விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 24: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

வஞ்சிரம் மீன்குழம்பும்...  மூளை பக்கோடாவும்..!
விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 24: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

எம்.கபிலன்

என்எல்சி-க்கு எதிரான போராட்டம், கட்சியின் பணிகள், மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை எனத் தொடர் வேலைகளுக்கு மத்தியில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விஐபி விருந்துக்காக அழைத்தேன். “ஒருவாரம் ஆகட்டுமே...” என்று சொல்லியிருந்தார். சொன்னபடியே சரியாக ஒருவாரம் கழித்து, ஒரு மதிய வேளையில் கடலூரிலிருக்கும் ஹோட்டல் தேவிக்கு வந்துசேர்ந்தார்.

“முந்தியெல்லாம் கட்சி, சங்கம்னு அலைஞ்சுகிட்டிருந்தேன் இல்லையா? அப்பல்லாம் கெடைச்ச இடத்துல சாப்பாடு, தூக்கம்னு போய்க்கிட்டிருந்துச்சு. பெரும் பாலும் கடலூர்ல இருக்க வேண்டியிருக் கும். அப்ப, வாய்க்கு ருசியா நல்ல சாப்பாடு சிக்கலையேன்னு தேடிட்டு இருந்த நேரத்துலதான் சின்னதா இந்த தேவி ஹோட்டல் ஆரம்பிச்சாங்க. ஓனரம்மாவே அடுப்பங்கரையில நின்னு சமைக்கிறதால அப்படியே நம்மவீட்டு சாப்பாடு மாதிரியே இருந்துச்சு.

மீன்குழம்பு, கறிக்குழம்பு, கோழிக் குழம்புன்னு எல்லாமே கெடைச்சுது. அத்த னையும் ருசி. வெலையும் அப்ப வெறும் அம்பது ரூபாதான். என்னை மாதிரியே கடலூர் மக்களுக்கும் இந்த ஹோட்டல் பிடிச்சுப்போனதால சின்ன ஹோட்டல் இப்ப பெரிய அளவுல வளர்ந்திருக்கு. ஆனாலும் அதே ருசிய அப்படியே மெயின்டெயின் செய்யுறாங்க.” என்று வாய்க்கு ருசியான ஹோட்டல் சிக்கிய கதையைச் சொன்ன வேல்முருகன், அப்படியே தனக்குப் பிடித்த வஞ்சிரம் மீன் குழம்பையும் மூளை பக்கோடாவையும் பற்றி பேசினார்.

 “இங்க எல்லாமே கெடைக்கும்னாலும் எனக்கு ரொம்பப் பிடிச்சது விரால்மீன் குழம்புதான். ஊர்ல குளத்துல தண்ணி வத்தினா எங்களுக்குக் கொண்டாட்டம்தான். அப்பதான் விரால்மீன் பிடிக்கமுடியும். ஒரு காலத்துல கலைஞருக்கே விரால் மீன் குழம்பு ரொம்பப் பிடிக்குமாம். எனக்குத் தெரிஞ்சு முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே வீட்டுலருந்து கலைஞருக்கு எடுத்துட்டுப் போவாங்க. ஆனா, இன்னிக்கு விரால் மீன் கெடைக்கலையாம். அதனால வஞ்சிரம் மீன்குழம்புதான். அத்துடன் மூளை பக்கோடா, மல்லிசிக்கன் செம காம்பினேசன்” என்று வாயூற சொல்லி முடித்தார்.
உணவக மேலாளர்கள் பாரி, ஆறுமுகம் ஆகியோர் வேல் முருகனுக்குப் பிடிச்ச உணவு பதார்த்தங்களை கொண்டுவந்து அடுக்கினார்கள். அனைத்தையும் ரசனையுடன் ருசித்துச் சாப்பிட் டார். உடன் வந்தவர்களையும் சாப்பிட வைத்து அழகு பார்த்தார்.

18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் தனது தனித்த சுவையால் மக்களின் வீட்டுச்சாப்பாட்டு ஏக்கத்தைப் போக்கிவருகிறது. மூன்று குழம்பு வகைகளுடன் கருவாட்டுக் குழம்பு, நண்டுக் குழம்பு, இரால் குழம்பும் இங்கு உண்டு. மீன்வறுவல், மட்டன் வறுவல், சிக்கன் வறுவல், இரால் வறுவல், கணவாய் வறுவல், நாட்டுக்கோழி வறுவல், காடைமசாலா, நாட்டுக்கோழி ரோஸ்ட், சுறாப்புட்டு, விரால்மீன் குழம்பு, மீன் அசாத், ஆனியன் சிக்கன், சிக்கன்வடையும் தந்தூரி, சைனீஷ் ஐட்டங்களும் இங்கு உண்டு.

உணவக மேலாளர்கள் பாரி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் “தரத்துல எங்கிட்ட காம்ப்ரமைஸே கிடையாது. நெய், எண்ணெய்லாம் அதிக விலைக்கு விக்கிற தரமான பிராண்ட்தான். மீன், இரால், நண்டுல்லாம் நேரா கடலூர் ஓல்டு டவுன் துறைமுகத்துக்கு போய் பார்த்துப் பார்த்து வாங்குவோம். மட்டன் 15 வருசமா ஒரேகடையிலதான் வாங்குறோம். சிக்கனுக்கு கோழியா வாங்கிட்டுவந்து நாங்களே தேவையான மாதிரி வெட்டிக்குவோம். குழம்புல பொட்டுக்கடலை மாவு போடறதுக்கு பதிலா முந்திரியைப் போடுவோம்.

இது எல்லாத்துக்கும் மேல, எங்க ஓனரம்மாவோட கைப் பக்குவம். எல்லாக் குழம்பையும் அவங்களே வச்சுகிட்டிருந்தாங்க. இப்ப அவங்ககிட்ட படிச்ச மாஸ்டர்கள் வைக்கிறாங்க. அதையும் அவங்க வந்து சரிபார்த்துட்டுத்தான் போவாங்க.

இப்ப சென்னை திருவான்மியூர்ல ஒரு பிராஞ்ச் ஆரம்பிச்சுருக்கிறதால அங்க போயிருக்காங்க. கடலூர் மக்கள் மட்டுமில் லாம புதுச்சேரிக்கு வர்ற மத்தவங்களும் மத்தியான சாப்பாட்டை தேவியிலதான் சாப்பிட ணும்னு தேடி வராங்க” என்கி றார்கள்.

மருத்துவர் சிவராமன், நடிகர்கள் விவேக், சமுத்திரகனி, பார்த்திபன், உதயநிதி, கங்கை அமரன், அரசியல் தலைவர்கள் நல்லகண்ணு, வைகோ, தமிழிசை, ஜி.கே.வாசன் எனப் பல பிரபலங்கள் இந்த ஹோட்டலின் வாடிக்கை யாளர்கள். பிரபலங் கள் மட்டுமல்லாமல் சாதாரணமானவர்களுக்கும் மிகவும் பிடித்த உணவக மான இங்கே எல்லோருக்கும் ஒரே உபசரிப்புத் தான். சரி இனி, வஞ்சிரம் மீன் குழம்பு, மூளை பக்கோடா செய்முறையைப் பார்க்கலாம்.

வஞ்சிரம்மீன் குழம்பு: (ஐந்து பேருக்கு) தேவையானவை: வஞ்சிரம் மீன் அரை கிலோ, குழம்பு மிளகாய்தூள் 200 கிராம், தக்காளி 5, சின்ன வெங்காயம் 100 கிராம், பூண்டு 50 கிராம், வடவம் 50 கிராம், எண்ணெய் 150 மிலி, பெல்லாரி 200 கிராம், புளி 200கிராம், தண்ணீர் 2லி, தாளிப்பு வடகம், வெந்தயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை: புளிக்கரைசலில் குழம்பு மிளகாய்தூளைப் போட்டு நன்றாகக் கலக்கிக்கொண்டு அதில் உரித்த பூண்டு, சின்ன வெங் காயம், நறுக்கிய பெல்லாரி வெங்காயம் ஆகியவற்றைப் போடவேண்டும். தக்காளியைஅதில் பிழிந்துவிட வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் சிறிது வெந்தயத்தையும் வடகத்தையும் போட்டு அது நன்றாகப் பொரிந்தவுடன் புளிக் கரைசலையும் தண்ணீரையும் அதில் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். உப்பு பார்த்துக்கொள்ளவும். சுமார் 20 நிமிடம் கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்து தயிர் ஊற்றி வைக்கப்பட்டுள்ள வஞ்சிரம் மீனை போட்டு பத்துநிமிடம் கொதித்தவுடன் இறக்கி விடலாம். இறக்கும்போது கருவேப்பிலை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

மூளை பக்கோடா:

தேவையானவை: ஆட்டு மூளை 3, சின்ன வெங்காயம், 100 கிராம், பச்சைமிளகாய் 2, கடலைமாவு 50 கிராம், அரிசி மாவு 40 கிராம், மஞ்சள்தூள் சிறிதளவு, தேவையான அளவு எண்ணெய் மற்றும் உப்பு.
செய்முறை: ஆட்டு மூளையை நன்றாக  கழுவி சுத்தம்செய்து தண்ணீரில் வேக வைத்து தேவையான அளவுக்கு சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, மஞ்சள்தூள், உப்பு, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையில் மூளையை முக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்தவுடன் மூளை மசாலா கலவையை அதில் போட்டு பக்கோடா போல பொரித்து எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் இதன் மீது கொத்து மல்லித்தழை தூவிக் கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in