விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 27: கோவை முன்னாள் எம்பி கே.சுப்பராயன்

வீட்டு தோசையும்... தக்காளி- கத்திரி சட்னியும்..!
விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 27: கோவை முன்னாள் எம்பி கே.சுப்பராயன்

கா.சு.வேலாயுதன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும், கோவையின் முன்னாள் எம்.பி-யுமான தோழர் கே.சுப்பராயன் திருப்பூரைச் சேர்ந்தவர். கோவை நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் அவர் விரும்பிப் போய் சாப்பிடும் சாப்பாட்டுக்கடை பூ மார்க்கெட் அருகே விசிவி ரோடு - தேவாங்கப் பேட்டை 3-வது சந்திப்பில் இருக்கும் அக்கா கடை!

‘‘எங்கள் கட்சியின் மாவட்ட அலுவலகமான ஜீவா இல்லம் அருகில் அந்தக் கடை இருப்பதும், அங்கு அனைத்து உணவு வகைகளும் வீட்டு முறைப்படி சமைப்பதும்தான் தொடர்ந்து நான் அங்கே சாப்பிடக் காரணம். காலையில், மாலையில் டிபன் மதியம் சாப்பாடு எல்லாமே நம் வீட்டில் செய்து சாப்பிடுவது போலவே இருக்கும். கிட்டத்தட்ட 20 வருசமா நமக்கு அந்தக் கடைதான். அங்கேயே சென்றும், பார்சலில் வரவழைத்தும் சாப்பிடுவது உண்டு.

அக்கா கடையில் நான் எப்போதும் சாப்பிடுவது தோசைதான். மூணு தோசை சாப்பிட்டுருவேன். அதை சாதா தோசைன்னு சொல்றதில்லை. வீட்டு தோசைன்னுதான் சொல்லுவேன். கொஞ்சம் கூட மொருகல், கருகல் இல்லாம அதுக்காக மாவுப் பதமும் இல்லாம அவங்க தரும் அந்த குணம், மணமான தோசையை நான் வேறெங்கும் சாப்பிட்டதில்லை. தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, சாம்பார்ன்னு அதுக்குக் கொடுத்தாலும் எனக்குப் பிடிச்சது தக்காளி - கத்திரிக்காய் சட்னிதான். அதோட காம்பினேஷன் போல் வேற எதுவும் இருக்காது என்பதால் முழுசாவே தக்காளி - கத்திரி சட்னியோடவேதான் தோசைகளைச் சாப்பிட்டு முடிப்பேன்!’’ என்கிறார் சுப்பராயன்.

 “சுப்பராயனுக்கு மட்டுமல்ல... ஜீவா இல்லத்துக்கு வந்து செல்லும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன், சி. மகேந்திரன் உள்ளிட்ட மற்ற தோழர்களுக்கும் ஆண்டுக்கணக்காய் உணவுப் புகலிடம் இந்த அக்காகடை சமையல்தான்” என்கிறார்கள் ஜீவா இல்லத்தில் இருக்கும் தோழர்கள். “இங்கே சாப்பிட்டவங்க அதுக்கப்புறம் வேறு ஹோட்டலைத் தேடவே மாட்டாங்க. சின்னக் கடைன்னாலும் அதன் சுவையும் தரமும் அபாரமா இருக்கும். வயிற்றுக்கும் எவ்வித கெடுதலையும் தர்றதில்லைங்கிறது ரொம்ப முக்கியம்” என்று சர்டிஃபிகேட் தருகிறார்கள் அந்தத் தோழர்கள்.

அக்காள்மார் இருவருடன் சேர்ந்து அக்கா கடையை நடத்தும் அதன் உரிமையாளர் ஏ.லலிதா என்னிடம் பேசுகையில், “ கடை ஆரம்பிச்ச காலத்திலிருந்தே எங்க கடையில்தான் தோழர்கள் சாப்பிடுவாங்க. அதுவும், எக்ஸ் எம்பி சுப்பராயன், வேற கடை மாத்தியே சாப்பிட்டதில்லை. ஒரு தடவை முத்தரசன் தோழர் இங்க சாப்பிட்டதை அப்படியே செல்ஃபி எடுத்து எல்லாருக்கும் அனுப் பிட்டார். அதப் பார்த்துட்டு நிறைய தோழர்கள் நம்ம கடையைத் தேடி வந்துட்டாங்க. இந்த சுத்து வட்டாரத்துல அக்கா கடைன்னு சொன்னா தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க. அதுதான் எங்க கைப்பக்குவத்துல நாங்க சம்பாதிச்ச சொத்து’’ என்றவர், அக்கா கடை உருவான விதத்தை விவரித்தார்.

‘‘எனக்கு சொந்த ஊர் காரமடை. கட்டிக் கொடுத்ததுதான் இங்கே. 20 வருஷத்துக்கு முன்னால வீட்லயே வச்சு இட்லி சுட்டுக் கொடுத்துட்டு இருந்தேன். அதுல, இட்லி ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. அப்புறம்தான் கடை போட்டேன். காலையில பணியாரம், ஆப்பம், இட்லி, சாயங்காலம் இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம்ன்னு செஞ்சேன். 40- 50 பேர் அப்ப சாப்பிட வருவாங்க. நானேதான் சமையல் செய்வேன். கொஞ்சநாள் கழிச்சு, காலை, மாலை சாப்பிட்டவங்க சாப்பாடும் கேட்க ஆரம்பிச்சாங்க. தக்காளி சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம்ன்னு வெரைட்டி ரைஸ் செஞ்சோம். அப்பத்தான் என் அக்காக்கள் எனக்கு உதவிக்கு வர ஆரம்பிச்சாங்க. அதுவே பின்னாடி கூட்டம் சேரச் சேர காலை, மதியம், மாலைன்னு மூணு வேலைக்கும் டிபனும் சாப்பாடும் குடுக்க ஆரம்பிச்சோம்.

எங்க கடையில தோசை வகைகள் ரொம்ப ஃபேமஸ்! ஆனியன், முட்டை, பட்டர், பொடி, ரவா, பூண்டு, காளான், தக்காளி, அடை, சோளம், கம்பு என வகைவகையான தோசைகள் எங்ககிட்ட கிடைக்கும். சமையல நாங்க பார்த்துக்கிட்டாலும் கூட்டம் அதிகமா வர்றதால சப்ளைக்கு மட்டும் ஆட்களைச் சேர்த்துக்கிட்டோம்” என்று சொல்லி முடித்தவர் வீட்டு தோசை, தக்காளி-கத்திரி சட்னி செய்முறையை விவரித்தார்.

 “ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்தை 8 மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கணும். இந்தத் தரத்துலதான் தோசை வார்க்கணும். அதுக்காக ரொம்பவும் புளிக்க விடக்கூடாது. ஹோட்டல்கள்ல பயன்படுத்துற பெரிய தோசைக்கல்லைப் பயன்படுத்தாம நம்ம வீடுகள்ல பயன்படுத்துற தோசைக்கல்லையே தோசை ஊத்துறதுக்குப் பயன்படுத்தணும்.

சட்னியைப் பொறுத்தளவு, ஒரு கிலோ தக்காளிக்கு, அரைகிலோ கத்திரிக்காய். அரசாணிக்காய் 200 கிராம், சின்ன வெங்காயம் 150 கிராம், பச்சை மிளகாய், வர மிளகாய் தேவைப்படும் அளவு. சிறிதளவு புளி, வெல்லம். இதையெல்லாம் எடுத்துக்கணும். தக்காளி, கத்திரிக்காய், அரசாணிக்காய் எல்லாத்தையும் நல்லா கழுவி நறுக்கி எடுத்துக்கிட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கணும். அதோடயே பச்சை மிளகாய், வரமிளகாய்,

வெங்காயம், புளி, வெல்லம் எல்லாத்தையும் போட்டு வேக வச்சுக்கணும். அனைத்தும் நன்றாக வெந்ததும் தண்ணீரை வடிகட்டிவிட்டு மிக்ஸியில போட்டு நைசா இல்லாம கடைஞ்சிக்கணும். அப்புறம் வாணலியில் கணபதி ஆயில் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிச்சு, கடைஞ்சு வெச்சிருக்கிற சட்னியில் போட்டு கலக்கிடணும். தேவைப்பட்டா வடித்து வைத்த காய்கறி வெந்த தண்ணீரையும் அதில் சேர்த்துக்கலாம்” என்று பக்குவம் சொல்லி முடித்தார் லலிதா.

அவர் சொல்லி முடித்த கையோடு எனக்கும் ஒரு செட் வீட்டு தோசை தக்காளி - கத்திரி சட்னியோடு வந்தது. சாப்பிட்டுப் பார்த்தேன். சுப்பராயன் சொன்னது போலவே குணமா, மணமா சூப்பராகவே இருந்தது!

படங்கள் உதவி: மணிபாரதி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in