பாப்லோ தி பாஸ் 14: குடிசைகள் இல்லாத மெதஜின்..!

பாப்லோ தி பாஸ் 14: குடிசைகள் இல்லாத மெதஜின்..!

 ஹ சியெண்டா நேப்போல்ஸில் இருந்து திரும்பியதும் சில காலத்துக்கு பாப்லோவின் நினைவற்று இருந்தாள் விர்ஜீனியா. பாப்லோவும் தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்தான். ஆனால், அவர்கள் இருவரும் மீண்டும் சந்திக்க வேண்டிய தருணத்தை பாப்லோவே முடிவு செய்தான்.

விர்ஜீனியாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பாப்லோ அவளைத் தன் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். அதனால் பகோட்டாவில் இருந்த அவளை மெதஜின் நகரத்துக்கு வரவழைத்தான்.

“சொல்லு பாப்லோ… நான் என்ன பண்ணணும்..?”

“ஒண்ணும் பண்ண வேண்டாம். நான் அரசியல்ல நிக்கிறேன். நீ என் கூட நில்லு. மீடியாக்கிட்ட நான் எப்படிப் பேசணும்னு சொல்லிக் கொடு. அது போதும்..!”

“அது போதுமா… வேற எதுவும் வேண்டாமா..?” – அவளது பார்வையிலும் கேள்வியிலும் மோகம் தொக்கி நின்றது.

“அதெல்லாம் அப்புறம்… இப்ப நான் உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன் வா...” என்று புன்னகைத்தபடியே அவள் கரத்தைப் பற்றி இழுத்தான். கார் மொராபிட்டாவை நோக்கிச் சென்றது.

பாப்லோ அரசியலில் இரண்டாவது முறையாக நுழைவதற்குச் சில மாதங்கள் முன்பு, தன் சகாக்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மொராபிட்டா எனும் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டான். அந்தக் கிடங்குக்கு அருகில், அந்தக் கிடங்கையே தங்களின் வயிற்றுப் பாட்டுக்காக நம்பியிருந்தவர்களின் குடிசைகள் இருந்தன. அந்தத் தீ விபத்தில் அவை அனைத்தும் சாம்பலாகின. கண் இமைக்கும் நேரத்தில் பலரும் வீடிழந்து நின்றார்கள்.

பாப்லோ அங்கு போய்ச் சேர்ந்தபோது, அவனுக்கு முன்பே அரசியல்வாதிகள் பலர் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் “கவலைப்படாதீர்கள்… உங்களுக்கு நாங்கள் புதிதாக வீடுகள் கட்டித் தருகிறோம்” என்று வழக்கம் போல பொய்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் பாப்லோவைப் பார்த்ததும், “இங்க என்ன பண்ற..?” என்று கேட்டார்கள்.

“இவங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கேன். கரப்பான்பூச்சிகளுக்கும் எலிகளுக்கும் மத்தியில் வாழுற இவங்களுக்கு வீடு கட்டித் தரப்

போறேன்..!”

அவன் சொன்ன பதிலைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். “இவனாவது வீடு கட்டித் தர்றதாவது...” என்று ஏளனம் செய்தார்கள். ஆனால்,  தான் சொன்ன வார்த்தைகளை நிஜமாக்க அவன் விரும்பினான். “பட்ஜெட் கொடுங்க… நல்ல இடமா பாருங்க. வீடு கட்டலாம்...” என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

அப்படித்தான் தொடங்கியது ‘மெதஜின் சின் துகுரியோஸ்’. அதாவது, ‘குடிசைகள் இல்லாத மெதஜின்..!’

வீடு என்றால் ஏதோ நான்கு சுவர்கள்,

மேலே ஒரு கூரை என்று நினைத்துவிட வேண்டாம். செங்கலும் சிமென்ட்டும் வைத்து எழுப்பப்பட்ட சுவர்கள்; டைல்ஸ் கற்களால் அமைக்கப்பட்ட கூரை; உள்ளே ஒரு சமையலறை, கழிவறையுடன் கூடிய இரண்டு படுக்கையறை என ஒவ்வொரு வீடும் மத்திய வர்க்க வீடுகளுக்கு இணையாக இருந்தன. அப்படி ஒன்றல்ல இரண்டல்ல... சுமார் 5 ஆயிரம் வீடுகள் கட்டித் தர திட்டமிட்டிருந்தான். அதில் சுமார் ஆயிரம் வீடுகளைத் தன் வாழ்நாளில் கட்டினான்.

அந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்குத்தான் விர்ஜீனியாவை அழைத்திருந்தான் பாப்லோ. விர்ஜீனியாவுக்குள் நீண்ட நாட்களாகவே ‘பாப்லோ அவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வான்?’ என்ற கேள்வி குடைந்து கொண்டிருந்தது. ஆம்… அவளுக்கு பாப்லோ எப்படிச் சம்பாதிக்கிறான் என்பதைவிட எப்படிச் செலவழிக்கிறான் என்பதை அறிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. இப்படி ஒரு திட்டத்துக்கு அவன் செலவழிப்பதைப் பார்த்து, அவளுக்கு அவன் மீதான நேசம் கூடியது.

***

கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு வந்த களைப்பில் அவர்கள் உறங்கினார்கள். கலவி தந்த களிப்பில் அவர்கள் தூக்கம் களைந்தார்கள். ஒரு பளிங்குச் சிலை போலப் படுத்துக்கிடந்த விர்ஜீனியாவின் நெற்றியில் முத்தமிட்டான் பாப்லோ. இதழின் ஈரத்தால் கண் விழித்தாள்.

“முத்தத் திருடா…”

“ஹா… ஹ்ஹ்ஹா…”

“சரி வா… உனக்கு நான் சில விஷயங்கள் கத்துத் தருகிறேன்...”

“என்னது விர்ஜீனியா?”

“இரண்டு விஷயங்களை நீ ஃபாலோ பண்ணணும் பாப்லோ… முதல்ல, எந்த ஒரு கூட்டத்துலயும் பேசும்போது, ரொம்பவும் முக்கியமான, மக்களின் ஆர்வத்தைத் தூண்டுற மாதிரி, உண்மையான சில தகவல்களைச் சொல்லணும். அதையும், நகைச்சுவையா சொல்லிப் பழகணும். ஏன்னா, எல்லோருக்கும் நல்ல ஜோக்கைக் கேட்டு சிரிக்கிறதுக்குப் பிடிக்கும்..”

“டன்… இரண்டாவது..?”

“பத்திரிகைகாரங்க கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தேவையில்லை பாப்லோ. அந்தக் கேள்வியை மையப்படுத்திய பதிலா இருக்கணும் அப்படிங்கிறதும் அவசியமில்லை. நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ அதை மட்டும் சொல்லு…”

அவள் சொல்படியே நடந்தான் பாப்லோ. ஒரு கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அவனை மடக்கினார்கள்.

“சுடுகாட்டுல இருந்து திருடன கல்வெட்டுகளை வெச்சு புதுசா சைக்கிள் பிசினஸ் ஆரம்பிக்க முடியுமா..?”

அதுவரையில், தான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்றும், அண்ணன் நடத்தி வந்த சைக்கிள் பிசினஸுக்குத் தானே உரிமையாளர் என்றும் மக்களை நம்ப வைத்திருந்தான். ஆனால், பத்திரிகையாளர்களுக்கு அவனது பின்னணி தெரியும் என்பதால் இந்தக் கேள்வி.

“அதுக்கு எவ்வளவு செலவாகும்னு நீங்களே போய் கண்டுபிடியுங்களேன். கண்டுபிடிச்சதுக்கு அப்புறம், ராத்திரியில சுடுகாட்டுக்குப் போக பயப்படாதவங்களோடு போய் கல்வெட்டுகளை எடுத்துட்டு வாங்க. அப்புறம் நீங்களும் ஒரு பிசினஸ்மேன் ஆகிடலாம்” என்று நையாண்டியாகப் பதில் சொன்னான் பாப்லோ. பத்திரிகையாளர்களின் முகத்தில் ஈயாடவில்லை.

அவன் போன இடங்களில் எல்லாம் பிரசாரம் செய்தது இதைத்தான்: “இது நம்முடைய நாடு. நமக்காகக் கொள்கை வகுக்க அமெரிக்கர்கள் யார்..? கொலம்பியச் சட்டத்துக்கு அமெரிக்கப் பொறுப்பாளர்கள் தேவையில்லை. கொலம்பியாவின் பிரச்சினையை கொலம்பியர்களே எதிர்கொள்வதற்கான சுதந்திரம் வேண்டும். கொலம்பியாவில் ஒருவர் குற்றம் செய்தால் அவர் கொலம்பியச் சட்டத்தின்படியே விசாரிக்கப்பட வேண்டும்..!”

அந்த வார்த்தைகள் மக்களை மயக்கின. தேர்தலில் வென்றான் பாப்லோ..!

இயேசுவுக்கும் ஒரு வீடு..!

‘லா வயலென்ஸியா’ கலவரம் நடைபெற்ற போது, சாவின் விளிம்பைத் தொட்டு வந்தது பாப்லோவின் குடும்பம். அப்போது பாப்லோவின் தாய் ஹெர்மில்டா, ‘இந்த ஆபத்தில் இருந்து எங்களைக் காப்பாற்றினால், நான் உனக்கு ஒரு தேவாலயம் கட்டுகிறேன்’ என்று அட்டோச்சாவின் குழந்தை இயேசுவிடம் மன்றாடினாள். பல ஆண்டுகளுக்கு அந்தச் சத்தியத்தை நிறைவேற்ற ஹெர்மில்டாவால் முடியாமல் இருந்தது. அது, பாப்லோவின் மூலமாக நிறைவேறியது. ‘குடிசைகள் இல்லாத மெதஜின்’ திட்டத்தில், தங்களைக் காப்பாற்றிய அந்தக் கடவுளுக்கு ஒரு தேவாலயத்தையும் எழுப்பினான் அவன்.

அது மட்டுமல்ல… ‘சிவிஸ்மோ ஆன் மர்ஷா (சமூக எண்ணம் கொண்ட இயக்கம்)’ எனும் தனது அமைப்பின் மூலம், ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தான் பாப்லோ. எனவே, கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு நிறைய பணத்தை அள்ளிக் கொடுத்துத் தரமான மைதானங்களை, பார்வையாளர் அரங்குகளை ஏற்படுத்தினான் பாப்லோ.

அப்படியான ஒரு ஸ்டேடியத்தின் திறப்பு விழாவில் எடுக்கப்பட்டதுதான் இந்தப் படம்.

(திகில் நீளும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in