பாப்லோ தி பாஸ் 7: “அமெரிக்காவை அழிக்கும் அணுகுண்டு..!”

பாப்லோ தி பாஸ் 7: “அமெரிக்காவை அழிக்கும் அணுகுண்டு..!”

“அமெரிக்கா… அமெரிக்கா… அமெரிக்கா…”

“என்ன பாப்லோ… அமெரிக்கா மீது அப்படி ஒரு ஆசையா..?” மாரியுவானாவைப் புகைத்தபடியே கேட்டான் கார்லோஸ் லெஹ்டர் ரிவாஸ். ‘ராம்போ’ சில்வஸ்டர் ஸ்டல்லோனின் முகவெட்டு. இடுப்பில் எப்போதும் ஒரு கத்தி. ‘காமோஃப்ளேஜ்’ பேன்ட்டும் காக்கி டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான் அவன்.
“ம்ஹும்… வாழ்ந்தா அந்த மாதிரியான ஒரு நாட்டுல வாழணும். பணம்… எங்க பார்த்தாலும், யார்கிட்ட பார்த்தாலும் பணம். ‘டிஸ்னி லேண்ட்’ மாதிரியான விஷயங்களை நாம வேற எங்க பார்க்க முடியும்..? அந்த நாட்டுல இல்லாத வசதிதான் என்ன..? வேலை செஞ்சுதான் பிழைக்கணும்னு எந்த ஒரு அவசியமும் இல்லாத ஊரு…” என்று அமெரிக்கா மீதான தனது எண்ணங்களை விவரித்துக்கொண்டே போனான் பாப்லோ.
பாப்லோ அமெரிக்காவை ரசிக்க, கார்லோஸ் அந்த நாட்டை அழிக்கத் துடித்தான். காரணம், அவனது அரசியல்.
கார்லோஸின் தந்தை ஒரு ஜெர்மானியர். எனவே, கார்லோஸுக்கு அடால்ஃப் ஹிட்லர் ஹீரோவாகத் தெரிந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஹிட்லர், இயேசு கிறிஸ்து, காரல் மார்க்ஸ்… இந்த மூவரது சிந்தனைகளையும் ஒரே ஜாடியில் போட்டுக் கலந்து, துய்ப்பவனாக இருந்தான் கார்லோஸ். அது ஒரு ஆபத்தான கலவை. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். தன்னுடைய வியாபாரத்தைக் கொண்டே, அமெரிக்காவை அழிக்க நினைத்தான் கார்லோஸ்.
“அமெரிக்கா மேல உனக்கு வெறுப்பு இருக்கலாம் கார்லோஸ். ஆனா, அதை அழிக்கிறதெல்லாம் நடக்காத வேலை…”
“முடியும் பாப்லோ. அதை அழிக்கிறதுக்கு என்கிட்ட ஒரு அணுகுண்டு இருக்கு…”
“அணுகுண்டா…?”
“கொக்கைன்… அதுதான் அந்த அணுகுண்டு..!”
‘பகபக’வென்று சிரிக்கத் தொடங்கினான் பாப்லோ. அவனது சிரிப்பைப் பார்த்து, கார்லோஸும் சிரிக்க ஆரம்பித்தான். கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள நண்பர்கள், எப்போதாவதுதான் இப்படி மனம்விட்டுச் சிரித்துக்கொள்ள முடியும்.
***
‘மெதஜின் கார்ட்டெல்’ என்பது முழுக்க முழுக்க பாப்லோவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அது எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் செயல்படுவதற்கு மூன்று நண்பர்கள் பாப்லோவுக்கு உதவினார்கள். அவர்களில் ஒருவன்தான் கார்லோஸ். ஹொஸே ரோட்ரிகேஸ் கச்சா, ஒச்சாவோ சகோதரர்கள் ஆகியோர் மற்ற இருவர்.
இவர்கள் மூவரும் பாப்லோவுடன் இணைவ தற்கு முன்பே, தனித்தனியாகத் தங்களுக்கென்று ஒரு மைக்ரோ சாம்ராஜ்யத்தைத் தங்களது பகுதிகளில் நிறுவியிருந்தார்கள். இவர்களில் கார்லோஸ் கொஞ்சம் கெட்டிக்காரன். மாரியுவானா கடத்தலுக்காக அவன் அமெரிக்காவில் சில காலம் சிறையில் இருந்தான். அப்போதுதான், அமெரிக் காவுக்குள் கொக்கைனைக் கடத்தி வருவதற்கான ஐடியா அவனுக்குள் தோன்றியது.
அமெரிக்காவுக்குள் கொக்கைனைக் கடத்தி வர, முதன்முதலாகக் குட்டி விமானங்களைப் பயன்படுத்தியது கார்லோஸ்தான். அவனைப் பார்த்துத்தான் பாப்லோவுக்கு அந்த ஐடியா வந்தது. கார்லோஸ் ஒரு திறமையான பைலட்டும்கூட. கரீபியத் தீவுகளைச் சேர்ந்த பஹாமாஸ் நாட்டின், ‘நார்மன்ஸ் கே’ எனும் இடத்தில் பெரிய வீடு கட்டி, அந்நாட்டின் அரசு அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு, அங்கிருந்து தனது வியாபாரத்தைக் கவனித்து வந்தான் அவன். கொக்கைன் வியாபாரத்தைத் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே, கரீபியத் தீவுகளுக்கே அவன் முதலாளியாக மாறினான். ஆம்… கொக்கைன் கடத்தும் வேறு யாராவது, கரீபியத் தீவுகளில் வியாபாரத்தைக் கிளை பரப்ப வேண்டுமென்றால், அவர்கள் கார்லோஸ் மூலமாக மட்டுமே அதை மேற்கொள்ள முடியும்.
நார்மன் கே பகுதியில் ஒரு தனி, ரகசியமான ‘ரன்வே’ ஒன்றை உருவாக்கியிருந்தான் கார்லோஸ். கொலம்பியாவிலிருந்து கொண்டு வரப்படும் கொக்கைன் ‘லோடு’, இந்த இடத்தில் வைத்துத்தான் இதர நாடுகளுக்குப் பிரித்து, விமானத்தில் கொண்டு செல்லப்படும். அந்த இடத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டணமாக, அவர்கள் கொண்டு வரும் லோடில் குறிப்பிட்ட சதவீதத்தை கார்லோஸுக்குக் கொடுத்துவிட வேண்டும். இப்படித்தான் நடந்தது அவனது பிசினஸ்.
அவனது பிசினஸ் அவனுக்கான செல்வாக்கைப் பெற்றுத் தந்திருந்தது. ஒரு முறை, பஹாமியன் அரசு, கொலம்பியக் கடத்தல்காரர்கள் சிலரைக் கைது செய்து சிறையில் வைத்த போது, அந்நாட்டின் தலைநகரமான நஸ்ஸோவின் மீது பறந்து, பணத்தை வாரி இறைத்தான். அன்று பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. ‘கார்லோஸ் நினைத்தால் எதையும் சாதிப்பான்’ எனும் எண்ணத்தை, பஹாமிய அரசுக்கும் மக்களுக்கும் ஆழ விதைத்தது அந்தப் பண மழை.
***
பாப்லோவின் இன்னொரு நண்பன், ஹொஸே ரோட்ரிகேஸ் கச்சா. ஒரு ஏழைப் பன்றி விவசாயியின் மகன். முதன்முதலில் கெக்ஸிகோ நாடு வழியாக, கொக்கைன் கடத்தியது அவன்தான். அதனால் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அவனை ‘எல் மெக்ஸிகனோ’ என்று அழைத்தார்கள். ஆள் பார்ப்பதற்கு அப்பாவி போலத் தெரிந்தாலும், மிகவும் கொடூரமான கொலைகளைச் செய்தவன் அவன். ‘பாப்லோதான் செய்தான்’ என்று சொல்லப்படும் பெரும்பாலான கொலைகளைச் செய்தது இவனே..! என்றாலும், பாப்லோவைப் போலவே, தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியைத் தனது பகுதியைச் சேர்ந்த ஏழை மக்களின் மருத்துவம் மற்றும் கல்விக்காக வாரி வாரி வழங்கினான். ‘ட்ரான்கிலாண்டியா’ எனும் மிகப்பெரிய ‘கிச்சன்’ ஒன்றைக் காட்டுக்குள் முதன்முதலாக நிறுவியது கச்சாதான். சுமார் இரண்டாயிரம் பேர் வேலை பார்க்கும் அளவுக்குப் பெரிய ‘கிச்சன்’ அது..!

ஜார்ஜ் ஒச்சாவோ, யுவான் ஒச்சாவோ மற்றும் ஃபேபியோ ஒச்சாவோ ஆகியோர்தான் பாப்லோவின் மூன்றாவது நண்பர்கள். அவர்கள் ‘ஒச்சாவோ பிரதர்ஸ்’ என்று அழைக்கப் பட்டார்கள். ‘தேவை என்றால் என்ன?’ என்று கேட்கும் அளவுக்கு மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அவர்கள். குதிரைகள் வளர்ப்பதுதான் அவர்களுடைய முக்கியமான தொழில். அது வெளி உலகத்துக்கு மட்டும்தான். போதைப் பொருள் கடத்தல்தான் அவர்களது உண்மையான தொழில். அவர்களிடமிருந்த குதிரைகளின் யோனியில் கொக்கைனை மறைத்துப் பல காலம் வியாபாரம் செய்து வந்தார்கள் என்ற தகவல்கூட உண்டு.
பாப்லோவும் கஸ்தாவோவும் பகோட்டாவில் நடை பெறும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளச் செல்லும் போதெல்லாம், அங்கு ஒச்சாவோ சகோதரர்கள் நடத்தி வந்த ரெஸ்டாரென்ட்டுக்குச் சென்று சாப்பிடுவது வழக்கம். அப்படித்தான் அவர்களிடையே அறிமுகம் நிகழ்ந்தது.

அன்றெல்லாம், கொக்கைன் டீலர்களுக்கு இடையே பெரிய போட்டி எல்லாம் இருக்கவில்லை. காரணம், அன்று அமெரிக்காவின் மார்க்கெட் பெரிது. அதனால் அமெரிக்காவில் எங்கு வேண்டுமானாலும் தங்களது வியாபாரத் தைக் கடை விரிக்கலாம் என்ற நிலை இருந்தது. எனவே, டீலர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், ஒருவருக்கு ஒருவர் உதவி கரமாக இருந்து வந்தார்கள். அந்த உதவியின் மீது கட்டப்பட்டதாகவே இருந்தது, பாப்லோ உருவாக்கிக்கொண்ட நட்பு..!
***
கடத்தல் தொழிலில் போட்டி இல்லாமல் இருக்கலாம். ஆனால், பொறாமை இல்லாமல் இருந்ததில்லை. ‘மெதஜின் கார்ட்டெல்’ வளர்ந்து வந்த அதே நேரத்தில், கொலம்பியாவில் இன்னொரு கடத்தல் குழுவும் வளர்ந்து வந்தது. அதுதான் ‘கலி கார்ட்டெல்’. கலி என்ற நகரத்தி லிருந்து செயல்பட்டதால், அந்தப் பெயர்.

கில்பெர்ட்டோ ரோட்ரிகேஸ் ஒரேயுவேலா, மிகேல் ரோட்ரிகேஸ் ஒரேயுவேலா (இவர்கள் ‘ரோட்ரிகேஸ் ஒரேயுவேலா பிரதர்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்கள்) மற்றும் ஜார்ஜ் ஆகிய மூவர்தான் அந்த கார்ட்டெலுக்குத் தலைவர்களாக இருந்தார்கள். தொழில் போட்டி காரணமாக, மெதஜின் கார்ட்டெலுக்கும் கலி கார்ட்டெலுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால், அந்த மோதல்கள் எல்லாம் வெறும் துப்பாக்கி அளவில் மட்டுமே நடந்தது.

ஆனால் 1988-ல் கொலம்பிய கார்ட்டெல் யுத்தத்தில் முதன்முதலாக ஒரு வெடிகுண்டு வெடித்தது. அது கலி கார்ட்டெலால் பாப்லோ குடும்பத்தின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு. அந்த குண்டு வெடிப்பில், பாப்லோவின் மகள் மேனுவலாவின் ஒரு காது செவிடானது. பாப்லோவுக்கு விழுந்த ஆழமான காயம் அது. அதற்குப் பிறகுதான், மெதஜின் கார்ட்டெலுக்கும் கலி கார்ட்டெலுக்கும் இடையேயான யுத்தம், உச்சகட்டத்தை அடைந்தது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தது எது தெரியுமா…?
அமெரிக்கா..!

‘கார்ட்டெல்’ என்பதன் தொடக்க ‘கன்னி!’

மெதஜின் கார்ட்டெல், கலி கார்ட்டெல் போன்ற ‘கார்ட்டெல்’கள் உருவாவதற்குக் காரணமாக இருந்ததே ஒரு ‘கன்னி’தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதுதான் நிஜம்..!

க்ரிசெல்டா ப்ளான்கோ என்பவர்தான் அந்த ‘கன்னி!’. ஸ்பானிய மொழியில் ‘லா மாட்ரினா’, அதாவது, ‘கொக்கைன் கடத்தலின் ராணி’ என்று போற்றப்படும் இந்தப் பெண், 1970-களிலேயே கொக்கைன் கடத்தலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். அப்போது பாப்லோ, கார்களைத் திருடிக்கொண்டிருந்த சின்னப் பையன். அமெரிக்காவில், குறிப்பாக, மயாமி நகர கொக்கைன் பிசினஸைத் தன் கையில் வைத்திருந்தார் இவர்.
கொலம்பியாவிலும், அமெரிக்காவிலும் இவருக்கு ஏகப்பட்ட எதிரிகள். இவரும் சளைத்தவர் அல்ல. சுமார் 250 கொலைகளில் இவரது பெயர் உள்ளது. 1943-ல் பிறந்த இவர், தனது 11 வயதில், 10 வயது சிறுவன் ஒருவனைக் கடத்தி, அவனது பெற்றோர் பணம் தராததால், அவனைக் கொன்றதாக ஒரு தகவல் உண்டு. இப்படி சிறுவயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட்ட க்ரிசெல்டா, தனது இரண்டாவது கணவர் அல்பெர்ட்டோ ப்ராவோ மூலம் கொக்கைன் கடத்தலுக்கு அறிமுகமானார். பெண்கள் அணியும் உள்ளாடைகளுக்குள் கொக்கைனைக் கடத்தி நியூயார்க் நகரத்துக்குக் கொண்டு வந்தார். அப்படித்தான் அமெரிக்காவில் கால் பதித்தார் இவர்.

பிசினஸ் பெருகியது. ‘தி காட்மதர்’ என்று தன் அடியாட்களால் போற்றப்பட்டார். பணத்தாசை தலைக்கேற, தன் கணவரைக் கொன்றார். அதனால் அவருக்கு ‘பிளாக் விடோ’ என்ற பட்டப்பெயர் கிடைத்தது. எத்தனையோ முறை சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டும், மரண தண்டனையிலிருந்து தப்பித்த அவர், 2012-ல் தன் 69 வயதில் தனது எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சரி… இவருக்கும் பாப்லோவுக்கும் என்ன தொடர்பு..? இவரது மகன் ஓஸ்வால்டோ, தொழில் போட்டியில், பாப்லோவின் ஆட்களால் கொல்லப்பட்டான்.

(திகில் நீளும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in