பாப்லோ தி பாஸ் 6: அமிகோ ஃபியெல்..!

பாப்லோ தி பாஸ் 6: அமிகோ ஃபியெல்..!

ந.வினோத் குமார்

“பாஸ்டர்ட்..!”
“ஹா… ஹ்ஹ்ஹா… பாப்லோ… இதுல என்னைத் திட்டி என்ன ஆகப் போகுது. இது ரேஸ்… உன் காரை நீதான் ஓட்டியாகணும். வா… வா…” – காரை வேகமாகச் செலுத்திக் கொண்டே, பாப்லோவை மேலும் கோபப்படுத்தினான் கஸ்தாவோ.
பாப்லோவும் கஸ்தாவோவும் இப்படித்தான். பிஸினஸ் கொஞ்சம் போர் அடித்தால் காரை எடுத்துக்கொண்டு ரேஸ் விடக் கிளம்பிவிடுவார்கள். ஆனால் எப்போதும், கஸ்தாவோதான் முதலில் ‘ஃபினிஷிங் லைனை’ தொடுவான். பாப்லோ இரண்டாவதுதான்.
“நீ ஏன் ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிற தெரியுமா கஸ்தாவோ..?”
“தெரியும்… என் கார்ல நான் ஏதோ சித்து வேலை செஞ்சு வெச்சிருக்கேன்னு சொல்லுவ. அதானே…”
மென்மையாகச் சிரித்தான் பாப்லோ.
“போடா ஃபூல். வாழ்க்கையில எப்பவுமே ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைக்காதே பாப்லோ. நான் ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறது, உனக்கு தோல்விங்கிற பாடத்தைக் கத்துக் கொடுக்கத்தான்…”
“ஓ... மை பிரதர்…” என்று கஸ்தாவோவைக் கட்டி அணைத்துக் கொண்டான் பாப்லோ. கஸ்தாவோவால் மட்டுமே பாப்லோவைக் கண்ணுக்குக் கண் பார்த்து, ”முட்டாள்… நீ செய்யிறது தப்பு” என்று சொல்ல முடியும். அவர்களுக்கு இடையில் அப்படி ஒரு பிணைப்பு இருந்தது.
கொக்கைன் உலகத்துக்குள் கால் வைத்தவுடன், பாப்லோ வுக்கு அவன் கனவில் நினைத்துப் பார்த்ததை விடவும், அதிக மான அளவுக்குப் பணம் கிடைத்தது. எந்த அளவுக்கு அதிகமாக என்றால்… ‘உலகிலேயே 7-வது மிகப் பெரிய பணக்காரர்’ என்று ‘ஃபோர்ப்ஸ்’ எனும் பிரபல வணிக இதழில் இடம்பிடிக்கும் அளவுக்கு!
இந்தப் பணம், பாப்லோவை நிதானமாக இருக்கவிடவில்லை. இன்னும் இன்னும் வேகமாகச் செயல்படத் தொடங்கினான். அந்த வேகம் அவனை இரண்டு விஷயங்கள் மீது மோகம் கொள்ளச் செய்தது. ஒன்று, காதலிகள்… இரண்டு, கார்கள்..! காதலிகள், அவனது உடல் வேகத்தை மட்டுப்படுத்த, கார்கள், அவனது மன வேகத்தைக் கட்டுப்படுத்தின.
தான் ஒரு ‘காந்த்ராபாண்டிஸ்டா’வாக இருந்த காலத்தில், அவனுக்கு அறிமுகமானவள்தான் ‘டாடா’. அது மரியாவின் செல்லப் பெயர். பாப்லோவுக்கு 25 வயது. மரியா விக்டோரியா ஹெனோவுக்கு 14 வயது. பாப்லோவின் வீர, தீர பராக்கிரமங் களால் ஈர்க்கப்பட்ட எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி. அதென்னவோ… அவளிடம் மட்டுமே பாப்லோவை வீழ்த்துவதற்கான மந்திரம் இருந்தது. மரியாவின் குடும்பத்தா ரிடம் அந்தக் காதலுக்குப் பலமான எதிர்ப்பு இருந்தது. எல்லாவற்றையும் கடந்து 1976-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அந்தக் காதலின் நினைவாக, அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். பாப்லோ மீது டாடா எந்த அளவு அன்பு கொண்டிருந்தாளோ, அதைவிட இரண்டு மடங்கு அன்பாக இருந்தான் பாப்லோ. ஆனால், அவளுக்கு அவன் உண்மையாக இருந்தானா என்றால், சந்தேகம்தான்!
மனிதர்கள் விசித்திரமானவர்கள். பாப்லோவும் விதிவிலக்கு அல்ல. தனது காதலிகளிடத்தில் உண்மையாக இருந்தானோ இல்லையோ… தான் பயன்படுத்திய கார்களிடம் அவன் உண்மையாகவே இருந்தான். ஆம்… தன் வாழ்நாளில், 1920-களில் தயாரிக்கப்பட்ட ஃபோர்ட், செவ்ரோலெட் கார்கள் முதற்கொண்டு சுமார் 60 வகையான ‘கிளாஸிக்’ கார்கள் அவனது சேகரிப்பில் இருந்தன. காதலிகளிடம் மட்டும்தான் ஒரு முறை படுத்து எழுவான். கார்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவான்.
உலகின் சிறந்த கார்களை வாங்குவதிலிருந்த ஆர்வம், கார் பந்தயங்களில் பங்கேற் பதிலும் இருந்தது. 1979-ம் ஆண்டு, கார் ஓட்டும் தனது திறமையைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு பாப்லோவுக்குக் கிடைத்தது. அந்த ஆண்டு, ‘கோப்பா ரெனால்ட் 4 சாம்பியன்ஷிப்’ போட்டி, கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் நடைபெற் றது. லூஸியோ பெர்னல், பாப்லோ எஸ்கோபார், கஸ்தாவோ கவீரியா மற்றும் யுவான் யெப்ஸ் ஆகிய நான்கு புதியவர்கள் அந்தப் பந்தயத்தில் ஜொலிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்தப் பந்தயத்தில் பங்கேற்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்புதான், ரெனால்ட் காரில் பயிற்சி பெறத் தொடங்கியிருந்தான் பாப்லோ. அது ஏன் ரெனால்ட் மாடல் கார்..?
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இயந்திரமயமாக்கல் உலகெங்கும் ஜரூராக நடை பெற்று வந்தது. தேவைகள் பெருகின. பணக்காரர்கள் பெருகினார்கள். பயணங்கள் அதிகரித்தன. அந்தப் பயண நேரத்தைக் குறைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட கார்கள், பின்னாட்களில் ஆடம்பரப் பொருளாக மாறின. மக்கள், தரமான கார்களின் மீது அலாதியான பிரியம் கொண்டிருந்தார்கள். இத்தாலியில் ‘ஃபியட் 500’ மாடல் கார்களுக்கு பயங்கர கிராக்கி. ஜெர்மனியில் ‘வோக்ஸ்வேகன் பீட்டில்’ கார்கள் மீது பித்தம் கொண்டார்கள். அதுபோல, கொலம்பியாவில் ‘ரெனால்ட் 4’ மாடல் கார்களின் மீது ஆவல் கொண்டார்கள்.
குறைந்த விலை, கரடு முரடான பாதைகளில் செல்லும் வலிமை, அவ்வளவு எளிதாக பழுது ஏற்படாத தன்மை ஆகிய காரணங்களால், ‘ரெனாலிட்டோ’, கொலம்பியாவின் கலாச்சாரச் சின்னங்களில் ஒன்றாகவே அன்றைய நாட்களில் பரிணமித்தது. கொலம்பியர்கள் செல்லமாக இந்த கார்களை ‘அமிகோ ஃபியெல்’ என்று அழைத்தார்கள். அப்படி என்றால் ஸ்பானிய மொழியில், ‘நம்பிக்கையான நண்பன்’ என்று அர்த்தம்.
அந்த நண்பன் மீது பாப்லோவுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டதில் பெரிய ஆச்சரியமில்லை. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், எவ்வளவு விலைமதிப்பு மிக்க புதிய கார்களை அன்பளிப்பாகக் கொடுத்துக்கூட, பழைய ‘ரெனால்ட்’ மாடல் கார்களை பாப்லோ வாங்கிவிடுவான். அவ்வளவு ஏன்… அவன் கார் பந்தயப் பயிற்சி எடுத்ததுகூட, என்விகடோ நகரில் உள்ள ‘ஸோஃபாஸா’ எனும் ரெனால்ட் கார் அசெம்ப்ளி தொழிற்சாலைக்கு அருகிலிருந்த டிராக்கில்தான், என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்த அளவு ‘அமிகோ’ பித்தன் அவன்..!
79-ல் பாப்லோ பங்கேற்ற கார் பந்தயத்தை அவ்வளவு சுலபமாக நினைத்துவிடக் கூடாது. இன்றைக்கு இங்கிலாந்தில், நடைபெறும் ‘ரெனால்ட் க்ளியோ கோப்பை’க்கு நிகரான பந்தயம் அது. போட்டியின் நிபந்தனை ரொம்பவும் எளிது. சொந்தமாக ஒரு ரெனால்ட் கார், அதனுடைய இன்ஜின் மற்றும் சஸ்பென் ஷனை போட்டி நடுவர்களின் அனுமதியுடன் மாற்றிக்கொள்ளலாம், அவ்வளவுதான். பாப்லோ, கஸ்தாவோவின் கார்களுக்கு 1,000 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டது. விபத்துக்கு உள்ளானால் உடலில் அடி படாதவாறு, கார்களுக்குள்ளே பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டன.
அந்தப் பந்தயத்தில் பாப்லோவுக்கும் கஸ்தாவோவுக்கும் ‘ஸ்பான்ஸர்’ செய்
தது ராபர்ட்டோ எஸ்கோபாரின் ‘எல்
ஒசிட்டோ’ சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் தான். பாப்லோவின் கார் எண் 70. கஸ்தா வோவுடையது 71. இந்தப் பந்தயத்தில் பங்கேற்க, ஓர் ஆண்டுக்கு முன்பே அவர்கள் திட்டமிட்டிருந்ததால், அந்த ஒரு வருடம் முழுவதும் தங்களது கார்களை நல்ல முறையில் பராமரிப் பதிலேயே அவர்கள் செலவழித்தார்கள். அதற்காகவே தனியாக ஒரு பொறியாளரையும், ஐந்து மெக்கானிக்குகளையும் நியமித்தான் பாப்லோ. அவர்கள் தங்குவதற்காக, பகோட்டாவில் இருந்த ஹில்டன் ஹோட்டலின் ஒரு மாடி முழுவதையும் ஒரு வருடத்துக்கு வாடகைக்கு எடுத்தான். அந்த ஒரு வருடம் முழுவதும், அவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்துக்கும் தேவையான செலவுகள் அனைத்தையும் பாப்லோவே ஏற்றுக்கொண்டான்.
இவ்வளவு முன் தயாரிப்புகளுக்குப் பின்னர், 1979 பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்ற அந்தப் பந்தயத்தில், 6 சுற்றுகளுக்குப் பிறகு, 13 புள்ளிகள் எடுத்து, இரண்டாவது இடம் பிடித்தான் பாப்லோ..! தவிர, சிலரது மனங்களிலும் இடம்பிடித்தான். ஆம்… அந்தப் பந்தயத்தில்தான் தன் கொக்கைன் சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதற்கு உதவிய ‘அமிகோ ஃபியெல்’கள் சிலரைச் சந்தித்தான் அவன்.
(திகில் நீளும்...)

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.