விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 21: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்

டிராகன் சிக்கனும்… தவா ரோஸ்ட் இறாலும்!
விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 21: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்

முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் என அரசியலிலும் அதிகாரத்திலும் கோலோச்சும் கீதா ஜீவன் இந்த வார விஜபி விருந்துக்காகப் பேசுகிறார்.

“பெரும்பாலும் நான் ஹோட்டலில் சாப்பிடுறது இல்லை. காரணம், என் அம்மாவோட சமையல்தான். மீன்குழம்பு, கருவாட்டுக் குழம்பு, சாம்பார்ன்னு அம்மா எது வச்சாலும் அத்தனை ருசியா இருக்கும். அதனால் சின்ன வயசுலருந்தே அம்மா கைப்பக்குவம்தான் அமிர்தமா ருசிக்குது. இன்னிக்கும் அம்மா எது செஞ்சாலும் எனக்குக் கொடுத்து விட்டுருவாங்க.

அப்பா இருக்கும்போது வருசத்துக்கு ஒரு தடவை மொத்த குடும்பத்தையும் குற்றாலத்துக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அங்க சரஸ்வதி பவனில் காலை சாப்பாடும், பாண்டியன் ஹோட்டலில் மதியச் சாப்பாடும் சாப்பிடுவோம். இது ரெண்டுமே நல்ல ருசியா இருக்கும். குற்றாலத்தில் இருந்து திரும்பி வரும்போது திருநெல்வேலி பரணி ஹோட்டல்ல சாப்பிடுவோம்.

அரசியல்ரீதியாக அடிக்கடி சென்னைக்குப் போக வேண்டி இருக்கும். அப்போ மதுரையில் டெம்பிள் சிட்டி, திருச்சியில் ஆர்யாஸ் ஹோட்டலிலும் விரும்பிச் சாப்பிடுவேன். தூத்துக்குடியில் எங்களோட ‘ஹோட்டல் கீதா’ இருக்கு. சிலநேரம் ராத்திரிக்கு பரோட்டா, பட்டர் சிக்கன், சிக்கன் 65 ஆர்டர் கொடுப்பேன். வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்திடுவாங்க. தூத்துக்குடி ஜி.ஆர்.டி ஹோட்டலில் தான் முதன் முதலில் ‘டிராகன் சிக்கன்’ சாப்பிட்டேன். நல்ல ருசியாக இருந்துச்சு. சமீபகாலமா என்னோட ருசி லிஸ்ட்ல தூத்துக்குடி டி.எஸ்.எஃப் ஹோட்டல் சேர்ந்திருச்சு. அண்மையில் தூத்துக்குடிக்கு கனிமொழி அக்கா வந்திருந்தப்ப நானும் அவங்களும் அங்க போய் சாப்பிட்டோம். என்னோட ஃபேவரைட் டிஷ் ஆன டிராகன் சிக்கனும், தவா ரோஸ்ட் இறாலும் சூப்பரா தந்தாங்க. இப்ப எனக்கு நேரமில்ல... முடிஞ்சா நீங்க ஒரு எட்டு அங்க போயி சாப்பிட்டுப் பாருங்க” என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறினார் கீதா ஜீவன்.

அந்த வார்த்தை மறையாமல் தூத்துக்குடியில் டி.எஸ்.எஃப் கிராண்ட் பிளாஸா அரங்கிற்குள் இருக்கும் டி.எஸ்.எஃப் ஹோட்டலுக்கு வந்தேன். முன்னமே தகவல் சொல்லி இருந்ததால் எனக்காக தயாராகக் காத்திருந்த ஹோட்டலின் உரிமையாளர் கிப்ட்சன் டிராகன் சிக்கன், தவா ரோஸ்ட் இறால் செய்முறைகளைச் சொன்னார்.

டிராகன் சிக்கன்

தேவையானவை: சிக்கன், குடமிளகாய், வெங்காயம், சில்லி பேஸ்ட் (காய்ந்த மிளகாயை அரைத்து எண்ணெயில் வதக்கி வைத்த கலவை), முட்டை, மக்காச்சோள மாவு, முந்திரிப்பருப்பு, தக்காளிச்சாறு, உப்பு, வினிகர், செலரிஇலை, இஞ்சி, பூண்டு, மிளகாய்ப்பொடி, பாதி அரைக்கப்பட்ட காய்ந்த மிளகாய்.

செய்முறை: சிக்கனின் மார்புப் பகுதியை எடுத்து விரல் அளவுக்கு நீளமாக வெட்டவேண்டும். அதை நன்றாகக் கழுவி நீரை வடிகட்ட வேண்டும். அதில் உப்பு, பாதி அரைக்கப்பட்ட காய்ந்த மிளகாய், சில்லி பேஸ்ட், முட்டை, மக்காளச்சோள மாவு, வினிகர் சேர்த்து எண்ணெயில் பொரித்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். நீளமாக வெட்டப்பட்ட குடமிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றுடன் இஞ்சி, பூண்டை சேர்த்து சைனீஸ் கடாயில் வதக்க வேண்டும். ஒன்றரை நிமிடங்களுக்கு பின்பு சில்லி பேஸ்ட், சிறிதளவு தண்ணீர், உப்பு, தக்காளிச்சாறு, பாதி அரைக்கப்பட்ட காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக்கிளற வேண்டும். இப்போது இதனோடு பொரித்து தனியாக வைத்திருக்கும் சிக்கனையும் போட்டுக் கிளறணும். இறுதியாக, முந்திரிப் பருப்பை பொரித்து அதன் மேல் போட்டு இறக்கினால் டிராகன் சிக்கன் தயார்.

தவா ரோஸ்ட் இறால்

தேவையானவை: சுத்தம் செய்யப்பட்ட இறால், மஞ்சள் பொடி, மிளகுப்பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு, தயிர், தேங்காய் எண்ணெய், இஞ்சிப் பூண்டு பேஸ்ட்.

செய்முறை: இறாலை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிகட்ட வேண்டும். இஞ்சிப்பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள்பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடி ஆகியவற்றை இறாலில் போட்டு பிரட்டி அதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு தயிர் சேர்க்க வேண்டும். 15 நிமிடம் இந்தக் கலவையை ஊறவைக்க வேண்டும். அதன்பின்னர் தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் விட்டு, ஊறவைத்த இறாலை அதில் போட்டு ரோஸ்ட் செய்து எடுத்தால் தவா ரோஸ்ட் இறால் ரெடி. (குறிப்பு: இறாலை அதிக நேரம் இல்லாமல் 7 முதல் 8 நிமிடங்கள் வரை மட்டுமே ரோஸ்ட் செய்ய வேண்டும். அதற்கு மேல் செய்தால் இறால் ரப்பர் போல் இறுகிவிடும். அதில் கவனமாக இருக்க வேண்டும்.)

என்ன... நீங்களும் டிராகன் சிக்கனும் தவா ரோஸ்ட் இறாலும் செய்யத் தயாராகிட்டீங்க போலிருக்கு!

படங்கள் உதவி: அனிகா 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in