நானொரு மேடைக் காதலன் - 6

நானொரு மேடைக் காதலன் - 6

எண்ணம் போல் வாழ்வு என்பார்கள்.

கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு அந்த எண்ணம் என்னில் சந்திர பிம்பத்தைப் போல் நாளும் வளர்ந்தது. 1956 திருச்சிராப்பள்ளி திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் சொல்லின் செல்வர் ஈ. வெ. கி. சம்பத்தின் பேச்சைக் கேட்டு வியப்பில் விழி விரித்த அப்பா எனக்கு சம்பத் என்று பெயர் சூட்டினார். பள்ளிப் பருவத்தில் சம்பத்தைப் போல் வர வேண்டும் என்று தட்டித் தட்டி வளர்த்த அப்பா இப்போது என் கனவில் கல் எறிய ஆரம்பித்தார். என் உத்தரவு இல்லாமல் எங்கும் போகக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். என்னைக் கண்காணிப்பதற்கு என்று சிலரை நியமித்து இருந்த அப்பா, கடைசியில் அவர் நடத்திவந்த மளிகைக் கடையில் வியாபாரத்தைக் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் உட்கார வைத்துவிட்டார். 

என்னை மாற்றி விட முடியும் என நம்பினார். நாளும் கோளும் மாறினாலும் பிரபஞ்சத்தின் அசைவுகள் மாறினாலும் நான் மாறத் தயாரில்லை! 

காமத்தைப் பற்றிச் சொல்லவந்த வள்ளுவன் அதை ஒரு நோய் என்றான். ‘காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்’ என்பது குறள். எனக்கோ அந்த நோய் வர வேண்டிய வயதில், மேடையில் பேசிப் புகழ் பெற வேண்டும் என்ற நோய் வந்துவிட்டது! காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை வந்துவிட்டால் என்னை இந்த நோய் வாட்டும். அறிஞர் அண்ணா அவர்கள்கூட திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டங்களை மாலை நேரப் பல்கலைக் கழகங்கள் என்றுதான் அழைத்தார். அந்த மாலை நேரப்  பல்கலைக் கழகத்தில் இடம் பெற வேண்டும் என்று மனம் இறக்கை கட்டிப் பறக்கும்.

அப்படித்தான் ஒருநாள் எனது ஊரில் இருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஆற்றூர் என்ற இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம். 1965 இந்தி எதிர்ப்புப் போரில் போலீஸ் சீருடையுடன் பணியில் இருந்தபோது இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டதால், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர் போலீஸ் கண்ணன். வேலை இல்லை என்று துரத்தப்பட்டவர், மேடையில் பேசுவதையே வேலையாக்கிக் கொண்டார். அந்தக் கூட்டத்துக்கான விளம்பரம் கண்ணில் பட்டது. 
நெருக்கடி நிலை இருந்த காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு  ஓராண்டு காலம் சிறையில் இருந்த டாக்டர் ஆல்பன் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். முன்கூட்டியே ஆற்றூர் சென்று அந்தக் கூட்டத்தில் பேசுவது என்று முடிவெடுத்து விட்டேன். ஆனால், மாலை 4 மணி அளவில் என்னை அரசியல் களத்துக்கு அழைத்துவந்த அண்ணன் ஜஸ்டிஸ் ஓடோடி வந்தார். 

“ஆற்றூர் கூட்டத்துக்கு வர வேண்டிய போலீஸ் கண்ணன் வர முடியாது என்று தந்தி கொடுத்து இருக்கிறாராம். மாற்று ஆளைத் தேடிக்கொண்டிருந்த டாக்டர் ஆல்பனிடம் உன்னை அழைத்து வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டேன். வா போகலாம்’’ என்றார்.

பழம் நழுவி பாலில் விழுந்தது மாதிரி உணர்ந்தேன். சைக்கிளை அண்ணன் ஜஸ்டிஸ் மிதிக்க, பின்னால் இருந்து என்ன பேசலாம் என்று யோசித்த வண்ணம் ஆற்றூர் போய்ச் சேர்ந்தோம். திருவட்டார் ஒன்றியச் செயலாளராக இருந்த டாக்டர் ஆல்பனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். போலீஸ்  கண்ணன் வராத விவரத்தை ரகசியமாகவே வைத்திருந்தார்கள். போலீஸ் கண்ணன் வருகிறவரை சம்பத் பேசுவார் என்று என்னை அழைத்தார்கள். பேச்சுப் போட்டிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பேசிவந்த எனக்கு ஆற்றூர்தான் முதல் அரசியல் மேடை. 

போலீஸ் கண்ணன் வராத குறையை நீக்க வேண்டிய கடமை எனக்கு. கோடிட்ட இடத்தை நிரப்பத்தான் மேடையேறினேன். இதுவே வாழ்க்கை முழுவதும் என்னோடு வரும் என்று அப்போது கருதவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்த நேரம். நீறு பூத்த நெருப்பாக தமிழகம் அப்போது இருந்தது. வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி ஆறாக ஓடிக்கொண்டிருந்தது ஈழத்தில். இதையே இதயத்தில் பதியவைத்துக்கொண்டு உரையாற்றினேன்.   “தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இருக்கின்ற உறவு தொப்புள் கொடி உறவு.  எங்கள் உறவுகள் அங்கே நிம்மதியாக இருந்தால்தான் இங்கே நாம் நிம்மதியாக இருக்க முடியும். புத்தளத்துக்கு வடகே பொன்பரப்பி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும் தமிழகத்தில் தென்பாண்டிச் சீமையில் ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும் ஒரே வகை  என்பதும் அவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதும் எதை உணர்த்துகிறது? சாகாவரம் பெற்ற சங்க இலக்கியத்தில் அகநானூற்றில், நல்ல குறுந்தொகையில், நற்றிணையில், ஈழத்துப் புலவன் பூதன் தேவனார் எழுதிய பாட்டுகள் இடம் பெற்றிருக்கின்றனவே... இது எதை உணர்த்துகிறது? இரவைப் பகலாக்கி பகலை இரவாக்கி பைந்தமிழ் நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் அலைந்து திரிந்து அரிய தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யரின் அருந்தமிழ்ப் பணிக்கு பக்க பலமாகவும் தக்க துணையாகவும் இருந்தவர், அருந்தமிழ் நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தவர் ஈழ நாட்டில் சிறுப்பிட்டையைச் சார்ந்த சி.வை.தாமோதரம் பிள்ளை என்பது எதை உணர்த்துகிறது?

காணக் கிடைக்காத கருவூலங்கள் என்று கருதப்பட்ட அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தந்தது மட்டுமல்ல... சிதம்பரத்தில் தான் தொடங்கிய அச்சகத்தை, பள்ளிக்கூடத்தை, தான் பாடுபட்டுத் தேடிய விலை மதிப்புள்ள சொத்துகளை எல்லாம் அங்கேயே விட்டுச் சென்றார் யாழ்ப்பாணம் தந்த தமிழறிஞர் ஆறுமுக நாவலர் என்பது எதைக் காட்டுகிறது? கல்வி சிறந்த தமிழ்நாடு என்பதற்கு கலங்கரை விளக்கமாகத் திகழும் அலை மேவும் கடலோரம் சென்னையில் ஆகாயம் அளாவ எழுந்து நிற்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி தமிழீழ நாட்டைச் சார்ந்த கரோல் விசுவநாதப் பிள்ளை என்பது எதை உணர்த்துகிறது? ராஜா சர். முத்தையா செட்டியார் தமிழும் தமிழர்களும் தழைக்க நிர்மாணித்த, நாம் அண்ணாந்து பார்க்கிற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் யாழ்நூல் தந்த அறிஞர் விபுலானந்த அடிகள் என்பது எதை உணர்த்துகிறது? தேசிய கீதம் தந்த இரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கும், பாழ்பட்டு நின்ற பாரத தேசத்தை விடுவித்த தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளுக்கும் தனிச் செயலாளராக இருந்தவர், அடிப்படைக் கல்வி முறையை நடைமுறைப்படுத்திய அரிய மனிதர் டாக்டர் அரியநாயகம், ஈழ நாட்டைச் சேர்ந்தவர் என்பது எதை உணர்த்துகிறது? 1927-ல், சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராகக் களம் கண்டவர் மஹஜன் புலவு சச்சிதானந்தம் அவர்களின் பெரிய தாயார் மங்களம்மாள் என்பது எதை உணர்த்துகிறது? 

உடலாலும் உள்ளத்தாலும் ஈழத்து மக்கள் எங்களோடு ஒன்றுபட்டவர்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் ரத்த உறவு மட்டுமல்ல சித்த உறவும் ஆகும் என்பதை நினைத்தாலே வலிக்கவில்லையா நமக்கு?’’ என்று நான் உரத்த குரலில் உணர்ச்சியின் உச்சியில் நின்று உரையாற்றியபோது மேடையில் தலைமை தாங்கிய டாக்டர் வே. ஆல்பன் அவர்களும் ஈத்தாமொழி திரவியம் அவர்களும்  ‘பலே பலே சபாஷ் சபாஷ்’ என்று வட்டார மொழியில் உச் கொட்டியபோது கீழே இருந்த கூட்டமும் ஆரவாரித்தது. என்னை மேடையேற்றி அழகு பார்த்த ஜஸ்டிஸ் அண்ணனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

“அங்கு நடப்பதை இங்கிருந்து கேட்டாலே அடிவயிற்றில் தீ பற்றுகிறது. பால் கசக்கிறது. பழம் புளிக்கிறது. பஞ்சணை நோகிறது. இந்தியத் தாயே. உன் காலுக்கடியில் கண்ணீரில் சமாதியாகிக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்றுவதில் ஏன் இந்தத் தயக்கம்? மண்ணைக் கண்ணீரால் மலர்த்துவதை விட்டுவிட்டு புண்பட்ட பூமிக்கு பூவின் தேன் மருந்திடுங்கள். தேர்கட்டி வருகின்றதீங்கிற்குத் தீயிடுங்கள். இன்னும் தாமதித்தால் எதுவும் நேரலாம். எதற்கும் தமிழர்களே... அவர்களுக்குக் கொடுப்பதற்கு உங்கள் கண்களில் கண்ணீர் இருக்குமானால் சிந்துவதற்கு இப்போதே தயாராகுங்கள். வாய்ப்புக்கு நன்றி வணக்கம்’’ எனச் சொல்லிவிட்டு உட்கார எத்தனித்தேன்.  டாக்டர் வே. ஆல்பன் என்னை ஆரத் தழுவி மகிழ்ந்தார். இந்தப் பாணியே திமுக மேடைக்கு புதிது தம்பி என்று சொல்லி பூரித்தார் திமுகவின் மூத்த முன்னோடி ஈத்தாமொழி திரவியம். முன்னாள் மேலவை உறுப்பினர் றசல்ராஜ், சிறப்புப் பேச்சாளர் வந்திருந்தால் இப்படி ஒரு சிறப்பான பேச்சைக் கேட்டிருக்க முடியாது என்று சொல்லி பாராட்டினார். 

பாராட்டுகள் கிடைத்தபோது  புதுமணப் பெண்ணைப் போல் தலை குனிந்தேன். அந்த மோகன வேளையில் எனக்குள் பூத்துச் சொரிந்தன பூக்கள். முதல் கூட்டமே முத்திரையைப் பதித்த கூட்டமாகப் பொலிந்துவிட்டது. பயணத்தின் லட்சியம் வாழ்க்கையா, வாழ்க்கையின்  லட்சியம் பயணமா என்று தட்டுத் தடுமாறித் தவித்த எனக்கு பயணமே வாழ்க்கை என்று வழி காட்டியது ஆற்றூர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in