நானொரு மேடைக் காதலன் - 25

நானொரு மேடைக் காதலன் - 25

பாரதி பேசப்பட்ட அளவுக்கு பாரதி தாசன் பேசப்படவில்லை. பாரதியைக் கொண்டாடியதைப் போல் தமிழகம் பாரதி தாசனைக் கொண்டாடவில்லை. வழக்காடு மன்றங்களில், பட்டிமன்றங்களில் கவியரங்குகளில் பாரதிக்குக் கிடைத்த இடம் பாரதி தாசனுக்குக் கிடைக்கவில்லை. எடுத்துக் காட்டவும் பாரதியைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள். பாரதி தாசனை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. ஏனிந்த நிலை என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வதுண்டு.

திசையெட்டும் பாரதி தாசனைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாடு திராவிட இயக்கத்துக்கு உண்டு. அந்தக் கடமையைச் சரிவர செய்யவில்லை என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு. அந்தக் கவலையினாலே தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் கொண்ட தம்பிகளை ‘ பாரதி தாசன் சிந்தனைக் கூடம்’ ஒன்றைத் தொடங்கி இயங்குங்கள் என்று ஆற்றுப்படுத்துவேன். எந்த மேடையிலும் பாரதி தாசன் பாட்டை உச்சரிக்காமல் நான் இறங்கியது இல்லை. உடற் கூட்டிலிருந்து உயிர்ப் பறவை பறந்து போகிறவரை, ‘ வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும். விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்’ என்ற பாரதி தாசன் பாட்டை தனக்கே உரிய ஓசை நயத்தில் உச்சரித்தே பேச்சை முடித்துக்கொள்வார் அண்ணாவின் தம்பி நாவலர் நெடுஞ்செழியன்.

சோழவள நாட்டில் இயக்கத்தை வழி நடத்திய மன்னை என்று அழைக்கப்படும் தகுதி பெற்ற பெருமகன் மன்னை நாராயணசாமி, பாரதி தாசன் பாட்டைச் சொல்லிவிட்டுதான் பேச்சைத் தொடங்குவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்றொரு நாள் பாவேந்தர் படத்தைத் திறந்து வைத்து ‘ ஏ தாழ்ந்த தமிழகமே’ என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையை இன்றைக்குப் படித்தாலும் என் உயரம் ஒரு அடி உயர்ந்துவிடும். திமுக மாநாடுகளில் பாவேந்தர் படத்தைத் திறந்து வைப்பதும் பாவேந்தர் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியை பூத்து வருகிற புதிய தலைமுறைகளுக்காக நடத்தி பரிசு கொடுக்கிற பழக்கத்தையும் திமுக இன்றும் நிறைவேற்றி வருவது நினைவு கூரத்தக்கது. திசைகளின் தசைகளைப் பிய்த்தெறிகிற இரத்தச் சந்தத்தில் பாவேந்தர் பாரதி தாசன் எழுதிக் குவித்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் தொகுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்தின் நிறுவனர் இளவழகனாரைப் பாராட்ட நான் கற்ற தமிழில் வார்த்தை கிடைக்கவில்லை.

கல்லறைக் குயிலாகிப் போனாலும் என் கவனத்தில் எப்போதும் இருக்கிற நண்பர் குபேரா ஜெய்சங்கர். அவர், தலைநகர் சென்னைக்குத் தோரண வாயிலாக விளங்கும் தாம்பரம் நகரில் பாரதி தாசன் சிந்தனைக் கூடத்தைத் தொடங்கிய பொன்வேளையில் அடியேன் ஆற்றிய உரையை இன்று கேட்டாலும் என்னில் பரவசம் பற்றிக் கொள்ளும். “தமிழ் கூறு நல்லுலகமெங்கும் மானத் தமிழர்களின் நெஞ்சில் மகுடம் தரித்திருக்கிற மகத்தான கவிஞன் பாரதி தாசன். உலகப் பெரும் கவிஞர்களின் வரிசையில் வைத்து மதிக்கப்பட வேண்டிய கவிஞர்களில் பாரதி தாசனும் ஒருவர். பாரதி தாசன் பரம்பரை என்று தன்னைத் தொடருகிற ஒரு கவிஞர் கூட்டத்தைச் சொந்தமாக்கிக் கொண்ட வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதி தாசனுக்கு மட்டுமே சொந்தம். இதைச் சொல்லிக் கொள்வதில் பெருமிதமுறுகிறேன்.

இன விடுதலைக்கான முயற்சியானாலும், தாய்மொழி தமிழின் அழகையும் ஆழத்தையும் மெச்சுவதாக இருந்தாலும், ஏதென்ஸின் சாக்ரடீஸ் முன் மொழிந்து ஈரோட்டுப் பெரியார் வழிமொழிந்த பகுத்தறிவைப் பந்தி வைப்பதாக இருந்தாலும், மனிதனின் ஆன்மாவைக் காவு கேட்கும் சாதிக்கு முடிவு கட்டுவதாக இருந்தாலும், தன்னுரிமை தமிழுரிமை என்பதைத் தாண்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிற பெண்ணுரிமை ஆனாலும், பேதத்துக்கு அரண் அமைக்கும் மதமானாலும், அதற்கான பங்களிப்பை பாவேந்தரைப் போல் யாரும் தரவில்லை. மனிதனை நெருங்குவதோடு ஒரு கவிஞன் நின்றுவிட முடியாது. மனிதனைத் தொட வேண்டும்; தொட்டால் மட்டும் போதாது, தொட்டுத் துலக்க வேண்டும். துலக்கினால் மட்டும் போதாது; துலக்கி தூக்கி நிறுத்த வேண்டும். அதைத் துணிந்து செய்த சுய மரியாதைக் கவிஞன் பாரதி தாசன் மட்டும்தான். கவிதையில் மட்டும் முத்திரை பதிக்கவில்லை. சொல்லாய்வில், சொல்லாக்கத்தில், அறைகூவலை எதிர்கொள்வதில், கதை எழுதுவதில், கட்டுரைப்பதில், நாடகம் புனைவதில், திரைக்கதை தீட்டுவதில், உரையாடுவதில் எனத் தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரைப் பொன்னாய் ஒளி வீசினார். சித்திரை நிலவாய் தண்ணொளி பொழிந்தார். தமிழர் தம் நித்திரை கலைவதற்காகவே எழுதினார். எழுதியவர் மட்டுமல்ல; ஏங்கியவர்.

‘தாயெழிற் றமிழை, என்றன் தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்தநாளோ, ஆரிதைப் பகர்வார் இங்கே?
பார்த்தொழில் அனைத்தும் கொண்ட பயன் தரும் ஆலைக்கூட்டம்
ஆர்த்திடக் கேட்பதென்றோ? அணிபெறத் தமிழர்கூட்டம்
போர்த்தொழில் பயில்வதெண்ணிப் புவியெலாம் நடுங்கிற்றென்ற
வார்த்தையைக் கேட்டு நெஞ்சு மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?’

என்று ஏங்குகிறார் பாரதி தாசன். ஏங்குகிற ஏக்கத்தில் தமிழ் காட்டாறு போல் பொங்கி வருவதைப் பார்த்தீர்களா’’ என்றேன். “இன்னும் ஒருமுறை திரும்பச் சொல்லுங்கள்’’ என்று பல பேர் எழுந்து நின்றபோது மெய் சிலிர்த்தது. “ உண்மைக்காகவும் உரிமைக்காகவும் ஓங்கி ஒலித்த குரலில் போர்க்குணம் இருந்தது. கனவு காணுகிற வயதில் தன்னை ஆட்கொண்ட யுகக் கவிஞன் பெயரைத் தன் பெயராக்கினாலும் பாடுபொருளில் பாரதியிடம் இருந்து மாறுபட்டான். குரு பக்திக்காக கொண்ட கொள்கையைப் பலியிடாத பாரதி தாசனின் தனித்துவத்தை தமிழர் வீதியெல்லாம் தமுக்கடித்துச் சொல்ல வேண்டும்.

‘நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன்!
தமிழரின் மேன்மையை இகழ்ந்த வனையென் தாய் தடுத்தாலும் விடேன்
எமை நத்து வாயென்று எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்’
என்ற பாட்டைப் படிக்கிறபோது குருதி சூடாவதை உணர்வீர்கள். உள்ளம் உலை நெருப்பாய்க் கொதிப்பதை எந்த ஏகாதிபத்தியமும் தடுத்த நிறுத்த முடியாது’’ என்றபோது எழுந்த ஆரவாரத்தில் என்னைக் கொஞ்ச நேரம் தொலைத்தேன். “ இயற்கையை ஆராதனை செய்த ஆங்கிலக் கவிஞன் வேர்ட்ஸ்வொர்த் எட்டிய உயரத்தை எட்டியவன் எங்கள் பாரதிதாசன்.

‘காடும் கழனியுங் கார்முகிலும் வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்! ஆடும் மயில்நிகர் பெண்களெல்லாம் உயர் அன்பினைச் சித்திரஞ் 
செய்க என்றார்’ என்று பாரதி தாசன் பாடுகிறபோது கார்முகில் கண்ணில் தெரிகிறது. ஆடும் மயிலின் அழகு தெரிகிறது. அழகில் லயித்து அழகை ஆராதிக்கும்போதும் ‘இன்னலிலே தமிழ் நாட்டினி லேயுள்ள என்றமிழ் மக்கள் துயின்றிருந்தார்! அன்னதோர் காட்சி இரக்க முண்டாக்கியென் ஆவியில் வந்து கலந்ததுவே’ என்று பாடுகிறான் என்றால் பாரதி தாசன் நம் உயிரில் கலந்து உணர்வில் கரைந்து 
விடுகிறான்.

‘செந்தமிழே! உயிரே! நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!’ என்று பாடும் பாவேந்தரின் தமிழ்ப் பற்றுக்கு உயிரையே உவந்து தரலாம். ‘ நற்றமிழ் என்பது தில்லிக்காகாது நம்மமைச்சர்க்கும் காது கேளாது புற்றிலே மோதினால் பாம்பு சாகாது புறப்படட்டும் புலிகளிப்போது’ என்றார் பாரதி தாசன். புறப்பட்டு விட்டார்கள். இங்கிருந்தல்ல; அங்கிருந்து” என்றேன். எங்கிருந்து என்று எதிர்க்கேள்வி வருவதற்கு முன்னால் கழைக் கூத்தாடி பாடுவது போல் பாவேந்தர் பாட்டைப் பந்தி வைத்தேன்.

“ ‘ தேனும் சேக்கறேன் பாலும் சேக்கறேன்
இளநீர் வழுக்கை இட்டுக் குழைக்கிறேன்
இடித்த தினைமா இட்டுப் பெசையறேன்
பொடித்த பருப்பும் போட்டுக் கலக்கறேன்
எல்லாத் தையுமே இளஞ்சூடாக்கிப்
பல்லாய் நிறையப் பக்குவப் படுத்தினேன்!’
தேனும் பாலும் தெவிட்டினாலும் தெவிட்டும். பாவேந்தரின் தேன் பாட்டு தெவிட்டாது. ஆதிக்க இந்திக்கெதிராக பாரதி தாசன் குந்திக் குரலெடுத்து கூவிய பாட்டில் பறை முழக்கம் மட்டுமா கேட்கும்; துப்பாக்கியின் துந்துபி முழக்கமும் கேட்கும்.
‘தூங்குதல் போன்றது சாக்காடு - பின்னர்த்
தூங்கி விழிப்பது நம் பிறப்பு
தீங்குள்ள இந்தியை நாமெதிர்ப்போம் - உயிர்
தித்திப்பை எண்ணிடப் போவதில்லை’

தாளமுத்து, நடராஜன், கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம், ஆசிரியர் வீரப்பன், கோவை ஆரோக்கியசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, உடையார் பாளையம் வேலாயுதம், மாயவரம் சாரங்கபாணி, சிவகங்கை ராஜேந்திரன் என்று உயிரைத் தித்திப்பாகக் கருதாமல் ஆவி துறந்தவர்களை, தமிழுக்காகத் தன்னுயிர் தந்தவர்களை நினைத்துப் பார்க்கிறேன். தமிழுக்காக உயிர் தந்தவர்களாகப் பார்க்கிறேன். இந்த வெற்றியை பாவேந்தரைத் தவிர பாரில் எந்தக் கவிஞனும் பெற்றதில்லை.
மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் தழைத்தோங்க பாவேந்தர் பாக்கள், பாதை சமைத்துத் தந்தது. மொழித் தூய்மையின் தேவையை பாவேந்தரிடம் வலியுறுத்தியவர் தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் என்பது வரலாறு. இதையும் ‘பாற்பொங்கல் போலே தனித்தமிழ் பற்றையென் பாற்பொங்கும் பொன்னம்பலம்’ என்று பாடிக் காட்டுகிறார். ‘தனித்தியங்குந்தன்மை தமிழனுக்குண்டு; தமிழே ஞாலத்தின் தாய்மொழி பண்டு’ என்று தமிழின் தன்மையையும் வன்மையையும் நன்மையையும் நிலை நாட்டுவதே தன் பாட்டின் குறிக்கோள் என்பதை நிரூபித்தார் பாவேந்தர். பாவேந்தரின் குறிஞ்சித் திரட்டும் தமிழச்சியின் கத்தியும் மணிமேகலை வெண்பாவும் பாரதியின் பாஞ்சாலி சபதம் கண்ணன் பாட்டு குயில் பாட்டு ஆகியவற்றோடு ஒப்பிடத்தக்கன. மொழிக்காகக் களம் காணும் மறவர்கள் கையில் பாவேந்தரின் தமிழியக்கம் ஆயுதமாகவே பரிணமித்தது.

‘அழகிய நிலவு வந்தா லென்ன
அதுதான் கண்டு சிரித்தா லென்ன
பால்போல் மேனி இருந்தா லென்ன
முழுதுங் குளிரச் செய்தா லென்ன
முத்துச் சுடரைப் பொழிந்தா லென்ன
ஒழுகுங் தேனிதழ் தாமரைப் பெண்ணே’

என்று நிலவை அவன் வர்ணிக்கும்போது நிலவை நாம் நெருங்குவதுபோல் மனம் கூத்தாடும். இந்தியாவின் மீது சீனம் படையெடுத்த காலத்தில் ‘ சென்றதடா அமைதி நோக்கி உலகம், அட சீனாக்காரா ஏனடா இந்தக் கலகம்’ என்று சீனாவின் மீது சினம் கொண்டு பாடியதையும் கருத்தில் கொண்டால் அவன் நாட்டுப்பற்று தெற்றென விளங்கும். பாவேந்தர் சுட்டிக் காட்டிய குறைகள் குறைகளாகவே இருக்கின்றன. தமிழுக்குச் சிலர் செய்யும் அழும்புகள், தமிழர்க்குப் பலர் செய்யும் கெடுதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது ஆபத்தானது. வீட்டில் தமிழில்லை. வீதியிலும் தமிழில்லை. வாழ்வியல் மொழியாக தமிழ் வரவேண்டும். பாரதி தாசன் சிந்தனைக் கூடம் அதற்கான உலைக்களம் ஆக வேண்டும்’’ என்று உணர்ச்சியின் முகடுகளில் நின்று நான் செய்த உரை முழக்கம் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

(இன்னும் பேசுவேன்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in