பாப்லோ தி பாஸ் 10: ‘மாஸ்’ கில்லர்ஸ்..!

பாப்லோ தி பாஸ் 10: ‘மாஸ்’ கில்லர்ஸ்..!

ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்…

“பாப்லோ ஹியர்…”

“பாப்லோ… நான் ஜார்ஜ் ஒச்சாவோ..”

“ஹே… ஜார்ஜ்… சொல்லுப்பா.. என்ன விஷயம்…?”

“அது வந்து… அது வந்து…”

“யோவ்… வீ ஆர் பாண்டிட்ஸ். எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு மேன்..”

“எங்க தங்கச்சியைக் கடத்திட்டாங்கப்பா…”

“வாட்… அவ்ளோ தைரியம் எவனுக்குடா இங்க இருக்கு..?”

“எம்-19..!”

அன்றைய கொலம்பியாவில், இடதுசாரிக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்கிற நான்கைந்து கெரில்லாக் குழுக்கள் இருந்தன. அதில் ஒன்றுதான் எம்-19. இந்தக் குழுவில் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எனக் கற்றவர்கள் அதிகம். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அந்தக் குழுவில் சரி பாதித் தலைவர்கள், பெண்கள். இவர்கள், கொலம்பியாவின் காடுகளுக்குள் இருந்து இயங்கி வந்தார்கள்.

அதே காடுகளுக்குள்தான், ‘நார்கோஸ்’களும், தங்களது ‘கிச்சன்’களை வைத்திருந் தனர். அவற்றை இதர கெரில்லாக் குழுக்கள், போட்டியாளர்கள் ஆகியோரிடமிருந்து பாதுகாக்க, இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் சிலருக்கு, அவ்வப்போது கட்டணம் செலுத்த வேண்டும். பாப்லோவும் அப்படி கட்டணம் செலுத்தி வந்தான்.

அந்தக் குழுவைச் சேர்ந்த சிலர், 1979-ல், கார்லோஸ் லெஹ்டர் எனும் கொக்கைன் கடத்தல்காரனைக் கடத்திவிட்டார்கள். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்தால் தான், கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள். கார்லோஸ் விடுவிக்கப்பட வேண்டு மென்றால், தங்களுக்கு 5 மில்லியன் டாலர்கள் வழங்க வேண்டும் என்று மிரட்டியது எம்-19.

இந்தச் சூழ்நிலையில், கார்லோஸின் நண்பன் ஒருவன், பாப்லோவிடம் உதவி கேட்டான். அவர்கள், கார்லோஸை ஆர்மீனியா எனும் நகரத்தில் உள்ள பண்ணை வீட்டில் சிறை வைத்திருந்ததை அறிந்து, அங்கு தனது ஆட்கள் 6 பேரை பாப்லோ அனுப்பினான். பாப்லோவின் ஆட்கள் தங்களுடன் சண்டையிட வருகிறார்கள் என்பதை எம்-19 ஆட்கள் அறிந்ததும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார்கள். அப்போது கார்லோஸ் அவர்களிடமிருந்து தப்பிவிட்டான். எனினும், கடத்தல்காரர்களில் ஒருவன், கார்லோஸை நோக்கிச் சுட்டதில், அவனுக்குக் கால்களில் காயம் ஏற்பட்டது. அதற்குள், பாப்லோவின் ஆட்கள், கடத்தல்காரர்கள் இரண்டு பேரைப் பிடித்துவிட்டனர். இப்படித்தான், கார்லோஸும் பாப்லோவும் நண்பர்கள் ஆனார்கள்.

***

இந்த எம்-19 குழுதான், 1981-ல், ஒச்சாவோ சகோதரர்களின் தங்கை மார்த்தா நிவேஸ் ஒச்சாவோவைக் கடத்தியது. தொழிலதிபர்கள், பணக்காரக் குழந்தைகள் போன்றவர்களைக் கடத்துவதைக் காட்டிலும், இதுபோன்ற ‘ட்ரக் லார்ட்’டின் குடும்பத்தினரைக் கடத்தினால், அதில் வரும் லாபம் பல மடங்கு அதிகம். எனவே, எம்-19, ‘நார்கோஸ்’களின் குடும்பங்களைக் குறிவைத்தது.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் தங்கள் மடியிலேயே கை வைத்ததை பாப்லோவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னுடன் தொடர்பிலிருந்த சுமார் 200 கடத்தல்காரர்களையும் ‘ஹசியெண்டா நேப்போல்ஸில்’ ஒன்று திரட்டினான். எம்-19 குழுவின் கொட்டத்தை அடக்க என்ன செய்யலாம் என்று அவர்கள் விவாதித்தபோது, பாப்லோ முன்வைத்ததுதான் ‘மாஸ்’ ஐடியா...!

‘முவெர்த்தா அ செக்யூஸ்த்ரேதோர்ஸ்’ (சுருக்கமாக ‘எம்.ஏ.எஸ்.’ அல்லது ‘மாஸ்’. அதாவது, ‘டெத் டு கிட்னாப்பர்ஸ்’ என்று ஆங்கிலத் தில் பொருள்படும்) தோன்றியது அப்படித்தான். அப்படியென்றால், ஸ்பானிய மொழியில், ‘கடத்தல்காரர்களைக் கொல்லுதல்’ என்று அர்த்தம். அடுத்த நாளே பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தான் பாப்லோ.

“மார்த்தாவின் விடுதலைக்காக, ஒரு சல்லி பெஸோ கூட எம்-19 குழுவுக்குத் தர முடியாது” என்று பகிரங்கமாக அறிவித்தான். ‘மாஸ்’ அமைப்புக்கு ‘சிக்காரியோஸ்’ (ஸ்பானிய மொழியில், ‘அடியாட்கள்’) சேர்க்கப்பட்டார்கள். படித்துவிட்டு, வேலை இல்லாத இளைஞர்கள் பலர்தான் சிக்காரியோஸ்களாக இருந்தனர். அவர்களுக்கு ‘வாக்கி டாக்கி’கள் தரப்பட்டன.

இங்கெல்லாம் எம்-19 இருக்கலாம் என்று பாப்லோ சந்தேகப்பட்ட பகுதிகளில் எல்லாம், சிக்காரியோஸ்கள் வாக்கி டாக்கிகளுடன் அலைந் தனர். கடத்தல்காரர்கள் குறித்து எந்தத் தகவல் கிடைத்தாலும் அது உடனுக்குடன் பறிமாறிக் கொள்ளப்பட்டது. பாப்லோவின் கைகளில் சிக்காமல், கடத்தல்காரர்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக்கொண்டே இருந் தனர். அந்தத் தேடுதல் வேட்டையில், எம்-19 குழுவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ‘லா வயலென்சியா’ முறையில் கொல்லப்பட்டனர்.

இறுதியில், எம்-19 தலைவர்களில் ஒருவனின் மனைவியை ‘மாஸ்’ அமைப்பினர் கடத்தி, ‘எல் கொலம்பியானோ’ பத்திரிகை அலுவலகத்தின் வாயிலின் முன்பு கட்டி வைத்து, அவள் கழுத்தில், ‘ஆள் கடத்தல் குழுவில் இவளும் ஒருத்தி’ என்று எழுதித் தொங்கவிட்டனர்.

அதுவரையில், ‘மாஸ்’ அமைப்பினர் எம்-19 குழுவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் மீது கை வைக்கவில்லை. ‘மாஸ்’ அமைப்பினர் நினைத்தால், தங்கள் குடும்பங்களை இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று பயந்த கடத்தல்காரர்கள், 96 நாட்களுக்குப் பிறகு எந்த ஒரு காயமும் இல்லாமல் மார்த்தாவை விடுவித்தனர்.

அத்துடன், ‘மாஸ்’ முடிவுக்கு வந்தது..!

(திகில் நீளும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in