நானொரு மேடைக் காதலன் - 27

நானொரு மேடைக் காதலன் - 27
Updated on
4 min read

வீரத்தையும் தீரத்தையும் போற்றாத நாடும் விவேகத்தையும் ஞானத்தையும் மதிக்காத மக்களும் வாகை சூடியதாக வரலாற்றில் குறிப்பு இல்லை. எழுந்து வருகிற இளைய தலைமுறைக்கு இதைச் சொல்லிக் கொடுக்க மறந்தாலும் மறுத்தாலும் நாடு தன் இருப்பையும் இயல்பையும் இழந்து விடும். எல்லாத் திசையிலும் கேடு சூழும். வீடும் நாடும் அமைதியின் மடியில் அன்பின் பிடியில் அறத்தின் கொடியில் துலங்கினால்தான் அது நாடு. இல்லாவிட்டால் அது காடு.

நாடு காடாகிவிடுமோ என்று கவலைப்படுகிறவர்கள் வீடு விளங்கவும் நாடு துலங்கவும் சிந்தித்துச் செயலாற்றுவார்கள். அப்படி ஒரு அரிய பெரிய மனிதர்தான் சென்னையில் ‘அழகிய கடன் அறக்கட்டளை’ ஒன்றை நிறுவி கடைத்தேற முடியாதவர்களை இனம் கண்டு கரைசேர கை கொடுக்கின்ற இமாம் சம்சுதீன் காசி அவர்கள். அண்ணாசாலை மக்கா பள்ளிவாசலில் இமாமாக இருந்த நாட்களிலேயே ஏழைகளின் இதயம் தொட்டவர். சென்னை வந்தால் அன்னை மடியாய் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிற எனது திசைகளில் தேன் சொரிகிற எனது ஆருயிர் நண்பர் தென்றல் நிஸார். ``அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் தீரன் திப்பு சுல்தானைக் குறித்துப் பேச இமாம் உங்களை அழைக்கிறார். ஆமாம் சொல்லி விடலாமா’’ என்றார். ``கரும்பு தின்னக் கூலியா... ஒப்புக்கொள்ளுங்கள்’’ என்றேன். புதுப்பேட்டை பஜார் வீதியே எழிற்கோலமும் எழுச்சிக் கோலமும் கொண்டிருந்தது. திப்புவைக் குறித்து தப்புத் தப்பாக கதை அளப்பவர்களின் தப்புத்தாளங்களைக் கேட்கத் தொடங்கிய காலம்.

 ``வெள்ளை இருட்டு என் பிறந்த பொன்னாட்டைக் கப்பியிருந்த நாளில் 565 சமஸ்தானங்களும் வெள்ளை

யனின் தாளேந்திக் கிடந்தபோது தாய் நாட்டின் மானம் காக்க வாள் ஏந்தியவன் திப்பு சுல்தான். ஆங்கிலேயன் அடிதொழ மறுத்தவன் திப்பு சுல்தான். `அன்று கிழக்கு தூங்கிக்கொண்டிருந்தபோது அவன் ஒருவன் மட்டுமே விழித்திருந்தான். திப்புவும் காவிரியும் தக்காணத்தின் இரு வரங்கள்’ என்று திப்புவைத் தாலாட்டி மகிழ்கிறார் அல்லாமா இக்பால். வெள்ளைக்காரனை என் நாட்டை விட்டு விரட்டியடிக்காத வரையில் அமரப் போவதில்லை அரியாசனத்தில் என்று சூளுரைத்துச் சுடர் முகம் தூக்கியவன் திப்பு சுல்தான். தேசப் பிதாமகன் உப்புச் சத்தியாகிரகம் தொடங்குவதற்கு வழி காட்டியவன் திப்பு சுல்தான். வெள்ளையனை நினைவுபடுத்துகிற உப்பை உணவில் சேர்க்க மாட்டேன் என்று சபதமேற்று உப்பில்லா உணவை உயிர் போகும் வரை உட்கொண்டு வாழ்ந்தவன் திப்பு சுல்தான்.

மணிமுடி தரித்த மன்னனை மகேசன் என்றும் மகேசன் எழுந்தருளி இருக்கும் இடத்தை கோயில் என்றும் ஏற்றிப் போற்றுவது நம் வழக்கம். மக்களாட்சி நடைபெறும் நாளிலே கூட ஆள்பவனை ஆண்டவனாகக் கருதுவதும் இதய தெய்வம் என்றெல்லாம் ஆராதிக்கவும் யாரும் வெட்கப்படவில்லை. ஆனால், தனது முடியாட்சியையும் இறையாட்சி என்று சொன்னவன் திப்பு சுல்தான். புலி சின்னம் பொறித்த கொடியிலும் அல்லாஹ்வே ஆண்டவன் என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஆட்சி என்பது தனது மாட்சியால் வந்தது என்று ஒருபோதும் அவன் கருதியதில்லை. அவரவர் மார்க்கம் அவரவர்க்கு என்று குர் ஆன் முன் மொழிந்ததைத் தனது ஆட்சியில் வழி மொழிந்தான். திப்புவின் ஆட்சிக் காலத்தில் நீதி வழங்குவதற்கு 99 நீதி மன்றங்கள் இருந்தன. அவரவர் மதச் சம்பிரதாயப்படி சட்டத்தின் வழி நின்று அவரவர்களுக்கு நீதி வழங்கப்பட்டது. எட்டு பாகம் உள்ள ‘ கிதாபே தொஹபதுல் குஜாதீன்’ என்ற அரசியல் சட்டப் புத்தகத்தைத் தானே எழுதி அதன்படி ஒவ்வொரு ஊரிலும் காஜி, கதிப், காவல் நிலையம், இரகசிய உளவு இலாக்காக்களை நிறுவி பரிபாலனம் செய்தான்.

மலையாளம் புழங்கும் மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த நிலைமையை மாற்றி மானம் காக்க மேலாடை அணியும் பழக்கத்துக்குப் பெண்களை ஆயத்தம் செய்தான் திப்பு. ஒரு பெண்ணை பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ளும் தீய பழக்கம் காவிரி உதயமாகும் குடகுப்பகுதியில் நிலவி வந்தது. இந்த அநியாயத்துக்கும் முடிவு கட்டினான். மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தி மைசூரில் நடைமுறையில் இருந்த நரபலிக்கும் தேவதாசி முறைக்கும் முடிவு கட்டினான். மண் விடுதலைக்காக வாளேந்தியவன் பெண் விடுதலைக்கும் முக்கியத்துவம் தந்தான். சட்டம் அவனது ஆட்சியில் விளக்காக மட்டுமல்ல; கிழக்காகவும் இருந்தது. சமய வேற்றுமைக்குக் கடுகளவும் அவனது இதயத்தில் இடமில்லை. குர் ஆனை வேதமாகக் கொண்டவன் பலதரப்பட்ட மக்கள் வாழும் தனது நாட்டில் பேதம் பார்க்காமல் பரிபாலனம் செய்ததைப் படிக்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறேன்.

நஞ்சன் கூட்டில் எழுந்தருளி இருக்கும் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்துக்கு மரகதலிங்கம் வழங்கினான். இன்றும் அது பாதுஷா லிங்கம் என்றே அழைக்கப்படுகிறது. குழந்தையாய்ச் சிரிக்கும் குருவாயூரப்பன் கோயிலுக்கு கோயிலைச் சுற்றியுள்ள இடங்களில் நிலவரி வசூல் செய்யும் உரிமையை வழங்கினான். காஞ்சிபுரம் கோயிலுக்கு 10000 வராகன் நன்கொடை வழங்கினான். மேலக்கோட்டை நரசிம்மக் கோயிலுக்கு தங்கத்தாலும் வெள்ளியாலும் யானைகளை வழங்கினான். நாராயணசாமி கோயிலுக்கும் கந்தேஸ்வரசுவாமி கோயிலுக்கும் ரத்தினங்கள் இழைத்த ஆராதனைத் தட்டுகள் திப்புவால் வழங்கப்பட்டன. மைசூருக்கு அருகில் உள்ள தொன்னூரில் இராமானுஜர் பெயரில் அமைந்த குளத்தைத் தூர்வாரி செப்பனிட்டான். தத்தாரியப் பீடம் மடத்துக்கு இருபது சிற்றூர்களையும், புஷ்பகிரி மடத்துக்கு இரண்டு கிராமங்களையும் திப்பு சுல்தான் மானியமாக வழங்கினான்.

வலிந்து பேசுவதற்காக வரவில்லை, இன்று சிருங்கேரி சாரதா மடத்தில் ஹைதர் அலியின் சனதுகள் மூன்றும் திப்பு சுல்தானின் சனதுகள் முப்பதும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு மாவீரன் திப்பு சுல்தான் எழுதிய கடிதம் மைசூர் நூலகத்தில் இன்றும் இருக்கிறது. இந்துக் கோயில்கள் பலவற்றுக்குத் திப்பு சுல்தான் வழங்கிய மானியங்களுக்கான ஆணைகளும் இருக்கின்றன.

நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடாமல் நிலத்தின் விளைச்சலைக் கணக்கெடுத்து உழவு வரி வசூலித்ததாலும் விளைச்சல் இல்லையென்றால் வரி இல்லை என்றதாலும் அறுவடைக் காலங்களில் சுமை தெரியாமல் இருக்க தவணை முறையில் வரி வசூலித்ததாலும் உழவர்களின் உள்ளங்கவர் கள்வன் ஆனான் திப்பு சுல்தான். வரி நீக்கம் செய்ததால் தம் ஊருக்கு சுல்தான் பேட்டை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் மக்கள். நவீனச் சிந்தனைகளின் தாயகமாக விளங்கும் பிரான்ஸில் மாவீரன் நெப்போலியன் தலைமைத் தளபதியாக தகுதி பெற்ற நேரம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இலட்சிய முழக்கங்கள் பிரெஞ்சு மண்ணில் எழுந்தன. அதன் வீச்சும் தாக்கமும் உலகின் எட்டுத் திசையிலும் எதிரொலித்தது. அதை இந்தியாவில் வரவேற்ற முதல் மன்னன் திப்பு சுல்தான். 108 பீரங்கிக் குண்டுகள் முழங்க புரட்சிக் கழகம் என்ற அமைப்பை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் தொடங்கி அதன் தலைவராக பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி ரிப்பாடு என்பவரை நியமித்த திப்பு சுல்தானின் பரந்த அறிவை, விரிந்த ஞானத்தை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

மாவீரன் நெப்போலியனுக்கு வெற்றியும் புகழும் கிட்டிவந்த நேரத்தில் அலெக்ஸாண்டரியா துறைமுகத்தில் படையோடு சென்று இறங்கினான் திப்பு சுல்தான். ஆங்கிலேயரின் அர்த்தமற்ற எதிர்ப்பை மீறி திப்பு சுல்தானின் பிரதிநிதி மீர் அலிகான், நெப்போலியனை கெய்ரோவில் சந்திக்கிறார். ஆங்கிலேயரை விரட்டி அடிக்க இதுவே தருணம் ஐரோப்பாவின் பாதுகாப்பைக் கோட்டைவிட்டால் உலகச் சரித்திரமே மாறிவிடும் என்ற திப்புவின் கருத்தை மாவீரன் நெப்போலியன் உச்சிமீது வைத்து மெச்சினான். இந்தச் செய்தியைப் படிக்கும்போது தோழர்களே திப்புவின் உயரமும் தெரிகிறது. நம் உள்ளமும் குளிர்கிறது’’ என்றபோது புதுப்பேட்டையே அதிரும் வண்ணம் மக்கள் கரவொலி எழுப்பினார்கள்.

தொடர்ந்து நான் பேசுகையில், “ஹஜ் கடமை நிறைவேற்ற மக்காவில் திப்பு சுல்தான் முகாம் இட்டிருந்த புனித வேளையில் மீர் அலிகானிடம் நெப்போலியன் திப்புவிடம் ஒப்படைக்கச் சொன்ன கடிதம் பிரிட்டிஷாரிடம் சிக்கிக்கொண்டது.

நெப்போலியன், திப்பு சுல்தான் உறவு ஆதாரத்துடன் அம்பலமானதால் ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷார் திப்புவைத் தீர்த்துக்கட்ட வெல்லெஸ்ஸி பிரபுவை மைசூருக்கு அனுப்பி வைத்தார். வேலூரில் இருந்த ஹாரீஸுக்கும் மலபாரில் இருந்த ஜெனரல் ஸ்டூவர்டுக்கும் தாக்கீது அனுப்புகிறார் வெல்லெஸ்லீ. ஹாரிஸ் 42 ஆயிரம் பரங்கிப் படைகள், 2 லட்சம் கூலிப்படைகள், தளவாடங்களைச் சுமக்கும் 1 லட்சம் எருதுகளுடன் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் முற்றுகையிட்டான். தியாகச் சுடர் திப்பு சுல்தான் அதிர்ந்துவிடவில்லை. சையது சாகிபின் பொறுப்பில் ஸ்ரீரங்கப்பட்டணத்தை விட்டுவிட்டு குடகுக்கு விரைகிறான். ஸ்டூவர்டின் படையை சித்தேஸ்வரத்தில் சின்னாபின்னமாக்கத் திட்டமிட்ட திப்புவின் வியூகத்தை பிரிட்டிஷாரிடம் விலைபோன கைக்கூலி மீர் சாதிக் போட்டுக் கொடுத்தான். அப்போதும் அதிரவில்லை திப்பு சுல்தான். 2 மாதங்கள் இமை மூடாமல் ஹாரிஸ் படையுடன் சமர் புரிந்தான். ஒரு சூரியோதத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் வடக்குக் கோட்டை பிரிட்டிஷ் வசமாகிறது.

துரோகம் தனது திருவிளையாடலைத் தொடர்கிறது. மதிற்சுவரின் வடபுறத்தில் விரிசலை ஏற்படுத்தி சூரியன் உதிக்கும் உதயகாலத்தில் வெள்ளை நரிகள் கோட்டைக்குள் ஊடுருவிவிட்டன. மீர் சாதிக்கின் மாபெரும் துரோகத்தால் வாட்டர்கேட்டில் 50 மெய்க்காப்பாளர்களுடன் சாதாரண போர் உடையில் வீரம் சொறிந்த போரை முன்னெடுத்த நிகரிலாத வீரன் திப்புவை மரணம் நெருங்குகிறது.

இடது மார்பில் ஒரு குண்டும் நெற்றிப்பொட்டில் ஒரு குண்டும் வலது காதுக்கு மேலாகத் தாடையில் ஒரு குண்டும் என மூன்று குண்டுகள் திப்புவை முத்தமிடுகின்றன. மயங்கிச் சரிகிறான். திப்புவின் உடல் ஒருபக்கம் கிடக்க, கரங்கள் வெட்டப்பட்டு குருதி வடிந்த நிலையில் வாளை வானை நோக்கி நிமிர்த்தியே வைத்திருந்தான். வீழும் வேளையிலும் அவனைப் போலவே அவன் வாளும் மண்டியிடாமல் நிமிர்ந்தே நின்றது. அந்த ஈர நேரத்திலும் திப்புவின் உடை வாளில் இருந்த நவரத்தினக் கற்களைக் கபளீகரம் செய்ய வந்த வெள்ளையனை வெட்டிச் சாய்த்தபிறகே அந்த வீரக்கரம் ஓய்வு பெறுகிறது. வீழ்ந்தபோதும் விழிகள் மூடவில்லை; உடலின் சூடு தணியவில்லை.

அரபி, உருது, பார்ஸி, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு என ஆறு மொழிகள் அறிந்த ஒரே சுல்தான் திப்பு. வரலாறு, வானியல், அறிவியல், பொறியியல், அரசியல், தத்துவம், மெய்ஞானம், ராஜ தந்திரம், யுத்த வியூகம் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஒரே சுல்தான். ஏகாதிபத்தியத்துக்கு முடிவு கட்ட கடல் தாண்டி எகிப்து, பாரசீகம், பிரான்ஸ் நாடுகளை ஒரே அணியில் சேர்த்த ஒரே சுல்தான். தாய் நாட்டுக்காக தான் பெற்ற புதல்வர்களை மாற்றானிடம் பிணையாகத் தந்து வரலாறு படைத்த சுல்தான், அரிசி, சந்தனம், அத்தர், செம்பு, குதிரை, செம்மணிக்கல், மிளகு, பட்டு போன்றவற்றை ஏற்றுமதி செய்த முதல் இந்தியன் என்ற தகுதி பெற்ற சுல்தான். சோழ மன்னனுக்குப் பிறகு வரலாற்றில் கப்பற்படையை நிறுவிய ஒரே சுல்தான் வீர மரணம் எய்தினான். வாழ்க்கை என்பது உயிர் வாழ்வது மட்டுமல்ல; உயிர் கொடுப்பது என்பதை நிரூபித்த திப்புவுக்கு ஒப்பு யாருமில்லை’’ என்று சொன்னபோது எழுந்த ஆரவாரம் இன்னும் என் காதில் ரீங்காரமிடுகிறது.

(இன்னும் பேசுவேன்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in