பேசும் படம் - 3: மார்கரெட் ராட்டையும் மகாத்மா காந்தியும்!

பேசும் படம் - 3: மார்கரெட் ராட்டையும் மகாத்மா காந்தியும்!

மகாத்மா காந்தி என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று ராட்டை. தேச விடுதலைப் போராட்டம் என்று என்னதான் பரபரப்பாக இருந்தாலும் தினமும் ஒரு மணி நேரமாவது ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்தை காந்தி தவற விட்டதில்லை. தான் மட்டுமின்றி தனது ஆசிரமத்தில் உள்ளவர்களும் தினமும் ஒரு மணி நேரமாவது ராட்டையில் நூல் நூற்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக வைத்திருந்தார். அவரைப் பொறுத்தவரை ராட்டையில் நூல் நூற்பது என்பது ஒருவகை தியானம்!

காந்தியடிகளுக்கு மிகவும் பிரியமான ராட்டையுடன் சேர்த்து மார்கரெட் புரூக் ஒயிட் என்ற புகைப்படக்காரர் 1946-ல், எடுத்த படம் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகிவிட்டது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான சூழல் நிலவிய சமயத்தில், அதற்குக் காரணமான மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் லைஃப் பத்திரிகை மார்கரெட் புரூக் ஒயிட்டை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

காந்தியின் ஆசிரமம் சென்ற மார்கரெட், காந்தியை ராட்டையுடன் படமெடுக்க விரும்புவதைக் கூறினார். காந்தியின் உதவியாளர்கள், “நீங்கள் ராட்டையில் நூல் நூற்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே அவர் படமெடுக்க ஒப்புக்கொள்வார்” என்று சொன்னார்கள். இதற்காகவே சில நாட்கள் அங்கே இருந்து ராட்டை நூற்க கற்றுக்கொண்டார் மார்கரெட். அதன்பிறகே, காந்தியைப் படமெடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

காந்திக்குக் கண்களைக் கூசவைக்கும் அதிபிரகாசமான ஒளி பிடிக்காது என்பதால் அவரை அதிகம் தொந்தரவு செய்யாத வகையில் ஃபிளாஷ் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்று உதவியாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவர்களோடு போராடி ஃபிளாஷை பொருத்தி படமெடுக்க அனுமதி வாங்கினார் மார்கரெட். முதல் 2 முயற்சிகளில் படம் சரியாக வரவில்லை. 3-வது முயற்சியில்தான் இந்தப் படம் அவருக்கு கிளிக் ஆனது.
ஆனால், காந்தியைப் பற்றி லைஃப் பத்திரிகையில் 1946-ல் வெளியான செய்தியில் இந்தப் படம் இடம்பெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது வெளியான கட்டுரையில்தான் இந்தப் படம் இடம்பெற்றது. இப்போது, காந்தியின் முக்கியமான படங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. 1948-ல் காந்தி கொல்லப்படுவதற்கு சில மணித்துளிகள் முன்னதாகவும் மார்கரெட் அவரைப் பேட்டிகண்டு புகைப்படம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கரெட் புரூக் ஒயிட்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1904-ல், பிறந்தவர் மார்கரெட் புரூக் ஒயிட். புகழ்பெற்ற லைஃப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞராகவும், செய்தியாளராகவும் இருந்த இவர், உலகின் முதல் டாக்குமென்ட்ரி போட்டோகிராபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலும், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போதும் சிறந்த புகைப்படங்கள் பலவற்றை இவர் எடுத்துள்ளார். இடைக்காலத்தில் பர்க்கின்சஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர், 1971-ம் ஆண்டு காலமானார். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை ‘போர்ட்ரெயிட் ஆஃப் மைசெல்ஃப் (Portrait of Myself)’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in