பாப்லோ தி பாஸ் 13: ஹோராஸ்..!

பாப்லோ தி பாஸ் 13: ஹோராஸ்..!

மேகங்களைக் கீறிப் பறந்து கொண்டிருந்தது அந்த விமானம். ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த அவள், விரைவில் தான் மணம் முடிக்கப் போகிற அனிபல் துர்பேவின் தோளில் கண் மூடிச் சாய்ந்திருந்தாள். அனிபல், அவள் கூந்தலை வருடிக்கொண்டிருந்தான்.

“இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கப் போகிறோம்…” – கரகர குரலில் விமானியின் அறிவிப்பு.

கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்தவள் போல ஜன்னல் வழியே கீழே பார்த்தாள் அவள். பார்த்த மாத்திரத்தில் வியந்து போனாள். மலைகளுக்கு நடுவே இருந்த அந்த மாளிகையைப் பார்த்தாள். திசையெங்கும் பச்சை. அந்த இடத்தைத் தன் கண்களுக்குள் வாங்கியதும், தன் மனதில் ஒரு அமைதி பரவுவதை அவள் உணர்ந்தாள்.

“வாட் எ பியூட்டிஃபுல் பிளேஸ்..! ரொம்பப் பெரிய இடமா இருக்கும் போல. நிச்சயமா இந்த ட்ரிப் நமக்கு ‘வொர்த்’ ஆன ஒண்ணா இருக்கும்னு நினைக்கிறேன் அனி…”

சொல்லியபடியே மீண்டும் அனிபலின் தோளில் சாய்ந்தாள். விமானியின் கேபினில் இருந்து ராபெர்ட்டோ டோர்ரெஸின் ‘கபால்லோ வீயோ’ எனும் பாடல் காற்றில் மிதந்து வந்தது. அவள் புன்னகைத்துக் கொண்டாள். விமானம் ரன்வேயில் இறங்கியது.

“வெல்கம் டு ஹசியெண்டா நேப்போல்ஸ் கிங்டம். ஐ ஆம் பாப்லோ எஸ்கோபார்..” என்று சொல்லியவாறே அவளிடம் கை நீட்டினான் பாப்லோ.

அவளும் கைகொடுத்தவாறே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். “விர்ஜீனியா வல்லேயோ…”

***

விர்ஜீனியா வல்லேயோவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ஒரே ஒரு வார்த்தையில் சொல்லலாம். பேரழகி. இன்னும் கொஞ்சம் யோசித்துச் சொல்ல வேண்டுமென்றால், இப்படிச் சொல்லலாம். பரந்துபட்ட அறிவைக் கொண்ட பேரழகி. அந்த அழகும் அறிவும் அவளுக்கு கொலம்பிய ஊடகங்களில் தொகுப்பாளராகப் பணியாற்றுவதற்கான கதவுகளைத் திறந்துவிட்டன.

மிகுந்த செல்வச் செழிப்பு கொண்ட குடும்பத்தில் பிறந்தவள் விர்ஜீனியா. அவளது குடும்பத்தில் நிதி அமைச்சர், ராணுவத் தளபதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதவிகளை அலங்கரித்தவர்கள் எனப் பலரும் அவளுக்கு உறவினர்களாக இருந்தனர். ஊடகங்களில் நட்சத்திரமாக அவள் ஒளிர்வதற்கு அவளது அழகும் அறிவும் துணையாக இருந்தன என்றாலும், அவளது குடும்பப் பின்னணி, மதிப்புக் கூட்டல் விஷயமாக இருந்தது என்பதில் தவறில்லை.

ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர், உள்ளாடை விளம்பரங்களில் நடிப்பு எனப் பல பணிகளைச் செய்துவிட்டு, 70-களில் காட்சி ஊடக உலகத்தில் நுழைந்தாள் விர்ஜீனியா. 1998-ம் ஆண்டு வரை, கொலம்பியாவில் மூன்றே மூன்று தொலைக்காட்சி ஊடகங்கள்தான் இருந்தன. அதுவும் அரசு ஊடகங்கள். அதில் இரண்டு கமர்ஷியல் சேனல்கள். ஒன்று மட்டுமே நியூஸ் சேனல். விர்ஜீனியா இரண்டிலும் பிரகாசமாக ஜொலித்தாள்.

பொழுதுபோக்கு சேனலில் நிகழ்ச்சிகள் செய்ததால் செல்வந்தர் வீட்டு ஆண்களும், செய்தி சேனலில் பணியாற்றியதால் அரசு அதிகாரிகள் பலரும் அவளுக்கு நெருக்கமானார்கள். இதனால் எந்த ஒரு ‘ஸ்கூப்’பையும் வேறு எந்தப் பத்திரிகையாளர்களுக்குக் கிடைப்பதற்கு முன்பு, விர்ஜீனியாவிடம் கொண்டு வந்துவிடுவார்கள் அவர்கள்.

இந்தப் பணி ரீதியான நெருக்கம், பல நேரங்களில் உடல் ரீதியான நெருக்கமாகவும் மாறியது. இதனால் அவளுக்குப் பல ‘பாய் ஃப்ரெண்ட்’கள் இருந்தனர். அவர்களில் மணம் முடித்தவர்களும் உண்டு. மணம் ஆகாதவர்களும் உண்டு. அவளைக் கரம் பிடிக்கத் தங்கள் மண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களும் உண்டு. அப்படித்தான் மூன்றாவதாகவோ அல்லது நான்காவதாகவோ அவளுக்கு அனிபல் துர்பே நட்பானான்.

அனிபல் துர்பே, கொலம்பியாவின் 25-வது அதிபராக இருந்த, அமெரிக்காவின் நாடு கடத்தல் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஜூலியோ சீஸர் துர்பேவின் மருமகன். அழகன், செல்வந்தன், முன்னாள் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற மூன்று காரணங்கள் போதுமானதாக இருந்தது, அவனிடத்தில் விர்ஜீனியா காதல் கொள்வதற்கு..! அனிபலுக்கோ அவள் அழகியாக இருந்தது ஒன்றே போதுமானதாக இருந்தது.

போதைப் பொருள் கடத்தல்காரர்களை ஒழித்துக்கட்ட நினைத்த அதிபருக்கு, போதைப் பொருள் பயன்படுத்தும் ஒருவன் மருமகனாகக் கிடைத்தது விதியின் நகைமுரண்களில் ஒன்று. அவனும் அவளும் ஹசியெண்டா நேப்போல்ஸுக்கு பாப்லோவின் அழைப்பில் பேரில் சுற்றுலா வந்திருந்தார்கள். சுற்றுலா என்று சொல்லித்தான் விர்ஜீனியாவை அனிபல் அழைத்து வந்திருந்தான். உண்மையில், அவன் பாப்லோவுடன் பிசினஸ் பேசுவதற்காகவே வந்திருந்தான்.

விர்ஜீனியா செய்த நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபல மானது ‘24 ஹோராஸ்’. அதாவது, 24 மணி நேரங்கள். அன்றைய தினம் நடந்த முக்கியமான உலக, நாட்டு நடப்புகளை அலசும் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தன் வாழ்க்கையில் ஹசியெண்டா நேப்போல்ஸுக்கு வந்த 24 மணி நேரத்தில் ஒரு பெரும் புயல் வீசப் போவதை அவள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

***

ஹசியெண்டா நேப்போல்ஸில் அவர்களைப் போலவே, பல நாடுகளிலிருந்து கடத்தல்காரத் தம்பதிகள் வந்திருந்தனர். பரஸ்பர அறிமுகங்கள், இடங்களைச் சுற்றிக்காட்டுதல் ஆகியவை முடிந்த பிறகு, அவரவர் தங்களுக்கு வசதியான விஷயங்களைக் கவனிக்கச் சென்றார்கள். சிலர் உண்பதற்கு, சிலர் குடிப்பதற்கு, சிலர் காமத்தில் திளைப்பதற்கு, சிலர் உறங்குவதற்கு எனக் கூட்டம் கலையத் தொடங்கியது.

விர்ஜீனியா அங்கிருந்த ஏரியில் நீந்தச் சென்றாள். மாலை நேர வெயிலும், நீரின் குளுமையும், பல மைல் தூரம் விமானத்தில் வந்ததால் ஏற்பட்ட களைப்பும் விர்ஜீனியாவுக்கு ஒருவிதமான மோன நிலையை ஏற்படுத்தி இருந்தன. அவள் கவனம் தப்பிய நிமிடத்தில், அவளைச் சுழல் ஒன்று ஆட்கொண்டது. அவள் காலை யாரோ பிடித்து உள்ளுக்கு இழுப்பது போலத் தோன்றியது. அவள் மூழ்க ஆரம்பித்தாள். குரல் எழுப்ப முடியவில்லை. கைகளை நீருக்கு மேலே அசைத்தாள்.

ஏரிக்கரையில் மது அருந்திக் கொண்டிருந்த அனிபலும் பாப்லோவின் இதர நண்பர்களும் விர்ஜீனியாவின் செயலை விளையாட்டுத்தனம் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், பாப்லோ மட்டுமே அவள் மூழ்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தான். உடனடியாக நீரில் குதித்து அவளிடம் சென்றான். அவனது கரங்கள் அவள் உடல் முழுவதும் மின்சாரம் போலத் தீண்டின. அவளை ஒரு பஞ்சு போல ஏந்தி கரைக்கு வந்தான் பாப்லோ.

மரண பயம் தெளிந்து, உடல் உதறல் நின்று, தலை துவட்டியவாறே விர்ஜீனியா கேட்டாள்.

“எப்படி பாப்லோ உனக்கு மட்டும் நான் மூழ்குறேன்னு தெரிஞ்சது…?”

“மத்தவங்க எல்லோரும் உன் கை அசைவுகளைப் பார்த்தாங்க. நான் உன் கண்ணில் தெரிஞ்ச கலக்கத்தைப் பார்த்தேன்” என்று சொன்னவாறே அவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். அவன் மார்பில் சாய்ந்து புன்னகைத்தாள் விர்ஜீனியா. எங்கேயோ தூரத்தில் ‘கபால்லோ வீயோ’ பாடலின் வரிகள் ஒலிப்பது போல இருந்தது அவளுக்கு. அந்தப் பாடலின் வரிகள் இப்படியாக இருந்தன:

‘காதல் இப்படி வந்தால், அதை உணரக் கூட முடியாது உன்னால்…’

(திகில் நீளும்...)

சார்ரோவும் பேந்தர் குயினும்..!

அனிபல் துர்பேவின் போதைப் பழக்கத்தை வெறுத்த விர்ஜீனியா, அவனிடமிருந்து விலகினாள். ஹசியெண்டா நேப்போல்ஸுக்கு வந்து சென்ற சில நாட்களில் இது நடந்தது.



அனிபலின் நட்பைப் பெறுவதற்கு முன்பு, விர்ஜீனியா தன்னைவிட 20 வயது மூத்த ஒரு தொழிலதிபரை மணம் செய்திருந்தாள். ஆனால் அந்த மணம், மகிழ்ச்சியைத் தரவில்லை. எனவே, அவரிடமிருந்து விவாகரத்துப் பெற முடிவெடுத்தாள் விர்ஜீனியா. ஆனால், அவரோ அவளுக்கு விவாகரத்துத் தராமல் கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் அனிபலைச் சட்ட பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளத் தடை ஏற்பட்டது. இந்நிலையில், அனிபலுடன் உறவு முறிந்தது. அனிபல் அல்லாது வேறு யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றாலும் முதலில் அவள் விவாகரத்துப் பெற வேண்டும். ஆனால் அதற்கோ அவளது வயதான கணவர் தடையாக இருந்தார். இந்த விஷயம் பாப்லோவுக்குத் தெரிய வந்தது.

“கவலைப்படாதே… நாளை மறுநாள் நீ சுதந்திரமான மனுஷியாக இருப்பாய்” என்று சொல்லிப் புன்னகைத்தான் பாப்லோ. என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியாதா என்ன..? அவனது உருட்டல், மிரட்டல்களுக்குப் பயந்து அந்தத் தொழிலதிபர் விவாகரத்துப் பத்திரங்களில் கையெழுத்திட்டுவிட்டார்.

அவள் விவாகரத்துப் பெற்ற நாளில் பாப்லோவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் அவன் இப்படி எழுதியிருந்தான்:
“என் சுதந்திரமான பெண் சிறுத்தைக்கு (பேந்தர் குயின்)

எல் சார்ரோ..!”

அது சரி… அதென்ன ‘எல் சார்ரோ..?’ அது பாப்லோவுக்கு விர்ஜீனியா கொடுத்த செல்லப் பெயர். அதிகார வர்க்கத்திடமிருந்து ஏழைகளைக் காக்கும் கற்பனைக் கதாபாத்திரம்தான் சார்ரோ. அதை உருவாக்கியவர் அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லி. உருவாக்கிய ஆண்டு 1919. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தன் 100-வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறான் சார்ரோ..!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in