நானொரு மேடைக் காதலன் - 24

நானொரு மேடைக் காதலன் - 24

உயிரா மானமா என்று கேட்டால் மானமே என்று மார் தட்டி களமாடிய வீரர்களின் தாய் மடியாய் தென் பாண்டி மண்டலம் திகழ்ந்தது. கொள்ளைக் கொடி விரிக்க வந்த வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு வீரம் செறிந்த போர் மூலம் முதன் முதலாய் பாடம் கற்பித்தவர்கள் தென்னகத்தில்தான் உதயமானார்கள்.

வடக்கே சிப்பாய்க் கலகம் தோன்றுவதற்கு முன்னால் தெற்கே உதித்த தீரர்கள் விடுதலைப் போரைத் தொடங்கி வைத்தார்கள். மண்ணெல்லாம் வீரம் பேசியது. மலரெல்லாம் தமிழாய் நாறியது. பெண்ணெல்லாம் புலியாய்ச் சீறினார்கள். பண்ணெல்லாம் விடுதலை விடுதலை என்றே தாளம் கொட்டியது. கண்ணெல்லாம் கனல் உமிழ்ந்தது. வீரம் செறிந்த விடுதலைப் போரில் உயிரை ஈகம் செய்யத் துணிந்தவர்களைத் தென் தமிழகம் இன்றும் போற்றி வருகிறது. குருபூஜை என்ற பெயரால் அதை மீட்டுருவாக்கம் செய்ய எடுக்கின்ற விழாக்கள் மூலம் இன்றும் அதைப் புதிப்பித்து வருவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். உயிரை விலையாகத் தந்து உச்சம் தொட்ட அந்த மகோன்னத மனிதர்களை இன்று சிலர் தங்கள் நலத்துக்காக சாதிச் சிமிழுக்குள் அடைப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதைக் கூட தவிர்த்து விட வேண்டும் என்று கருதுகிறவன் நான்.

அந்த வீரர்களின் வரிசையில் மாற்றார் மருளத்தக்க வகையில் மட்டுமல்ல; மதிக்கத்தக்க அளவுக்கும் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் மருது சகோதரர்கள். வானம் பொழிய மறுத்தாலும் இன்றும் மானத்தை மதிக்கத் தவறாத சேதுபதிச் சீமையில் இருந்து மருதிருவர் குருபூஜையில் கலந்து கொள்ள வாருங்கள் என்றழைத்தான் வாழ்வில் நன்கொடையாகக் கிடைத்த தம்பி இராமநாத புரம் சுரேஷ். என் சுமையைப் பகிர்ந்துகொள்வதில் சுகம் காணுகிற அந்தத் தம்பியின் அழைப்பை ஏற்று இராமநாதபுரம் சென்றேன். விழா நடந்த பாரதி நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவில் வரிசை கட்டி நின்ற வாலிபர்களைப் பார்த்தால், ஆரவாரத்தில் காணாமல் போகிற இளைஞர்களுக்கு மத்தியில் வீழ்வேன் என நினைத்தாயோ என வினா தொடுக்க வந்தவர்கள். எப்போதுமே இளைஞர்களுக்கு முன்னால், மாணவர்களுக்கு முன்னால் உரையாற்றுவது என்றால் எனக்கு கரும்பு தின்பது மாதிரி. காதலியின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது மாதிரி ஒரு பரவசம் என்னை வந்து பற்றிக்கொள்ளும். அது தானாய்ச் சேர்ந்த கூட்டம் மட்டுமல்ல; தேனாய்த் தமிழ் கேட்க வந்த கூட்டம்.

“அன்னை முலைப்பால் வீரம் இன்னும் குறைய வில்லை. புறநானூற்று வீரம் இன்னும் புதைந்து விடவில்லை என்பதைப் புதிதாக்க வந்தவர்கள் மருதிருவர்கள். காற்றும் கதிரவனும் நுழைய முடியாத அடர்ந்த காட்டில் கால் வைத்து மறம் கொண்ட புலியைத் தம் திறம் கொண்டு சாய்த்தவர்கள். நாயோடு வேட்டைக்குப் புறப்பட்டு வேட்டையாடித் திரும்பும் போது எதுவுமே கிடைக்காமல் அங்காடி நாய் போல வருபவர்கள் உண்டு. ஆனால், வெள்ளை மருது விழியில் ஒளியைத் தேக்கி வேட்டையாடப் புறப்பட்டால் சினத்தோடும் சீற்றத்தோடும் வரும் புலியின் மீது தாவிப் பாய்ந்து அதன் இரு கால்களையும் கரத்தால் பற்றித் தூக்கி கரகரவென்று சுழற்றி வீசி எறிவார். அதன் பின் கீழே விழுந்த புலியின் மீது ஏறி உதைத்தே புலியின் உயிரை வாங்குவார் வெள்ளை மருது. அவன் வீரம் கண்டு நடுங்கிய ஆங்கிலத்துரை வெல்ஷ் பாபிலோனிய அரசாட்சியில் ‘குஷ்’ வம்சத்தில் நிகரற்ற வேட்டை வீரனாய் விளங்கிய நிம்ராட்டுடன் ஒப்பிட்டுப் புகழ்ந்தான்.

வெள்ளையர்களை எதிர்க்கிற சமரில் சண்டையிட்டு முடிந்து போனான் முத்து வடுகநாதன். சிவகங்கைச் சீமையில் மலைக்கவும் திகைக்கவும் வைக்கிற போர் வீரர்களாக இருந்த மருதிருவர்கள் அமைச்சர்களாகவும் திறம்படப் பணியாற்றினார்கள். சிவகங்கை, காளையார்கோயில் மக்கள் மருதிருவர்கள் மீது மாரி மழையென அன்பை வாரிப் பொழிந்தார்கள். அள்ளிச் சொரிந்த மக்களின் அன்புக்காக மருதிருவர் ஆற்றிய அறப்பணிகளுக்குக் கணக்கில்லை. எல்லாச் சமயமும் தழைக்க பொது நோக்குடன் ஆட்சி புரிந்தார்கள். குன்றில் குடியிருக்கும் குமரனுக்கு குன்றக்குடியில் பெருங்கோயில் கட்டுவித்தார்கள். பாடல் பெற்ற திருத்தலமாம் கானப் பேரெழில் என்னும் காளையார்கோயிலைப் புதுப்பித்து நீராழி மண்டபத்தையும் வலிமையும் அழகும் உள்ள தேரையும் நிர்மாணித்து நிறுவினார்கள். பாண்டிய மக்களின் கல்விக்காக கொட்டிக்கொடுத்தார்கள். தமிழ்க் கலையை வளர்க்க சாந்துப்புலவர் தலைமையில் மருதிருவர் அவைக்களத்தில் இரு மதின்மர் நியமிக்கப்பட்டார்கள். வெள்ளையர் இழைத்த இடையூறுகளையும் தாண்டி இருபது ஆண்டு காலம் சிவகங்கைச் சீமையில் மருதிருவர் நிகழ்த்திய ஆட்சி அவர்களின் மாட்சியைக் கூறும். கடையேழு வள்ளல்களின் வரிசையில் வைத்து எண்ணும் அளவுக்கு எட்டாத உயரத்தை எட்டினார்கள்.

1738-ல், சண்டைக்கு வந்த வெள்ளையனைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள். மருதிருவருக்கு நாளுக்கு நாள் வந்து குவிந்த புகழால் புதுக்கோட்டைத் தொண்டைமானும் ஆற்காடு நவாபும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார்கள். மருதிருவருக்கு நண்பனாக இருந்த கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டான். பாளை யங்கோட்டையில் சிறை வைக்கப்பட்ட ஊமைத்துரையை மருது பாண்டியர்கள் வரவேற்று உபசரித்தது மக்கள் மத்தியில் மட்டிலாத மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், வெள்ளைக்காரனுக்கு ஆறா சினத்தைத் தந்தது. படை திரட்டி வந்தான் வெள்ளையன். கமுதியில் கடும்போர் மூண்டது. விடுதலை வீரர்கள் பகைவரைப் பந்தாடினார்கள். எதிரிகள் மீது விழுந்து தாக்கி அவர்களைச் சிரச்சேதம் செய்தார்கள். குருதி ஆற்றில் பிணங்கள் மிதந்தன. போர்க்களம் நாளுக்கு நாள் இடம் பெயர்ந்தது. நாகலாச்சேரி, திருப்பூவனம், திருப்பாச் சேத்தி எனத் திரும்பிய திசையெல்லாம் புறமுதுகிட்டு ஓடிய ஆங்கிலப் படை, இராமநாதபுரத்துக்கு தப்பிச் சென்ற வழியில் எல்லாம் தீ வைத்தார்கள்.

 சிறு இடைவேளைக்குப் பிறகு தொண்டைமான், எட்டயபுரத்தான் உதவியுடன் சிறு வயலைத் தாக்க படையோடு வந்தார்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் வருவதற்கு முன்னால் மருதிருவர் படைகள் சிறு வயலைத் தீக்கிரையாக்கினர். போகும் வழி தெரியாமல் தவித்தது ஆங்கிலப்படை. மருதிருவர் படை காளையார்கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். புதுக்கோட்டை மன்னர் உதவியுடன் காட்டை அழித்துப் பாதை போட முயன்றபோது பாண்டி யர் படையில் அவர்களுக்குப் பாதைகளே புதை குழிகளாயின. இனிமேல் மருதிருவர்களை வீரத்தால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து வெள்ளையர்கள் வஞ்சனை செய்யத் திட்டமிட்டார்கள். வீரம் மண்டிக் கிடந்த மண்ணில் மத வெறியைத் திட்டமிட்டுப் பரப்பினார்கள். மருது சேனையில் இருந்த வீரர்களை மனம் மாற்றி மடை மாற்றினார்கள். காட்டிக் கொடுத்த ஒருவன் மருது பாண்டியரின் ராணுவ இரகசியங்களைப் போட்டுக் கொடுத்தான். அவனையே ஒரு பகுதிக்கு மன்னவனாகவும் முடி சூட்டி மகிழ்ந்தார்கள்.

காட்டிக் கொடுத்தவன் போட்டுக் கொடுத்த பாதை யில் மேலூரில் முற்றுகையிட்டது ஆங்கிலப் படை. மருது பாண்டியர் பிரான்மலையில் இருப்பதறிந்து பிரான்மலைக்குப் புறப்பட, மருது பாண்டியர் படைகள் காளையார் கோயிலுக்குத் திரும்பினார்கள். ஆறு நாட்கள் அணையாத போர். துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் வெள்ளையர் படை வலிவு பெற்றது. பீரங்கிகள் குண்டு மழை பொழிந்தன. ஏதுமற்ற ஏழை மக்கள் ஓலமிட்டு அழுதார்கள்.

காளையார்கோயிலும் அயலார் வசமாயிற்று. மருதி ருவர்களும் ஊமைத்துரையும் கானகம் போனார்கள். படை திரட்டும் வலிமையை இழந்தார் கள். மூவரும் சங்கரம்பதி கோட்டையில் தங்கியிருந்ததையும் துரோகிகள் காட்டிக் கொடுத்தனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அங்கேயும் தாக்குதல். அருகில் உள்ள காட்டில் மூவரும் இடம் பெயர்ந்தார்கள். விடுதலை உணர்வும் மான உணர்ச்சியும் உள்ள மூவரும் காட்டு வழியே சென்றுகொண்டு இருந்தபோது பகை வீரர்கள் தாக்குகிறார்கள். தத்தம் கையில் இருந்த வாளோடு அப்போதும் இமை மூடாமல் எதிரிகளை எதிர் கொண்டார்கள். அப்போது வெள்ளை மருதுவின் தொடையில் குண்டு ஒன்று வந்து விழுந்தது. வெள்ளை ஏகாதி பத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவன் மண்ணில் சாய்ந்தான்.

சின்ன மருதும் ஊமைத்துரையும் வெள்ளை மருதுவைத் தூக்கி எடுத் தார்கள். துக்கத்தால் துடித்தார்கள். கண்ணீரும் ரத்தமும் சிந்திய அந் நேரத்தில் மூவரையும் கைது செய்து திருப்பத்தூரில் சிறை படுத்தினார்கள். பின்னர் மருது சகோதரர்களைத் தூக்கில் இட்டார்கள். வெள்ளையரின் வன்மமும் வக்கிரமும் நின்றபாடில்லை. வெள்ளை மருதுவின் வீரப்புதல்வன் சிவஞானத்தையும் தூக்கிலிட்டார்கள். மருது சகோதரர்களின் ரத்த உறவுகளை எல்லாம் சிறையிலிட்டார்கள். கண்ணீர் வருகிறது நண்பர்களே. அறிந்த செய்திதான். ஆனால், ஆறாத துயரம். சின்ன மருதுவின் வீரப்புதல்வன் துரைசாமி, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் என்ற தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

கடல் மணலைக் கணக்கிட்டாலும் பிறந்த பொன்னாட்டுக்காக உயிர் தந்த மருதிருவர் பெருமையை அளக்க முடியவில்லை. கொட்டு முழக்கோ, கோலாகல ஊர்வலமோ, முளைப்பாரியோ மருதிருவர் பெருமைக்குக் கட்டியம் கூறாது. பூத்து வருகிற புதிய தலைமுறைக்கு மானம் காத்த மருதிருவரின் வீரம் செறிந்த வரலாற்றை சொல்லிக் கொடுப்போம். வரலாறு தெரியாத சமூகம் வயிறு வளர்க்கத்தான் முடியும்; வரலாறு படைக்க முடியாது. மருதிருவர் பெயர் சொல்லி வரலாறு படைப்போம். வாலிபத் தம்பிகளே. வஞ்சினம் கொள்வீர்’’ எனப் பேசிவிட்டு கரவொலிக்கு மத்தியில் மேடையில் இருந்து கீழிறங்கினேன். அப்போது, “நீங்கள் இன்று பற்ற வைத்த நெருப்பு எங்கள் நெஞ்சில் என்றென்றும் அணையாது. அது எரிந்துகொண்டே இருக்கும்” என்று ஒருவர் சொன்னபோது சொக்கிப் போனேன். வாலிபர் நெஞ்சில் சிக்கிப் போனேன்.

( இன்னும் பேசுவேன்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in