தாவோ: பாதை புதிது - 19

தாவோ: பாதை புதிது - 19

இந்த உலகத்தின் இரட்டை வேடத்தை நினைத்து வியக்காமலும் உளைச்சல் அடையாமலும் இருக்கவே முடியவில்லை. ஒரு பக்கம் முடிவே இல்லாத கொடுமைகள்… இன்னொரு பக்கம் தீரவே தீராத அழகுகள். இவற்றில் எதை இந்த உலகின் இயல்பாக எடுத்துக்கொள்வது. போர்களுக்கிடையே சிக்கி எத்தனையோ குழந்தைகள் உயிரிழந்துகொண்டிருக்கும்போது பீத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபனியை இங்கே நான் கேட்கலாமா? அப்பாவி மக்களை அதிகாரம் பலிகொடுத்துக்கொண்டிருக்கும்போது பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ பாடலைப் படித்துக்கொண்டிருக்கலாமா, கூடாதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எளிமையான பதிலோ ஒற்றை பதிலோ கிடையாது.

சென்னைக்கு வந்த புதிதில் என்னுடன் தங்கியிருந்த அறை நண்பன், பேருந்தில் சென்று வரும்போது நடக்கும் சம்பவங்களை எனக்குச் சொல்வான். ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞனைப் பற்றி ஒரு நாள் என்னிடம் சொன்னான். அந்த இளைஞன் என்ன செய்தான் என்பதை வெளியே சொல்லக்கூட முடியாத அளவுக்கு கூசிப் போய் அந்தப் பெண், பேருந்திலிருந்து இறங்கிச் சென்றதுதான் கொடுமை. அருகிலிருந்தவர்கள் உறைந்து நிற்க, அடுத்த நிறுத்தத்தில் அவனும் இறங்கிச் சென்றுவிட்டானாம்.

சில நாட்கள் கழித்து அதே தடத்தில் அந்த இளைஞனைப் பார்த்திருக்கிறான் நண்பன். பெண்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைகளுக்குப் பக்கத்தில் கம்பியைப் பிடித்துக்கொண்டு அங்கே அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணை நோட்டமிட்டுக்கொண்டிருந்திருக்கிறான். அந்தப் பெண்ணின் மடியில் ஒரு குழந்தை. அது இவனைப் பார்த்துக் கையை அசைத்துச் சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த இளைஞனின் பார்வை வேறு திசையில் இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல குழந்தையின் சிரிப்பால் ஈர்க்கப்பட்டுவிட்டான். அதனிடம் விளையாடிக்கொண்டே வந்தான். அந்தப் பெண் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் அந்தக் குழந்தைக்குத் தன் புதிய தோழனை விட்டுவிட்டுச் செல்ல மனமே இல்லை.

“மாமாவுக்கு டாட்டா காட்டு” என்று அந்தப் பெண் தன் குழந்தையிடம் சொல்ல, அந்தக் குழந்தையும் அம்மாவின் தோளில் இருந்தபடி டாட்டா காட்டிக்கொண்டே சென்றிருக்கிறது. பேருந்தில் நின்றிருந்த அந்த இளைஞனும் குழந்தை பார்வையிலிருந்து மறையும் வரை குனிந்து ஜன்னல் வழியே டாட்டா காட்டிக்கொண்டே இருந்தான். அந்த இளைஞனின் முகம் அவ்வளவு அசாதாரணமான பொலிவுடன் அப்போது இருந்தது என்று என் நண்பன் வியப்புடன் கூறினான். “இதில் அவனுடைய எந்த முகம் நிஜம் என்று புரியவேயில்லை” என்றும் புலம்பினான். இதில் என்ன சந்தேகம், இரண்டு முகங்களும்தான். அவனுக்கு இன்னும்கூட முகங்கள் இருக்கலாம்தான். இந்த உலகுக்கும் அப்படித்தான்!

இந்த உலகை, வாழ்க்கையை அவ்வளவு எளிதாகக் கறுப்பு, வெள்ளை வண்ணங்களில் தீட்டிவிட முடியாது. இடைப்பட்ட எத்தனையோ வண்ணங்கள்தான் இந்தஉலகை நமக்கு அவ்வளவு அழகானதாகவும் கொடூரமானதாகவும் நமக்குக் காட்டுகின்றன. நன்மை-தீமை, அழகு-விகாரம் என்று நாம் எதிரெதிரே வைத்துப் பார்க்கும் ஒவ்வொன்றும் தங்களுக்கிடையே ஊடாடிக்கொண்டு ஒரு சமநிலையைக் கொண்டுவரப் போராடுகின்றன.

கடலளவு தீமை இருந்தாலும் கையளவு நன்மை இருந்தால் இந்த உலகம் பிழைத்துக்கொள்ளும். “இந்த பூமியையே அழித்துவிடக்கூடிய பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மிடையே உள்ளன; எனினும் நாம் இன்னும் அப்படிச் செய்யவில்லைதானே. இந்த உலகில் வெறுப்பைவிட அன்பு அதிகமாக இருக்கிறது; அழிவு சக்தியை விட ஆக்க சக்தி அதிகமாக இருக்கிறது. வெறுப்பைவிட அன்பு பல்கிப்பெருகிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதை வெளிப்படுத்தும் வழிமுறையைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஒரு பேட்டியில் எழுத்தாளர் டான் பிரவுன் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது.

‘தி லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’ என்றொரு படம். ஃப்ளோரியன் ஹென்க்கல் வான் டானர்ஸ்மாக் இயக்கியது. கிழக்கு ஜெர்மனியில் நடப்பது போன்ற கதை. கிழக்கு ஜெர்மனிக்கு விரோதமாக நாடகாசிரியர் ட்ரேமன் மேற்கு ஜெர்மனி பத்திரிகையில் புனைப்பெயரில் கட்டுரை எழுதியிருப்பதாக சந்தேகம் எழுந்து அவர் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் பொருத்தப்படுகின்றன. ட்ரேமன் வீட்டின் தளத்துக்கு மேலே உள்ள பரணிலிருந்து அதிகாரி வீஸ்லர் உளவு பார்க்கிறார். ஆரம்பத்தில் தான் ஒட்டுக்கேட்டதை நேர்மையுடன் பதிவு செய்யும் வீஸ்லர் ஒரு நாள் பீத்தோவனின் இசைத்துணுக்கொன்றை ட்ரேமன் வாசிப்பதை ஒட்டுக்கேட்கிறார். இசை போன்ற விஷயங்களெல்லாம் கம்யூனிஸக் கொள்கைக்கு எதிரானது என்று நம்பிவந்த ட்ரேமன், முதன்முறையாக பீத்தோவனின் இசையைக் கேட்டபோது அதன் இனிமையில் உறைந்துபோய்விடுகிறார். அதன் பிறகு ட்ரேமனைப் பற்றிய விஷயங்களை மறைத்து, அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

வீஸ்லர் எதையோ மறைக்கிறார் என்பதை அறிந்த அவரது உயர் அதிகாரி வீஸ்லருக்கு தண்டனை அளிக்கும் விதமாகப் பதவியிறக்கம் செய்யப்பட்டுக் கடைநிலைப் பணி வழங்கப்படுகிறது. இதற்கிடையே இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றுசேர்கின்றன. ட்ரேமன் கடந்த காலத்தில் தான் உளவுபார்க்கப்பட்ட தகவலை அறிகிறார். தான் உளவு பார்க்கப்பட்டும் எப்படி மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தோம் என்று ஆச்சரியப்படும் ட்ரேமன், உளவுத்துறை ஆவணங்களைச் சென்று பார்வையிடுகிறார். அதில், தன்னைக் காப்பாற்றும் நோக்கில் உளவுக் குறிப்புகள் மாற்றி எழுதப்பட்டிருப்பதை அறிகிறார் ட்ரேமன்.

உளவு அலுவலரின் சங்கேதப் பெயரை மட்டுமே அந்த ஆவணங்களில் அறிந்துகொள்ள முடிகிறது: HGW XX/7. படத்தின் இறுதிக் காட்சியில் வீஸ்லர் தெரு வழியே போய்க்கொண்டிருக்கும்போது ஒரு புத்தகக் கடையின் முகப்பில் ட்ரேமன் எழுதிய புதுப் புத்தகத்தின் விளம்பரம் தென்படுகிறது. கடையில் உள்ளே செல்லும் வீஸ்லர் பணம் கொடுத்துப் புத்தகத்தை வாங்கிப் புரட்டுகிறார். புத்தகத்தின் சமர்ப்பணப் பக்கத்தில்: ‘இந்தப் புத்தகத்தை HGW XX/7-க்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று இருக்கிறது.

இந்தப் படத்தின் மிக முக்கியமான திருப்புமுனை பீத்தோவனின் இசையை வீஸ்லர் கேட்டதுதான். இந்தப் படத்தில் பீத்தோவன் இசை வரும் இடத்தைப் பார்த்து இஸ்ரேலிய உளவுத்துறையினர் சிலர் மனம் மாறிய சம்பவங்களும் உண்டு.

ஒருவருக்கு பீத்தோவனின் இசை, இன்னொருவருக்குக் குழந்தையின் சிரிப்பு… நம் இதயத்தை அசைக்கக்கூடிய, நெகிழ வைக்கக் கூடிய ஏராளமான விஷயங்கள் இந்த உலகில் உண்டு. எனினும் இந்த உலகம் ஏன் இவ்வளவு மூர்க்கமாக இருக்கிறது, வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடுமையாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை அல்லவா! இவையெல்லாம் உலகத்தை ஒரேயடியாக மாற்றக்கூடியவை இல்லைதான்; என்றாலும் இவை இல்லாத உலகத்தை நம்மால் நினைத்துப்பார்க்கவே முடியாது. இதைவிட இன்னும் மூர்க்கமானதாக, இன்னும் கொடுமையானதாக இவ்வுலகம் இருந்திருக்கும்.

ஊருக்குச் சென்றால் காலையில் வயல்வெளிகள், வாய்க்கால் பக்கம் நடந்துவிட்டு வருவது வழக்கம். அப்படி நடக்கும்போது, பாதி பட்டுப்போன கருவேல மரத்தில் கரிச்சான் குருவியொன்று கூட்டில் அடைகாத்துக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்த மரத்தைச் சுற்றிலும் ஆண் கரிச்சான், குட்டி ஹெலிகாப்டர் போல் ரோந்து வந்துகொண்டிருந்தது. மேலிருந்து அந்தக் கூட்டை மையமிட்டுச் சுற்றிக்கொண்டிருந்த பருந்தை இங்கிருந்தே தன் கரகர குரலால் வெருட்டித் துரத்துகிறது கரிச்சான். பருந்தில் ஆரம்பித்து அணுகுண்டுவரை இந்த உலகமே இயற்கையாகவோ செயற்கையாகவோ ஒரு கரிச்சானுக்கு எதிராக இருந்தாலும் அது எந்த ஒரு நம்பிக்கையில் இவ்வளவு கூடுகட்டி, முட்டையிட்டு, அதைக் காவல் காக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

நம்பிக்கை, நம்பிக்கையின்மை போன்றவையெல்லாம் மனிதப் பார்வையிலிருந்து சொல்லப்படுபவை என்றாலும், இயற்கையின் உள்ளார்ந்த நம்பிக்கை ஒன்றை அந்தக் கரிச்சான் சுமந்துகொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த நம்பிக்கை, மென்மையின் நம்பிக்கை. வன்மையின் நம்பிக்கைகள் அதிகாரத்தின், அழிவின் நம்பிக்கைகள். மென்மையின் நம்பிக்கைகள் இந்த உலகம் தழைத்திருப்பதற்கான அடையாளம். ஒரு கரிச்சானின் நம்பிக்கை போதும் இந்த உலகை வாழ்வதற்கு ஏற்றதாக ஆக்குவதற்கு!

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

அதிகாரம் 76

உயிரோடு இருக்கும்போது மனிதன்

மென்மையாக, மிருதுவாக இருக்கிறான்;

உயிர் போன பிறகு அவன்

கடினமாக, விறைப்பாக இருக்கிறான்.

உயிரோடு இருக்கும்போது

பிராணிகளும் தாவரங்களும்

மென்மையாக, மிருதுவாக இருக்கின்றன;

உயிர்போன பிறகு அவை

வாடி உலர்ந்துபோகின்றன.

எனவே, இவ்வாறு சொல்லப்படுகிறது;

கடினமும் விறைப்பும் சாவின் கூறுகள்;

மென்மையும் மிருதுவும் வாழ்வின் கூறுகள்.

எனவே,

மிகக் கடுமையாக இருக்கும்போது மரம்

முறியாமல் இருக்க முடியாது.

வலியதின், பெரியதின் இடம்

கீழே இருக்கிறது;

மெலியதின், மிருதுவின் இடம்

மேலே இருக்கிறது.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு

சீன ஞானி லாவோ ட்சு எழுதிய

‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து,

தமிழில்: சி.மணி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in