நானொரு மேடைக் காதலன் - 21

நானொரு மேடைக் காதலன் - 21

தொண்டால் பொழுதளக்கிற அரிமா சங்கங்களும் சுழற் சங்கங்களும் தாய்த் தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் இன்றைக்கு நீக்கமற நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் நதிமூலம் வெளிநாடுதான் என்றாலும், இந்தச் சங்கங்களில் அங்கமாக வேண்டும் என்ற ஆவல் யாருக்கும் இயல்பாகவே எழும்.

சமூகத்தில் தகுதிக்குரியவர்களின் வரிசையில் இடம் பெற அரிமா சங்கமும் சுழற் சங்கமும் ஒருவருக்கு அங்கீகாரம் கொடுத்து விடுகிறது. பட்டம் பெறாதவர்கூட ஏன் பள்ளிக் கல்வியை முடிக்காதவர்கூடத் தனது பொருளாதாரத் தகுதியில் அரிமா, சுழற் சங்கத்தின் நிர்வாகியாகப் பொறுப்பேற்கிற விழாவைப் பார்த்தால் ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிற மந்திரிகளின் பதவியேற்பு விழா எல்லாம் இந்த விழாக்களுக்கு முன்னால் விழாவே இல்லை என்றுதான் கருத வேண்டியது வரும். கோட்டும் சூட்டும் டையும் தரித்துக் கொடியேந்தி பதவியேற்க வரும்போது ஒருவர் அடைகிற பெருமிதத்தைப் பார்த்து ஊரே அதிசயிக்கும். இந்த மாதிரியான பதவியேற்பு விழாக்களில் தமிழுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை. பதவியேற்பு நடைமுறைகள் எல்லாம் சூரியனே அஸ்தமிக்காத இலண்டனில் நடப்பது போல ஆங்கிலத்தில்தான் நடக்கும். இதில் குற்றம் காண முடியாது என்றாலும், அது ஒரு குறையாகவே என் கண்ணுக்கும் கருத்துக்கும் புலனாயிற்று. என்னைப்போல் தமிழில் நாவாடுகிறவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகின்ற நிலைமை அரும்பியபோது தமிழ் மீது கவனம் திரும்பியது. தமிழுக்குச் சரியான அரியாசனம் கிடைத்தது. தென்திசைக் குமரி முதல் திருத்தணி மலையின் எல்லை வரை இடையறாது இயங்கி வருகிற சங்கங்களின் பதவியேற்பு விழாக்களில் பங்கெடுக்கிற பாக்கியம் எனக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

பன்னாட்டு அரிமா சங்கங்களின் துறையூர்மண்டல மாநாட்டில் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்ற தலைப்பில் பேசுவதற்கு நான் அழைக்கப்பட்டேன். ‘அன்னை என்பவள் ஆடை கட்டிய அறம். அவள்தான் அசல். கோயிலில் இருப்பது எல்லாம் அதன் நகல்’ என்று சொன்ன காவியக் கவிஞர் வாலியின் வரிகளோடு வார்த்தையாடத் தொடங்கினேன். “பிறந்த பொன்னாட்டுக்கும் பேசும் மொழிக்கும் ஓடும் நதிக்கும் தாயின் நாமத்தை அடைமொழியாகக் கொடுத்த பண்பாட்டுச் சிறப்புக்கு ஈடு இல்லை. தாயை வணங்குகிறவன் தெய்வத்தை வணங்க வேண்டிய தேவையில்லை என்பதில் நம்பிக்கை கொண்ட நாடு நம் நாடு.

எங்கே உன் மகன் என்று ஒரு சங்ககால அன்னையிடம் கேட்டபோது அவள் சொன்னாள். ‘விழலுக்கு இறைக்கிற வீணனா என் மகன் வீட்டில் அடைந்து கிடப்பதற்கு. அவன் எங்கிருக்கிறான் என்பதை நான் அறியமாட்டேன். எனக்கும் என் மகனுக்கும் உள்ள உறவு உறுமும் புலிக்கும் அது உறங்கும் குகைக்கும் உள்ள உறவுதான். புலி தங்க இடம் கொடுத்தது, புலி போன குகை போன்று அவனைப் பெற்ற என் மணி வயிறு இதுதான். அவனைக் காண விழைந்தால் போர்க்களம் செல்க. அங்கு களமாடிக் கொண்டிருப்பான் பிள்ளை.’

சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்
யாண்டுள னோஎன வினவுதி! என் மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே என்றாள் சங்கத்தாய்” 

என்றேன். கரவொலி எழுப்பி அந்த அரங்கம் தாய்க்குத் தந்த மரியாதையைக் கண்டு திகைத்தேன். “தாயின் தழுவலை, ஸ்பரிசத்தைப் பெற வாய்ப்பற்றவன் தாயன்புக்கு நாளெல்லாம் ஏங்குவான். மறைந்துபோன தாயின் அன்பும் பரிவும் தன்னிடம் எப்போதும் இருப்பதாகவே ஒரு குழந்தை உணர்ந்தது. அந்தக் குழந்தை நமது தேசிய கீதத்தைத் தந்த இரவீந்திரநாத் தாகூர்தான். தாய் மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் கண்ணையும் கருத்தையும் விட்டு அகலாத அந்தத் தாயின் அளக்க முடியாத அன்பும் பரிவும் தன்னுடன் எப்போதும் இருப்பதாக அந்தக் குழந்தை முப்போதும் உணர்கிறது.

‘என் தாயின் முகம் எனக்கு நினைவில்லை. ஆனாலும் நான் விளையாடிக்கொண்டிருக்கும் போது என் விளையாட்டுக்கு இடையில் சில வேளைகளில் என் பொம்மைகளின் மீது ஒரு இனிய இசை தவழ்ந்து வருவதை உணர்கிறேன். அந்த இனிய இசை சின்னஞ்சிறு குழந்தையாய் நான் தொட்டிலில் கிடந்தபோது தாம்புக் கயிற்றைத் தன் கைகளால் அசைத்துக்கொண்டு என் அன்னை பாடிய தாலாட்டு இசையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இலையுதிர் காலத்தின் காலை நேரத்தில் மலர்களின் மணம் காற்றில் தவழ்ந்து வரும்போதும் காலை நேரத்தில் கோயில்களில் நடைபெறும் பூஜையின் சுகந்தம் தென்றலில் தவழ்ந்துவந்து என்னுடன் உறவாடும்போதும் அந்தச் சுகந்தம் என் தாயாரின் நினைவை எனக்குள் ஏற்படுத்துகிறது. என் தாயாரின் முகம் எனக்கு நினைவில்லை. ஏனெனில் எனக்கு நினைவு தெரியும் பருவத்துக்கு முன்பே அவளை நான் இழந்துவிட்டேன். சில வேளைகளில் என் படுக்கை அறையின் சாளரங்களின் வழியே நீல வானத்தைப் பார்க்கும்போது அந்தத் தொலைதூரத்து வானத்து மோனத்தில் அமைதியும் ஆனந்தமும் உடைய என் தாயின் அன்புப் பார்வை படர்ந்து நிற்பதையும் அந்தப் பார்வை என்னை உற்று நோக்குவதையும் உணர்கிறேன்’ என்று தான் பார்க்காத தாயின் மேல் அன்பைப் பொழியும் தனது ஆதங்கத்தை இரவீந்திரநாத் மென்மையாக உணர்த்துகிறார். இந்தக் கவிதையை படிக்கும்போது கண்கள் பனிக்கின்றன. நெஞ்சம் நெருக்குகிறது.

கற்றவனைக் கற்றவனே காமுறுவான் என்பதுபோல் ஒரு தாயின் உணர்வை இன்னொரு தாயால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். விறகில் தீயாய் பாலில் படுநெய்யாய் தாயிடம் வியாபித்துக் கிடக்கிற தாய்மையை இன்னொரு தாய் எப்படி அறிவாள் என்பதை வையை ஆறு கண்ணீர் வடிப்பதாகச் சொல்கிறார் சிலம்பிசைத்த இளங்கோ. தண்ணீர் எப்படி கண்ணீராய் காட்சியளித்தது? தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு வரப்போகிற துயரத்தை முன் கூட்டியே உணர்ந்து வையை கலங்கிக் கண்ணீர் வடித்தாளாம். தான் கண்ணீர் வடிப்பது மற்றவர் அறியாதவாறு மலர்கள் என்ற ஆடையில் போர்த்திக்கொண்டு துன்பத்தை மறைத்தாளாம் வையை. ‘ துணையோடு செல்லும் தோகை இன்னும் சில நாட்களில் துணையிழந்து துயருறப் போகிறாளே! மங்கலம் தரும் மஞ்சள் பூச்சை மறக்கப் போகிறதே அந்த மாந்தளிர் மேனி! அஞ்சனம் இழக்கப் போகிறதே அங்கயல் நெடுங்காண! குழையற்ற காதுகளோடும் தொடியற்ற கைகளோடுமாய் துவளப் போகிறாளே! மலர் சூடி முடிக்கப்பட்ட கூந்தல் மலரிழந்து பறக்கப் போகிறதே! உனக்கிந்த நிலையா ஏற்பட வேண்டும்’ என்று கண்ணகியை நினைத்து அழுதாளாம் வையை. தான் அழுவதைக் கண்டு கலங்கிவிடக் கூடாது கண்ணகி என்று கருதி மலர்களால் மறைத்துக்கொண்ட வையைத் தாயின் பரிவு தாயன்பின் உச்சம் அல்லவா அரிமாக்களே!

‘உலகு புரந்து ஊட்டும் உயிர் பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தானறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து
கண்நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி’
என்பது இளங்கோவன் பாட்டு.

காதற்ற ஊசி தந்த ஞானத்தால் ஆகாயம் நிகர்த்த மாளிகையை அம்சா தூளிகா மஞ்சத்தை அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை திரைகடல் தாண்டி திரவியம் தேடிய வணிகத்தைக் கண் மூடி கண் திறப்பதற்குள் துறந்தவர் பட்டினத்தார். பத்திரகிரியார் நாயையும் சோறுண்ணும் கலத்தையும் கையில் வைத்திருந்தார் என்பதற்காக அவரைக் குடும்பி என்று நகைத்தவர் பட்டினத்தார். இருக்கும் இடம் தேடி என் பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்டேனென்று வைராக்கியத்தின் கொடுமுடிக்கே சென்ற பட்டினத்தார் காதில் ஈன்ற தாய் இறந்து போனார் என்ற ஈரச் செய்தி எட்டியதுதான் தாமதம். தாயின் புகழுடம்பு இருக்கும் இடத்துக்கு ஓடினார். ‘தேனே திரவியமே மானே மரகதமே என்றழைத்து முகத்தின் மேல் முகம் பதித்து முத்தம் தந்தவள், குருவி பறவாமல் கோதாட்டிய கை என் தாயின் கை. ஈயும் என்மீது மொய்க்கத் தாங்காதவள் இதோ வெந்தாளோ சோணகிரி வித்தகா நின் பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ’ என்று ஓலம் போட்டு அழுவதைப் படிக்கும்போதெல்லாம் அழுகிறேன்.

எல்லாம் துறந்த பட்டினத்தடிகளுக்கு தாயைத் துறக்க முடியவில்லை. மலர்களின் நிறத்தையும் மரங்களின் பெயரையும் சொல்லித் தந்த முதல் ஆசிரியர் தாயல்லவா... ‘பிரான்ஸ் நாட்டுக்கு நல்ல தாய்மார்களைத் தாருங்கள்; பின்னர் பிரான்ஸில் வீரர்கள் உலவுவர்’ என்று நெப்போலியன் சொன்னான். ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’ என்றார் நபிகள் நாயகம். ‘அன்பு தருவதிலே உனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ’ என்றான் யுகக் கவிஞன் பாரதி. ‘உலகத்தில் உள்ள ஒரே ஒரு புனிதமான பொருள் தாய்தான்’ என்றார் கோல்ரிட்ஜ். ‘தாயின் இதயம்தான் குழந்தைகளின் பள்ளி’ என்றார் பிரோர். கொண்டு வந்தால் தந்தை; கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் என்று தாயைக் கொண்டாடியது தமிழ்.

தியாகத்தின் சதை வடிவமாக இருக்கும் தாயின் மாட்சி பற்றி பாடாத கவிஞர்கள் இல்லை. திரையிசைப் பாடல்களுக்கு இலக்கியத் தகுதியை வாங்கித் தந்த கவிஞர் கண்ணதாசன் சொன்னார்.

`பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
பால் தரும் கருணை அது- பிறர்
பசித்த முகம் பார்த்துப் பதறும் நிலை பார்த்துப்
பழம் தரும் சோலை அது
இருக்கும் பிடிசோறு தனக்கென்று எண்ணாமல்
கொடுக்கின்ற கோயில் அது - தினம்
துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து
அணைக்கின்ற தெய்வம் அது.
அது தூய்மை. அது நேர்மை. அது வாய்மை. அதன் பேர் தாய்மை’  ’’ 

என்று சொல்லி நான் விடைபெற்றபோது “மகிழ்ச்சியாக நடக்கும் அரிமாசங்கக் கூட்டத்தை மனநிறைவாய் நடக்கும் கூட்டம் என்று நிரூபித்த உங்கள் பேச்சு எங்கள் ஒவ்வொருவருக்கும் பாடம்’’ என்று அரிமாக்கள் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன்.

(இன்னும் பேசுவேன்...) 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in