விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 28: மக்களிசைப் பாடகி சின்னப்பொண்ணு

கத்திரிக்காய் கொஸ்தும்...பூண்டு இல்லாத வத்தக்குழம்பும்..!
விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 28: மக்களிசைப் பாடகி  சின்னப்பொண்ணு

மக்களிசை மன்றத்தில் ரொம்பவே பிஸியான பாடகி தஞ்சை சின்னப்பொண்ணு. தமுஎகச மேடை வழியாக முழங்க ஆரம்பித்தவர் தற்போது மேடைக்கச்சேரி, சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என அத்தனை தளத்திலும் தன்னை நிலைநிறுத்தி வருகிறார். நிகழ்சிக்கு செல்லும் இடங்களில் குரல்வளம் காப்பதற்காக சாப்பாட்டுக்கு மிகுந்த கவனம் கொடுக்கும் சின்னப்பொண்ணு, தேர்ந்த சமையல் கலைஞரும்கூட. காளையார்கோவில் அருகிலுள்ள சூராணத்தில் பிறந்தவர். தனது தாயார் மூன்று விதமாக சமைப்பதைப் பார்த்தும் உண்டும் தானும் சிவகங்கைச் சீமை சமையலைக் கற்றுக் கொண்டார். ஆனால், வாழ்க்கைப்பட்டு தஞ்சாவூர் வந்த பிறகு டெல்டா சமையல் அவருக்கு முற்றிலும் புதிதாக இருந்தது.

 “வாக்கப்பட்டு வந்தது பெரியகுடும்பம். வேளைக்கு பத்திருபது பேர் சாப்பிடணும். ‘நானும் சமைக்கிறேன்’னு கிளம்புனா ஓரகத்திங்க எல்லாம் சிரிக்கிறாங்க. ஏன்னா இங்கவுள்ள முறை எனக்குத் தெரியல. ஆனாலும் விடல. அவங்கள கேட்டுக் கேட்டு இந்தப் பக்கத்துச் சமையல கத்துகிட்டேன். ஒரே மாசத்துல அவங்களல்லாம் விட நல்லா சமைக்க ஆரம்பிச்சுட்டேன். நான் வைக்கிற வத்தக்குழம்புக்கு அந்த ஊருக்கே நாக்குல எச்சில் ஊறும். அசைவத்துல, வயல் நண்டு ரசம், மட்டன் சுக்கா இதிலெல்லாம் நான் ஸ்பெஷல்” என்று அவர் சொல்லும்போதே எனக்கும் நாக்கு நமநமத்தது.

``நிகழ்ச்சிகளுக்குப் போவும்போது ராத்திரியில இட்லிதான் சாப்பிடுவேன். இட்லிக்கு சாம்பாரைவிட கத்திரிக்காய் கொஸ்துதான் சூப்பர் காம்பினேசன். அதிலயும் சிதம்பரம் கொஸ்துவை சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணவிலாஸில்தான் சாப்பிடணும். அங்க சாப்பிடும்போதுதான் அசலான கொஸ்துவைச் சாப்பிட்ட திருப்தி கிடைக்குது. அதேபோல, அங்க வைக்கிற வத்தக்குழம்புக்கு ஒரு தனி ருசி இருக்குங்க. நானும் வத்தக்குழம்பு வைப்பேன். பூண்டு நெறையா போடுவேன். ஆனா, இங்க பூண்டே போடாம வப்பாங்க” என்று கிருஷ்ணவிலாஸ் வத்தக்குழம்பின் சுவைக்கு காரணத்தையும் சொன்னார்.

சிதம்பரம் கீழவீதியில் 1991-ல் கே.கோபாலன் தனது சகோதரர்களுடன் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணவிலாஸைத் துவங்கினார். தில்லை கோயிலுக்கு வரும் பக்தர்கள் நல்ல சாப்பாட்டை த் தேடி அலைவதைப் பார்த்த கோபாலன், சிறிய வீட்டில் உணவகத்தைத் தொடங்கினார். தற்போது கோபாலனின் மகன் அருண் உணவகத்தை நிர்வகிக்கிறார். அவருக்கு உதவியாக கோபாலனின் தம்பி ராஜா கைகோத்து நிற்கிறார்.

“இத நாங்க தொழிலா பார்க்கல, பசின்னு வர்றவங்களுக்கு ருசியான சாப்பாட்டை தர்ற  சேவையாதான் பார்க்கிறோம். சாப்பிடற யாருக்கும் சாப்பாட்டால எந்தவித கெடுதலும் வந்துடக்கூடாதுன்றதுல கவனமா இருக்கோம். உணவக சுத்தம், பொருட்களின் தரம், திருப்தியான சேவை ஆகியவற்றில் அக்கறையோடு இருக்கோம்'' என்கிறார் அருண்.

மதிய நேரத்தில் இங்கே வத்தக்குழம்பு சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், மிளகுசாதம் என வகைவகையான சாதம் கிடைக்கும். நெய்பருப்பு போளி, பால்பாசந்தி, ஆகியவையும் இங்கே ஸ்பெஷல். அண்மையில்தான் மதிய சாப்பாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். வத்த குழம்புதான் இங்கே வருபவர்களின் விருப்ப மெனு. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், வெளி மாநில, வெளிநாட்டு பக்தர்கள் என இந்த ஹோட்டலுக்கு கலவையான சுவைப் பிரியர்கள் இருக்கிறார்கள். இனி, வத்தக்குழம்பு, கொஸ்து செய்முறையைப் பார்க்கலாம்.

பூண்டு இல்லாத வத்தக்குழம்பு (ஐந்து நபர்களுக்கு)

தேவையான பொருட்கள்: சுண்டை வற்றல் 50 கிராம், மிளகாய் 25 கிராம், மல்லி 100 கிராம், உளுத்தம் பருப்பு 5 கிராம், கடுகு 5 கிராம், கடலைப் பருப்பு 100 கிராம், காரப்பொடி 25கிராம், நல்லெண்ணெய் 25மிலி, சின்னவெங்காயம் ஒரு கையளவு, சிறிதளவு தேங்காய், புளி 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவை தேவையான அளவு.

செய்முறை: முதலில் புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். அடுத்து கடலைப் பருப்பு, மிளகாய் (இரண்டிலும் தாளிக்க கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்ளவும்), மல்லி ஆகியவற்றை நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின்னர், வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு சிறிதளவு, மிளகாய் 5, சுண்டவற்றல் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறம் வரும்வரைக்கும் வறுக்கவும். அத்துடன், உரித்துவைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். அதன்பின் புளித்தண்ணீரை ஊற்றி அதில் காரப்பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும். கொதித்தபிறகு மிக்சியில் அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டு மேலே பெருங்காயத்தூளையும் போடவும். நன்கு கொதி வந்தவுடன் சிறிதளவு தேங்காய் அரைத்து ஊற்றி இறக்கிவிடலாம். குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்திருக்க வேண்டுமென்றால் தேங்காய் ஊற்றக்கூடாது.

கத்திரிக்காய் கொஸ்து (ஐந்து நபர்களுக்கு) தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் 200 கிராம், சின்னவெங்காயம் 100 கிராம், புளி 25 கிராம், மல்லி 100 கிராம், மிளகாய் 100 கிராம், கடலைப் பருப்பு 100 கிராம், காரப்பொடி 25 கிராம், உளுந்தம் பருப்பு 5 கிராம், கடுகு 5 கிராம், பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு, நல்லெண்ணெய் 50 மிலி.

செய்முறை: புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பு, மிளகாய், மல்லி ஆகியவற்றை வறுத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும். பிறகு, வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கி, கரண்டியால் நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். இறக்கிவைத்துவிட்டு மீண்டும் வாணலியில்  நல்லெண்ணெய் ஊற்றி வரமிளகாய் 5, கொஞ்சம் கடலைப்பருப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு தாளித்து அதில் புளிக்கரைசலை ஊற்ற வேண்டும். அத்துடன் பெருங்காயத் தூள் உப்பு ஆகியவற்றையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். கொதித்தவுடன் கத்திரிக்காய் - சின்ன வெங்காய மசியலைப் போட்டு நன்கு கிளறவேண்டும். கொதிவரும்வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அதன் பிறகு, மிக்சியில் அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டு கிளறிவிட்டு அதன் மேலே நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். இறக்குவதற்கு முன்பு கொத்து மல்லித்தழை போட்டு இறக்கினால் சுவையுடன் மணமும் அமர்க்களப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in