்குத் தேவைப்பட்டது. ஒரு புறம் தான் நேரடியாக அந்தக் கட்சியில் சேர முயன்று கொண்டிருந்தாலும், இன்னொரு புறம், பின் வாசல் வழியாக உள்ளே புக முயன்றான். விர்ஜீனியாவின் உதவியுடன் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மூலமாக லாராவைச் சந்திக்க ஏற்பாடானது. பாப்லோவுக்குப் பதில் அவனுடைய நண்பன் எவரிஸ்டோ போர்ராஸ் என்பவன் அனுப்பப்பட்டான்.

பாப்லோதான் அவனை அனுப்பினான் என்ற விஷயம் லாராவுக்குத் தெரியாது. எவரிஸ்டோ தன்னை ஒரு தொழிலதிபராக அறிமுகப்படுத்திக்கொண்டு லாராவின் கட்சியுடன் இணைந்து தான் பணியாற்ற விரும்புவதாகக் கூறி அட்வான்ஸாக இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளச் சொல்லி ஒரு மில்லியன் பெஸோவுக்கான (சுமார் ரூ.40 லட்சம்) காசோலையை லாராவிடம் வழங்கினான்.

ஆனால் அவன் வந்து சென்ற சில நாட்களில் பாப்லோ ரியல் எஸ்டேட் அதிபர் அல்ல, கடத்தல்காரன் என்று தெரிய வந்தவுடன், பாப்லோவைத் தன் கட்சியில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இந்த விஷயத்தை நினைவுகூர்ந்த அவன், எவரிஸ்டோவிடமிருந்து அந்தக் காசோலையின் நகலை வாங்கினான். அடுத்த நாள் நாடாளுமன்ற அவைக்கு உள்ளே வந்த உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி. தங்கள் மேஜைகளின் மீது, அந்தக் காசோலையின் பிரதி ஒன்று வைக்கப் பட்டிருந்தது. விஷயம் தெரிய வந்தவுடன் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ‘லாராவும் ஹாட் மணி வாங்கியிருக்கிறார்..!’.

இது யார் செய்த காரியம் என்று லாரா ‘டக்’கென்று யூகித்தார். சுதாரித்துக்கொண்ட அவர், உடனே பாப்லோவை போதைப் பொருள் கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் பாப்லோ இப்படிக்  குற்றம் சாட்டப்படுவது அதுதான் முதன்முறை. இதர உறுப்பினர்கள் அதிர்ந்தாலும் அவர்கள் அதை முழுவதுமாக நம்பவில்லை.

அடுத்த நாள், 1976-ம் ஆண்டு அவன் படத்துடன் வெளியான ‘எல் ஸ்பெக்டேட்டர்’ நாளிதழ் செய்திக் குறிப்பை, கொலம்பியாவின் இதர நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன. இது யார் செய்த வேலை என்பது பாப்லோவுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?

ஆனால் பாப்லோ அதைப்பற்றி அலட்டிக்கொள்ள வில்லை. அன்றைய தினம் அவன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினான்.

“நான் வெற்றி பெறுவது இங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. நான் அவர்களின் அரசியலுக்கு எதிராக இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் ஏன் எனக்கு எதிராக இருக்கிறார்கள் தெரியுமா..? இதுநாள் வரை அவர்கள் மக்களிடம் கொள்ளையடித்து வந்தார்கள். நான் அதை மாற்றப் போகிறேன். அதனால்தான் இந்த எதிர்ப்பு. மெதஜின் நகரத்தில் இருக்கும் எல்லோருக்கும் நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்பது தெரியும். என் அரசியலுக்கான பணம் அதிலிருந்துதான் வருகிறது. நான் என் தேசத்தை நேசிக்கிறேன். அதை இன்னும் அழகாக்க விரும்புகிறேன். எனக்கு அமெரிக்காவின் மீது மிகப்பெரிய ஆச்சரியம் உண்டு. ஆனால் அவர்கள் கொலம்பியாவில் செய்யும் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை…” என்று கொட்டித்  தீர்த்தான் பாப்லோ.

“இப்படி வீராவேசமாகப் பேசிவிட்டால் உங்கள் மீதுள்ள குற்றம் இல்லையென்று ஆகிவிடாது பாப்லோ... செனட்டர்ஸ்… இவர் மீது அமெரிக்காவே ‘ட்ரக் டிராஃபிக்கர்’ என்று குற்றம் சுமத்தியுள்ளது” என்று ஆவேசமானார் லாரா.

“இல்லையே… மூன்று நாட்களுக்கு முன்புகூட அவர்கள் எனக்கு விசா கொடுத்திருக்காங்களே…” என்று சொல்லி, தன் விசாவைக் காட்டினான்.

அடுத்த சில நாட்களில், அமெரிக்கா அந்த விசாவை ரத்து செய்தது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப் பட்ட உரிமையான ‘தண்டனையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை’ பறிக்கப்பட்டது. தொடர்ந்து 1984-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவன் ராஜினாமா செய்தான்.

என்னதான் பாப்லோவின் மீது குற்றம் சாட்டப் பட்டாலும், மக்கள் அதைத் துளி அளவும் நம்பவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், அரசு அவர்களுக்கு வழங்கியதைவிட, பாப்லோ அவர்களுக்கு வழங்கிய வசதிகள் அதிகம்.

இதே காலத்தில், கொலம்பிய ‘நார்கோ’கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நடத்தப்படும் அரசு மற்றும் இதர கடத்தல்காரர்களின் கூட்டங்களில் பாப்லோவுடன் விர்ஜீனியா கலந்து கொள்ளும் படங்கள் ஊடகங்களில் வெளியாகின. இது மூன்று பேரின் வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியது. பாப்லோ.. டாடா.. விர்ஜீனியா..!

ஆவணம்… ஆயுதம்..!

எந்த ஒரு குற்றச் செயலையும் திட்டமிட்டுச் செய்பவன் பாப்லோ. அவன் செய்த பல குற்றங்களுக்கு இன்று வரை சாட்சியங்களே இல்லை. அப்படியிருக்கும்போது, அவன் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்த ‘எல் ஸ்பெக்டேட்டர்’ விஷயத்தில் மட்டும் எப்படி கோட்டைவிட்டான்..? நடந்தது இதுதான்:

1976-ம் ஆண்டிலேயே அந்த வழக்கின் ‘ஃபைல்’களை அழித்துவிட்டான் பாப்லோ. காவல் நிலையத்தில் தன்னை ஒளிப்படம் எடுத்த போட்டோகிராஃபரை மிரட்டி, அந்த ‘நெகட்டிவ்’களை வாங்கிக் கொளுத்திவிட்டான். அடுத்த நாள் அந்தப் படத்தைத் தாங்கி வந்த ‘எல் ஸ்பெக்டேட்டர்’ நாளிதழையும் பெருமளவு கட்டுக்கட்டாக வாங்கி வந்து அழித்துவிட்டான். எல்லாவற்றையும் சரியாகச் செய்த அவன், அந்தப் பத்திரிகையின் ‘ஆர்க்கைவ்’ என்று சொல்லப்படும் ஆவணச் சேகரிப்பில் இருந்த பிரதிகளை அழிக்க மறந்துவிட்டான். போதைப் பொருள் கடத்தல்காரனுக்கு பத்திரிகை அலுவலக நடைமுறைகள் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவன், அந்த நாளிதழின் ஆசிரியர் கியெர்மோ கனோ இசாஸாவைக் கொல்ல முயன்றான். பல முறை தோல்விகளுக்குப் பிறகு 1986-ல் அவரைக் கொன்றான். அதனால் அந்தப் பத்திரிகை விழுந்துவிடவில்லை. அடுத்த நாள் ‘வீ ஆர் கோயிங் ஆன்!’ (நாங்கள் தொடர்ந்து செல்வோம்) என்ற தலைப்புடன் வெளிவந்தது. தொடர்ந்து, தனக்கு எதிராகச் செய்திகள் வெளியிட்டு வர, 1989-ல் அதன் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினான் பாப்லோ.

ஆனால் எல்லா ஆபத்துகளையும் கடந்து இன்றும் அந்தப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த மார்ச் மாதம் 22-ம் தேதி, அது தனது 122-வது ஆண்டைக் கொண்டாட உள்ளது. கியெர்மோவின் நினைவாக ஐ.நா.மன்றத்தின் ஓர் அங்கமான ‘யுனெஸ்கோ’ 1997 முதல் அவரது பெயரில் ‘உலக பத்திரிகைச் சுதந்திரப் பரிசை’ சிறந்த பத்திரிகையாளர்களுக்கும் பத்திரிகை நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.

(திகில் நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in