அரியநாச்சி 3- வேல ராமமூர்த்தி

அரியநாச்சி 3- வேல ராமமூர்த்தி

வீட்டுக் கொல்லையில் ஆள் உயர தென்னந்தட்டி மறைப்பு. மார்புக்கு மேல் பாவாடையை ஏத்தி கட்டி நின்று குளிக்கும் மாயழகியின் தலை தெரியாத உயரம்.
அடுத்த வீட்டுக்காரன், மூணாவது வீட்டுக்காரன் கண்ணுக்குப் படாமல், கொல்லையைச் சுற்றி முள்ளு வேலி. புளியமரமும் வேப்பமரமும் அடைத்துக் குடை பிடித்து நிற்கும். குடிக்க, குளிக்க, வீட்டுப் புழக்கம் எல்லாத்துக்கும் பெரிய கண்மாயோரம் இருக்கிற கரைக்கிணத்து தண்ணீர் தான். கரைக்கிணறு, ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத கிணறு. தேனாய் இனிக்கும்.
கோழி கூவ, கரைக்கிணத்துக்கு போகிற ஊர்க் குமரிகள், கண் துலங்கப் பொழுது விடியுமுன் நாலஞ்சு நடை தண்ணி சுமந்தாகணும். வீட்டுக்கும் கிணத்துக்கும் நடையாய் நடந்து, தண்ணீர் சுமக்கிறது மாயழகிதான். இடுப்பிலே ஒரு குடம். தலையிலே ஒரு குடம். ரெட்டைக் குடம் தூக்கி மாயழகி நடந்து வர்ற போது, குதிங்கால் மிதிபட்டு ணங்… ணங்…னு தரை தெறிக்கும்..!
ஊர் இளவட்டங்கள், அவனவன் முறைகாரக் குமரிகளைப் பார்க்கணும்னே… முளைக்கொட்டுத் திண்ணையிலே தூங்குற மாதிரி முழிச்சுக்கிட்டே கிடப்பான்ங்க. என்றைக்காவது பொழுதும் புலர்ந்து போகும். வீடடைய வேக வேகமாய் வரும் குமரிகளை, மச்சான், கொழுந்தன்மார் மறிச்சுக்கிட்டு நிற்பான்ங்க. கேலி பேசுவான்ங்க.
“கிடேறி… துள்ளிக்கிட்டுப் போகுதே… என்னவாம்..!”
“கழுத்திலே கயிறைக் கட்டி… வசக்கிற வேண்டியதுதான்…”
பேசுகிறவன், மனசுக்கு பிடிச்ச மச்சான், கொழுந்தனா இருந்தால் கேட்கிற குமரிகளுக்கு, நடக்கிற பூமி நழுவும். இடுப்புக் குடத்தில் ஒரு கை நீரை அள்ளி, இளவட்டத்தின் முகத்தில் தெளித்துவிட்டு, கவிழ்ந்த சிரிப்போடு கடந்து போவார்கள்.
மாயழகிக்கும் மச்சான், கொழுந்தன்மார் உண்டுதான். ஒரு பயல் கிட்டே நெருங்கமாட்டான்.
“ஆத்தாடீ… அது கருநாகம்..! பார்க்கிற பார்வையிலேயே போட்டுத் தள்ளிரும்..!” என்பார்கள். வள்ளி அத்தையின் வளர்ப்பு அப்படி.
மாயழகி, தாயாரைப் பார்த்ததில்லை. பிறந்து மூணு நாள் பிஞ்சு… தாயைப் பறி கொடுத்துட்டுத் தனியே கிடந்தது. ஆறு வயசு ஆகிறபோது, அப்பன் வெள்ளையத் தேவன், ஜெயிலுக்கு போன ஆளு. தகப்பனையும் சரியா பார்த்ததில்லை. தாய் செத்து, தகப்பன் ஜெயிலுக்குப் போனதும் வீடு இருளடைஞ்சு போச்சு.
வாழ்க்கைப்படாமலே வாழாவெட்டி ஆன வள்ளி அத்தைதான், அண்ணன் பிள்ளைகள் மூணு பேரையும் வளர்த்து ஆளாக்கி, வீட்டிலே விளக்கெரிய வைத்தவள். தனக்கென ஒரு தாம்பத்தியத்தை மறுத்ததற்குக் காரணமும் இதுதான்.
தலை குளிர ஊற்றிக் குளிக்கிற மாயழகிக்கு புட்டத்துக்குக் கீழே கருங்… கருங்…ன்னு முடி. மூக்கும் முழியும் உளி அடிச்சு செதுக்கின மாதிரி. ஆப்பநாட்டுக் குமரிகளில்… பெருநாழி மாயழகி ஒரு பேரழகி..! குமரிக்கு குமரி ஆசைப்படுகிற அழகின்னாலும்… மாயழகி, சிரிச்சு யாரும் பார்த்ததில்லை. சிங்காரிச்சும் பார்த்ததில்லை. ‘பிறந்ததும் பெத்த தாயை முழுங்கினவள்…’ என்கிற அவச்சொல்லு, நெஞ்சுக்குள்ளே வேராய் இறங்கிருச்சு.
குளித்து முடித்து ஈரத் துணியோடு கொல்லை வாசல் வழியே வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டு நடுப் பத்தியில் உடை மாற்றிக்கொண்டிருக்கும் அண்ணன் பாண்டியைத் பார்த்ததும் அடுப்படிக்குள் பதுங்கி நின்றாள்.
மொட மொடக்கும் வெள்ளை வேஷ்டி. முழுக்கைச் சட்டை. முழங்கை அளவுக்கு சட்டைக் கையை மடக்கிவிட்டுக் கொண்டிருந்தான் பாண்டி.
தாழ்வாரத்தில் துவையல் அரைத்துக்கொண்டிருந்த குமராயி, வள்ளி அத்தையுடன் வாயாடிக்கொண்டிருந்தாள்.
“இம்புட்டு பெரிய வயித்தை துருத்திக்கிட்டு, காரேறி… பாளையங்
கோட்டை ஜெயிலுக்குப் போகணுமாக்கும்..? செத்துப்போன என் மாமியார் பேர்லெ உள்ள பெண்வழிச் சொத்து பூராத்தையும் வெள்ளாங்குளத்
துக்கே கொண்டு போயிறணும்னு அம்புட்டு ஆசை…! ம்…? ” ‘சரட்… 
சரட்…’ என அம்மிக்கல் தேய துவையலை அரைத்தாள்.
தலை வாசலுக்கு வந்த பாண்டி, “ஏய்… கழுதை..! ஏன் இந்தக் கத்து கத்துறே..?” என்றான்.
“ஆமலூ… நான் பொதி சொமக்குற கழுதைதான். வாய் வீணா கத்துறேன். ஒங்க கூடப் பெறந்த காரியக்காரவுக மாதிரி… சத்தம் போடாமல் சொத்தைச் சுருட்டத் தெரியாத கழுதைதான்..!” அம்மியில் அரைத்த தேங்காய் துவையலை ஆட்காட்டி விரலால் வழித்தாள்.
எதுவும் புரியாத பாண்டி, வாசலில் நிற்கும் வள்ளி அத்தையைப் பார்த்தான்.
“எத்தேய்… இவ யாரைச் சொல்றா..?”
விளக்குமாறை கை மாற்றிய வள்ளி அத்தை, “உங்க அக்கா அரியநாச்சி… எங்க அண்ணனைப் பார்க்க, ஜெயிலுக்குப் போச்சாம்..!” என்றாள்.
“எங்கக்கா… நெறை மாசமாவுலெ இருக்கு…! அதெப்படி அம்புட்டுத் தூரம் போகும்…?”
அம்மியை விட்டு எழுந்து வந்த குமராயி, “பொண்ணு கேட்டுப் போனாகளாம்… பொண்ணு..!” புருசனுக்கு முன்னால் நின்று அலப்பினாள்.
“எதூ..! பொண்ணு கேட்டா..? யாரை..? யாருக்கு?” கண்களை சுருக்கினான்.
“அவுக புருசன் கூடப் பெறந்த கொழுந்தன் ஒருத்தன் இருக்கான்லே… ‘சோலை’ங்கிறவன்..? அவனுக்கு… நம்ம மாயழகியை.”
“என்னடீ… சொல்றே..? அந்த மொசப் பிடிக்கிற பயலுக்கா..? விடிஞ்சதும் எந்திருச்சுப் போயி… ‘எந்தக் காட்டுலெ மொசல் கெடக்கும்..? எந்தக் காட்டுலெ நரி கெடக்கும்’னு வேட்டைக்கு அலைவானே…! அவனுக்கா…?” முகம் சுழித்தான் பாண்டி.
“உங்க ஆத்தா பேர்லெ இருக்கிற பெண்வழிச் சொத்தெல்லாம்… உங்க அக்கா அரியநாச்சிக்கு பாதி… மாயழகிக்கு பாதிதானே? உங்க அக்கா, வெள்ளாங்குளத்துக்கு வாக்கப்பட்டு போகும் போதே… பாதி சொத்துப் போயிருச்சு. இப்போ மாயழகிப் பிள்ளையையும் தன் கொழுந்தனுக்குக் கட்டி வச்சா… மொத்தச் சொத்தும் வெள்ளாங்குளம் போயிரும்லே..? அதுக்குதான். வேறென்ன?”
வள்ளி அத்தை குறுக்கே பேசினாள். “ஏய்… குமராயீ..! அரியநாச்சிப் பிள்ளை அப்பிடியெல்லாம் சொத்துக்கு ஆசைப்படுற பிள்ளை இல்லடி. அது பாவம்… கல்யாணமாகி ஒம்பது வருசத்துக்கப்புறம் இப்போதான் ஒரு பிள்ளையை உண்டாகி இருக்கு..! தங்கச்சியை தன் கொழுந்தனுக்கு செஞ்சா… ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஒத்தாசையா இருக்கும்னு நெனச்சிருக்கலாம்.”
“நீ என்ன சின்னத்தா இப்பிடி பேசுறே..! ஏன்..? என் தம்பிக்காரன் ஒருத்தன் முழுத்த எளவட்டம் இருக்கான்லே… கருப்பையா..? அவனுக்கு செஞ்சா… ‘நாளைக்கு எனக்கும் என் புருசனுக்கும் ஒத்தாசையா இருக்கும்’னு நான் நெனைக்க மாட்டேனா…? நாளை இவருக்கு ஏதாவது ஒன்னுன்னா… என் தம்பி தானே வந்து முன்னே நிப்பான்..? ஊரானா வந்து நிப்பான்..?”
ஈரத் துணியுடன் அடுப்படியில் நிற்கும் மாயழகி, எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
கைச் சட்டையை ஏத்தி மடக்கி விட்ட பாண்டி, “ஏய்… அதை விடுடி. எங்க அக்கா ஜெயிலுக்குப் போனது நெசந்தானா..?” என்றான்.
புருசனின் தலைக்கு மேல் வலது கை தூக்கி, “ஒங்க தன்னான…” சத்தியம் பண்ணினாள். “வெள்ளாங்குளம் பூவாயி கிழவிதான் துணைக்குக்கூடப் போயிருக்கு.”
பாண்டி, வள்ளி அத்தையின் பக்கம் திரும்பினான். “ஏத்தே… என் பொண்டாட்டி சொல்றதுல என்ன தப்பு இருக்கு? நான் ஒருத்தன் ஆம்பளை இங்கே இருக்கேன். என்னை கலந்து பேசாமல், எங்க அக்கா காரேறிப் போயி பொண்ணு கேக்குறதும்…. எங்க அய்யா அவரு பாட்டுக்கு ஜெயில்லெ இருந்துக்கிட்டே சம்மதம் சொல்றதும் என்னத்தே ஞாயம்?”
வள்ளி அத்தை தலை கவிழ்ந்தாள். “உன்னை கலக்காமல் அரியநாச்சிக்கு எங்க அண்ணன் சம்மதம் சொல்லி இருப்பாருன்னு நான் நெனைக்கலெ.”
புருசன் பாண்டியின் நெஞ்சுக்கு நேராக குமராயி வந்து நின்றாள். “ஏ… நீங்க இப்பவே காரேறி ஜெயிலுக்குப் போங்க… மாயழகியை என் தம்பி கருப்பையாவுக்கு முடிக்கப் போறதை மாமாகிட்டே ஒரு தாக்கலா மட்டும் சொல்லிட்டு வாங்க…”
“ஏப்பா… பாண்டி..! மாயழகிப் பிள்ளகிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கப்பா…”
“எங்கே இருக்கு அந்தப் பிள்ளை..?” என்றபடியே நடுப்பத்தி கடந்து அடுப்படிக்கு வந்தான்.
“மாயழகீ..!”
உடம்பு ஒட்டிய ஈரத் துணியோடு அடுப்படி ஓரத்தில் ஒடுங்கி நின்ற மாயழகியைக் கண்ட நொடியில் பதறித் திரும்பினான். தங்கச்சியை ஈரத் துணியோடு பார்த்த கொடுமைக்கு, ‘ச்சேய்…!’ எனத் தன்னைத் தானே திட்டிக்கொண்டு, “நம்ம பிள்ளையை பத்தி நமக்குத் தெரியாதா..? அதுகிட்டே என்ன கேக்குறது..?” நிலைக் கண்ணாடி முன் போய் நின்று தலை சீவுவது போல் சமாளித்தான்.
“தலை எல்லாம் நல்லாதான் இருக்கு. கெளம்புங்க” விரசினாள் குமராயி.
நடுவீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுகிறான் சக்கரைத் தேவன். மரக்கட்டில் காலில் முதுகு சாய்த்து, கால் நீட்டி அமர்ந்து, புருசன் சாப்பிடுவதையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள் அரியநாச்சி.
“ஏ..! நல்லா கை நெறையா அள்ளிச் சாப்பிடுங்க… மொசக்கறி நல்லாத்தானே இருக்கு..?”
“அரியநாச்சி கைபட்ட கறில்லே..! அமுர்தமா… இருக்கு!” முயல் சப்பையை கடித்துக்கொண்டே, “காரேறி ஜெயிலுக்குப் போனியே..! அம்மான் என்ன சொன்னாரு..?”
“எங்கய்யாகிட்டே எஞ்சொல்லுக்கு மறு சொல்லேது?”
“எனக்கென்னமோ இது நல்லா படலேம்மா. உன் தம்பிக்காரன் பாண்டிக்கு ‘வெள்ளாங்குளம்’னா… பச்சநாவி. என் தம்பிக்காரன் சோலைக்கு ‘பெருநாழி’ன்னா… பச்சநாவி. ரெண்டு பயலுகளும் கிருசுகெட்ட பயலுக. ஆ… ஊ…ன்னா… அருவாளைத் தூக்குவான்ங்க! என்னாகப் போகுதோ..!” முயல் சப்பையைக் கடித்து இழுத்தான்.
(சாந்தி... சாந்தி...)

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.