குரங்கணி சித்தன் கதை 17: துங்கபத்ராவும் கொட்டக்குடியும் ஒண்ணு!

குரங்கணி சித்தன் கதை 17: துங்கபத்ராவும் கொட்டக்குடியும் ஒண்ணு!

பிறப்பும் இறப்பும் ஒண்ணுதான், சிரிப்பும் அழுகையும் ஒண்ணுதான். ஆனா, கவலையும் சந்தோஷமும் வேற வேற. சோகமும் உற்சாகமும் வேற வேற. ஒரு உசுரு காத்தை இழந்து மண்ணுக்குள்ளே போறப்பதான் இன்னொரு உசுரு காத்துக்காக முளச்சு வெளியே வருது! இதை நல்லா தெரிஞ்சிருந்த சித்தன் சோகமாத்தான் இருந்தான். அதுக்குக் காரணம் இருக்கு.
மழை நின்னுபோச்சு. கூடாரத்துக்கு மேலே, வேப்பமரத்து மழை மட்டும் சொட்டுசொட்டுனு விழுந்துகிட்டு இருந்துச்சு!
போடப்ப நாயக்கர் சந்தோஷமா எந்திரிச்சு, துங்கபத்ரா கமண்டலத்தை எடுத்துக் கையில வச்சுகிட்டு, கண்ணமூடி, “ஜெய் ஜக்கம்மா! ஈ ஜனாலு பிட்லு பாப்பலு கனி, ஆலமாக்கு கன்னி தேவுடு கண்ணு தெரிசி சூசி, ஈ ராஜ்யானி கனிப்பிச்சி பெட்டால... ஜெய் ஜக்கம்மா!!”னு சொல்லி, சித்தனைத் தன் பக்கத்துல கூப்பிட்டாரு.
“மகாராசா நீங்க நீடூழி வாழணும்!”னு சொன்ன சித்தன், மண்டியிட்டு, துங்கபத்ரா கமண்டலத்தை ரெண்டு கையில ஏந்தி வாங்கினதுமே, கூடாரத்துலே இருந்த வேப்பெண்ணெய் விளக்கு இன்னும் பிரகாசமா எரிய...
சித்தன் கண்ணை மூடினான். போடப்பர், மரகதக் கல்லு நிறத்துல பிரகாசமாத் தெரிஞ்சாரு. பொம்மியும் கலிங்காவும் பொன் நிறத்துல மின்னினாங்க. தன் நிழலைப் பார்த்தான் சித்தன். கூடாரத் துணியில தன்னோட தலையில்லாத நிழல் மட்டும் தெரிஞ்சது. சித்தன் கண்திறந்தான். நல்ல சகுனமும் கெட்ட சகுனமும் சேர்ந்தே தெரியுதேனு ஆச்சரியப்பட்டான்.
போடப்பர், ஒரு சேவுகனைக் கைநீட்டி, “கன்னி மூலையில உடனே ஒரு கூடாரத்தைப் போடு. சுத்தம் பண்ணு செம்புப் பாத்திரமும் பாலும் உள்ளே வை. பூ அலங்காரம் பண்ணு!”னு கட்டளை போட்டாரு.
பொம்மியும் கலிங்காவும் கும்பிட்டுக்கிட்டே கால்ல விழுந்து எந்திரிச்சு நின்னாங்க.
சித்தன், போடப்பரை நிமிர்ந்து பார்த்து, “மகாராசா... எங்க தலை
முறையைப் பொழைக்க வச்சுட் டீங்க. எங்க கன்னிதெய்வம் உங்க தலைமுறையை வாழையடி வாழை யாத் தளிர வைக்கும்!”னு கண்ல தண்ணி மிதக்கச் சொன்னான்.
பதிலுக்கு போடப்ப நாயக்கரும், “வீரபாண்டியில இருக்கும் கன்னி தெய்வத்துக்கு, முக்கொம்பு நட்டு முல்லையாத்துலே தீர்த்தத் தண்ணி எடுத்து எங்க பரம்பரை வழிபடும். சித்தா... கவலைப்படாதே. ஆக வேண்டிய காரியத்தைப் பாரு!”னு சொன்னாரு.
கொஞ்ச நேரத்துல அங்க வந்த சேவுகமார்கள், “மகாராசா... புதுக் கூடாரத்துல ஆவன செய்துட் டோம்!”னு சொல்லிக் கைகட்டி நின்னாங்க.
போடப்பர் ரெண்டு கைகளைத் தூக்கி பொம்மியையும் கலிங்கா வையும் பார்த்து, “ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றி வாழணும்”னு ஆசிர்வாதம் செஞ்சாரு.
சித்தன் கமண்டலத்தை எடுத்து கிட்டு, பொம்மியையும் கலிங்கா வையும் புதுக் கூடாரத்துக்குள்ளே கூப்பிட்டுப் போனான். பொம்மி கல்விளக்கு ஏத்தி வச்சா. சித்தன் கூடாரத்தோட வாசல் சீலையை இழுத்து மூடி, “கலிங்கா, நான் சொல்லும்போது விளக்கை அணைக்கணும். ரெண்டு பேரும் கையப் பிடிச்சுகிட்டு, விளக்கை மூணு சுத்து சுத்தி வந்து உக்காருங்க''னு சொன்னான். உட்கார்ந்தாங்க.
“கலிங்கா நல்லா கேட்டுக்கோ... நீ விளக்கை அணைச்சதும் நான் செம்புப் பாத்திரத்திலே இந்தக் கமண்டலத் தீர்த்தத்தை ஊத்தி அதுல நான் வச்சிருக்கிற மூலிகை மகரந்தத்தை கரைச்சி உங்ககிட்ட கொடுப்பேன். ரெண்டு பேரும் குடிங்க. அந்த இருட்டுலேயும் உங்க ரெண்டு பேரோட உடம்புலே ஓடுர ரத்த ஓட்டம் மரகதக்கல்லு பச்சைல தெரியும்! பயந்துறாதீங்க. கன்னி தெய்வத்தை வேண்டிக்கிங்க. உங்கள அறியாமலேயே ஒரு உடலா ஒரு உசுரா சேர்ந்துடுவீங்க''னு சென்ன சித்தன் கூடாரத்துக்கு வெளியே வந்து நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தான். “சரியா பூரண அமாவாசை''னு சொல்லிக் கிட்டு திரும்பவும் உள்ளே போனான்.
விளக்கை கலிங்கா அணைச்சதும், சித்தன் தன் இடுப்புத் துணியில முடிஞ்சு வச்சிருந்த மூலிகை மகரந்தத்தை எடுத்து செம்புப் பாத்திரத்திலே போட்டான். துங்கபத்ரா கமண்டலத்துல இருந்த ஊத்துத் தண்ணியை செம்புப் பாத்திரத்தில ஊத்திக் கரைக்க, அது பச்சை நிறத்துல மின்ன ஆரம்பிச்சது. அதை வாங்கி பொம்மியும் கலிங்காவும் குடிச்சதுதான் தாமஸம். ரெண்டு பேரோட உடம்புல அந்தத் தீர்த்தம் உள்ளே போகப்போக, அவங்க உடம்பும் பச்சை நிறத்துல மிளிர ஆரம்பிச்சது.
பொம்மியும் கலிங்காவும் தன்னை மறந்து மயக்க நிலைக்குப் போய்ட்டாங்க. பேச்சு வரல. கலிங்காவோட மூச்சுக் காத்து பொம்மியோட கழுத்துலயும் மார்புலயும் பரவ மெல்ல சாஞ்சு படுத் தாங்க. உடம்புல எல்லா இடத்துலயும் சூடு பரவி புதுசுகம் பரவ ஆரம்பிச்சது.
கொட்டக்குடி ஆத்தங்கரையில் காத்துக்கிடந்த ஒரு குறிஞ்சி மரம், தன்னோட வேர் விரிஞ்சு பரவின இடத்துல, ஊத்துத்தண்ணிய உறிஞ்சு உள்ள இழுக்க, மரத்தோட நரம்பு வழியா மேல ஏறிப்போன அந்த ஊத்துத்தண்ணி, காம்பு நுனிக்குப் போய், பூ வெடிக்கிறதுக்குக் காரணமான முதல் அணுத்துளியை விதைச்சது.
பொம்மி, அந்த இருட்டுலயும் வெட்கப்பட்டது தெரிய, கலிங்கா மெல்ல சிரிச்சுகிட்டே மல்லாக்கப்படுத்தான்.
 காலங்காத்தாலே இந்த பூமியும் சுகமா எந்திரிச்சது.
காலையில சித்தனைத் சந்திக்க வந்தான் தம்மா. “சித்தா பாண்டியனாரு கொழுக்கு மலையில இருக்காரு. அவரோடு சேவுகமார்கள் இருநூறு பேர் இருக்காங்க. ராத்திரியில மட்டும் சமைக்கிறாங்க. அவங்க சமைக்கிற இடத்துல புகை தேங்கி நிக்குறத கண்டுபிடிச்சிட்டோம். நம்ம ஆளுகள கொட்டக்குடி ஆத்துக்கு வடக்குப் பக்கம் காத்திருக்கச் சொல்லிட்டேன். உஷார் சித்தா!''
பொம்மியும் கலிங்காவும் போடப்ப நாயக்கரைப் பார்க்க வெட்கப்பட்டு குனிஞ்ச தலையோட இருந்தாங்க. சித்தன்தான் வாய் திறந்தான், “போய்ட்டு வர்றேன் மகாராசா. உங்க திட்டப்படி நாளைக்கு எல்லாமே நடக்கும். உங்க படைபலம் வேணாம். உங்க படைக்கு அங்க வேலை இல்லை. நீங்களும் நந்திச்சாமி மட்டும் அங்கே வந்தாலே போதும். காலையில என்னை வந்து பார்த்த எங்க ஆதிகுடி தம்மா எங்கிட்டே துப்பு சொல்லிட்டான். பாண்டியரோட தாத்தா மரம் வெட்டின அதே கொழுக்கு மலையிலதான் ஒளிஞ்சிகிட்டு இருக்காரு. கொட்டக்குடி ஆறு அங்கதான் ஆரம்பிக்குது. கரை யில ஒருபக்கம் மரங்களே இல்லாம போதைப்புல்லுகளா வளர்ந்து கெடக் கும். ஆள் உசரத்துக்கு வளர்ந்து நிக்கும். உள்ள ஆளு போனா வெளியே தெரியாது. அவங்கள கண்டுபிடிக்கிற வழி எனக்குத் தெரியும். அந்த ஆத்துக்கரையில வச்சுத்தான் உங்களுக்கு ஒரு ரகசியத்தையும் பெரும்பிறவி பாண்டியன் சொல்லு வாரு. அப்புறம் நடக்கிறதை வேடிக்கைப் பாருங்க மகாராசா!''னு கண்ணுல ஒளியோட சொன்னான்.
“சித்தா, நானும் உனக்கு நல்ல செய்தி செல்லணும். இதே இடத்துல அரண்மனை கட்ட முடிவு செஞ்சுட்டேன். பெரும்பிறவி பாண்டியனைக் கட்டித் தூக்கிவந்த மறுநாளே அவன் கண் முன்னாடி அரண்மனை கட்ட ஆரம் பிச்சுர வேண்டியதுதான். மரத்துக்குப் பதிலா கல்தூண் வச்சு கட்டப்போறேன்! உனக்கு சந்தோஷம்தானே?''னு கண் சிமிட்டி சொன்னாரு.
“சந்தோஷம் மகாராசா... எங்க ஆளுக கல்லு மண்ணு சுமக்க வேலைக்கு வருவாங்க. தாராளமா கட்டுங்க!''
“அப்புறம் இன்னொன்னு... அரண்மனை கட்டுறதுக்கு முன்னாடி கொட்டக்குடி ஆத்துலதான் பூசை செய்றோம். எங்க ஐயர் வருவாரு... பழசெல்லாம் கழியணும் இல்லையா? ஆத்துல தூக்கிப்போட இதோ பழைய ஓலைச்சுவடியெல்லாம் கொண்டுவந்துட்டாங்க. பெரும் பிறவி பாண்டியனோட அரண்மனையில கிடச்சது!''
ஓலைச்சுவடியைப் பார்த்துக்கிட்டு இருந்த சித்தன் ஆச்சரியமா கேட்டான், “தமிழ்ல எழுதின இந்த ஓலைச்சுவடியில எங்க சித்த மருந்துகளைப் பத்தி இருக்கு. இதை ஏன் ஆத்துல விடணும்?''
- சொல்றேன்...

Related Stories

No stories found.