காதல் ஸ்கொயர் - 01

காதல் ஸ்கொயர் - 01

லே ப்டாப் யூடியூபில் அந்த வீடியோ ஓடிக்கொண்டிருந்தது.

பனிப்புகையும் மேகங்களும் திடீர் கூட்டணி அமைத்துத் தழுவிக்கொண்டிருந்த உயரமான மலையுச்சிகள், வானில் ஏறத்தாழ சொர்க்கத்துக்கு அருகில் இருந்தன. கொஞ்சம் முயன்றால் மலையுச்சியிலிருந்து உயிரோடே சொர்க்கத்துக்குச் சென்று ரம்பா, ஊர்வசிக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு வந்துவிடலாம். மலைமுகடுகளுக்கு முன்னால் உயர உயரமான கட்டிடங்கள். கட்டிடங்களுக்கு நடுவே பூங்காக்கள். புல்வெளிகள். நடைபாதைகள். எல்லா இடங்களிலும் உலகின் அத்தனை அழகிகளையும் ஒரே வளாகத்துக்குக் கொண்டுவந்ததுபோல் அழகிய இளம் பெண்களும், அவர்களை ஏக்கத்துடன் பார்த்தபடி ஆண்களும் நடக்கிறார்கள். அவர்கள் ஃபுட்கோர்ட்டில் கையில் பர்கருடன் வெடித்துச் சிரிக்கிறார்கள். கணினித் திரையை வெறிக்கிறார்கள். யோகா செய்கிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். அவர்கள் மூச்சா போவதைத் தவிர அனைத்துக் காரியங்களையும் காண்பித்துவிட்டு, ‘ஹைக்ரோ இன்ஃபோ டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் ட்ரெய்னிங் வில்லேஜ், ஹெச்ஆர் ஹெட் பேசுகிறார்:

“It is a dream of almost every Indian engineering student to step into Hi-Grow’s training centre…” என்று கூறுவதை காரில் பயணித்தபடி சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்த கௌதமின் முழுப் பெயர் கௌதம்குமார். வயது: இந்திய ஆண்களின் சட்டபூர்வ திருமண வயது (21). அப்பாவும் அம்மாவும் சென்னையில் டாக்டராக இருக்கிறார்கள். டாக்டர் என்றால் சும்மா பாரஸிட்டமால் எழுதித் தரும் டாக்டர்கள் அல்ல. அப்பா, கார்டியாலஜிஸ்ட். அம்மா, கைனகாலஜிஸ்ட். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு லட்சலட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

கௌதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ ட்ரிபிள் இ-யில், இறுதி CGPA பத்துக்கு 8.9 வாங்கி, கேம்பஸ் தேர்வில் ஹைக்ரோ நிறுவனத்தில் ஸாஃப்ட்வேர்  இன்ஜினீயராகத் தேர்வாகி இதோ ஆறு மாதப் பயிற்சிக்காக ஹைக்ரோ ட்ரெய்னிங் சென்டருக்குச் சென்றுகொண்டிருக்கிறான்.

கௌதம் அழகாக... வேண்டாம். அவனுக்கு முகஸ்துதி பிடிக்காது என்பதால், இன்ஸ்டாகிராமில் அவனை 8,000 இளம் பெண்கள் பின்தொடர்வதிலிருந்து அவன் அழகின் ஈர்ப்பைத் தெரிந்துகொள்ளலாம். சரியாக நாற்பது வினாடிகளுக்குள் அவனுடைய ஐஃபோன் டென் எஸ் மேக்ஸ் மொபைலிலிருந்து எந்தச் சத்தமும் வராவிட்டால் பதற்றமாகிவிடுவான். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டுவிட்டு, இரண்டு நிமிடங்களுக்கு இரு முறை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று பார்ப்பான். அப்பாவிடம் அடம் பிடித்து இரண்டே கால் லட்சத்திற்கு Duke 390 பைக் வாங்கியிருக்கிறான். நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் 20 எபிஸோடுகளையும் பார்த்திருக்கிறான். வாரத்துக்கொரு முறை மால்களுக்குச் சென்று குறை உடை பெண்களை நிறை நேரம் நோக்குவான். நண்பர்களோடு சேர்ந்து அப்பாவைத் திட்டுவான். சந்தேகத்துக்கே இடமின்றி கௌதம் ஒரு நவீன இந்திய இளைஞன்.

அருகில் அமர்ந்திருந்த கௌதமின் நண்பன் அருண், “எத்தனை தடவைடா பாப்ப? அங்கதான போய்ட்டிருக்கோம்” என்றான். கௌதம் யூடியூபை பாஸ் செய்துவிட்டு அருணைப் பார்த்துச் சிரித்தான். டிரைவர் காரை மெதுவாகத்தான் ஓட்டிக்கொண்டிருந்தார். கார்க் கதவை ஊடுருவி, குளிர் உடலுக்குள் நுழைந்துகொண்டிருந்தது. வெளியே குளிர் பிரதேசத்துக் காலை இளம் வெயில். சாலையோரம் ‘கோத்தகிரி 5 கி.மீ, ஹைக்ரோ ட்ரெய்னிங் வில்லேஜ் 2 கி.மீ’ என்ற போர்டைப் பார்த்தவுடன் கௌதமுக்குப் பரபரப்பாக இருந்தது.

சாலையின் வலது பக்க மேட்டில் உயர உயரமான யூகலிப்டஸ் மரங்கள். தைலம் தடவிய ஒரு இளம்பெண் நம்மைக் கடந்து செல்வதுபோல் காற்றில் யூகலிப்டஸ் வாசனை. சாலையின் இடது பக்கம், கடவுள் தடாலடியாகக் காட்சியை மாற்றியிருந்தார். இடது பக்க மலைச்சரிவில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள். தோட்டங்களிலிருந்து அடர்த்தியான பனிப்புகை, காற்றில் தவழ்ந்து சாலையை நோக்கி வந்துகொண்டிருந்தது. குன்னூர்-கோத்தகிரி சாலையில், இப்படி ஒரு அழகான பிரதேசத்தில் ட்ரெய்னிங் சென்டரை நிறுவிய ஹைக்ரோ சேர்மேன் எவ்வளவு பெரிய ரசனைக்காரனாக இருக்கவேண்டும்.

ஹைக்ரோ ட்ரெய்னிங் வில்லேஜின், கேட் நம்பர் 2-ல் இறங்கிக்கொண்டு காரை அனுப்பி வைத்தார்கள். எங்கு பார்த்தாலும் இளமை... இளமை... இளமை... உற்சாகச் சிரிப்பு டன், கண்களில் ஏராளமான கனவுகளுடன் இளம் ஆண்கள்... பெண்கள். ஆண்களைப் பார்க்கும் பழக்கம் கௌதமின் பரம்பரைக்கே கிடையாது என்பதால் பெண்களைக் கவனித்தான். பெண்களில் பாதி... தமிழ், மலையாளப் பெண்கள். மீதி இந்தி, பெங்காலி... என்று சகல மாநிலப் பெண்களும் இந்திய ஒருமைப் பாட்டை அழகாக உறுதி செய்துகொண்டிருந்தார்கள். முகப்புக் கட்டிடத்தின் சுவரில் ஒளிர்ந்துகொண்டிருந்த ஹைக்ரோ என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் கௌதமின் மனதில் ஒரு பெருமிதம்.

ஹைக்ரோ நிறுவனம் ஸாஃப்ட்வேர் இன்ஜினீயரிங், இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி மற்றும் அவுட்சோர்ஸிங் சேவைகளை அளித்து செமத்தியாகக் காசு பண்ணும் நிறுவனம். கேரளத்தைச் சேர்ந்த வாசுதேவ் மேனனின் கனவு. 1991-ல் கொச்சியில் சிறிய அளவில் ஒரு பிசினஸ் கன்ஸல்ட்டிங் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஹைக்ரோ, இப்போது ஏறத்தாழ 80,000 பணியாளர்களுடன் 18 நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது. 31 மார்ச் 2018 நிலவரப்படி இந்நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டல் 64,000 கோடி.

மைசூர், இன்ஃபோஸிஸ் க்ளோபல் எஜுகேஷன் சென்டரை மாதிரியாகக் கொண்டு கடந்த 2012-ம் ஆண்டு, இந்த பிரம்மாண்ட மான பயிற்சி நிலையம் துவக்கப்பட்டது. ஏறத்தாழ பதினைந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இப்பயிற்சி நிலையத்தில் ஆணுறையைத் தவிர எல்லாம் கிடைக்கும். இப்பயிற்சி மையத்தில் ஒரே சமயத்தில் 5,000 நபர்களுக்குப் பயிற்சியளிக்கும் வசதி உள்ளது. மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இரண்டு பிரம்மாண்டமான வட்ட வடிவக் கட்டிடங்கள். ஆறு ஃபுட் கோர்ட்கள். மாணவர்கள் தங்க 40 பிளாக்குகளில் 3,000 அறைகள். ஜிம்கள். ஸ்னோ பவுலிங் சென்டர், டென்னிஸ் கோர்ட்கள், மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்… ஷாப்பிங் மால்கள் என்று சகலமும் உண்டு.

கௌதமும், அருணும் செக்யூரிட்டியிடம், “அட் மின் ஆஃபிஸ் எங்க இருக்கு?” என்று கேட்டு விட்டு நடந்தார்கள். நிர்வாக அலுவலகத்திலிருந்து புதிய பயிற்சியாளர்கள் பேக்குடன் பேட்டரி கார்களில் தங்குமிடம் நோக்கிச் சென்று கொண்டி ருந்தார்கள். மெதுவாக நடந்து கொண்டிருந்த கௌதம், பிரதான சாலையிலிருந்து தனியாகப் பிரிந்து சென்ற சாலையில் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றுவிட்டான்.

மழை பெய்து ஈரமாகக் கிடந்த தார்ச்சாலை முழுவதும் மரங்களிலிருந்து ஏராளமான மஞ்சள் மற்றும் சிவப்புநிறப் பூக்கள் உதிர்ந்திருந்தன. அந்தப் பூக்களுக்கு நடுவே, பூக்களின் மீது தன் கால் படாதவாறு, நுனி நாக்கை லேசாக வெளியே நீட்டியபடி, நுனிக்காலால் பூக்களுக்கு இடையே காலை வைத்துக் கவனத்துடன் பூக்களை மிதிக்காமல் நடந்துகொண்டிருந்த பிங்க் நிறத்தில் சல்வார் அணிந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து கௌதம் அசந்துபோனான்.

அவளை வெறுமனே ‘அழகி’ என்று மொட்டையாகச் சொன்னால், உலகின் அத்தனை கிரிமினல் சட்டங்களின் கீழும் நீங்கள் தண்டிப்பீர்கள். எப்படிச் சொல்வது? ம்... நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரையிலும் பார்த்த மிக அழகிய பெண்ணொருத்தியை நினைத்துக்கொள்ளுங்கள். 1...2...3..... ஆச்சா? இந்தப் பெண், நிச்சயம் அந்தப் பெண்ணை விட அழகாக இருப்பாள். கடவுள் ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு காரியத்திற்காகப் படைக்கிறார். கடவுள் இவளை வெறுமனே அழகாக இருந்து, இந்த உலகத்தைப் பிரகாசமாக ஒளிர வைப்பதெற்கென்றே படைத்திருக்கிறார்.

கௌதம் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். தங்கக் கரைசலில் சந்தனத்தைக் கரைத்தாற் போன்ற நிறம். சற்றே குழந்தைத்தனம் கலந்த அழகிய முகம். ஏற்கெனவே பளிச்சென்றிருந்த அவள் முகத்தை மலைப்பிரதேசக் குளிர்ச்சி மேலும் பளிச்சாக்கியிருந்தது. இன்னும் இந்த உலகில் பல்லாயிரம் கவிதைகளை எழுதத் தூண்டும் அகன்ற, உயிர்ப்பான விழிகள். சிறிய, சீரான உதடுகள். மொத்தத்தில் கடவுள் தனது படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்தபோது படைக்கப்பட்ட பேரழகி.

(தொடரும்...)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in