நானொரு மேடைக் காதலன் - 7

நானொரு மேடைக் காதலன் - 7

கூவத் துடிக்கிற குயிற் குஞ்சாக, தாவத்  துடிக்கிற தளிர்மான் குட்டியாக  பேசத் துடித்த பருவத்தில் விதவிதமான தலைப்புகளைத் தந்து அணி செய்ய பணித்ததன் மூலம் என்னைச் சொற்பொழிவாளனாக ஆயத்தப்படுத்தியதில் குமரி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக்குப் பெரும் பங்குண்டு. 

சொல்ல நா பதைக்கும்; நினைக்க நெஞ்சு பதைக்கும், பாருங்க சாமி; இது பாரத பூமி, தமிழா உன்னைத் திருத்து, நெஞ்சு பொறுக்கவில்லை, காலம் போடுகிற கோலம், என்ன செய்யப் போகிறோம் போன்ற தலைப்புகளில் குமாரபுரம், செங்கோடி, தக்கலை, முளகுமூடு, நாகர்கோவில் போன்ற மையங்களில் பேசப் பேச என் இரும்பு பொன்னாகி வந்தது. நானும் கருமமே கண்ணாகி நூல்களைத் தேடவும் நூலகங்களை நாடவும் எனப் பொழுதுகள் பார்த்துக்கொண்டேன். நாளேடுகளை நாளும் படித்து முக்கியச் செய்திகளைக் குறிப்பெடுத்து அந்தச் செய்திகளுக்குப் பொருத்தமான தமிழ்க் கவிதைகளை எழுதிவைத்துக் கொள்வேன். புதிய புத்தகங்கள் வாங்குவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் அந்தி மாலையில் கல்லூரி விட்டதற்குப் பிறகு நாகர்கோவில் மணிமேடைச் சந்திப்பில் வீதியோரத்தில் கடை விரித்திருக்கும் பழைய புத்தகக் கடையில் தினமும் எனது தேடல்கள் தொடரும். தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதய்யரின் கண்டதும் கேட்டதும் , பழையதும் புதியதும், கி. வா. ஜாவின் கவி பாடலாம், ஷேக்ஸ்பியர் ஸ்டடீஸ் போன்ற காணக் கிடைக்காத நூல்கள் எல்லாம் கையில் கிடைத்தன. மாசித்திங்களில் நடக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா பேச்சுப் போட்டி , கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் நடத்தும் பேச்சுப்போட்டி என அரங்கேறும் பேச்சுப் போட்டிகளில் மேடையேறி வாங்கிய பரிசுகள் செய்தியானதால், பொதுவெளியில் அறிமுகம் ஆவதற்கு அடியேன் அதிகம் சிரமப்படவில்லை. அந்த அறிமுகம்தான் ஆசிரியர் பேரவைகளில் பேசுவதற்கான வாய்ப்பின் வாசலைத் திறந்து வைத்தது.

மலையாள இலக்கிய உலகின் புகழ் பெற்ற கவிஞரும் வள்ளுவனின் வான்மறையை கவின் மலையாளத்தில் திறம்படவும் நிறம் படவும் மொழி பெயர்த்ததால் புகழ் பெற்றவருமான ரமேசன் நாயர் பிறந்ததால் பெருமை பெற்ற ஊர் குமரி மாவட்டம் குமாரபுரம். அங்கு நடந்த ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு வழக்காடு மன்றத்துக்கு  ஏற்பாடு செய்து என்னை வழக்குத் தொடுக்கப் பணித்தார்கள். தலைப்பைக் கேட்டபோது யாரோ தடிகொண்டு தலையில் அடிப்பது மாதிரி உணர்ந்தேன். தப்பிப் பிழைப்பேனா என்று தவித்தேன். இதிகாசப் பாத்திரங்கள் கொச்சைப்படுத்தப்படுவதால் இலக்கிய நிகழ்ச்சிகளில் பட்டி மன்றம், வழக்காடு மன்றம் போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று வகுப்பு வாத சக்திகள் வரிந்து கட்டிக்கொண்டு நின்றபோது, ‘தமிழ் வளர வேண்டும் திறனாய்வு என்ற சாளரம் திறக்கப்பட வேண்டும். திறனாய்வின் இன்னொரு மேடை வடிவம்தான் வழக்காடு மன்றங்களும் பட்டி மன்றங்களும்’ என்பதைத் தன் வலிமையான வாதத் திறத்தால் வகுப்பு வாத சக்திகளின் முயற்சியை முறியடித்த நாவீறுகொண்ட பெருமகன் இரா. அனந்த கிருஷ்ணன் வழக்காடு மன்றத்தின் தலைவர். தலைப்பு ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி குற்றவாளி’ என்பதாகும். எதிர்த்து வழக்காடுபவரோ குமரி மாவட்ட கலை இலக்கிய பேரவையின் செயலாளர் சங்கர். என்னைக் காட்டிலும் பாரதியை ஆழமாகக் கற்றவர் என்பதை விட பாரதி காதலர் சங்கர். பொறியில் சிக்கிக்கொண்டோமா... வலையில் விழுந்து விட்டோமா என்று ஆனைவாய்க் கரும்பாய் நான் ஆகிவிட்டேன். 

அறிவார்ந்த தளத்தில் நின்று பேசுவதற்கும் விவாத அரங்கு களில் அறை கூவல்களை எதிர் கொள்வதற்கும் அக்கினி தெறிக்க நாவாடுவதற்கும் அந்த வழக்காடு மன்றம்தான் எனக்கு கனத்த நம்பிக்கையைத் தந்தது. மிகக் குறைந்த நேரத்தில் பாரதியின் பரிணாமங்களைப் பட்டியலிட்டுவிட்டு, பாட்டுக்கொரு புலவன் பாரதி குற்றவாளி என்று சம்பத் கொண்டு வந்திருக்கிற வழக்கை இந்த மன்றத்தில் ஏன் அனுமதிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைச் சொல்லச் சொன்னார் நடுவர். “நடுவர் பொறுப்பில் இருக்கிற நீங்கள் பாரதியை, என்னை விட ஆழ்ந்து கற்றவர் என்பதையும் எதிர் வழக்காடும் என் இனிய நண்பர் சங்கர் பாரதியின் மீது தீராக்காதல் கொண்டவர் என்பதையும் அறிவேன். எனக்கு நீதி கிடைக்கும் என்பதை விட எல்லோருக்கும் நிலைமை தெரிய வேண்டும் என்பதே என் அவா. யுகக் கவிஞன் பாரதியின் மீது எனக்குக் கோபமும் இல்லை. பாட்டுக்கொரு புலவன் பாட்டில் குறை காண நான் ஒன்றும் ஒட்டக்கூத்தனும் இல்லை. ஒரு மொழி அதன் இருப்பையும் இயல்பையும்  தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் அந்த மொழியில் வருகிற அனைத்துப் படைப்புகளையும் தீவிரத் திறனாய்வுக்கு உட்படுத்த வேண்டும். திறனாய்வுக் கலையில் நாம் மிக மிகப் பின் தங்கி இருக்கிறோம். தெள்ளுதமிழ்க் கம்பனை  அறிஞர் அண்ணா கேள்விக்கு உட்படுத்திய பிறகுதான் கம்பனில் மூழ்கினான் கண்ணதாசன். அந்த உயர்ந்த நோக்கத்தால்தான் பாரதியைக் கூண்டிலேற்றுகிறேன்.

நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழின் சோம்பலை முறித்த பாரதி முரண்பாட்டின் மொத்த உருவம்.

தமிழுக்குப் புதிய நடையும் உடையும் படையும் தந்தபாரதி பழைமையின் மீதும் பத்தாம்பசலித்தனத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவன். கொள்ளைக் கொடி விரிந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தின் முன்னால் எல்லாக் கவிஞர்க ளும் தாளேந்திக் கிடந்தபோது கவிதையைவாளாக ஏந்திய பாரதி வன்முறையின் மீது நம்பிக்கை உள்ளவன். ஒருவனை அழ வைக்கவும் முடியும் அதிர வைக்கவும் முடியும் எனத் தன் பாட்டில் நிரூபித்த பாரதி தமிழர் தம் பெருமையைக் கண்டுகொள்ளாதவன். அச்சமில்லை என்று ஆகாயம் கேட்க முழங்கியவன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி யானைக்கு மதம் பிடித்திருக்கிறது என்று தெரிந்த பிறகும் அதன் வாயில் போய் வலிய சிக்கிக்கொண்டதன் மூலம் தன் உயிருக்குத் தானே உலை வைத்துக்கொண்டான். தேச விடுதலையைப் பாடு பொருளாகக் கொண்ட பாரதி, தேச விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களைப் பாட மறந்து விட்டான். சீட்டுக் கவி எழுதி சில்லறை சேர்த்த கவிஞர்களைப் போல சீரழியவில்லை என்றாலும் பாரதிக்கு வறுமையை வெல்லத் தெரியவில்லை. பாஞ்சாலி சபதத்தையும் கண்ணன் பாட்டையும் பாடியதன் மூலம் பாரதி சிந்தையும் செயலும் தமிழின் பால் நிச்சயம் இல்லை என்பதை மத்தளம் கொட்டி வரி சங்கம் நின்றூதி என்னால் சொல்ல முடியும்.

இவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு சில வழக்குகளை இந்த மன்றத்தில் நான் கொண்டு வந்திருக்கிறேன். இதை அனுமதிப்பதன் மூலமும் தொடர்ந்து விவாதிப்பதன் மூலமும் தமிழின் திறனாய்வுக் கலைக்கு இந்த வழக்காடு மன்றம் வலுவும் வளமும் சேர்க்கும். என்னைப் போல எண்ணுகிறவர்கள் இந்த வழக்கைத் தொடுக்க என்பால் பணித்தார்கள். இறைவன் கூட விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் இல்லை. ஆகவே, பாரதி பக்தர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. விவாதம் சரியான திசையை நோக்கிச் செல்ல நான் ஒத்துழைக்கிறேன். இந்த வழக்கை அனுமதிப்பதன் மூலம் பாரதி இன்னும் பேசப்படுவான். அவனது அருமையும் பெருமையும் இன்னும் புலப்படும். எதையும் மறுப்பதும் வெறுப்பதும் எதிர் வழக்கறிஞருக்குப் பிள்ளை விளையாட்டு. இதை அனுமதித்தால் அவரும் படிப்பார் புதிய பாடம். எனவே, இந்த வழக்கை அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

நடுவர் வழக்கை அனுமதிக்க நான் சொன்ன காரணங்களைக் கேட்டு நடுவரே மகிழ்ந்தார். இது தமிழ் மேடைக்கு நல்ல தொடக்கம் என்று சொல்ல அனுமதித்ததும் அடியேன் அதற்குப் பிறகு அதை எதிர்கொண்டதும்தான் தமிழ் மேடைகளில் தொடர்ந்து பங்கெடுப்பதற்கான ஊக்கத்தையும் உள் வலிமையையும் தந்தது. என் கண்களைத் திறந்த பாரதி இன்னும் என் கண்ணை விட்டு அகலாமலே இருக்கிறான்.

(இன்னும் பேசுவேன்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in