நானொரு மேடைக் காதலன் 9- நாஞ்சில் சம்பத்

நானொரு மேடைக் காதலன் 9- நாஞ்சில் சம்பத்

மாட மதுரையின் தோரண வாயிலாகத் துலங்கும் திருப்பரங்குன்றில் முனை முறிந்து போகாத முற்போக்குக் கவிஞர்களின்  முகமாகவும் முகவரியுமாகத் திகழும் முற்போக்குக் கவிஞர் பேரவையின் செயலாளர் கவிஞர் ஜீவாவிடம் இருந்து வந்த அழைப்பு என்னை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டது. ஏடெடுத்து கவி எழுதத் துடிக்கிற கவிஞர்களின் பயிற்சிப் பட்டறையாகவும் முற்போக்குக் கவிஞர் பேரவை இயங்கி வந்தது என்பதை நான் அறிவேன். ஆனந்தத்துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் குப்பைக் கவிஞர் வாசு. கணபதியும் உங்களோடு உரையாற்றப் போகிறார்கள் என்று கவிஞர் ஜீவா சொன்னதனால்தான். 
கற்றறிந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவை ஊடகங்கள் பயன்படுத்திக்கொண்டதால் ஊரறிந்தவர், பாரறிந்தவர் ஆனார். காக்கிச் சட்டை அணிந்து  காவல் துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் வாசு. கணபதிக்கு தமிழ் வசமாயிற்று. புகழ் பெற்ற இரண்டு பெரு மக்களோடு பேசப் போகிறேன் என்று நினைத்தால் நடை வண்டி பிடித்து நடக்கிற நான் தானாக இனி நடக்க முற்போக்குக் கவிஞர் பேரவையின் மேடை என்னை மடை மாற்றும் என்று நம்பினேன். பேரவை எனக்குத் தந்த தலைப்பு ‘ மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்பதாகும். சின்ன வயதில் ஏற்றுக்கொண்ட இலட்சியங்களை அழகுபடச் சொல்லவும் அலங்காரமாகச் சொல்லவும் பாரதிதாசன் எழுதிய கவிதையில் ஒரு வரிதான் ‘ மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்ற வரி.

இரண்டு பெருமக்கள் பேசுகிற மேடையில் எனக்கு இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும் என்ற பேராசையில் பேசுவதற்கு ஒத்துக்கொண்டாலும், அச்சம் என்னை ஆட்டிப் படைக்கத்தான் செய்தது. பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு மட்டுமல்ல. குப்பைக் கவிஞர் வாசு. கணபதியின் பேச்சைக் கேட்பதற்கும் மதுரையில் ஒரு கூட்டம் உண்டு.  அறியாத ஊருக்கு வாழ்க்கைப்பட்டுப்  போன ஒரு பெண்ணின் மனநிலையில்தான் மேடையேறினேன். ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் தமிழ் கேட்க ஆர்வத்துடன் இத்தனை மக்களா என்று மலைக்கும் அளவுக்கு மாபெரும் கூட்டம். பள்ளி இறுதித் தேர்வு எழுதுகிற மாணவனைப் போல பதற்றத்துடன் மேடையில் இருந்தேன்.
திரண்டிருந்த பெருங்கூட்டம் என் பொருட்டு வந்ததல்ல. எப்படியும் இவர்களைக் கவர்ந்துவிட வேண்டும் என்ற ஏக்கம் என்னை இயக்கியது. என்னைத்தான் முதலில் பேச அழைத்தார்கள். அப்போது கேட்ட கரவொலி என் அச்சத்தையும் நடுக்கத்தையும் போக்கியது.   “ ‘ திங்களும் செங்கதிரும் அங்குலும் தங்கும் உயர் தென்பரங் குன்றில்’   ‘தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றனை திருப்பரங்குன்றில்’ ‘ பொழில் புகழ் திருப்பரங்கிரி’ ‘ நன்மணியுகு திருப்பரங்கிரி’ ‘தேவர் பணிந்தெழும் தென்பரங்குன்று’ என்றெல்லாம் தித்திக்கத் தித்திக்கத் திருப்புகழ் தாலாட்டும் முருகனின் படை வீட்டில் முற்போக்குக் கவிஞர் பேரவை முன்னெடுக்கும் நிகழ்வில் கருத்துக் கமல்ஹாசன் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும், காக்கிச் சட்டைக்குள் கன்னித் தமிழை வைத்துப் பேணும் குப்பைக் கவிஞர் வாசு. கணபதியும் பேசுகிற மேடையில் பேசுகின்ற பெரும் பேற்றை வழங்கியிருக்கிற கவிஞர் ஜீவாவை ஜீவன் உள்ளவரை மறக்க மாட்டேன்” என ஆரம்பித்தேன். மகுடிக்கும் மயங்கும் நாகமென குன்றத்து மக்கள் தமிழுக்கு மயங்கினார்கள்.

ஒரு உண்மையை உரக்கச் சொல்லத்தான் வேண்டும். அடியேன் அனுபவித்து உணர்ந்ததை காமதேனு வாசகர்களிடம் பதிவு செய்து வைப்பது எனது கடமையாகும். முப்பத்து இரண்டு ஆண்டு காலமாக தென்திசைக்குமரி முதல் திருத்தணி மலையின் எல்லை வரை கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் என திசைகள் தோறும் வலம் வருகிறேன். நலம் தரும் வழியில் நாவாடி வருகிறேன். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய தலங்களிலும் சமயக் குரவர்களின் சந்தனத் தமிழ் விளைந்த தலங்களிலும் தமிழைச் செவி மடுப்பவர்கள் தகுதியால் உயர்ந்து நிற்கிறார்கள். சில ஊர்களில் வரம்பு மீறிய வார்த்தை விளையாட்டுகளும் வக்கணை யான நகைச்சுவைகளையும் வலிந்து திணித்தால்தான் பேசுகிறவனுக்கு வரவேற்பு கிடைக்கும். மேடைகளின் தரம் இப்படித்தான் தரை மட்டமானது. ஆனால், பாடல் பெற்ற திருத்தலங்களில் அது திருநெல்வேலி ஆனாலும் சரி திருவரங்கம் ஆனாலும் சரி திருத்தணி ஆனாலும் சரி திருந்திய தமிழில் செம்மாந்த நடையில் பேசினால் பேசுகிறவர் யார் என்று பாராமல் மார்கழித் திங்கள் இசை விழாக்களில் ஆகா ஆகா என்று பாட்டை ரசிப்பது போல்  பேச்சை ரசிப்பார்கள். திருப்பரங்குன்றமும் அந்த வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டிய ஊர்.  “புதியதோர் உலகம் செய்ய, கெட்ட போரிடும் உலகை வேருடன் சாய்க்க கவிதையை ஆயுதமாக ஏந்திய பாரதிதாசன் ஒரு மானிடப் பற்றாளன். 

ஒவ்வொரு மனிதனும் விழித்த விழியில் மேதினிக்கு ஒளி செய்ய வேண்டும் என்று விரும்பினான். அவனுடைய குருநாதன் பராசக்தியைப் பாடினால் அவன் மானிட சக்தியைப் பாடினான். கண்ணில் தெரிகிற வானம் மண்ணில் தெரிவதற்கு மானிடம் என்ற வாளை ஏந்துங்கள் என்று அறைகூவல் விட்டான். ஆனால், இன்றென்ன நிலைமை. மானிடம் நொண்டுகிறது. மானிட சக்தியின் வல்லமையை வீழ்த்தத் துடிக்கிற வல்லாதிக்கக் கழுகுகள் நம்  வானத்தில் வட்டமிடுகின்றன. அடுத்தவன் கண்ணீரில் உப்பைச் சேகரிக்கிற ஒட்டுண்ணிகள் அருகி வருவதற்குப் பதிலாக பெருகி வருவது பேராபத்து.  வையகம் முழுவதும் வசப்படுத்த எண்ணிய ஹிட்லர் அந்த ஆசையை நிறைவேற்ற பல நாடுகள் மீது படைத்தளபதியாக இருந்தவன் எரிக்கோக். இதயத்தைக் கீழே இறக்கி வைத்த ஹிட்லரின் அராஜக ஆணைகளுக்கு வடிவம் தந்தவன் எரிக் தான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in