இணையச் சிறையின் பணயக் கைதிகள் 2: ‘வாட்ஸ் - அப்’ குழுவும் மனப்பதற்றமும்

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 2: ‘வாட்ஸ் - அப்’ குழுவும் மனப்பதற்றமும்

சந்தேகமே இன்றி வாட்ஸ் - அப் செயலி என்பது மிக அற்புதமான அத்தியாவசியமான ஒன்றுதான். எத்தனை புகைப்படங்கள், எத்தனை தகவல்கள், எத்தனை அழைப்புகள்,எத்தனை அன்புகள், இதனால் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஆனால், வகைதொகை தெரியாமல் இதில் மாட்டிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளானோர் எத்தனை பேர் தெரியுமா? வாட்ஸ்-அப் குழு சாட்டிங்கினால் ஒருவித மனப்பதற்ற நோயே (Whatsapp Group Chat Anxiety) ஏற்படுகிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

தனி இருவர் மட்டுமே மாறி மாறி முதுகு சொறிந்துகொள்வதாக இன்று பல வாட்ஸ்-அப் குழுக்கள் திசைமாறிவிட்டன. மூன்றாம் நபரும் அங்கே இருக்கிறார், அவருக்கும் தெரிந்த பொருத்தமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எல்லோரும் நினைப்பதில்லை. இருவர் மட்டுமே பங்கெடுத்துக்கொள்வதான குழு உரையாடல்கள் குழுவின் ஆரோக்கியத்தையே குலைத்துவிடும். அரசியல் போன்ற சூடான, பிரிவினையை உண்டாக்கிவிடக்கூடிய, நச்சுத்தன்மை மிகுந்த விவாதப் பொருளை வேண்டுமென்றே பதிவிட்டுவிட்டுக் குளிர்காயத் தொடங்கிவிடுவார்கள் சிலர். ஆரம்பித்தவர் அமைதியாகிவிடுவார். மற்றவர்கள் அடித்துக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள்.

தன்னுடைய நிலைப்பாட்டை எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்புகிறார் ஒருவர். மாறாக,தன்னைத் தவறாகவும் வேறு கோணத்திலும்தான் புரிந்துகொள்கிறார்கள்; எப்படி விளக்குவது என்றே புரியவில்லை; கடைசியில் என்னைக் குழுவிலிருந்து தூக்கிவிட்டனர்; எனக்குத் தேவையா இது எனப் புலம்புகிறார் மற்றொருவர்.

ஐந்து நிமிடம் போனை எடுத்துப் பேசினால் எளிதில் தீர்ந்துவிடக்கூடிய ஒரு விஷயத்தை, குழுவிலுள்ள அத்தனை பேரும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் விதண்டாவாதமாகத் தொடர்ந்து இரவு முழுவதும் சண்டைபோட்டுக்கொள்ளும் வாட்ஸ்-அப் வெறியர்களும் உண்டு. இவர்களால் பலபேர் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என்று தெரியாமலேயே பல குழுக்கள் ‘வெற்றிகரமாக’ இயங்கிவருகின்றன.

மேற்படி வாக்குவாதம் எல்லை மீறும்போது அதை அப்படியே நிறுத்திவிட வேண்டும்.அல்லது வேண்டுமென்றே பேச்சை வேறு பக்கம் திருப்ப வேண்டும். எத்தனைபேர் செய்கிறோம் இதை? விளைவு… சம்பந்தப்பட்ட  நபர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார். அத்தனை நண்பர்கள் குழுவில் இருந்தும் தன்னைப் புரிந்து தனக்கு ஆதரவாக யாரும் வரவில்லையே என்று வெதும்பி, குழுவிலிருந்து தானாக வெளியேறுகிறார். அப்போதும் விடுகிறதா பிரச்சினை? இப்போது தன்னைப்பற்றி என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? எத்தனை பேர் எனக்குச் சாதகமாக அல்லது பாதகமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்? எப்படி இதை நாம் தெரிந்துகொள்வது? அடுத்த மாதம் நடக்க இருக்கும் நம் கல்லூரி ரீயூனியனுக்குப் பணம் வேறு செலுத்திவிட்டேனே? கலந்துகொள்வதா வேண்டாமா? அவசரப்பட்டு குழுவை விட்டு வெளியே வந்துவிட்டேனோ? யாராவது பஞ்சாயத்துக்கு வந்து மறுபடி நம்மை ஆட்டத்துக்குச் சேர்த்துக்கொள்ள மாட்டார்களா? இப்படியெல்லாம் பலவாறு சிந்திக்கத் தொடங்கிவிடுவார் நம்மவர். உளவியலில் இந்த அவஸ்தையை செல்லமாக ‘ஃபோமோ’ (FOMO) என்று கூறுவார்கள். Fear Of Missing Out என்பது அதன் விளக்கம். ஆம்…சின்ன வயதில் பல்லாங்குழியோ கபடியோ திருடன் போலீஸ் விளையாட்டோ சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருக்கும்போது நம்மைப் பிடிக்காத கேப்டன் நம்மை விளையாட்டிலிருந்து தள்ளிவைத்து எல்லோரும் நம்மிடம் காய்விடும்போது ‘பொசுக்’கென்று அழுகையும் ஆற்றாமையும் மிகுந்துபோய்ப் புதைந்து அழுவதற்காகப் பாட்டியின் மடியைத் தேடி ஓடி வருவோமே… அப்படியான ஒரு உணர்வுச் சிக்கல்தான் இந்த FOMO.

நிமிடத்துக்கு நிமிடம் பதிவுகளை ‘செக்’ செய்து பதிலளித்துக்கொண்டே இருந்து பழகிவிட்டு இப்போது குழுவிலேயே இல்லை என்பதை ஜீரணமே செய்ய முடியாது சிலரால்.

தான் போட்ட ’ஸ்டேட்டஸ்’க்கு யாருமே பதில் போடவில்லை; இதே வேறு ஒரு நபர் பதிவிட்டால் ஆஹா ஓஹோ என்கிறீர்கள்; என்னை உதாசீனப்படுத்துகிறீர்கள். ஆகையால் நான் குழுவை விட்டு வெளியேறுகிறேன் என்றார் ஒரு நண்பர். கல்லூரிகளில் படிக்கும்போது சில வேண்டாத குழு மனப்பான்மைகள் இருந்திருக்கலாம். இவன் கிராமத்தான், இவன் நகரத்தவன், இவன் தமிழ் மீடியம், இவன் பிறந்ததில் இருந்தே இங்கிலீஷ் கான்வென்ட்டில் படித்தவன்… இப்படியெல்லாம் எத்தனையோ வெளியே சொல்ல முடியாத சில குழு மனப்பான்மைகள்  நம்மைப் பாதித்திருக்கலாம். ஆனால், காலப்போக்கில் கல்லூரி வாழ்க்கை நமக்குப் பல பாடங்களைப் புகட்டும்போது இது போன்ற தேவையற்ற கற்பிதங்கள் நம்மைவிட்டுப் போயே போய்விடும். இது இயல்பு; இயற்கை. ஆனால், கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து பல்லாண்டுகளுக்குப் பிறகும் அரிதாகவும் அழகாகவும் உருவாகும் ஒரு வாட்ஸ்-அப் குழுவில் ஒரு புல்லுருவி, ஒரேயொரு புல்லுருவி இது போன்ற பலரும் மறந்த விஷயங்களை உள்ளே மீண்டும் கொண்டுவந்துவிட்டார் என்றால் அவ்வளவுதான். குழு மறுபடியும் தொற்றுநோய் தாக்கிய நோயாளியைப் போலாகிவிடும். மற்ற உறுப்பினர்கள் தலையிட்டு சமரசம் செய்து, வயதுக்கேற்ற முதிர்ச்சியோடு நடந்துகொள்ளுங்கள்  என்று அறிவுறுத்தி, பின் அமைதி நிலவினால் நல்லது. இல்லாவிட்டால் ஆமை புகுந்த, அமீனா புகுந்த வீடு போலத்தான் அந்த குரூப்பும் ஆகிவிடும்.

இது ஒருபுறம் இருக்கட்டும். ஏற்கெனவே உளவியல் ரீதியாக Borderline personality disorder என்ற ஆளுமைக் கோளாறினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ‘வாட்ஸ்-அப்’பிடம் மாட்டிக்கொண்டு திணறிப்போன சம்பவமொன்றை மருத்துவ இதழ் ஒன்றில் சில மாதங்களுக்கு முன் படித்தேன்.

எதையோ இழந்தது போன்ற மனசு. அவ்வப்போது கடுங்கோபமும் கழிவிரக்கமும் கொண்டு கத்துதல்; தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல்; பொசுக்கென்றால் தற்கொலை முயற்சி; அன்புக்காக ஏங்குதல்; தனிமையை விரும்புதல்; நினைத்த காரியங் களை நினைத்த மாத்திரத்தில் செய்துவிட வேண்டும் என்ற உந்துதல் (Impulsivity) போன்றவற்றுடன் உணர்ச்சிக் கலவையாக உள்ள இவர்கள் (பெரும்பாலும் பெண்கள்) வாட்ஸ்-அப் போன்ற விஷயங்களில் மாட்டிக்கொண்டால் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது. தன்னுடைய தனிமையைப் போக்கிக்கொள்கிறேன் பேர்வழி என்று வாட்ஸ்-அப்பில் எல்லா நேரமும் எல்லோரிடமும் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் தன்மை இவர்களுடையது. நள்ளிரவில் ஒரு சிக்னல் வந்தால்கூட உடனே பதிலளித்தால்தான் தூக்கம் வரும். அருகாமையிலேயே அன்பான உறவுகள் இருந்தால்கூட மாய நட்புகள் தரும் இதமே இவர்களின் இதயம் விரும்புகிற ஒன்று. பாசத்தை அள்ளி வீசுவார்கள். பதில் போடவில்லையென்றால் கண்டபடி பொதுவெளியில் திட்டுவார்கள். இவர்கள் அன்பானவர்கள்; ஆனால், அந்த அன்பே திகட்டுகிறதே என்று விஷயம் தெரிந்த நண்பர்களே இவர்களைச் சரிப்படுத்த முடியாமல் தடுமாறுவார்கள். நேரில் போய்ப் பேசினால்கூட திருப்தி அடைய மாட்டார்கள். டிஜிட்டல் பேச்சுக்குத்தான் இவர்கள் அடிமை. நான் மேற்சொன்ன பெண் ஒரு கட்டத்தில் கணவன், குழந்தை, அன்றாட வீட்டுக் கடமைகள் என எல்லாவற்றையும் மறந்து துறந்து ‘வாட்ஸ்-அப்’பே கதி என்று ஆகிவிட்டார். இவரை ‘கைபேசி அடிமை’ என்பதா, ‘இணைய அடிமை’ என்பதா, அல்லது வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு மட்டும்தான் இவர் அடிமை என்பதா என்று பலவாறு ஆராய்ச்சிகளுக்குக் கருப்பொருளானார் அந்தப் பெண். படிப்படியான  சிகிச்சைமுறைகள், அவரது தனிமையைப் போக்க நடத்தை மாற்று சிகிச்சைகள், மனச்சோர்வு நீங்க மாத்திரைகள், மனம் ஒரு சீராக நேர்கோட்டில் ஏற்றத்தாழ்வின்றிச் செயல்பட மருந்துகள் எனப் பலவாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மெல்ல மிக மெல்ல ஒரு அடிமைத்தனத்திலிருந்து அவரை மீட்டு வருவதற்குள் ஆயாசமடைந்துவிட்டனர் சிகிச்சைக் குழுவினர்.

என்ன மாதிரியான  மனநிலையில் நாம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே இதுபோன்ற விஷயங்கள் நம்மை வீழ்த்தும் அல்லது நாம் அதை வெல்வோம். எது எப்படி இருப்பினும் சக மனிதர்களுடன் எந்த நேரமும் எங்கிருந்தும் தொடர்புகொள்ள முடியும், பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதற்கான வரப்பிரசாதமே தற்போதைய இணையமும் அது சார்ந்த தளங்களும். மகிழ்ச்சியில் மது அருந்தியவன் மிதமிஞ்சிய மகிழ்ச்சியடைகிறான். துக்கத்தில் மதுவை விழுங்கியவன் விழுந்து புரள்கிறான். அது போல இப்போதுள்ள இணையச் சூழலால் நம் மனநிலையை நேர்

மறையாக்கி ரிலாக்ஸ் செய்யவும் முடியும்… இருக்கிற குழப்பத்தை இன்னும் அதிகமாக்கி அரை மனநோயாளியாக நம்மை மாற்றிவிடவும் முடியும் என்பதை நாம் அனைவரும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

(இணைவோம்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in